கருத்துக் கதிர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்துக் கதிர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

கருத்துக் கதிர்கள் 21 & 22 – இலக்குவனார் திருவள்ளுவன் [21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம்! 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா!]


கருத்துக் கதிர்கள் 21 & 22

[21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம்!  22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா!]

21 வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம்!
வேலூர் தேர்தல் முடிவு, வேலூர் தொகுதியில் தோற்கப்போவது யார்?(03 ஆகத்து 2019) என முன்னர்த் தெரிவித்தவாறுதான் அமைந்துள்ளது.  “சண்முகத்தின் தனிப்பட்ட செல்வாக்கும் அ.தி.மு.க.வின் செல்வாக்கும் இவரை வெற்றியின் பக்கம் தள்ளும். ஆனால், பா.ச.க. வின் செயல்பாடுகள் இவரைப் பிடித்துப் பின்னுக்கு இழுக்கும்” எனக் குறிப்பிட்டு இருந்தோம். “பா.ச.க.வை விட்டு விலகி நின்றால் வெற்றி வாய்ப்பு உள்ள சண்முகம், வெற்றிக்கனியைக் கதிர் ஆனந்திடம் பறிகொடுக்கவே வாய்ப்பு உள்ளது.” என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
 அதுபோல் சண்முகம் வெற்றிக் கனியைச் சுவைக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். தி.மு.க.வின் கதிர் ஆனந்து குறைந்த வேறுபாட்டில் வெற்றி பெற்றிருந்தாலும் வெற்றி வெற்றிதான். இடைத்தேர்தல் போன்ற தனித் தேர்தலில் அமைச்சரவையே தேர்தலில் பம்பரமாகச் செயல்பட்டாலும் பொதுவான இடைத்தேர்தலில் வெற்றி காணும் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.
 ஆளுங்கட்சி மக்களிடம் செல்வாக்கு மிகுதியாக,  மக்கள் எதிர்க்கும் திட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும். இரு மொழிக்கொள்கையில் உறுதியாக இருப்பதாகக் கூறுவதால் பா.ச.க.வின் இந்தித் திணிப்பையும் சமசுகிருதத் திணிப்பையும் கடுமையாக எதிர்த்து நிறுத்த வேண்டும். நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 3 இல் மிகுதியாக வாக்குகள் வாங்கிவிட்டோம் என்று போலி மயக்கத்தில் இருக்கக் கூடாது.
தி.மு.க.வும் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும்பொழுது சரிவு ஏற்பட்டுள்ளதை உணர வேண்டும். மக்கள் நலத்திட்டங்களிலும் தமிழ்க்காப்புத் திட்டங்களிலும் முனைப்பு காட்ட வேண்டும்.
“பா.ச.க. ஒதுங்கினால் வெற்றி பெறுவோம் என்று அதிமுக சொன்னது; நாங்கள் ஒதுங்கியதால் அது தோற்று விட்டது” எனத் தமிழிசை கூறுகிறார். அவர் மனத்திற்குத் தெரியும் உண்மை. முற்பகலில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு பிற்பகலில் சுறுசுறுப்பு அடைந்ததற்குக் காரணம் பா.ச.க.வின் சம்மு காசுமீர் உறிமைகள் பறிப்பு ஆணை வெளிவந்ததே.
குறுக்கு வழியில் ஆட்சிக்கட்டிலில் ஏறும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களுக்கு எதிரான திட்டங்களைக் கைவிட வேண்டும். மக்கள் உள்ளத்தில் அமர்ந்தால்தான் ஆட்சியில் அமர முடியும் என்பதை உணர வேண்டும்.
நாம் தமிழர் கட்சி முன்னேற்றத்திற்கான முத்திரையைப் பதிக்கும்  எனக் குறிப்பிட்டவாறு முத்திரையைப் பதித்துள்ளது. வாக்குகளை விலைக்கு வாங்காமல் பெற்ற வாக்குகள் என்ற அளவில் இதுவே வெற்றிக்கு ஒப்பானதுஎனலாம்.
வேலூர் வாக்காளர்கள் முதன்மைக் கட்சிகளுக்கு நம்பிக்கையையும் எச்சரிக்கையையும் ஒரு சேர வழங்கும் வகையில் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
இதனைப்புரிந்து கொண்டு அனைத்துக் கட்சியினரும் மக்கள் நலனில் மட்டும் கருத்து செலுத்தி. வாக்குகளை விலைபேசும் மனப்போக்கிலிருந்து விலக வேண்டும்.
மக்களுக்கு வெற்றி கிடைக்கும் வகையில் தேர்தல்கள் அமையும் காலம் வரட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்

 22 ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா!

இப்பொழுது கணிணியில் தட்டச்சிடும் வழி தெரியாமல் புது வகை எழுத்துச் சிதைவு பரவி வருகிறது. ‘தூ’, ‘நூ’ என்பனவற்றை ஒவ்வொரு எழுத்துருவில் ஒவ்வோர் விசையைப் பயன்படுததித் தட்டச்சிடுமாறு வைத்துள்ளார்கள். எழுத்துரு வடிவம் வெவ்வேறாக இருந்தாலும் விசைகள் குறிக்கும் எழுத்துருக்களில் மாற்றம் இருக்கக் கூடாது. இதற்கு அரசு தக்க வழிகாட்ட வேண்டும்.
தகர, நகரங்களில் ஊகாரங்கள் அச்சிடுவதற்குச் சில எழுத்துரு அமைப்பில் தகர, நகரங்களை மாற்று விசையில் தட்டச்சிட்டால் வரும். சிலவற்றில்  தகர, நகரங்களைத் தட்டச்சிட்ட பின் ஊகாரக் குறியீட்டை – மேல்வரிசையில் ஆங்கில விசைப்பலகையில் பகர அடைப்புக்குறியை-த் தட்டச்சிட்டால் வரும். 
 இதுபோல் கணியச்சிடுவோர் தங்கள் விசைப்பலகையில் தாங்கள் பயன்படுத்தும் எழுத்துருவிற்கான விசைப்பலகை எழுத்தமைப்பை அறிந்து கொண்டு அதற்கேற்பப் பயன்படுத்த வேண்டும்.  ஆனால், எவ்வாறு ‘தூ’, ‘நூ’ முதலியவற்றைத் தட்டச்சிட வேண்டும் எனத் தெரியாமல் முதலில் குறிப்பிட்டவாறு துாரம், துாறல், நுால், நுாறு, என்பனபோல் ‘துா’, ‘நுா’  எனத்  தவறாகவே தட்டச்சிடுகின்றனர்.வேண்டுமென்று இந்தத் தவற்றைச் செய்ய வில்லை. எனினும் சரி செய்வதற்கான போதிய முயற்சியை மேற்கொள்ள வில்லை.
இந்த எழுத்துச்சிதைவு போக்கிற்கு முற்றுப்புள்ளி இடுமாறு இதழ்க்குழுவினரையும் தட்டச்சிடுவோரையும் அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


வியாழன், 18 ஜூலை, 2019

கருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா? 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்?]

கருத்துக் கதிர்கள் 19 & 20

[19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா? 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்?]
19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா?
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகக் கிரண்(பேடி) பொறுப்பேற்ற பொழுதே, முதல்வருக்கு மேம்பட்டவராக நடந்து கொள்ளும் போக்கு தவறு எனச் சுட்டிக்காட்டியிருந்தோம். மத்திய அரசின் முகவர்(agent)தான் அவர். என்றாலும் மாநில அரசுடன் இணைந்தும் தேவையான நேர்வுகளில் வழிகாட்டியும் மாநில மேம்பாட்டிற்காகப் பணியாற்றியிருக்க வேண்டும். மாறாகத் தில்லி வாக்காளப் பெருமக்கள் அவரது முதல்வர் கனவுடன் அவரைத் தூக்கி எறிந்ததால் புதுச்சேரியில் முதல்வர்போல் ஆட்டம்போடுகிறார் எனப் பிறர் கூறும் வண்ணம் நடந்து கொள்கிறார். மாநில அமைச்சர் நாராயணசாமிக்கும் அமைச்சரவைக்கும்  முதன்மை அலுவலர்களுக்கும் தான் தான் அதிகாரம் படைத்தவர் எனக் காட்ட விரும்பி மக்களாட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். பலவகைகளில் முதல்வர் உரிமைக்குரல் எழுப்பிப் போராடியும் கனவு முதல்வர் கிரண் அம்மையார் ஓயவில்லை. தன் அதிகார  வெறிக்கு அரண் சேர்க்கும் வகையில் மத்திய அரசின் ஆணை ஒன்றை வெளியிடச் செய்தார். (இதுகூட மத்தியத் தலைமையின் நெறியுரையாகத்தான் இருக்கும்.) இவ்வாணையின் படி துணநிலை அலுவரான அவர் புதுச்சேரியின் அன்றாட அலுவல்பணிகளில் தலையிடலாம்.
ஒற்றையாட்சியின் குரலான இந்த ஆணைக்கு எதிராகப் புதுச்சேரியின் பேராயக்(காங்.)கட்சியின் ச.ம.உ. கே.இலட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார்.
மக்களாட்சியை நசுக்கும் அந்த ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. அத்துடன் ஆளுநர் புதுச்சேரியின் அன்றாட அலுவல் பணிகளில் தலையிடக்கூடாது என்றும் கட்டளை யிட்டது.
இத்தீர்ப்பினை ஏற்று அமைதி காத்திருக்கலாம். ஆனால், அதிகாரப்பசி உடையவரும் மாநில ஆட்சிகளை ஆட்டிப்படைக்க விரும்புநரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். தலைமை நீதிபதி இரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, உயர்நீதிமன்ற ஆணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. து.நி.ஆ. கிரண் கோரிக்கையை அடியோடு மறுத்தது.
இந்தத் தீர்ப்பு வந்ததும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு வெளியேற வேண்யடிவர்க்குத் தமிழக ஆளுநராக வேண்டும் என்று ஆசை வந்து விட்டதுபோலும். 
” தமிழ்நாட்டில் மோசமான அரசு, ஊழல் அரசியல், அதிகாரிகளின் அலட்சியமான செயல்பாடு, துணிவின்மையும்   கோழைத்தனமும் தன்னலமும் உடைய மக்கள்”  இருப்பதாகக் குறிப்பிடும் வகையில் சுட்டுரை (tweet) பதிந்துள்ளார். அதிகார வெறி உச்சநீதிமன்றத்தாலேயே அடையாளம் காட்டப்பட்டதால் அதைத் திசை திருப்பக்கூட இவ்வாறு சொல்லியிருக்கலாம். ஆனால், முனைவர் கிரண் அம்மையார் செய்ய வேண்டியது புதுச்சேரியிலிருந்து வெளியேறுவதே!  தன்னை நேர்மையானவராகக்  காட்டும் அவருக்குள்ள நேர்மை உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றால் இதுவரையிலான அதிகாரக் குறுக்கீடுகளுக்கான வருத்தம் தெரிவித்துப் புதுச்சேரியை விட்டு நீங்க வேண்டும். அப்படி என்றால் புதுச்சேரி மக்களும் மக்களாட்சிப்பற்றாளர்களும் அவரை மனமுவந்து வழியனுப்பி வைப்பர்.
அதே நேரம், இவரைக் கருவியாகக் கொண்டு செயல்பட்ட உச்சத்தலைமைகளும் உடனுழைத்த அதிகாரிகளும் தத்தம் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும். ஆனால், அதற்கான மனம் வராது. குறைந்தது இதுபோன்று எதிர்க்கட்சி அரசுகளைச் சிதைக்கும் முயற்சிகளையாவது நிறுத்த வேண்டும்.
இவ்வாறு எதிர்பார்ப்பது நம் அறியாமையைக் காட்டுகின்றதோ!
  • இலக்குவனார் திருவள்ளுவன்
20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்?
கருநாடக மாநிலத்தில் பா.ச.க.வின் ஆட்டத்தால் சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலர் குதிரை பேரங்களுக்கு ஆட்பட்டுக் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர். கட்சிமாறிகள் மீது சட்டப்பேரவைத் தலைவர்  கே.ஆர்.இரமேசுகுமார் நடவடிக்கை எடுக்க இருப்பது அறிந்து அவ்வாறான ஆட்சியில் உள்ள ம.ச.த., காங்.கட்சியைச் சேர்ந்த 15  உறுப்பினர்கள் பதவி விலகல் மடலை அளித்துள்ளனர்.  முறைப்படி ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கட்சி மாறுதல் நடவடிக்கை எடுக்கும் பொழுது விலகல் மடலை ஏற்பது முறையல்ல என்றும்  பேரவைத்தலைவர் உடனடியாக முடிவைத் தெரிவிக்க வில்லை. எனவே, அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதன் இறுதித்தீர்ப்பில் பேரவைத்தலைவர் முடிவெடுக்கக் கால வரையறை விதிக்க முடியாது என்று மறுத்து விட்டனர். அதே நேரம் விலகல் கொடுத்த ச.ம.உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்து விட்டனர்.
ஆனால், இவ்வாறு தீர்ப்பு வழங்கும் முன்னர்,  மனக்குறை உறுப்பினர்கள்பதின்மர் தொடுத்த வழக்கின் கேட்பு நாளன்று, அன்று மாலை 6.00 மணிக்குள் விலகலை பேரவைத்தலைவரிடம் நேரில்  தெரிவிக்கலாம் என்றும்  பேரவைத்தலைவர் அன்றே முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினர். தங்களின் முந்தைய தீர்ப்புகளுக்கு மாறாகவும் அரசியல் சட்ட நெறிகளுக்கு முரணாகவும் அவ்வாறு அவசரமான தீர்ப்புரை வழங்க வேண்டிய தேவை என்ன வந்தது? பா.ச.க.வின் தூண்டுதலால்தான் அவ்வாறு சொன்னதாக மக்கள் எண்ண மாட்டார்களா?
இதைப்போன்ற மற்றொரு தடுமாற்றத்தை அஞ்சல் துறைக்கு எதிரான வழக்கில் காணமுடிகிறது.
இந்திய அஞ்சல்துறை,  சூலை 14 அன்று நடைபெறும் அஞ்சல் பணியாளர் வேலைக்கான தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என இருநாள் முன்னதாக அறிவித்தது.  இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டது. இது, தமிழ் மொழியினருக்கு மட்டும் எதிரானதல்ல,  இந்தி தவிரப் பிற தேசியமொழியினர் அனைவருக்கும் எதிரான தாக்குதல் என்று நிறுத்துமாறு அறிவித்திருக்க வேண்டும். அல்லது தேர்வு அறிவித்து விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர், தேர்வு முறையை மாற்றுவது மனித உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றம் தேர்வை நிறுத்தியிருக்கலாம். மாறாகத் தேர்வு நடத்தலாம்; ஆனால் முடிவை நிறுத்தி வைக்கவேண்டும்  என அறிவித்தது. நல்ல தீர்ப்புகள் வழங்கி வரும் நீதிபதிகள் கே.இரவிச்சந்திரபாபு, மகாதேவன் ஆகியோர்தான் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
ஒருவரோ சிலரோ பாதிக்கப்பட்டு இருந்தால் அவ்வாறு சொல்லியிருந்தால்கூடப் பரவாயில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக நாட்டின் பெரும்பகுதியினர் பாதிக்கப்படும் பொழுது இப்படி எப்படித் தீர்ப்பு வழங்கினர் எனத் தெரியவில்லை? தேர்வு நடைபெற்ற பொழுது 1000 இற்கு அதிகமான பணியிடங்களுக்கு ஆயிரத்திற்குக் குறைவானவர்களே தேர்வு எழுதியுள்ளனர். ஒரு பணியிடத்திற்கே ஆயிரக்கணக்கானவர்கள் போட்டியிடும் இன்றைய சூழலில் பல்லாயிரம் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாவதை இந்த எண்ணிக்கையே காட்டுகிறது.
பின்னர் மத்திய அரசு தமிழக மக்களின் எதிர்ப்பிற்கும் நாடாளுமன்றத்தில் தி.மு.க., அ.தி.மு. முதலான உறுப்பினர்களின் எதிர்ப்பிற்கும் செவிசாய்த்துத் தேர்வுகளை விலக்கி இனி அனைத்து மொழிகளிலும்தேர்வு நடைபெறும் என அறிவித்து விட்டது.  நீதிபதிகள் அஞ்சல்துறையின்  மொழிச்சமமின்மையைச் சுட்டிக்காட்டித் தீர்ப்புகள் வழங்கியிருந்தால் அதற்கேற்ப மத்திய அரசு முடிவெடுத்ததாக நீதித்துறைக்குப் பெருமை சேர்ந்திருக்கும் அல்லவா?
மத்திய ஆட்சியின் குரலாகச் செயல்படுவதாக மக்கள் கூறுவதற்கு இடமளிக்காதவகையில் விழிப்புணர்வுடன் தீர்ப்புகள் வழங்க நீதித்துறையினரை அன்புடன் வேண்டுகிறோம்.
  • இலக்குவனார் திருவள்ளுவன்

திங்கள், 24 ஜூன், 2019

கருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ]


கருத்துக் கதிர்கள் 16-18 : [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ]

கருத்துக் கதிர்கள் 16-18

[16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க.

  1. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும்.

  2. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ]

 16. ஒரே தேர்தல் : பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான கூட்டம் கடந்த வாரம் (19.06.2019) நடைபெற்றது. நாடு முழுவதும் ஒற்றை ஆட்சியைக் கொண்டு வரும் இத்திட்டத்தைப் பெரும்பாலோர் எதிர்த்து வருகின்றனர். இக் கூட்ட முடிவில் பா.ச.க.அமைச்சர் இராசுநாத்து(சிங்கு), ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்குஅனைத்து கட்சிகளின் ஆதரவு உள்ளது எனப் பொய்யுரை புகன்றுள்ளார்.அவரே, “ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக  40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதில் 21 கட்சிகள் கலந்து கொண்டன. மேலும் 3 கட்சிகள் தங்களது ஆலோசனைகளைக் கடிதம் மூலம் தெரிவித்திருந்தனர்” எனக் கூறியுள்ளார். வந்திருந்தவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் எப்படி அனைத்துக் கட்சிகளின் ஆதரவாகக் கூறமுடியும். தமிழ்நாடு, மே.வங்காளம், கேரளம், மகாராட்டிரம், புது தில்லி முதலான அனைத்து மாநிலங்களிலுமே பா.ச.க. நீங்கலான பல கட்சிகளும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. வழக்கம்போல் மக்களுக்கு எதிரான திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்கள் ஆதரவு இருப்பதுபோல் பொய்யுரை கூறும் பா.ச.க. இப்பொழுதும் அவ்வாறு கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. பொய்யை அடித்தளமாகக் கொண்ட கட்சி எப்படி மெய்யைக் கூறும்? பொய்களை வித்திடுவோரை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாமா?
இலக்குவனார் திருவள்ளுவன்
  1. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும்.
மூத்த தலைவரும் மேனாள் அமைச்சரும் தான் பொறுப்பு வகித்த பொதுத்துறையின் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவருமான துரை முருகன் நலக்குறைவில் அடிக்கடி மருத்துவமனை சென்று வருகிறார். அவர் விரைவில் நலமடைய நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரம், தன் மகன் போட்டியிடும் வேலூர் தொகுதியின் தேர்தல் ஒத்திவைக்ப்பட்டுள்ளதால் கவலையில் உள்ள அவர் நிலை தடுமாறிப் பேசுவது வருந்தத்தக்கது. சென்னைக்கு வேலூரில் இருந்து தண்ணீர் கொண்டுவரப் போவதாக அரசு அறிவித்ததை எதிர்த்துப் பெரும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார் எனச் செய்திகள் வந்தன. அதை மறுத்துள்ளார். எனினும் அதிலும் என்ன கூறியுள்ளார்? “வேலூர் மாவட்டத்தில் உள்ள சோலார் பேட்டையைத் தவிர, வேறு எங்காவது தண்ணீர் கிடைத்தால், அதனைச் சென்னைக்குக் கொண்டுபோவதில் எங்களுக்கு  எந்தவித மறுப்பும் இல்லை. அதைவிடுத்து, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிற, பற்றாக்குறையுடன் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற காவேரி நீரை மறித்துச், சென்னைக்கு கொண்டு போனால், எங்கள் வேலூர் மாவட்ட மக்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்  என்றுதான் வேலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்” என்றுதான்  விளக்கம் அளித்தார். வேறு எங்காவது கிடைக்கும் தண்ணீரை வழங்குவதை மறுத்துக் கூறுவதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?
வந்த செய்திக்கும் இவர் கூறுவதற்கும் வேறுபாடு இல்லையே! தொடக்கத்திலேயே வேலூருக்கு வாரம் இருநாள் மட்டும் வரும் தண்ணீரைக் கொண்டு எப்படிச் சென்னைக்கு அனுப்ப முடியும் என்று கேட்டிருந்தால், உண்மை நிலையை விளக்குவதாக எடுத்துக் கொண்டிருக்கலாம். மாறாகப் போராட்டம் என்று சொன்னால், காவிரி நீரைக் கேட்பதில் நமக்கு என்ன உரிமை இருக்கிறது? மக்களுக்கு ஆதரவான திட்டங்களில் போராட்டம் என்றெல்லாம் சொல்லித் தி.மு.க.வின் எதிர்காலத்தைக் கெடுக்க வேண்டா என அதன் தலைவர்மு.க.தாலின் அவரைக் கண்டிக்க வேண்டும். அதே நேரம் அவர் கூறிய சிக்கல் உண்மை என்றால், அரசு மிகுதியாகத் தண்ணிர் இருக்கக் கூடிய வேறு எங்கிருந்தாவது சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வரவேண்டும்.
இலக்குவனார் திருவள்ளுவன்
  1. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா?
கேரள முதலமைச்சர் பிணறாயி விசயன்  நாள் தோறும்  தண்ணீரைத் தொடரி மூலம் சென்னைக்கு அனுப்ப முன்வந்ததாகவும் தமிழக அரசு மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.  இதற்கு மக்களிடையே எதிர்ப்பு வந்ததும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி விளக்க அறிக்கை  வெளியிட்டுள்ளார். இதில்,கேரள அரசு வழங்கும் தண்ணீரைத் தமிழக முதல்வர் கேரள முதல்வரிடம் மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். காலம் தாழ்த்தி நன்றி தெரிவிதது விட்டு இப்போதைக்குத் தேவையில்லை எனக் கேரளக் குடிநீரை வாங்காத பொழுது மறுப்பதாகத்தானே எடுத்துக் கொள்ள முடியும் ? நம் தேவைக்கு அவர்கள் தரும் பங்களிப்பு ஆயிரத்தில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், சிறுதுளி பெருவெள்ளமாகுமன்றோ!
கேரளத்திற்கு அண்மையில் தண்ணீர்ப்பற்றாக்குறை உள்ள பகுதிக்கு அந்தத்தண்ணீரைப் பயன்படுத்தலாம் அல்லவா? அதிகாரிகள், கேரளம் நாள்தோறும் தண்ணீர் வழங்கினால் உதவியாக இருக்கும் என்றார்களாம். கேரள முதல்வரும் நாள்தோறும்தானே தண்ணீர் வழங்குவதாகத் தெரிவித்தாகச் சுட்டுரையில் தெரிவித்துள்ளார். அப்புறம் எதற்கு இந்தச் சமாளிப்பு? போதை நீரில் தள்ளாட்டம் என்பது இயற்கையான ஒன்று. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா?

இலக்குவனார் திருவள்ளுவன்

வியாழன், 20 ஜூன், 2019

கருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா? அப்படி என்றால் என்ன? 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]


கருத்துக் கதிர்கள் 14-15

[14. தண்ணீர்ப் பஞ்சமா? அப்படி என்றால் என்ன? 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]

  1. தண்ணீர்ப் பஞ்சமா? அப்படி என்றால் என்ன?

 “தமிழ்நாட்டில் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது போன்ற மாயையை ஏற்படுத்த வேண்டா” என மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிவேண்டியுள்ளார். அவர் சொல்வது உணமைதான். அதுபோல் தண்ணீர்ப்பஞ்சம் என்பது இல்லை என மாண்புமிகு அமைச்சர் வேலுமணி பேசியுள்ளார். ஒரு முறை போதிய அளவு தண்ணீர் இருப்பதாகவும் மின்தடையால் உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க இயலவில்லை என்றும் பேசியுள்ளார். இதன் மூலம்  மின்தடை இருப்பதை ஒப்புக் கொண்ட துணிவைப் பாராட்ட வேண்டும்.
அஃது இருக்கட்டும். தண்ணீர்ச்சிக்கல்பற்றிப் பார்ப்போம். சென்னை முதலான நகரங்களில் உள்ள பற்றாக்குறையைச் சிக்கல் என எளிமையாகச் சொல்லக் கூடாது. எனவேதான் முதல்வர் அப்படி கூறியுள்ளாரோ என்று தெரியவில்லை. மேலும் சில இதழ்கள் சென்னையில் தண்ணீர்ப்பஞ்சம் என ஒரிசாவில் உள்ள வறட்சியைக் காட்டுகின்றனர்.  இதுபோல் வேறு சில மாநிலத் தண்ணீர்ப் பஞ்சத்தைத் தமிழ்நாட்டுப் பஞ்சத்திற்குப் படமாகச் சில இதழ்கள் வெளியிட்டுள்ளன. இதனால் தண்ணீர்ப் பஞ்ச மாயையைத்தான் உருவாக்குகின்றனர். உண்மை இல்லை என முதல்வர் எண்ணுகிறாரோ தெரியவில்லை.
எப்படி இருந்தாலும் தண்ணீருக்காகப் படும் இடர்களைத் தண்ணீர்ப்பஞ்சம் என்று சொல்ல முடியாது!
எடுத்துக்காட்டிற்காகச் சென்னையைப் பார்ப்போம். குடங்களை ஆண்கள் தோள்களிலும் பெண்கள் இடுப்புகளிலும் சுமந்து கொண்டும் மிதிவண்டிகளிலும் தங்களிடம் உள்ள பிற வண்டிகளிலும் ஏறற்றிக் கொண்டும் அலைவதைப் பார்க்க முடிகிறது. எப்படியோ எங்கிருந்தோ சில குடங்களிலாவது தண்ணீர் பிடித்துக் கொண்டு அவர்கள் திரும்புகின்றனர். அப்படிஎன்றால் இதை எப்படிப் பஞ்சம் என்று சொல்ல முடியும்! தவறுதான் எனச் சொல்லலாம் அல்லவா?!
மயிலராப்பூர் கபாலிசுவரர் கோயில் குளம் போல் பல குளங்களிலும் தண்ணீரே இல்லை. இந்தக் குளங்களின் நீரை யார் குடிக்கப் பயன்படுத்துகின்றனர். எனவே, தண்ணீர்ப் பஞ்சம் என்று சொல்ல முடியாது அல்லவா?!
நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை என்பது உண்மைதான். எடுத்துக்காட்டாக நாங்கள் புழுதிவாக்கம் (மடிப்பாக்கம்) ஓட்டேரிச்சாலையில் குடியுள்ளோம். தெரு முடியும் இடம்தான் ஓட்டேரி. அங்கே தண்ணீர் இல்லைதான். மடிப்பாக்கத்தில் உள்ள கார்த்திகேயபுரம் ஏரி மிகப் பெரிய நீர்நிலை. ஏரிக்கரைப் பாதையில் கடற்கரைபோல் மக்கள் நடை பயிலவும் காற்று வாங்க அமரவும் செய்வர். அங்கும் தண்ணீர் இருந்ததற்கான சுவடே தெரியவில்லை. உண்மைதான். அதனால் மக்கள் செத்தா போனார்கள்?! வேறு எங்கோ அடிகுழாயைக் கண்டுபிடித்துத் தண்ணீர் பிடித்து வரவில்லையா? அப்புறம் எப்படிப் பஞ்சம் என்று சொல்வது!
எங்கள் அடுக்ககத்தின் கிழக்கு வாயிலில் மாநாகராட்சிக் குழாயில் பிற பயன்பாட்டிற்கான தண்ணீர் வரும். அதில் சாக்கடை தண்ணீர் கலந்து வருவதால் முறையிட்டோம். உடன் நிறுத்தி நற்பணி புரிந்தனர் மாநகராட்சியினர். (இன்று மறுபடியும் நல்ல தண்ணீர் விடுவதாகக் கூறியுள்ளனர்.) சாக்கடை நீரையாவது மாநாகராட்சி தந்துள்ள பொழுது எப்படிப் பஞ்சம் என்று சொல்வது!
 எங்கள் தெருப் பகுதியில் தொட்டியில் மாநகராட்சிக் குடிநீர் ஊர்தியில் இருந்து குடிநீரை நிரப்பிச் செல்வர். இப்பொழுது அது கனவுபோல் ஆகிவிட்டது.  எல்லா இடங்களிலும் அதே நிலைதான்! அதற்காக மக்கள்மடிந்தா போயினர்?!
கடந்த ஆண்டில் தண்ணீர் தனியாரிடம் இருந்து வாங்கும் பொழுது 1000 கன  உரி(Litre) தண்ணீரின் கட்டணம் 300 உரூபாய். இப்பொழுது 2 நாளில் தருகிறோம்; 3 நாளில் தருகிறோம் எனச் சொல்லி  எப்படியும் ஒரு வாரத்தில் தந்து விடுகின்றனர். கட்டணம்தான் கேட்கும் பொழுது 800 உரூபா எனச் சொல்லிக் கொடுக்கும் பொழுது 1200 உரூபாய் வாங்கி விடுகின்றனர். எப்படியோ நான்கு மடங்கு கட்டணம் செலுத்தினாலும் 1 வாரத்தில் தண்ணீர் வந்து விடுகிறது அல்லவா? அப்புறம் எப்படிப் பஞ்சம் என்று சொல்வது?!  சென்னை வாசிகளுக்குத் தண்ணீர்ப் பஞ்சம் என்றால் என்னவென்றே தெரியாது. இதுபோல்தான் பிற மாவட்டங்களிலும் நிலைமை.  
பல விடுதிகள் மூடப்பட்டு வருதல், பள்ளிகளில் நேரங்கள் மாற்றம், உணவகங்களில் உணவுக் குறைப்பு சிக்கல் போன்ற பிறவும் தண்ணீர்ப் பஞ்சத்தால் என்று யார் சொன்னது? தொடர்ந்து உழைத்தவர்கள், ஓய்வு வேண்டி இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கின்றனர். வேறு ஒன்றுமில்லை!
எனவே, அரசை யாரும் குறை கூற வேண்டா!
 – இலக்குவனார் திருவள்ளுவன்

 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்

தமிழ்ப்பெயர் சூட்டும் படங்களுக்கு அரசு நிதியுதவி செய்தபொழுது பிறமொழிப்பெயர்களைக் கூடத் தமிழாக மாற்றிப்பணம் வாங்கிய திரைத்துறையினர்,  பணத்திற்காக முதலில் சூட்டிய பெயரை அடைப்பிற்குள் இட்டுவிட்டுத் தமிழ்ப்பெயர் சூட்டியே விளம்பரப்படுத்திய திரைத்துறையினர், இப்பொழுது பிற மொழிப்பெயர்களைச் சூட்டுவதில் சிறிதும் வெட்கம் கொள்ள வில்லை. எனினும் இந்தப் போக்கை மக்கள் எண்ணினால் மாற்ற முடியும். அதற்கான சூழல் வந்துள்ளது. சிவ.கார்த்திகேயன் வெற்றிப்பட நாயகனாகவும் வெற்றிப்படஆக்குநராகவும் புகழ்பெற்று விளங்குகிறார். அவர் நட்சத்திர நாயகி நயன்தாராவுடன் நடித்த படத்திற்கு ஆங்கிலப் பெயரைச் (Mr.Local ) சூட்டினார். மக்களுக்கு அந்தப் படம் மொழிமாற்றுப் படம் போல் தோன்றியது. எனவே, அவரே தோல்விப்படம் என ஒப்புக்கொள்ளும் வகையில் மக்கள் அதனைத் திரைஅரங்குகளில் இருந்து ஓட வைத்தனர்.
அதுபோல், சூரியா நடித்த படத்தின் பெயர் ஆங்கிலத் தலைப்பெழுத்துகளில் (NGK) சூட்டப்பட்டது. இந்தப் படத்தையும் மக்கள் விரட்டி அடித்துத் தலையில் துண்டுபோட்டுக் கொள்ள வைத்து விட்டனர். இந்த நிலை தொடர்ந்தால்  அயல்மொழிப்பெயர் தாங்கிய படங்கள் மண்ணைக் கெளவும். இதனால் அவர்களுக்கு இழப்பு வருவதுடன் திரைத்துறையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கானவர்களின் குடும்பத்தினரும் துன்புறுவர்.  இனிமேலாவது திரைத் துறையினர் நல்ல தமிழ்ப்பெயர்களையே சூட்ட வேண்டுகிறோம்.
இலக்குவனார் திருவள்ளுவன்

திங்கள், 17 ஜூன், 2019

கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?]

அகரமுதல

கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?]

  1. திருமாவளவன் விளக்கம் சரிதானே!

தீவிரவாதத்திற்கும் பயங்கர வாதத்திற்குமான விளக்கத்தை முனைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதற்காக அவர் மீது வழக்கு தொடுத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. நான் அரசிலறிவியலைத் துணைப்பாடமாக எடுத்துப் படித்துள்ளேன்.அப்பொழுதிருந்தே தீவிரவாதியையும் பயங்கரவாதிகயையும் ஒன்றுபோல் கூறும் பழக்கம் தவறு என்ற கருத்து உடையவன். சில இடங்களில் இது குறித்துப் பேசியும் எழுதியும் உள்ளேன். இப்பொழுது வி.சி.க.தலைவர் இந்த விளக்கத்தைக் கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது. தீ பரவுவதுபோல் தான் கொண்ட கொள்கையை முனைப்புடன் வாதிட்டுப் பரப்புவது தீவிர வாதம். ஒரு வேளை அந்தக் கொள்கை தவறாக இருந்தாலும் அது தீவிரவாதம்தான்.  அதே நேரம் தான் கொண்டுள்ள கருத்தை அல்லது கொள்கையைச் செயல்படுத்துவதற்காக வன் முறையில் இறங்குபவன் பயங்கரவாதி. பயங்கரவாதி என நாம் கூறினாலும் கொடுங்கோலன் என்றும் இதற்குப் பொருளுண்டு.பேராயக்(காங்.)கட்சியில் சில தலைவர்களைத் தீவிரவாதிகளாகக் குறிப்பிட்டுள்ள வரலாறு உண்டு. பிறரை இதனால் மிதவாதிகள் என்றனர். நாம் தவறாகப் புரிந்து கொண்டதை மாற்றி, முனைப்பான வாதமே தீவிரவாதம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தீவிர நிலையில் இருந்து மாறித் தன் கொள்கைக்காக ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்று சொல்பவனே பயங்கரவாதி என்றும் அவ்வாறு ஆயுதத்தைக் கையில் எடுப்பவனே வன்முறையாளன் அல்லது கொடுங்கோலன் என்பதைப் புரிந்து கொள்ள  வேண்டும். 
வழக்கில் வாதிடுபவரை வாதி என்றும் எதிர் வழக்காளரை எதிர்வாதி என்றும் கூறுகின்றோம். தீவிரவாதி என்பது தவறென்றால் இதுவும் தவறுதான். எந்த அகராதியை எடுத்துப் பார்த்தாலும் வாதி என்பது தவறாகக் குறிக்கப்பெறவில்லை. எனவே தீவிர வாத விளக்கத்தை வன்முறைச் செயலாகக் கருதுவது வன்முறையாகும் என்பதை உணர வேண்டும். இத்தகைய சொல் விளக்கத்தைக் கருத்து விளக்கத்தால் மறுக்க வாய்ப்பிருந்தால் மறுக்கலாம். மாறாக வழக்கு தொடுப்பது என்பது வன்முறைச் செயலாகும்.
 13.தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?
 ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர் அனைவரும் ஒரே கட்சியினராகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு கட்சியினராக இருப்பதும் இயற்கைதான். பேராயக்(காங்.)கட்சித் தலைவரான குமரி அனந்தன் மகள் தமிழிசை பா.ச.க.கட்சியில் இருப்பதுபோல் அவரது மகன் சுகநாதன் அன்னைக்கு எதிரான கருத்து கொண்டிருந்தால் அஃது இயற்கையே!
கடந்த வாரம் சென்னை விமான நிலையத்தில் பா.ச.க தலைவர் தமிழிசை செளந்தரராசன், செய்தியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது, பா.ச.க. தொண்டர்கள் பலரும் இருந்துள்ளனர். அதுபொழுது, அவரது மகன் மருத்துவர் சுகநாதன் பா.ச.க.விற்கு எதிராக / பா.ச.க. ஒழிக என – முழக்கமிட்டதாகவும் அவரைப் பா.ச.க. தொண்டர்கள் அப்புறப்படுத்தியதாகவும் செய்தி வந்தது.
இது குறித்து ஊடகங்கள் எழுதியதற்காகத் தமிழிசை, குடும்ப நிகழ்வை அரசியலாக்குவதாகக் குறிப்பிட்டு வேதனையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசைக்கு எதிரில் பா.ச.க.விற்கு எதிரான முழக்கமிட்ட    ஆராய்ச்சி மாணவி சோபியாவின் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்பொழுது வாளாவிருப்பது ஏன் என்பது பலரும் தொடுக்கும் வினா. இதனால் தன் கட்சிப்பதவிக்கு ஏதும் இடர் வருமோ எனத் தமிழிசைக்குக் கவலை. கட்சியினரிடம், முதலில் குறிப்பிட்டதுபோல் மாறுபட்ட அரசியல் கருத்து என்பது இயல்பானது என்றுதான் அவர் விளக்க வேண்டும். மாறாகப் பிறரைக் கண்டித்துப் பயனில்லை.
இதனைக் குடும்ப நிகழ்வாகக் கூறுகிறார். நான்கு சுவர்களுக்குள் நடந்திருந்தால் குடும்ப நிகழ்வாகக் கருதலாம். ஆனால், மக்கள் கூடும் பொதுவெளியில் நிகழ்ந்துள்ளது. மேலும் அவரது மகன் சிறுவனும் அல்லன், பாமரனும் அல்லன்; மருத்துவர். சிறுபிள்ளைத் தனமாக அவர் சினந்து கத்தினார் என்பது ஏற்பதற்கில்லை. மாணவி சோபியா மீது நடவடிக்கை எடுத்த இவர் மருத்துவ மகன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் கேட்பது இயல்புதான். இக்கருத்தினைக் கண்டுங் காணாமல் ஒதுக்கியிருக்க வேண்டும். மாறாகச் சப்பைக்கட்டுக் கட்டிக் கண்டனம் தெரிவிக்கக் கூடாது.
குடும்பத்திற்கு வெளியே நடக்கும் எந்நிகழ்வும் குடும்ப நிகழ்வாகாது என்பதைத் தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும்.
இலக்குவனார் திருவள்ளுவன்