உழவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உழவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 ஜூன், 2013

பல்கலை உழவர் தமிழரசி

சகலகலா பெண் விவசாயி!
விவசாயம், இயற்கை உரம் தயாரித்தல் என, பல தொழில்களில் ஈடுபட்டு, இலட்சக்கணக்கில் இலாபம் ஈட்டும், தமிழரசி: நான், திண்டுக்கல், புளியமரத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவள். 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணவர் படிக்காததால், எல்லா கணக்கு வழக்குகளையும், நானே பார்க்கிறேன். சொந்தமான, 4 ஏக்கர் நிலத்தில், ரசாயன உரங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்தோம். ஒரு போக விளைச்சலில், லட்ச ரூபாய் கிடைத்தாலும், உரச் செலவு அதிகரித்ததால், தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது.
இதற்கு என்ன தான் வழி என, சிந்தித்த நேரத்தில், திண்டுக்கல்லில் உள்ள, "அமைதி' அறக்கட்டளை நிர்வாகிகள், இயற்கை உரத்தை தயாரிக்கும் வழிமுறைகளையும், இயற்கை விவசாயத்தின் நன்மை பற்றியும், பயிற்சி தந்தனர். இதில், விவசாயம் தொடர்பான, தெளிவான புரிதல் கிடைத்தது.
கணவர் ஒத்துழைப்புடன் பஞ்ச கவ்யம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், மூலிகை பூச்சுவிரட்டி, மீன் அமில கரைசல், அரப்பு மோர்க் கரைசல் என, இயற்கை உரங்களை, நானே தயாரித்து, 20 சதவீத லாபத்தில் விற்கிறேன். இயற்கை விவசாயத்தில், கீரை, 10க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழங்களோடு, 40 தென்னை மரங்களை வளர்க்கிறேன்.
இயற்கை உரம் தயாரிக்க மண்டை வெல்லம், வேப்பஞ்சுண்ணாம்பு வாங்குவது மட்டும் தான் செலவு. மற்றபடி, 4 மாடு, 40 கோழிகளை மரங்களுக்கு இடையே வளர்த்து, அதன் சாணம், கோமியத்தை உரமாக பயன்படுத்தி, விளைச் சலை பெருக்கினேன்.
பெண் என்றும் பாராமல், விளைந்த காய்கறி, பழங்கள், கீரைகளை, என் மோட்டார் வண்டியில் ஏற்றி, 8 கி.மீ., தூரத்தில் உள்ள சந்தையில், நானே நேரடியாக விற்று வருகிறேன். முதலில் வாங்கிய இரண்டு வாத்துகள், 30 வாத்துகளாக விரிவடைந்துள்ளன.
வாத்தை, 250 ரூபாய்க்கும், முட்டையை, 5 ரூபாய்க்கும் விற்கிறேன். விவசாயத்தில் நஷ்டத்தை சந்தித்த நான், இன்று விதை, உரம் என, அனைத்தையும் தயாரித்து, ஆண்டிற்கு, 2 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறேன். தற்போது மீன் குட்டை அமைத்திருப்பதால், இனி இதிலிருந்தும் லாபம் வரும்.

சனி, 12 ஜனவரி, 2013

பசுவிற்கு வளைகாப்பு

பசுவுக்கு நாளை வளைகாப்பு நிகழ்ச்சி:  அழைப்பிதழ் வழங்கிய உழவரால் பரபரப்பு

ஆலங்குடி: பசுவுக்கு நாளை, வளைகாப்பு நடத்துவதாக அச்சிட்டப்பட்ட அழைப்பிதழால், புதுக்கோட்டை மாவட்டத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்தவர், சன்னாசி. இவர், ஸ்ரீகோமாதா எனும் செல்லப்பொண்ணு என்ற பெயருடைய தன் பசுவுக்கு, நாளை, மழை மாரியம்மன் கோவிலில், வளைகாப்பு நடத்த இருப்பதாகவும், அதற்கு அனைவரும் வந்து வாழ்த்த வேண்டும் என, அழைப்பிதழ் தயாரித்துள்ளார்.மொத்தம், 500 பத்திரிக்கைகள் அச்சிட்டு, தன் சொந்த பந்தங்கள், நண்பர்கள், வி.ஐ.பி.,க்களுக்கும் வழங்கியிருக்கிறார்.

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கும், அறந்தாங்கி யூனியன் தலைவர் மெய்யநாதன் கூறியதாவது:வளைகாப்பு நடத்த இருக்கும் சன்னாசி மீது, கடும் கோபமாகத்தான் இருந்தேன். அழைப்பிதழைப் பார்த்த பிறகு கூட, கோபம் குறையாமல் இருந்தேன். என்னை பார்க்க அவர் வந்தார். அப்போது, வளைகாப்புக்கு அவர் சொன்ன காரணங்களை கேட்டதும், நிச்சயம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, வளைகாப்பு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளேன். அதனால் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

சன்னாசி சொந்தமாக பசுமாடுகள் வளர்த்து பராமரித்து, பால் கறந்து விற்று ஜீவனம் நடத்துகிறார். அவர் வெளியில் சென்று, மற்றவர்களின் மாடுகளுக்கும் பால் கறந்து, அதற்கு கூலி பெற்று வருகிறார். அதனால் பசுக்களின் மீது, அவருக்கு ஈடுபாடும், பாசமும் என்றைக்கும் உண்டு. அதனால் தான் வளர்க்கும் பசுக்களுக்கு, ராசாத்தி, ராணி, செல்லப்பொண்ணு என்றும் பெயர் சூட்டி அழைத்து வருகிறார்.

இதுகுறித்து சன்னாசி கூறியதாவது:கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேல், பசுக்கள் வளர்க்கிறேன். இதுவரை, பசுக்களுக்கென்று ஏதும் செய்யாததால், இப்போது வளைகாப்பு நடத்துகிறேன். பசுக்களை அனைவரும், பால் தரும் ஒரு விலங்கு என்ற கோணத்தில் தான் பார்க்கின்றனர்; நான் அவற்றை தெய்வமாக மதிக்கிறேன்.விவசாயத்தின் மீதும், கால்நடைகள் வளர்ப்பிலும் ஆர்வம் குறைந்து வரும் இக்காலத்தில், கால்நடைகள் மீது இத்தனை அக்கறை கொண்டிருப்பது, மற்றவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
வளைகாப்பு அன்று காலை, பசுவை குளிப்பாட்டி, மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோவிலில் கட்டி, அதற்கு தேவையான அளவுக்கு தீனியும் போட்டு, பொங்கல் வைத்து, அதற்கு ஊட்ட ஏற்பாடு செய்துள்ளேன். விழாவுக்கு வருபவர்கள், வளைகாப்புப் பெண்ணுக்கு சந்தனம், குங்குமம், விபூதி பூசுவதைப் போல், பசுவுக்கு பூசி, வணங்க வேண்டும் என்பது, என் விருப்பம். அன்றைக்கு பசுவின் காலில் பூட்ட, வெள்ளியில் காப்பு ஒன்றை தயாரித்து வைத்திருக்கிறேன்.இப்பகுதியில், அனைவரின் இல்ல நிகழ்ச்சிகளுக்கும், தலைமை தாங்கும் யூனியன் தலைவர், இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, காப்பை எடுத்து கையில் கொடுக்க வேண்டும். பசுவையும் வாழ்த்த வேண்டும் என்று, அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு டீ, கேசரி, வடை போன்ற சிற்றுண்டி மட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிகழ்ச்சிக்காக, 25 ஆயிரம் ரூபாய் வரை, சன்னாசி செலவு செய்ய திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளார்.