இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
தமிழ் உணர்விற்கு வந்ததடா பஞ்சம்
என்பதுதான் இன்றைய தமிழ்நாட்டவர் நிலை. எனினும் பல தரப்பு மக்களிடையேயும் நம்நாடு தமிழ்நாடு நாமெல்லாம் தமிழ் மக்கள் என்ற எண்ணம் அரும்பி வருகிறது. எனவே,
எண்ணி மகிழுதடா நெஞ்சம்
தமிழ் உணர்வு மலருதடா கொஞ்சம்
எனச் சிறிது மகிழ்ச்சி கொள்ளலாம். உலகின் முதல் இனம் நம் தமிழினம், உலக முதல் மொழி நம் தமிழ் மொழி என்றெல்லாம் நாம் பெருமை பேசிக் கொண்டாலும் கல்வி முதலான அனைத்திலும் நாம் அடிமைப்பட்டே கிடக்கின்றோம். அடிமைத் தளையை அறுக்கத் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இக்குரலின் உண்மையை மக்கள் புரிந்து கொண்டாலும், பெரிய கட்சித் தலைமைகளின் கொத்தடிமைகளாகவே விளங்குகின்றனர். தமிழ்த்தேசிய வாணர்களும் கட்சி அரசியல் ஈர்ப்பாலும் தோழமைக் கட்சிகளின் பதவி நலம் சார்ந்த பிணைப்புகளாலும் உட்பகையினரிடமே உறவாடி வருகின்றனர். இதனால் உண்மையாகவே தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்க முயல்வோர் பின்னடைவையே சந்திக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். தமிழ் மக்களாகிய நாம், நம் நாட்டிலும் பூமிப்பந்தின் பிற பகுதிகளிலும் முழு உரிமையோடு வாழ வேண்டும். இதற்கு இன்று வழிகாட்டக்கூடியவர்களோ மாணாக்கர்களையும் இளைஞர்களையும் தலைமை ஏற்று நடத்திச் செல்பவர்களோ யாருமில்லை. ஆனால், தமிழ்த்தேசிய உணர்வைப் பரப்பித் தமிழ்ப்போராளியாக வாழ்ந்த பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் கருத்துகளைப் பின்பற்றி நடந்தால் நாம் எளிதில் வெற்றி காண முடியும். பேராசிரியர் இலக்குவனார் நமக்குத் தந்த அறிவுரைகளே இலக்குவம் ஆகும். இலக்குவ நெறியில் நாம் வாழ்ந்தால் தமிழ் மக்கள் உரிமை வாழ்வுடன் உயர்ந்தோங்கித் திகழ்வர். தமிழ் மக்களும் அவர்களை வழி நடத்திச் செல்ல விரும்பும் தலைவர்களும் செல்ல வேண்டிய இலக்குவ நெறியில் ஒரு பகுதியை நாம் காண்போம்.
தேசிய நெறி :
பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் ஒரு புறம், பிற அறிஞர்கள் வழியில் இலக்கியப் பணியில் ஈடுபட்டாலும் மறுபுறம் தமிழ்த்தேசிய அறிஞராகத் திகழ்ந்தார். நாம், மொழியாலும் இனத்தாலும் நாட்டாலும் தமிழரே என்பதை வலியுறுத்தினார். இந்தியமும் திராவிடமும் பேசப்பட்ட காலத்தில்
தமிழரின் அரசை ஆக்குவோம்! – இனித்
தமிழகம் சிதைவதைத் தாக்குவோம்!
தமிழகம் உலகத்தின் தாயகம்! – இதைத்
தரணியோர் மதித்திடச் செய்குவோம்!
என்றும்
உரிமை ஞாயிறு தோன்றுகின்றது. உறங்காதே தமிழா!
உன்றன் நாடும் உரிமை பெற்றிட உழைத்திடு தமிழா!
என்றும் எழுதி வந்தார்.
இந்திய விடுதலைக்குப் பின்னரும், தமிழர்க்குத் தேசிய மொழி தமிழே என்பதை வலியுறுத்தி வந்தார். இவ்வுணர்வை அனைவரும் பெற்றால்தான் தமிழர் உலகெங்கும் பாதுகாப்புடன் வாழ இயலும். நம் கடமை, நம் தேசியம் தமிழே என்பதை எல்லா வகையாலும் எல்லார்க்கும் உணர்த்த வேண்டுவதே!
அரசு நெறி :
பேராசிரியர் இலக்குவனார் தனியுரிமை உடைய மொழி வழித் தேசியக் கூட்டரசே நமக்குத் தேவை என்றும் மொழி வழி மாநிலங்கள் அல்ல என்பதையும் வலியுறுத்தி வந்தார். அவ்வப்பொழுது எழும்பும், மாநிலத்தில் தன்னாட்சி மையத்தில் கூட்டாட்சி என்னும் வெற்றுக்குரலால் எள்ளளவும் பயனில்லை. ஆசியக் கூட்டரசு, உலகக் கூட்டரசு என்னும் படிநிலைகள் வருவதற்காக இந்தியக் கூட்டரசு வேண்டும் என்ற பேராசிரியர் இலக்குவனார் வழியில் தேசிய இனங்களின் கூட்டரசை நாம் வலியுறுத்திப் பெற்றால்தான் நம் துணைக்கண்டம் முழுவதும் அமைதி தவழும். நெடுங்காலம் தீராமல் உள்ள காசுமீர்ச்சிக்கல் போன்றவை எல்லாம் காணாமல் போய்விடும்
தெரிவு நெறி :
அயல்மொழிக் கலப்பால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கியதை உணர்த்திப் பிறமொழிக் கலப்பு இன்றியே எழுதியும் பேசியும், இருக்கின்ற தமிழ்ப்பரப்பையாவது கட்டிக்காக்க வேண்டும் என்பதே பேராசிரியர் இலக்குவனார் வேண்டுகோள். இதற்கு அரணான அரசு அமைய வேண்டும் என்பதற்காகத்தான் செந்தமிழைக் காப்போர்க்கே தேர்தலில் எம் வாக்கு என்பதே மக்களின் முடிவாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ் காக்கும் உண்மையான தமிழார்வலர்களைத்தான் நாம் தேர்ந்து எடுக்க வேண்டுமே யன்றித் தமிழால் தங்களை மட்டும் உயர்த்திக் கொண்டு தமிழைப் புறக்கணிப்பவர்களை அல்ல. எனவேதான் தமிழ்ப்பகைவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும் என்றார்.
தூய்மை நெறி :
தமிழின் பேரால் ஆட்சிக்கட்டிலில் ஏறுபவர்கள் காலத்தில்தான் முன்பைவிட மிகுதியாகத் தமிழ்க் கொலைகள் நடைபெறுகின்றன. திரைப்படம், இதழ்கள் என அனைத்து ஊடகங்களிலும் நடக்கும் தமிழ்க் கொலைகளுடன் இப்பொழுது இணையத்தில் நடைபெறும் தமிழ்க் கொலைகள் கணக்கிலடங்கா. ஒரு மொழியழியும் பொழுது அம்மொழி பேசும் இனமும் அழிகிறது என்பதைச் சான்றுகளுடன் உணர்த்தியவர் பேராசிரியர் இலக்குவனார். அதே நேரம் ஒரு மொழி பேசுநர் உரிமை வாழ்வு வாழாவிடில் அம்மொழியின் பயன்பாடு குறைந்து அம் மொழி அழியும் என்பதையும் அவர் விளக்கி உள்ளார். தமிழர் உரிமைவாழ்வில் உயர்ந்த நிலையில் இருந்தால்தான் தமிழ் வாழும் என்பதை வலியுறுத்தியவர் பேராசிரியர் இலக்குவனார். “தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்; தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும்” என்னும் பேராசிரியர் இலக்குவனார் முழக்கத்தை நாம் மறவாமல் தவறாமல் பின்பற்றி நடந்தால் உலகெங்கும் தமிழும் வாழும்! தமிழரும் வாழ்வர்! உரிமைவாழ்வினைப் பெறாததால்தான், நம்மால் தமிழ் ஈழப்படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை என்பதையும் ஈழத்தமிழரசை உலகம் ஏற்கும்படிச் செய்ய இயலவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். எனவே நாம் பிழையின்றியும் பிறமொழிக் கலப்பின்றியும் பேசி உழைப்பால் உயர்ந்த செல்வ நிலையை அடைந்து உரிமை வாழ்வைப் பெற வேண்டும்.
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் முப்பத்தொன்பதாம் நினைவு நாளில் வெளியானது. நட்பு : 03/09/2012 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக