அழகிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 நவம்பர், 2020

காங்கிரசின் படுகொலைகளை அழகிரி நினைத்துப் பார்க்கட்டும்!

 தாய் மின்னிதழ்

காங்கிரசின் படுகொலைகளை அழகிரி நினைத்துப் பார்க்கட்டும்!

பேராயக் கட்சியின் (காங்.) தமிழகத் தலைவரான கே.எசு.அழகிரி அடிப்படை அறிவற்றவரா எனக் கேட்டால், கட்சியை நடத்துவதற்குரிய, திட்டமிடுவதற்குரிய நல்லறிவு படைத்தவர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் அவருடைய கட்சிக்குரிய இலக்கணத்தின் படி இந்தியத் தலைமைக்கு அடிமையாகக் காட்டிக் கொள்வதற்குரிய கருத்துகளை வெளியிடுவதில் வல்லவராக உள்ளார். மறந்தும் தமிழ், தமிழர் நலன்களில் அவர் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேலிடத்தில் தெரிவிக்க மாட்டார்.

இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட எழுவரையும் விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் சட்டமன்றத் தீர்மானம் முதலான பல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.

இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவர் வழியில் எழுவர் விடுதலைக்கு முயன்று வருகிறார். ஈராண்டாக விடுதலைக்கான கோப்பினை உறங்க வைத்துக் கொண்டிருக்கும் ஆளுநருக்கு நேரிலும் மடல் வழியிலும் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

எழுவரையும் விடுதலை செய்ய வாய்ப்பு வந்த பொழுது அப்போதைய மத்திய ஆட்சியின் கட்டுப்பாட்டினால் மேனாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அந்த நல்வாய்ப்பைத் தவற விட்டார். அதன் கெடுதிதான் இன்று வரை நீடித்துக் கொண்டுள்ளது.

ஆனால், அவர் தலைவராக இந்த தி.மு.க.வின் இந்நாள் தலைவர் மு.க.தாலின் அன்றைய கருத்தை உடும்புப் பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கவில்லை. எந்தச் சூழலில் அப்படிச் சொன்னார் என்றும் ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை. எதிர்க் கட்சித்லைவரின் கடமையைச் செய்யும் வகையில் எழுவர் விடுதலைக்குக் குரல் கொடுத்து வருகிறார்.

அது மட்டுமல்ல. ஆளுநருக்கு இது குறித்து மடலும் அனுப்பியுள்ளார். அதில், “அரசியல் சட்டப் பதவிகளில் இருப்போர் உரிய கால வரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை.

மாநில அரசின் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல் – தங்கள் அலுவலகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது – சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

எனவே தமிழக அமைச்சரவையின் 09.09.2018–ஆம் நாளிட்ட பரிந்துரையைப் பரிவுடன் ஏற்று ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையைக் குறைத்து – உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆளுங்கட்சியின் உண்மைக் குரலுக்குச் சார்பாகவே மாந்த நேய அடிப்படையில் மடல் அனுப்பியுள்ளார். இதுதான் தலைவனுக்குரிய அழகு.

ஆனால் கே.எசு.அழகிரி, தமிழ்நாட்டின் முதன்மைக்கட்சி ஒன்றின் தலைவர் என்ற முறையில் தான் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றாததுடன் அதற்கு எதிராகவும் வேண்டுமென்றே அறிக்கை விட்டுள்ளார். அதில், “7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை உறுப்பினராகவும் இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஒருவர் இவ்வாறு கூறுவது வியப்பாக உள்ளது. சட்டம் இயற்றும் பொறுப்பில் இருந்த ஒருவருக்கு அடிப்படைச் சட்ட அறிவு கூட இல்லாமல் இருக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறது. வேண்டுமென்றே தவறான நச்சுக் கருத்துகளை மக்களிடம் திணிக்க முயலுகிறார் என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.

நீதிமன்றத்திற்குத் தண்டிக்கும் அதிகாரம் மட்டும்தான் உள்ளது. ஒரு வழக்கில், நீதிமன்றம் தண்டித்த பின்னர், மேல் முறையீட்டு நீதிமன்றம் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது மாற்றலாம். ஆனால், தண்டனை வழங்கிய நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது.

ஆனால், தண்டிக்கப்பட்டவர்களை மன்னிக்கும் அதிகாரம் சிறைத் துறைக்கு இருக்கிறது. இந்தியாவில் குற்ற வழக்குமுறைச் சட்டம் 432, 433 ஆகியவற்றின் கீழ் இவை செயல்படுகின்றன.

தண்டனைக் குறைப்புப் பிரிவு (remission section) மூலம் அதற்குரிய விதிகளைப் பின்பற்றி அரசின் ஒப்புதலுடன் அவர்கள் தண்டனைவாசிகளை மன்னித்து விடுதலை செய்யலாம். உலகெங்குமே இதுதான் நடைமுறை. இதனைப் பின்பற்றச் சொன்னால் இல்லாததும் பொல்லாததுமான அறிக்கை விடுகிறார்.

எனினும், மத்திய அரசு சட்டங்களின் கீழ்த் தண்டனை பெற்றவர்களின் தண்டனைக் குறைப்பு விவரத்தை மத்திய அரசிற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால், அப்பொழுதும் மத்திய அரசிற்கு மறுக்கும் உரிமையில்லை. தன் கருத்தினைத் தெரிவிக்கலாம் அவ்வளவுதான். இதை ஏற்பதும் மறுப்பதும் மாநில அரசிற்குரியது. இந்த நடைமுறையைப் பின்பற்றியே மேனாள் முதல்வர் செயலலிதா 2015 இல் செயற்பட்டார்.

எனவேதான், மேனாள் முதல்வர் செயலலிதா,

“மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திர ராசா என்கிற சாந்தன், சிரீகரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, இராபர்ட்டு பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அறிவித்தார்.

பிற நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற மாநிலங்களில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் இதுவரை தண்டனைக் குறைப்பு முறையில் ஆயிரக்கணக்கான தண்டனைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உண்மையான நீதிமுறையும் சட்ட முறையும் இவ்வாறு இருக்க கே.எசு.அழகிரியும் அவர் கட்சியினரும் எதிர்ப்பது அரசின் சட்ட நடைமுறைகளில் குறுக்கிடுவதாகும். எனவே, இவர்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“சட்டத்தின் முன் யாவரும் சமம்” என்பது குற்றவாளிகள் கண்ணோட்டத்தில் மட்டுமல்ல. பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்திலும்தான். பாதிக்கப்பட்டடவர்களில் செல்வமும் செல்வாக்கும் உள்ளவருக்கு ஒரு நீதி. ஒன்றுமில்லாதவருக்கு வேறொரு நீதி என்பது சட்டமல்ல.

எனவே, கொல்லப்பட்டவர் முன்னாள் தலைமையமைச்சராக இருந்த இராசீவு காந்தி என்பதற்காகத் தண்டனைவாசிகளுக்கு எதிராக நீதியை வளைப்பதும் குற்றமாகும்.

குற்றம் புரிந்தவர்களுக்கே முன்விடுதலை என்பது சட்டப்படியான செயலாக உள்ளபொழுது குற்றவாளிகளாகச் சிக்க வைக்கப்பட்டவர்களிடம் மனிதநேயமும் அறவுணர்வும் கொண்டு செய்பட வேண்டுமல்லவா?

காவல்துறை அதிகாரிகளும் நீதித்துறையினருமே இவர்களுக்குப் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட சான்றாவணங்களின்படித் தண்டனை வழங்கப்பட்டதாகப் பொதுவெளிகளில் தெரிவித்துள்ளனர். அப்பொழுதே விடுதலை செய்து இழப்பீடு கொடுக்க வேண்டியவர்களை இன்னும் அடைத்து வைத்திருப்பது கொடுமையல்லவா?

நீதிக்குக் குரல் கொடுப்பவரின் கட்சியின் வண்டவாளம் என்ன? கட்சித் தலைவர்களுக்காகக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குப் பதவிகள் வழங்குவதுதானே!

போலநாத்து பாண்டே (Bholanath Pandey), தேவேந்திர பாண்டே (Devendra Pandey) ஆகிய இருவரையும் பேராயக்(காங்.)கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கியது. தேவேந்திரர் உத்தரப்பிரதேசக் காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார்.

போலாநாத்து இந்திய இளைஞர் காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலராகவும் இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சியின் செயலராகவும் நியமிக்கப்பட்டார். இவர், தொடர்ந்து ஆறுமுறை (1991, 1996, 1999, 2004, 2009, 2014) சலேம்பூர் (Salempur) நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் ஆக்கப்பட்டார். அப்படி என்ன இவர்கள் நாட்டு மக்களுக்காக நாட்டிற்காகப் பாடுபட்டார்கள் என்கிறீர்களா?

நெருக்கடிநிலைத் துன்பங்களை வழங்கியதற்காகக் கைது செய்யப்பட்ட இந்திரா காந்தியை விடுதலை செய்யவும் அவர் மகன் சஞ்சய் காந்திக்கு எதிரான அனைத்துக் குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறவும் வலியுறுத்தி 126 பயணிகள் இருந்த விமானத்தைக் கடத்தினார்கள். இதற்குத்தான் இந்தப் பரிசுகள்.

இந்திராகாந்தி கொல்லப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்; துன்புறுத்தப்பட்டனர்; அவர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டன; நூற்றுக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

ஆனால் குற்றவாளிகளை ஒன்றும் செய்யவில்லை. பெயரளவிற்குச் சிலர் மீது வழக்குகள் போடப்பட்டன. அவர்களில் ஒருவரான சஞ்சன் குமார் (Sajjan Kumar) என்பவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற ஊரக மேம்பாட்டுக் குழு உறுப்பினர் முதலான பரிசுகள் வழங்கப்பெற்றன. (எனினும் பின்னர் அவர் தண்டனை பெற்றார்.)

மூத்த தலைவர் கமல்நாதனுக்கு (Kamal Nath) 1985, 1989, 1991, 1998, 1999, 2004, 2009 ஆம் ஆண்டகளில் மக்களவை உறுப்பினர், 1991 – 1995 இல் சுற்றுச்சூழல் வனங்களுக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் பதவி; 1995 – 1996 இல் நெசவுத் தொழில்களுக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் பதவி; 2001 – 2004 வரை, காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி; மே 23, 2004 இல் இருந்து வணிகம் & தொழில்துறையின் மத்திய அமைச்சர் பதவி; 2009 இல் சாலைப் போக்குவரத்து – நெடுச்சாலைகள் துறை மத்திய அமைச்சர் பதவி; 2018 இல் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் பதவி எனத் தொடர் பரிசுகள் வழங்கப் பெற்றன.

எதற்காக இத்தனைப் பரிசுகள்? சீக்கியர் படுகொலைகளை விசாரித்த நானாவதி ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இவர் முதன்மையானவர். அந்தத் தகுதிக்காகத்தான் இத்தனைப் பதவிப் பரிசுகள்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். கொலைகாரர்களுக்கும் கற்பழித்தவர்களுக்கும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் பயணிகள் விமானத்தைக் கடத்தியவர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்காகக் குற்றம் இழைத்தவர்கள் என்பதால் குற்ற வழக்கின்றியும் குற்ற வழக்குகளில் சிக்கினாலும் விடுவித்தும் பதவிகள் வழங்கும் கட்சியின் மாநிலத் தலைவர் இப்பொழுது அப்பாவி எழுவர் பற்றித் தவறான கருத்துகள் தெரிவிப்பதற்கு வெட்கப்படவில்லையே!

எனவே, தமிழக அரசு சட்டமுறையான செயலைத் திரித்துக் கூறி அரசுப்பணிக்கு இடையூறாக இருக்கும் கே.எசு.அழகிரி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு உள் ஓதுக்கீடு வழங்கியும் வேறு சில நடவடிக்கைகள் மூலமும் திறம்பட முதல்வர் செயல்படுகிறார். புரட்சித்தலைவி வழிச் செயல்படும் இலட்சியத் தலைவர் எடப்பாடியார் என அன்பர்கள் போற்றும் வண்ணம் திகழ்கிறார். எனவே, உள் ஒதுக்கீட்டு ஆணை போன்று எழுவர் விடுதலைக்கும் உடன் ஆணை வழங்க வேண்டுகிறோம்.

மனித நேயமற்ற தமிழகம் என்ற பெயர் வராமல் காத்திட விடுதலை ஆணை பிறப்பிப்பார் என எதிர்நோக்குகிறோம்.

-இலக்குவனார் திருவள்ளுவன்

08.11.2020 6:30 P.M

திங்கள், 25 மார்ச், 2013

திமுக செயற்குழு: அழகிரி புறக்கணிப்பு

திமுக செயற்குழு: அழகிரி புறக்கணிப்பு

திமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று தொடங்கி நடைபெறும் சூழ்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் தென்மாவட்ட திமுக பொறுப்பாளருமான மு.க.அழகிரி கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
நேற்று இரவு வரை சென்னையில் இருந்த அவர் இன்று காலை மதுரைக்கு கிளம்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, மத்திய அரசில் இருந்து திமுக விலகுவதாக அதன் தலைவர் மு.கருணாநிதி அறிவித்ததில், அதிருப்தியில் இருந்தார் அழகிரி. தன்னிடம் எதுவும் கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறியிருந்த அழகிரி, மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் சற்று நெருக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் செயற்குழுவில் பங்கேற்பாரா, மாட்டாரா என்று பல்வேறு யூகங்கள் உலவி வந்த நிலையில், இன்று காலை அவர் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு மதுரைக்குச் சென்றார்.
அதே நேரம் அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மன்னன், தளபதி உள்ளிட்டோர் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்துள்ளனர்.

புதன், 20 மார்ச், 2013

அழகிரி தமிழ்ப்பேச்சு : மத்திய அமைச்சருக்கு ஆங்கிலம், இந்தி என்பன கட்டாயம் தேவையா?

பேச்சின் அடிப்படையில் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், ஆங்கிலம் அல்லது இந்தி தெரியாததைக் கேவலமாகச் சொல்வது முற்றிலும் தவறு.  ஆங்கிலம், இந்தி தெரியாதவர்கள் குடியரசுத் தலைவராகக்கூட இருந்திருக்கிறார்கள்.  தாய்மொழியில் தெரிவிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.  உரிய மொழி ஊடகத்தினர் மொழி பெயர்ப்பு மூலம கருத்தினைஅறிந்து கொள்ளலாம். எனவே, பிற மொழியில் பேசவில்லை என்பதை இழிவாகக் கூற வேண்டா.  வாய்ப்பிற்கேற்ப ஒவ்வொருவரும் பிற மொழியினைக் கற்பது என்பது வேறு. அவ்வாய்ப்பு பெறாதவர்கள் தம் மொழியிலேயே கருத்து தெரிவிக்கும் அடிப்படை உரிமை என்பது வேறு. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தலைவரின் முடிவுதான் எனது நிலைப்பாடு: மு.க. அழகிரி


ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக விலகும் விஷயத்தில் "கட்சித் தலைவரின் முடிவுதான் எனது நிலைப்பாடு' என்று மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் போக்குக்கு அதிருப்தி தெரிவித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும், அமைச்சரவையில் இருந்தும் விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
  இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் கருத்தை அறிய வடமாநிலங்களைச் சேர்ந்த சில தொலைக்காட்சி நிருபர்கள் சென்றனர்.
அப்போது வளாகத்தில் உள்ள தனது அமைச்சக காரில் ஏறிய அழகிரியிடம், ""மத்திய அமைச்சரவையில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் விலகுவதாக திமுக அறிவித்துள்ளதே. அதுபற்றி உங்கள் நிலை என்ன?'' என்று கேட்டனர்.
அதற்கு அழகிரி, ""இப்போதுதான் நானும் அது பற்றி கேள்விப்பட்டேன்'' என்று பதில் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, ""ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்துவரும் ஆதரவை திமுக விலக்கிக் கொள்ள இதுதான் சரியான தருணம் என கருதுகிறீர்களா..?'' என்று நிருபர் ஒருவர் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதில் அளித்த அழகிரி, ""நான் தமிழில்தான் உங்களுக்குக் கூற முடியும். எங்கள் லீடர் என்ன சொல்கிறாரோ அதன்படிதான் நான் செயல்படுவேன்'' என்றார்.
மற்றொரு நிருபர், ""ஆங்கிலத்தில் பதில் தர முடியுமா?'' என்று கேட்க ""நோ, ஐ கான்ட் ஸ்பீக் இன் இங்கிலீஷ். ஐ ஹேவ் லாங்குவேஜ் பிராப்ளம்'' (என்னால் ஆங்கிலத்தில் பேச முடியாது. எனக்கு மொழிப் பிரச்னை உள்ளது) என்று ஆங்கிலத்தில்
அழகிரி கூறினார். அதைத் தொடர்ந்து, நிருபர்கள் மறு கேள்வி எழுப்பும் முன்பு தனது ஓட்டுநரிடம் காரை வேகமாக இயக்கும்படி அழகிரி கூறினார். அதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தை விட்டு அழகிரியின் கார் வேகமாக சென்றது. 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துகள்(1)

நான் அழகிரியின் பதிலை டிவியில் பார்த்தேன். ரொம்ப கேவலமாக இருந்துது. ஒரு மத்திய மந்திரிக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தி தெரியாமல் எப்படி தன பணிகளை செய்ய முடியும்? திமுகவின் கட்சி நலனுக்காக, கொள்ளை அடிக்க ஒரு மத்திய மந்திரி.. !!
பதிவுசெய்தவர்  03/20/2013 07:16 இதற்கான பதில்