பூம்புகார் அவலநிலை

1975இல் தமிழக முதல்வராக இருந்த இலக்கியப்பேராசான் கலைஞர் தம் கற்பனை வளத்தால் சிலப்பதிகாரம் என்னும் ஒப்பற்ற இலக்கியத்திற்கு உயர்வாழ்வு அளித்தார். சிலப்பதிகாரக் கதைக்காட்சிகளை நுட்பம் மிக்க சிற்பப் பலகைகளாக உருவாக்கினார். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட எழுநிலைமாடத்தைப் பூம்புகாரில்  கட்டி அதில் மக்கள் பார்த்து மகிழுமாறு பதிக்கச்செய்தார். அவற்றை ஒருமுறை பார்த்தாலே சிலப்பதிகாரத்தைப்  படித்த எண்ணம் நமக்குத் தோன்றும்.மிக அழகான கண்ணகி, மாதவி  சிலைகளையும் அங்கு நிறுவச் செய்தார். மக்கள் அவர்களை நேரில் பார்க்கும் தோற்றத்தையே அச்சிலைகள் உண்டாக்கும்.
ஏறத்தாழ 34 குறுக்கம் (ஏக்கர்) பரப்பளவில் அந்தச் சிலப்பதிகாரக் கலைக்கூடம் அமைக்கப் பட்டது. அங்குச் செல்லும் சாலையின் தொடக்கத்திலிருந்தே கரிகாலன் தோரண வாயில், இளங்கோஅடிகள் தோரணவாயில் போன்ற அழகான வாயில்களை அமைத்தது அன்றைய கலைஞர் அரசு. அங்கே கலையரங்கம் பாவைமன்றம்,நெடுங்கல் மன்றம் போன்ற மன்றங் களை அமைத்து உண்மையான பழங்காலப் பூம்புகாரைப் பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது அன்றைய அரசு. எந்த நாட்டிலும் ஓர் இலக்கியத்திற்கு இவ்வளவு உயர்மதிப்பு அளிக்கப்பட்டதாகச் சான்று இல்லை.
மக்கள் மனங்கவரும் சுற்றுலா, பொழுதுபோக்கு நல்லிடமாக அதைக் கலைஞர் உருவாக்கி யிருந்தார்.
இன்று அதன் நிலை மிகவும் அருவருப்பாக ஆகிவிட்டது.
1.எழுநிலை மாடத்தில் இருந்த மின்இணைப்பு உடைக்கப்பட்டுக் கிடக்கிறது. விளக்கு எரிய வாய்ப்பில்லை. இருட்டாக இருப்பதால் சரியாகப் பார்க்க இயலவில்லை.
 2“.தொடாமல் பார்க்கவும்” என்னும் அறிவிப்போடு இரண்டு பேழைகள் இருக்கின்றன. அவற்றில் பழங்கால இசைக்கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் உள்ள சில பொருள்கள் உடைக்கப்பட்டுள்ளன.அந்த நிலைப்பேழைகள் திறந்தே கிடக்கின்றன.
3.அங்கே அழகிய வேலைப்பாடமைந்த கண்ணகிசிலையும் மாதவிசிலையும்  உள்ளே திறந்த அரங்கில் கண்ணாடிக் கதவால் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. அச்சிலைகள் இருக்குமிடத்தில் புதர் மண்டிக்கிடக்கிறது.
4.வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு சட்டைபோடாமல் வாயிலுக்கு வெளியே கட்டைமேல் வழிப்போக்கர் போல அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் ஐந்து உருவா கொடுத்துவாங்கிய நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே அனுப்புகிறார். அவரிடம் அவலநிலை பற்றிக் கேட்டது தவறாகி விட்டது. என்னை ஒன்றும் செய்யமுடியாது யாரிடம் வேண்டுமானாலும் சொல்….என்று சொல்கிறார்.
5.திறப்புவிழாக் கல்வெட்டு ஒன்றும் கண்ணில் படவில்லை.
6.ஆனால் சற்றுத் தொலைவில் கடலையொட்டி அமைந்துள்ள நெடுங்கல் மன்றத்துக்கு எதிரில் ஒரு கல்வெட்டு சிதைந்து போய்க்கிடக்கிறது. அதில் திறந்த ஆண்டு அதைத் திறந்தவர் பெயர் கள் இருக்கின்றன. மன்றத்தைப் பார்ப்பவர் முயன்றால் தான் தேடிப்பார்க்க முடியும்.
அந்த நெடுங்கல் மன்றம் மிகஅழகானது. அதைச் சுற்றிலும் பெரிய வட்டமான தரை அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் அத்தரை இப்போது மண் தரையாக மாறிவிட்டது.
7.நெடுங்கல் மன்றத்தின் துாண்கள் உடைந்துபோய்க் கிடக்கின்றன. சுற்றுலாப்பயணிகளின் மண்டைமேல் அது விழுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படி விழுந்தால் ஒருவேளை விடிவுபிறக்குமோ என்னவோ?  நாம் பார்க்கும் போது காதலன் காதலி ஆகியோர்  திகைப்புடன் நின்று நெளிந்தனர்.நெடுங்கல்மன்றத்தின் எதிர்ப்பக்கத்தில் ஒருபெரிய கட்டடம் இருக்கிறது. பாழடைந்து  இடிந்துபோய்க் கிடக்கிறது. அங்குச் சில அறைகள் இருக்கின்றன. மேலே போக மாடிப்படி அமைத்திருக்கிறார்கள். எல்லாம் பாழடைந்த கிணறு போலக் கிடக்கின்றன.
8.அங்கு ஐந்தாறு சிறுகட்டடங்கள் தோப்புக்குள் இருக்கின்றன. அவை முத்துச்சிப்பி போல அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை அனைத்தும் உடைந்து போய் காரை பெயர்ந்த நிலை யில் அருகில் போக முடியாத அளவுக்கு மோசமாக இருக்கின்றன.
9.கலைக்கூடத்தின் எதிரில் இருப்பது பாவை மன்றம். அது ஒரு தோப்பு. அங்கே சுற்றுலாக் குழந்தைகள் விளையாடச் சறுக்குமரம் போன்றவை இருக்கின்றன. அங்குள்ள பாவை மன்றம் உயரமாகவும் வட்ட வடிவிலும் மிக அழகாக அமைக்கப்பட்டிருந்தது. எட்டு அழகிய பெண் களின் சிலைகள் சுவர்களில் புடைப்புச் சிற்பங்களாகப் பெரிதாக அமைக்கப்பட்டுள்ளன.. திருக்குறள் காமத்துப்பாலின் சில குறட்பாக்களுக்கு விளக்கமாக அச்சிலைகள் அமைந்துள்ளன. ஆனால் அவை குப்பைத் தொட்டிக்குள் இருப்பதுபோல் இப்போது காட்சியளிக்கின்றன. பெருக்கித் துப்புரவு செய்து பலஆண்டுகள் ஆகியிருக்கும் போலும். பக்கத்திலும் சுற்றிலும் ஒரே குப்பைகள். உணவை உண்டு மக்கள் எறிந்த பாக்குத் தட்டுகளும் தாள்தட்டுகளும் குப்பையாய்க் குவிந்துள்ளன.அவற்றைப் பார்க்கும் போது மனம் குமுறுகிறது. இலக்கிய ஆர்வலர்களுக்கும் பொதுமக்களுக்கும் செய்யும் ஏமாற்றாக இந்நிலையை உணரவேண்டும். கும்பகோணம், காரைக்கால், தாராசுரம் போன்ற சிறப்பான சுற்றுலா இடங்களைப் பார்ப்பவர்கள் ஆர்வத்தோடு இங்கு வந்து ஏமாற்றத்தைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
கலைக்கூடத்தைப் பார்ப்பதற்கு நுழைவுக் கட்டணம்வேறு வாங்குகிறார்கள்.  சீட்டில் தமிழைக் காணவில்லை ஆங்கிலத்தில் மட்டுமே அந்த நுழைவுச்சீட்டு இருக்கிறது. அதில்  மீண்டும் வருக என்று அச்சிட்டு வைத்திருக்கிறார்கள். பாவைமன்ற முகப்பில் சீட்டு கொடுக்கும் ஒரே ஒர் ஆள் தன் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். கேட்டால் சுற்றுலா அலுவலகத்தில் கேட்கச் சொன்னார்.
அவர் சொன்னபடி அங்கே சென்றோம். அங்கே மின்சாரம் இருந்தது. மூன்றுபேர் அங்கே இருந்தனர். சுற்றுலா அலுவலர் மாதவன் நம்மைப் பார்த்ததும் விரைந்து சட்டையைப் போட்டுக்கொண்டார். அவரிடம் பூம்புகார் கலைக்கூடத்தைப் பற்றிய விளக்கப் புத்தகம் கேட்டோம் தயங்கியபடியே கொடுப்பதாகச் சொன்ன அவர் கடைசிவரை கொடுக்க வில்லை. சிரிப்பைத்தான் கொடுத்தார்.
“ஆட்கள் போடவில்லைங்க, துப்புரவு செய்தாலும் மக்கள் ஒத்துழைப்பு இல்லைங்க ” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். மின்சாரம் இருக்குமே என்றெல்லாம் “உண்மை ”யைச் சொல்லிக்கொண்டிருந்தார். கண்ணகி மாதவி சிலைக்கருகில் பாம்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் அதனால் பூட்டிவைத்திருக்கிறோம் என்று தான் பார்க்காத பாம்பின்மேல் குற்றம் சொன்னார். 34ஏக்கரில் உள்ள இப்பரப்பைப் பராமரித்தல் இயலவில்லை என்றார். “கல்லுாரிமாணவர்களை அழைத்துவந்து நாங்கள் துப்புரவு செய்யலாமா?” என்று கேட்ட தற்குச் சரி என்று சொன்னார்.
பூம்புகாரை நன்றாக வைத்திருந்தால் நல்ல வருவாயும் கிடைக்கும். பொதுமக்களுக்கு நல்ல இடத்துக்கு வந்து போன மன நிறைவும் இருக்கும். பொறுப்புள்ள முதல்வரும் அமைச்சரும் அதிகாரிகளும் இதைக் கவனிப்பார்களா? பூம்புகார் மயிலாடுதுறை வட்டங்களில் உள்ள பொதுநல ஆர்வலர்கள் கவனித்து நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும். பொது மக்க ளிடம் பேசும் போது, “கலைஞரிடம் உள்ள வெறுப்பை இன்னும் மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இருள் விலக ஒருநாள் வரவேண்டும்” என்று கூறினர்.