வட அமெரிக்கத் தமிழ் விழா 2015
தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான வட
அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை[FeTNA – Federation of Tamil Sangams of
North America] சார்பில் இந்த ஆண்டு கலிபோர்னியா மாநிலத்தில் சான் ஓசே [San
Jose] நகரில் சீரும் சிறப்புமாக பேரவைத் தமிழ் விழா நடந்துள்ளது. இந்தத்
தமிழர் மாநாட்டில் கிட்டத்தட்ட 2500 தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.
இரண்டு நாள் முழு நிகழ்வில் ஏராளமான
தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கு ஏறியன. முதல் நாள் தமிழ்த் தாய்
வாழ்த்து, வரவேற்புப் பாடலோடு விழா தொடங்கியது.
திருக்குறள் மறை ஓதியும், பாரதியார்
பாடல்கள், சங்க இலக்கிய பாடல்கள், பாரதிதாசனின் தமிழ்ப் பாடல்கள்
ஆகியனவற்றை வளைகுடா தமிழ் மன்றத்தின் குழந்தைகள் மிக அருமையாக அழகு தமிழில்
பாடி ஆடினார்கள். இந்த முதல் நிகழ்ச்சிகளே பார்வையாளர்களை வெகுவாகக்
கவர்ந்தன.
குழந்தைகள் கலந்து கொண்ட “திருக்குறள்
தமிழ்த் தேனீ” நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. பல அமெரிக்க மாநிலத்
தமிழ்ச் சங்கங்களில் முதல் நிலை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான
இறுதிப் போட்டி பேரவை மேடையில் நிகழ்ந்தது. குறளின் பொருளைச் சொல்லும்
பொழுது, குழந்தைகள் குறளையும், அதன் அதிகாரத்தையும் சொல்லும் பொழுது,
பார்வையாளர்கள் அரங்கு நிறைந்த கரவொலியோடு எண்ணற்ற மகிழ்ச்சியும்
அடைந்தார்கள். இந்தப்போட்டியில் பங்குப் பெற்ற ஐந்து குழந்தைகளும்
பரிசுகளைப் பெற்றார்கள், முதல் பரிசு பெற்ற பெண் குழந்தை ஈழத்தைச் சார்ந்த
பெண். இந்தக் குழந்தை ஐபேட்(iPad) கருவியைப் பரிசாகப் பெற்றார்.
இந்த வருடம் சிறப்பு விருந்தினராக
“இலங்கை வடக்கு மாகாண முதல்வர், மாண்புமிகு நீதியரசர் சி.வி. விக்னேசுவரன்”
கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். தமிழ் மொழியின் முதன்மை, தமிழர்களின்
எதிர்கால நலன் முதலியன குறித்துப் பகிர்ந்து கொண்டார். நீதியரசர், முதல்
அமைச்சர் – இலங்கையில் நடந்தது “ஒரு இனப் படுகொலையே” என்பதைச்
சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி இருப்பதை – அமெரிக்க வாழ் தமிழர்கள்
ஒருமனமாகப் பாராட்டினார்கள்.
முனைவர் இராசம் அவர்களை வரவழைத்துப்
பாராட்டியது. முனைவர் இராசம், “நமது வீட்டில் வளரும் குழந்தைகள்
மருத்துவராக, பொறியாளராக அல்லது எந்தத் துறை எடுத்தாலும், இல்லத்தில், நமது
உறவினர்களோடு தமிழில் உரையாடுவது மிக மிக முதனமையானது” என்றார். அவர் ”
ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் வர இருக்கும் தமிழ் இருக்கைக்குத் தன்னிடம்
உள்ள நிதியைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் தில்லை குமரனிடம் கொடுத்து உதவினார்.
தமிழ் நாட்டில் இருந்து நல்ல மொழி ஆளுமை உள்ள, முனைவர் பட்டம்பெற்ற தமிழ்
ஆசிரியரை – அந்தப் பதவிக்கு வர வழைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
வைதேகி எர்பர்ட்டு, சங்க இலக்கியங்கள்
அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். கல்வியாளர்கள் குழு தமிழ்
பயிற்றுவிக்க ஒரு தமிழ்ப் பேராசியர் வேண்டும் என்று வைத்த கோரிக்கைக்கு
ஆர்வர்டு பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கிய மகிழ்ச்சியான செய்தியைப் பேரவை
மேடையில் அவர் அறிவித்தார்.
அடுத்துப் பேரவையினர், மகிழினி மணிமாறனைச்சிறப்பித்தனர்.
கவிமாமணி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் பலரின் கவனத்தை ஈர்த்தது.
இவை மட்டுமல்லாது இலக்கிய வினாடி வினா, கருத்துக்களம், பேச்சரங்கம்- போன்ற வேறு பல நிகழ்ச்சிகள் மக்கள் கவனத்தை ஈர்த்தன.
இந்த விழாவின் மற்றொரு சிறப்பு
நிகழ்ச்சியாக இசைப்பேரறிஞர் பாபநாசம் சிவன் அவர்களுக்கு 30 க்கும் மேற்பட்ட
சிறுவர்கள் வாய்ப்பாட்டு, கருவியிசை[வில்யாழ்(வயலின்), வீணை,
புல்லாங்குழல்,முழவு(மிருதங்கம்), கைப்பறை(கஞ்சிரா)] மூலம் நினைவு
அஞ்சலிப் பாமாலை வழங்கப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சியைச் சுகி சிவா,
வித்துவான் முல்லைவாசல் சந்திரமௌலி உருவாக்கி வழங்கினார்கள்.
முனைவர் செளம்யா கதைகளை விளக்கி, பாபநாசம் சிவன் பாடல்கள், நந்தனார் வரலாற்றுப் பாடல்கள் ஆகியவற்றை இசைக்குழுவுடன் பாடினார்.
அமரர் கல்கியின் காவியங்களில் ஒன்றான
சிவகாமியின் சபதம், நாடக வடிவில் சிறப்பாக அரங்கேறியது. பாகிரதி சேசப்பன்
எழுத்து வடிவத்தில் சிரீதர் மைனர் இசை அமைப்பில் இடம்பெற்ற இந்நாடகம்
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வளைகுடாப்பகுதிப் பகுதியைச் சேர்ந்த பல
கலைஞர்கள் இதில் பங்காற்றினார்கள்.
“பூ உலகின் நண்பர்கள்” அமைப்பாளர் சுந்தரராசன் உரையாற்றினார்.
“சங்கங்களின் சங்கமம்” என்ற தலைப்பில்,
நிகழ்ந்த வாசிங்டன் வடக்கு, வாசிங்டன் தெற்கு, தல்லசு, கரலினா,
பென்சில்வேனியா, புதுயார்க்கு, புதுசெர்சி, கனெடிக்டெட்டு, சிகாகோ,
செயிண்ட்லூயிசு, அட்லாண்டா, மினசோட்டா, சாக்ரமேண்டோ, கனடா, வளைகுடா தமிழ்
மன்றம் முதலான சங்கங்களின் அணி வகுப்பு பார்வையாளர்களை வெகுவாகக்
கவர்ந்தது.
சங்கங்களின் சங்கமம் நேரத்தில் திருக்குறள்
சார்ந்த நடனம், மரபுக் கலைகள் – கோலாட்டம், காவடியாட்டம், சிலம்பம்
அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று மக்கள் மனதைக் கவர்ந்தன.
பேச்சாளர் சுமதிசிரீ தலைமையில் ”மொழியா,
கலையா” என்ற தலைப்பில் சிறப்பான கருத்தரங்கம் இருந்தது. அவரோடு தியாகராசர்
கல்லூரி தமிழ் ஆசிரியர் முனைவர் பேச்சிமுத்துவும் தமிழனின்மொழி உணர்வு
மற்றும் கலை உணர்வைப் பற்றி எடுத்துரைத்தார்.
பேரவையில் சிறந்த குறும்படம், திரைப்படம், ஒளிப்பட விருதுகள் வழங்கப்பட்டன.
பேரவைத் தமிழ் விழாவின் இரண்டாவது நாளில்
அரிசரண், பூசா,உரோகிணி, ஆலாப் இராசு திரை இசைப் பாடல்கள் நிகழ்ச்சி
அருமையாக இருந்தது. அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் அமீது கணீர்க்குரல்
அரங்கத்தை அதிர வைத்தது.
தமிழ் தொழில் முனைவர் கூட்டத்தில் ஏறத்தாழ
600 பேர் கலந்து கொண்டார்கள். தமிழகத்தில் இருந்து தியாகராசர் பொறியியல்
கல்லூரி தாளாளர், பெரும் தொழில் அதிபர் கரு.முத்து கண்ணன் கலந்து கொண்டு,
தொழில் முனைவோர் கூட்டத்தைச் சிறப்பித்தார். “புதிய தொழில் தொடங்கிப் பல
கோடிகள் சம்பாதிக்கவேண்டும் என்பது உங்கள் இலக்காக இருக்கக் கூடாது,
பலருக்கும் உதவ வேண்டும் என்பது உங்களது குறிக்கோளாக இருக்க வேண்டும்”
என்றார்.
அடுத்த ஆண்டு தமிழ்ச்சங்கப் பேரவை விழா நியூசெர்சி மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
– செய்தி உதவி: மயிலாடுதுறை சிவா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக