புதன், 12 ஆகஸ்ட், 2015

தொல்காப்பியம் தவறாது கற்றறிய வேண்டிய தனிப் பெரும் நூல் – பு.அ.சுப்பிரமணியனார்

tholkappiyam01

தொல்காப்பியம் தவறாது கற்றறிய வேண்டிய

தனிப் பெரும் நூல்.

அண்ணலார் பு.அ.சுப்பிரமணியனார்

  தமிழ்ப் பழங்குடி மக்களாகிய நமக்கு நம் மொழியின் இலக்கியப் பரப்பை உள்ளிய அளவிலேயே பெருமகிழ்ச்சி கொள்வதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அத்தகு பேரிலக்கியங்களின் அடிக்கல்லே தொல்காப்பியமெனும் பழந்தமிழ் இலக்கணமாம்.
  தொல்தமிழ்இலக்கணப்பெட்டகமாம் தொல்காப்பியத்தை எண்ணிப் பெருமையும் சிறப்பும் பெறுகின்ற பெரும் பேற்றினைத் தமிழ் மக்கள் பெற்றிருக்கிறார்கள். இவ்வுலகில் எண்ணற்ற நாடுகள் அவற்றின் மொழிகளைச் செம்மைப்படுத்த முனைந்த காலத்திற்கும் பன்னூறாண்டுகட்கு முன்னரே பைந்தமிழ் மக்கள் எத்தகு கால உச்சியை எய்தியிருந்தார்கள் என்பதை அறுதியிட்டுத் தெற்றெனப் புலப்படுத்தும் ஆற்றலினை ஆங்கிலப் பேரறிஞர்கட்கு இவ்வாராய்ச்சி நூல் நல்கி ஆன்ற துணை நிற்கும் என்பது தெள்ளிது.
  தமிழர்களின் இரு கண்களெனப் போற்றற்குரியன திருக்குறளும் தொல்காப்பியமும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து அறம் பொருள் இன்பம் அடைதற்குரிய வழிகளை அழகுற நுவல்வது திருக்குறள். பண்டைத் தமிழர்கள் தூய நல்லறத்தைத் துணையாகப் பெற்று வாழ்ந்த முறையையும், வாழ்வின்பம் துய்த்தற்குச் சிறப்புறு கருவியாய்த் துணைபுரிந்த தமிழ்மொழியின் இயல்பையும் எடுத்துக் காட்டி இசைப்பது தொல்காப்பியம். (திருக்குறள் மூலநூலாகவும் எளிய பொழிப்புரையுடன் பொருந்திய நூலாகவும் முதற்கண் வெளியிட்டோம். திருக்குறளைப் பலர் பல முறையில் வெளியிட்டு வந்திருக்கின்றனர் : இன்று திருக்குறள் மக்களிடையே செல்வாக்கு பெற்று உதவி வருகின்றது.)
   ஆனால், திருக்குறளுக்கும் அன்னையாய் விஞுங்கும் தொல்காப்பியத்தைப் புலவர் அல்லாதார் இன்னும் அறிந்திலர். தொல்காப்பியம் இலக்கணமாக இலங்குவதோடு, மொழி நூலாகவும், இலக்கிய ஆராய்ச்சிக் கருவி நூலாகவும் அமைந்துள்ளது. இது தமிழர்களும் தமிழர்களைப் பற்றி அறிய விரும்புவோரும் தவறாது கற்றறிய வேண்டிய தனிப் பெரும் நூலாகும்.
– அண்ணலார் பு.அ.சுப்பிரமணியனார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக