வனப்பகுதியில் ஆடுகள் மேய்க்கத் தடை
பொதுவாக மக்களை மூவகையாகப் பிரிப்பர்.
முதலியர், இடையர், கடையர் என்ற பிரிவினர். கால்நடைகளை மேய்த்தவர்களை இடையர்
– வேட்டுவ வாழ்வுக்கும் உழவு வாழ்வுக்கும் இடைப்பட்டவர் என்பர். ஆயர்,
மேய்ப்பர் என்ற சொற்கள் கிறித்தவச் சமயத்துடன் தொடர்புடைய சொற்களாக
மாறிவிட்டன. ஆயம் என்பது மந்தை என்ற பொருள் கொண்டது. ஆடுகளை மேய்ப்பவர்
ஆயர் எனவும் அழைக்கப்படுவர். இதேபோன்று தொழு, தொறு, தொழுவம், தொழுவர்,
தொழுதி எனவும் உள்ளன. பட்டினப்பாலையில் 281ஆம் அடியில் வரும் ‘புன்பொதுவர்’
என்னும் தொடருக்குப் ‘புல்லிய இடையராய் அரசாள்வோர்’ என நச்சினார்க்கினியர்
விளக்குகிறார். கால்நடைகளை வளர்ப்பவர்களை யாதவர், இடையர் எனவும்
உத்திரப்பிரதேசம் பீகார் ஆகிய மாநிலங்களில் யாதவ் எனவும் (ஆங்கிலத்தில் cowhed, meatherd, shepherd, herdcrowd எனவும்) அழைக்கப்படுவர்.
கி.மு.நான்காம் நூற்றாண்டில்
கிரேக்கத்தைச்சேர்ந்த மெகத்தனிசு என்ற வெளிநாட்டுப்பயணி இந்தியாவில் 7
சாதிகள் இருப்பதாக ‘இண்டிகா’ என்ற தன்னுடைய நூலில் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் மக்கள்தொகையும் ஏழு
சாதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்றாவது சாதியாகக் கால்நடை
வளர்ப்பவர்களை பிரித்துள்ளார்.
மூன்றாவது சாதி
ஆடு மேய்ப்பவர்களாலும் மாடு
மேய்ப்பவர்களாலும் பொதுவாக நகரத்திலும் சரி சிற்றூரிலும் சரி வீட்டில்
தங்காது வெளியே குடில் இட்டுத் தங்கும் பழக்கம் இருந்துள்ளது.
வேட்டையாடுவதன் மூலமும் பொறிவைத்து விலங்குகளைப் பிடிப்பதன் மூலமும்
அவர்கள் தீய விலங்குகளிடம் இருந்தும் பறவைகளிடம் இருந்தும் நாட்டினைக்
காக்கின்றனர். இப்பணிகளில் தங்களை முழுவீச்சில் இறங்கி, இவர்கள் தங்களையே
ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் உழவர்களின் தானியங்களுக்கும் சரி மக்களுக்கும்
சரி தொல்லை தரும் வனவிலங்குகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றனர்..
இதற்குப் பலனாக அரசனிடமிருந்து இவர்கள் உணவுப் பொருட்களும்
வாங்கிக்கொள்கின்றனர் என ‘இண்டிகா’ நூலில் மெகத்தனிசு குறிப்பிட்டுள்ளார்.
சமயங்களின் பார்வையில் ஆடுகள்
இந்து, இசுலாம், கிறித்தவம் ஆகிய
சமயங்களிலும் மற்ற சமயங்களிலும் ஆடுகள் முதன்மைப் பங்கினை
வகித்துள்ளன.இப்பொழுது கூட ஆடுகளை நேர்த்திக்கடனாகத் தங்கள் சமயத்
தெய்வங்களுக்கு வெட்டிப் பலிகொடுப் பதையோ அறுத்துப் பலிகொடுப்பதையோ
வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நேர்த்திக்கடன்
நேர்த்திக்கடன் என்பது தெய்வத்திற்கு
அளிப்பதாக நேர்ந்த கடனாகும். இந்நேர்த்திக்கடனை நேர்தல், நேர்ச்சை,
அங்கீகரித்தல், உடன்படல், சாமிக்கு நேர்தல், வேண்டுதல் எனப் பல பொருட்களில்
தமிழ்ச் சொல்லகராதியில் குறிப்பிட்டுள்ளனர்.
தனி ஒருவரது நலன் கருதியும், பொதுநலன்
கருதியும் நேர்த்திக்கடன் தரப்படுகின்றன. தனி ஒருவரது நோய் தீரவோ, திருமணம்
முதலிய நல்ல செயல்களுக்காகவோ நேர்தலைத் தனி ஒருவரது நலன் கருதிச்
செய்யப்பட்டதாகக் கொள்ளலாம். மழை பெய்யாமல் வறட்சியுற்ற காலங்களில் மழை
பெய்யவேண்டியும், தொழில் வாணிகம் முதலியன சிறப்பாக நடைபெறவேண்டியும் கொடிய
நோய் முதலிய துன்பங்கள் ஏற்பட்டபோது அவற்றை நீக்க வேண்டியும் நாட்டுப்புறத்
தெய்வத்திடம் வேண்டுதல் மேற்கொள்கின்றனர்.
வெள்ளைக்கிடாய் பலியிடுதல்
பலியிடுதல் பண்டைத் தமிழ் மக்கள் தெய்வத்தின் சினத்தைக் குறைக்க மேற்கொண்ட வழக்கமாகும். தெய்வத்தைக் குறிக்கும் பொழுது ‘பலிபெறுகடவுட்பேணி‘ என்று நற்றினை(251.8) குறிப்பிடுகிறது. வெள்ளாட்டுக் கிடாயை பலியிட்ட செய்தியை அகநானூறு(156.13) குறிப்பிடுகிறது.
கள்ளும் கண்ணியும் கையுறையாக
நிலைக்கோட்டு வெள்ளை நாய் செவிகிடாஅய்
நிலைத்துறைக் கடவுட் குளப்படவோச்சி
என்பதே அப்பாடல் அடிகள். திருவிழா
நடத்துவதற்கு முன்பாக கிடாய் வெட்டுவதாக நேர்ந்து கொண்டவர்கள் தங்கள்
கிடாயினைப் பலியிடுலை நேர்த்திக் கிடா / சாமிக்கிடா வெட்டுதல் என்று மக்கள்
கூறுவர். வேண்டுதல் நிறைவேற்றப்பட்டவுடன் வேண்டுதல் உள்ளவர்கள்
ஆட்டுக்குட்டியை வெட்டித் தெய்வத்திற்கு பலியிடுவர். இரண்டு மூன்று
மாத்திற்கு முன்பாகவே ஆட்டுக்குட்டியை அவர்கள் சாமிக்குட்டி என்று
அழைப்பர். நேர்த்திக்கடன் ஆட்டுக்குட்டி நன்றாக வளர்ந்ததும் தெய்வத்திற்கு
எடுக்கப்படும் திருவிழாவில் வெட்டப்படுகிறது.
நேர்த்திக்கடன் ஆட்டுக்குட்டியைக்
காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி என அந்தந்தக் கோயிலுக்கு முன்பாக
வைத்து அந்த ஆட்டுக் குட்டியின் தலை மீது பூசாரியால் மஞ்சள் தண்ணீர்
ஊற்றப்படுகிறது. ஆட்டுக்கிடாய் உடலை மூன்று முறை குலுக்கியவுடன் ‘தெய்வம்
உத்தரவு வழங்கிவிட்டது’ என்று மக்கள் கூறுகின்றனர். ஆட்டுக்கிடாயை
வெட்டுவதற்கு வெட்டரிவாளுடன் சாமியாடிகளில் ஒருவர் ஓங்கியபடிக்
குறிபார்த்துக்கொண்டு ஆயத்தமாக இருப்பார். அவர் ஒரே வெட்டில் வெட்டி
ஆட்டின் தலையைத் துண்டாக்குவார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள
விராலிப்பட்டியிலும், மதுரை மாவட்டத்தில் செக்கானூரணிப் பகுதியிலும்
கருப்பு ஆடுகளை நேர்ந்து விடும் பழக்கம் உள்ளது. கால்நடைகளின் இனப்
பெருக்கத்திற்காகவும், கால்நடைகளை நோய்களிலிருந்து காப்பாற்றவும், தங்கள்
ஊருக்கு ஏதாவது தீங்கு ஏற்படக்கூடாது என எண்ணியும் நோயோ காயமோ ஏற்பட்ட
ஆடுகளை விட்டு விட்டு நல்ல நிலையில் உள்ள ஆடுகளை நேர்த்திக்கடன்
விடுகிறார்கள். குறிப்பிட்ட நாள் வந்தவுடன் சாமியாடி ஒவ்வோர் ஆடாக வெட்டி
விடுவார். நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள பழைய வத்தலக்குண்டு ஊரில் 500 முதல்
1000 வரையில் உள்ள ஆடுகளை வெட்டி ஆட்டின் அரத்தத்தை குடிப்பது வழக்கமாகக்
கொண்டுள்ளனர். இதன் தொடர்பாகச் செக்கானூரணி கரும்பாறை கிடாவெட்டுபற்றி அந்த
ஊர்ப்பொதுமக்கள் கூறுகையில், “வேளாண்மைக் காலமான தை மாதம் முடிந்தவுடன் 30 மூட்டை அரிசி, தேவையான அளவு பலசரக்குப் பொருள்கள், 100 முதல் 200 கிடா வரை கொண்டு வருவோம். இரவு 9.00 மணிக்கு அரிசி, வெந்துகொண்டு
இருக்கும். அப்பொழுது ஆடுகளை வெட்டிக் கூறுகளாக்கி அதில் போடுவது வழக்கம்.
அதிகாலை விடிவதற்குள் சுமார் 45 க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் அந்த
உணவினைத்தின்று விடுவார்கள். நல்ல கமகமவென மணத்துடன் இருக்கும்”
என்றார்கள். இதேபோலப் பழைய வத்தலக்குண்டு ஊரில் உள்ள எடலையான்கோயிலில் தை
மாதம் பிறந்தவுடன் 500 முதல் 1000 வரை உள்ள உள்ள ஆடுகளை வெட்டி அரத்தத்தை
உறிஞ்சி குடித்துவிடுவார் சாமியாடி. முதலில் சாமியாடியாக வருபவர் 7
இளநீர்க் காய்களை வெட்டிக் குடிக்கச்செய்வார்கள். அதன்பின்னர் அடுத்த ஆண்டு
ஆடுகளின் அரத்தத்தைக் குடிக்கத் தொடங்கிவிடுவார். அப்பகுதியில் நெல்
விளைந்து அறுவடை செய்யும்பொழுது ‘முதலில் அளக்கப்படும் நெல் – சாமி நெல்’
எனக்கூறி ஒரு மரக்கால்; நெல்லைக் கோயிலுக்குக் கொடுத்துவிடுவார்கள்.
அதன்பின்னர் மற்ற பணிகள் நடைபெறும். திருவிழாவின்போது சாமிநெல்லை ஒன்று
சேர்த்து வெட்டப்பட்ட ஆட்டுக்கிடாய்களின் இறைச்சியுடன் இரவு 12.00
மணிக்குமேல் சமைத்து விடிய விடிய பந்தி நடைபெறும். அதன் பின்னர்
அதிகாலைக்குள் சாப்பிட்டுக் கிளம்பிவிடுவார்கள்.
இவ்வாறு கால்நடைகளைப் பலியிடும்
வழக்கத்தை வழக்கமாகக் கொண்டாடுவதுடன், அவ்வாறு சாமிகளுக்கு நேர்த்திக்கடனாக
விடப்படும் ஆடுகளை விட்டுவிடுகின்றனர். அந்த ஆடுகள் அந்த ஊரின்
எல்லையிலேயே மேய்கிறது. சாமி ஆடு என்பதால் யாரும் திருடவோ அதனை அடித்து
துன்புறுத்தவோ செய்வது கிடையாது. மேலும் ஆடுகளைத் திருடினாலோ அடித்தாலோ
சாமிக்குற்றம் ஏற்படும் என்று நம்புகின்றனர். அவ்வாறு ஆடுகளைத் திருடிச்
சென்றால் திருடியவர் இறந்துவிடுவார் என்ற பயத்திலும் உள்ளனர். இவ்வாறாகப்
பழமைமாறாத வழிபாட்டு முறைகளை இன்றளவும் ஊர்க்கோயில்களில் கடைப்பிடித்து
வருகின்றனர். இதே போன்று இசுலாமியர்கள் ஆண்டுதோறும் ஈகைத்திருவிழா என்ற
பெயரில் ஆடுகளை அறுத்து ‘குர்பானி’ கொடுக்கின்றனர். கிறித்தவச் சமயத்தில் இயேசு நாதர் ஆட்டுத்தொழுவத்தில் பிறந்ததாக நம்புகின்றனர்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக