ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

புரட்சியாளர் அறிஞர் அண்ணா - முனைவர் சி.இலக்குவனார் Revolutionary Anna BY Dr.S.Ilakkuvanar








புரட்சியாளர்கள்

அறிஞர் அண்ணா

- தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

பெரியாரின் புரட்சிப் படையில் முதியரும் இளையரும் இருந்தனர். மன்பதைத் தொண்டு செய்த பெரியார் வண்டமிழ் காக்க இந்தி எதிர்ப்புப் போரின் இணையற்ற தலைவரானார். அப்பொழுது அவருக்குத் துணையாகக் கிடைத்த தளபதிதான் அறிஞர் அண்ணா அவர்கள். பெரியாரின் வேம்பனைய புரட்சிக் கருத்துகளை கரும்பனைய சொற்களால் இளைஞர் உள்ளங்களில் இடம்பெறச் செய்தார் அறிஞர் அண்ணா. தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்கள் போன்று அறிஞர் அண்ணாவைச் சுற்றி மக்கள் மொய்க்கத் தொடங்கினர். விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் என்பது அண்ணாவால் மெய்ப்பிக்கப்பட்டது.

  தலைவர் பெரியார் அவர்களை எதிர்த்து எவருமே வெற்றி பெற்றது கிடையாது. அண்ணா ஒருவர்தாம் தம் அருமைத் தலைவரை எதிர்த்து வெற்றி பெற்றார். அறிஞர் அண்ணா அவர்களிடம் பல்வகை ஆற்றல்களும் பொருந்தியுள்ளன. அவற்றை நாட்டின் நலத்துக்கே பயன்படுத்துவதனாலேயே அவர் மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மாபெரும் புரட்சித் தலைவராக விளங்குகின்றார். செந்தமிழையும் ஏனைய மாநில மொழிகளையும் அழிக்க வருகின்றது இந்தி என்னும் செந்தீ. பெரியார் அவர்கள்கூட இன்று ஆளும் கட்சிக்குத் துணையாக நிற்பதனால், இந்தி முதன்மையை எதிர்க்க முன் வந்திலர். ஒரு காலத்தில் இந்தி எதிர்ப்புப் போரை நடாத்திய அவர்களே இன்று எல்லாரும் இந்தி கற்கவேண்டியதுதான் என்று கூறியதாகச் செய்தித்தாட்களில் கண்டு வருந்தினோம். சிந்தை நொந்தோம். செந்தமிழை அழிக்க வரும் இந்தி முதன்மைக்கு நம் பெரியாரும் துணை நிற்பதா என்று ஏங்கினோம். மறைமுகமாக நம் மீது சுமததப்பட்டு வரும் இந்தியைச் செல்வாக்குப் பெற  விடுவோமேயானால் இன்னும் கால் நூற்றாண்டுக்குள் செந்தமிழ் மறையப் போவது உறுதி. செந்தமிழ் அழிந்த பின் சீர்சால் தமிழரும் உரிமையிழந்து தலைமை நீங்கி அடிமைகளாகப் போவதும் திண்ணம். இதனை நன்கு நுனித்தறிந்த அறிஞர் அண்ணா அவர்கள் எதிர்ப்புக் குரல் முழக்கி ஆட்சியாளர்க்கு அறிவுறுத்தும் வகையில் பெரும் புரட்சி செய்து வருகின்றனர். காந்தியடிகளைப் பின்பற்றித் தென்னாட்டுக் காந்தியெனப் போற்றுமாறு அமைதியான முறையில் கட்டுப்பாட்டுடன் தமிழக மக்கள் சார்பில் தம் எதிர்ப்பை அறிவித்து வருகின்றனர். இந்தியக்கூட்டரசு இதனைப் பொருட்படுத்தி எல்லா மொழிகளுக்கும் உரிய தனி நிலைமையை அளிக்க முன் வரவேண்டும்.  அறிஞர் அண்ணாவின் புரட்சி வெற்றி பெற்றால்தான் தமிழும் பிற மொழிகளும் வாழும்; வளம் பெறும். உண்மைக் கூட்டரசு நிலை பெற்று ஒருமைப்பாடு தழைக்க இயலும். ஆதலின் அறிஞர் அண்ணா அவர் தொடங்கியுள்ள அமைதிப் புரட்சியில் வெற்றி பெறுவாராக. அண்ணாவின் வெற்றி தமிழின் வெற்றியாகும். ஒருமைப் பாட்டின் உயர் வெற்றியாகும்.

  தண்டமிழைப் போற்றிய பாரதி இன்றில்லை; ஆயினும் அவர் கனவு நனவாகி வருகின்றது. பெரியார் தோற்றுவித்த மன்பதைப் புரட்சி மக்களாட்சி வெற்றி பெறத் துணைபுரிந்து வருகின்றது. அறிஞர் அண்ணா தொடங்கியுள்ள மொழியுரிமைப் புரட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இந்திய அரசியல் தலைவர்களை எண்ணிப் பார்த்துச் செயலாற்றத் தூண்டிக் கொண்டிருக்கின்றது. புரட்சியாளர்கள் பெருந் தொண்டுகள் நம்மைப் புத்துலகுக்கு அழைத்துச் செல்வதாக. நம் நாடு புதுமை நலம் பெற்றுப் பழமையைப் போற்றிப் பாரில் ஈடு இணையற்று வாழ்வதாக. ஓங்குக புரட்சி. உயர்க தமிழ் நலம். மக்களினம் ஒன்றுபட்டுமாண்புடன் வாழ்வதாக.
                செந்தமிழ்ப் பாரதியும் சீர்சால் பெரியாரும்
                நந்தமிழ் காக்கின்ற நல்லறிஞர் அண்ணாவும்
                செய்த புரட்சிகளைச சீர்தூக்கிப் போற்றுமின்
                எய்துமின் இன்பமெலாம் இங்கு.
குறள்நெறி(மலர்1 இதழ்17): 15.09.1964



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக