ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

வராகன், நாணயம், வெட்டு, மட்டம்!

வராகன்,  நாணயம், வெட்டு, மட்டம்!







காசு... பணம்... துட்டு... மணி...
சொக்கநாதப் புலவர் இயற்றியதுதான் பணவிடுதூது. இவர்  திருமலை நாயக்கர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், அப்பொழுது சேதுபதியை ஆண்ட விஜய ரகுநாத சேதுபதி மீது பாடப்பட்டதுதான் இப் பணவிடுதூது என்றும் கூறுவர். இந்நூலில் பணத்தின் அதாவது, பல்வேறு காசுகளைப் பற்றிய செய்திகளையும் பெயர்களையும் புலவர்  குறிப்பிட்டுள்ளார். காசு குறித்து 36 சொற்களை அவர் கையாண்டுள்ளார். அவற்றுள் சில வருமாறு:
பொன், தாது, அத்தம், ஆடகம், வெறுக்கை, ஈகை, வேங்கை, சாதரூபம், கல்யாணம், ஏமம், மா, நிதானம், அரி, மாடு, மோகரம், சம்பங்கி, சாணான் காசு, ஈடு, தங்கக்காசு, சந்தமிக் காசு, பெருங்காசு, கருவெருமை நாக்கு, பெருங்கீற்று, சன்னக்கூற்று, வராகன், மாடை, வெட்டு, நாணயம், கோழி விழுங்கல், நண்டுக்கால், ஊணையம், உள்ளான், கீழா நெல்லிக்கொட்டை, சில்லறை, மட்டம், கம்பட்டம்.
இந்நாணயங்களின் பெயர்களில் பல இன்று வழக்கொழிந்து போய்விட்டதால், அவற்றின் மதிப்போ, வடிவமோ அறிய இயலவில்லை. அச்சாகியுள்ள இராமலிங்கேசர் பணவிடு தூது, திருவேங்கடேசர் பணவிடு தூது ஆகிய நூல்களையும் வைத்து ஒப்ப நோக்கும்பொழுது, கோழி விழுங்கல் போன்றவை குற்றமுள்ள நாணய வகை என்பது தெரிகிறது. நாணயம் செய்முறையில் ஏற்படும் குற்றங்களை வைத்தே கோழி விழுங்கல் என்பது போல, நண்டுக்கால், ஊணையம், உள்ளான், கீழாநெல்லிக் கொட்டை முதலிய பெயர்களும் இடப்பட்டிருக்க வேண்டும்.
""நாணயம் ஒன்று குறிக்க, இவ்வாறு 36 பெயர்கள் இருந்தமை நோக்கத் தமிழின் மொழி வளப்பமும் தமிழரின் பண்பாட்டு வளர்ச்சியும் புலனாகிறது'' என்று எழுதியுள்ளார் இந்நூலைப் பதிப்பித்து, குறிப்புரை எழுதியுள்ள இரா.நிர்மலாதேவி.
காசு, பணம், துட்டு, மணியோடு இப் பழங்கால நாணயப் பெயர்களையும் இனி சேர்த்துக்கொள்ளலாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக