வியாழன், 19 செப்டம்பர், 2013

பிழைகளுடன் தமிழ் வினாத்தாள்:மறுதேர்வு நடத்தத் தயாரா?

பிழைகளுடன் வினாத்தாள்: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தத் தயாரா?

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் எழுத்துப் பிழைகளுடன் இருந்த தமிழ்ப் பாடத்துக்குப் பதிலாக மறுதேர்வு நடத்தத் தயாரா என, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நய்யாரிடம், நீதிபதி எஸ்.நாகமுத்து நேரில் கேள்வி எழுப்பினார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 21-ஆம் தேதி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வை நடத்தியது. இதில் தமிழ்ப் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் 47 வினாக்கள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.
பிழைகளுடன் இருந்த கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் எனக் கோரி மதுரை கோ.புதூரைச் சேர்ந்த விஜயலட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதி நாகமுத்து, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தார். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நய்யார் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கு திங்கள்கிழமை (செப்டம்பர் 16) விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் க.அறிவொளி ஆஜராகியிருந்தார். ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆஜராகாதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, அவரை புதன்கிழமை ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நய்யார், உறுப்பினர்கள் அறிவொளி, தங்கமாரி ஆகியோர் ஆஜராயினர். அப்போது, பிழையான கேள்விகளில் 39 கேள்விகளை நீக்கிக் கொள்வதாகவும், ஒரு கேள்வி எளிதில் புரிந்துகொள்ளக் கூடியது என்பதால், அதை நீக்கத் தேவையில்லையென்றும், அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் கே.செல்லப்பாண்டியன் குறிப்பிட்டார். நீக்கத் தேவையில்லை எனக் கூறிய கேள்வியையும் படித்துப் பார்த்த நீதிபதி, அக்கேள்வியையும் நீக்க உத்தரவிட்டார்.
முதுநிலை தமிழாசிரியர் தேர்வுக்கு தாய்மொழியில் பிழையின்றி கேள்வித்தாள் தயாரிக்க முடியாதது துரதிருஷ்டவசமானது. இந்தத் தேர்வை 39 ஆயிரத்து 983 பேர் எழுதியுள்ளனர். அதில் பிழையான கேள்வித்தாளில் 8 ஆயிரம் பேர் எழுதியிருக்கின்றனர்.
ஓரிரு கேள்விகள் பிழையாக இருந்தால், அக் கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கலாம். அதிக கேள்விகள் பிழையாக இருப்பின் மறுதேர்வு நடத்த வேண்டும் என இதேபோன்ற வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, நேரில் ஆஜராகாதது குறித்து விபு நய்யாரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, மறுதேர்வு நடத்துவதற்குத் தயாராக இருக்கிறீர்களா என்றார். இதற்கு அரசின் கருத்தை அறிந்து நீதிமன்றத்தில் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்று கூடுதல் தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார். இதையடுத்து, இவ் வழக்கு விசாரணை செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக