சிற்பங்களில் சிலிர்க்கும் வரலாற்று ச் சிறப்பு மிக்க மதுரை!
மதுரையைச்சுற்றி அமைந்த கரடிப்பட்டி பெருமாள் மலை, கருங்காலங்குடி குன்றுகளில் பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. யானைமலை, நாகமலை, பசுமலை என மதுரையை சுற்றி அமைந்த ஒவ்வொரு மலைக்கும் ஒவ்வொரு கதையும் உண்டு. முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் குடைவரை கோயில் அமைந்துள்ளது. மலை மீது காசி விஸ்வநாதர் கோயில், சமண சிற்பங்கள், நீரூற்றுகள் காணப்படுகின்றன.மூன்று கி.மீ., நீளம், 90 மீட்டர் உயரத்தில் ஒரே பாறையில் அமைந்த யானைமலையில் குடைவரை கோயில்கள், பொய்கை, சமணர் படுகைகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், மதுரை தொன்மையானநகர் என காட்டுகின்றன. சமணர் படுகைகளில் மகாவீரர், யாக்ஷி சிற்பங்கள், பத்தடிஉயரம் கொண்ட தீபத்தூண் இன்றும் அழகு குன்றாமல் உள்ளன. புராதன சிறப்பு மிக்க நரசிங்கம் பெருமாள் குடைவரை கோயில் இங்குள்ளது. அருகில் லாடமுனி கோயில் மலையை குடைந்து அமைந்துள்ளது.மதுரை திருப்பத்தூர் ரோட்டில் அமைந்த மேலூர் கீழவளவில் மூலிகை ஆயில், சந்தனத்தால் பூசப்பட்ட மகாவீரர் சிற்பங்கள் காணப்படுகின்றன. அரிட்டாப்பட்டி மலையில் விநாயகர், சிவன் கோயில் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு உச்சியில் தீபத்தூண் அமைந்துள்ளது. மலையில் பல்வேறு இடங்களில் மகாவீரர் சிற்பங்கள், சமணர் படுகைகள் காணப்படுகின்றன.நாகமலைபுதுக்கோட்டை அருகே கீழக்குயில்குடியில் அமைந்த சமணர் மலையில் பழமையான கோயில் அமைந்துள்ளது. அழகர்மலை, வரிச்சியூர், திருவாதவூர் போன்ற இடங்களிலுள்ள மலைகுன்றுகளிலும் புராதன சின்னங்கள் நிறைந்துள்ளன. பெரும்பான்மையானவை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.என்ன...புராதன இடங்களை பார்க்க புறப்பட்டு விட்டீர்களா?
- தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக