சிற்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிற்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரை!

சிற்பங்களில் சிலிர்க்கும் வரலாற்று ச் சிறப்பு மிக்க மதுரை!
Temple images
இந்தியாவின் பழமையான நகரங்களில் மதுரையும் ஒன்று. 2,500 ஆண்டுகளுக்கும் மேல் தென்னிந்தியாவின் கலாசார, பண்பாட்டு மையமாக திகழ்கிறது. மதுரையைச்சுற்றி காணப்படும் மலைகளில் வரலாற்று சிறப்பு மிக்க புராதன சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள், சமணர்படுகைகள், குடைவரை கோயில்கள், புண்ணிய தீர்த்தங்கள் இன்றும் நகரின் சிறப்புகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. இவற்றை எல்லாம், மதுரைக்காரர்களான நாம் சென்று பார்த்திருப்போமா? இந்த தொன்மை நகரில் வாழும் நாம், இந்த இடங்களை தெரிந்து கொள்வது அவசியம்.கடம்ப மரங்கள் நிறைந்த அற்புத வனமாக இந்நகரம் திகழ்ந்ததால், கடம்பவனம் என்ற பெயர் பெற்றது. மருத மரங்கள் நிறைந்திருந்ததால், மருதை எனவும் பெயர் பெற்று, பின் அப்பெயர் மருவி மதுரை என அழைக்கப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. கூடல்மாநகர், ஆலவாய், நான்மாடக்கூடல் என இந்நகருக்கு ஏராளமான பெயர்கள் உண்டு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததுடன் மதுரை, தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைசாற்றுவதாகவும் திகழ்கிறது.
மதுரையைச்சுற்றி அமைந்த கரடிப்பட்டி பெருமாள் மலை, கருங்காலங்குடி குன்றுகளில் பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. யானைமலை, நாகமலை, பசுமலை என மதுரையை சுற்றி அமைந்த ஒவ்வொரு மலைக்கும் ஒவ்வொரு கதையும் உண்டு. முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் குடைவரை கோயில் அமைந்துள்ளது. மலை மீது காசி விஸ்வநாதர் கோயில், சமண சிற்பங்கள், நீரூற்றுகள் காணப்படுகின்றன.மூன்று கி.மீ., நீளம், 90 மீட்டர் உயரத்தில் ஒரே பாறையில் அமைந்த யானைமலையில் குடைவரை கோயில்கள், பொய்கை, சமணர் படுகைகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், மதுரை தொன்மையானநகர் என காட்டுகின்றன.   சமணர் படுகைகளில் மகாவீரர், யாக்ஷி சிற்பங்கள், பத்தடிஉயரம் கொண்ட தீபத்தூண் இன்றும் அழகு குன்றாமல் உள்ளன. புராதன சிறப்பு மிக்க நரசிங்கம் பெருமாள் குடைவரை கோயில் இங்குள்ளது. அருகில் லாடமுனி கோயில் மலையை குடைந்து அமைந்துள்ளது.மதுரை திருப்பத்தூர் ரோட்டில் அமைந்த மேலூர் கீழவளவில் மூலிகை ஆயில், சந்தனத்தால் பூசப்பட்ட மகாவீரர் சிற்பங்கள் காணப்படுகின்றன. அரிட்டாப்பட்டி மலையில் விநாயகர், சிவன் கோயில் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு உச்சியில் தீபத்தூண் அமைந்துள்ளது. மலையில் பல்வேறு இடங்களில் மகாவீரர் சிற்பங்கள், சமணர் படுகைகள் காணப்படுகின்றன.நாகமலைபுதுக்கோட்டை அருகே கீழக்குயில்குடியில் அமைந்த சமணர் மலையில் பழமையான கோயில் அமைந்துள்ளது. அழகர்மலை, வரிச்சியூர், திருவாதவூர் போன்ற இடங்களிலுள்ள மலைகுன்றுகளிலும் புராதன சின்னங்கள் நிறைந்துள்ளன. பெரும்பான்மையானவை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.என்ன...புராதன இடங்களை பார்க்க புறப்பட்டு விட்டீர்களா?


- தினமலர்

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

போராடினால் மட்டுமே சாதிக்க முடியும்!

சொல்கிறார்கள்

போராடினால் மட்டுமே சாதிக்க முடியும்!
ஜாதி, பெண் கொடுமைகளுக்கு எதிராக, 22 ஆண்டுகளாக போராடும் சந்தனமேரி: நான், பர்மா நாட்டிலிருந்து, தாயகமான, சிவகங்கையின் சூராணத்துக்கு, புலம் பெயர்ந்தவள். பிழைக்க வழியின்றி, வேலை தேடி அப்பா, அந்தமான் சென்றார். உடன் பிறந்தவர்கள் ஒன்பது பேரில், மூத்தவள் என்பதால், வயல் வேலை செய்து, குடும்பத்தைக் காப்பாற்றினேன். வேலை செய்யும் இடத்தில், தண்ணீரை டம்ளரில் குடிக்காமல், இரு கைகளை ஏந்தி குடிக்கணும். கஞ்சியை, பனை ஓலையில் ஊற்றி குடிக்கணும். திருமணமாகி, ஜாதி வெறி நடைமுறைகள் அதிகமுள்ள, ஓரிக்கோட்டைக்கு வந்தேன். இங்கு, சாவுக்கான வேலையை, தலித் மக்கள், அடிமை போல் செய்தனர். சாவுக்கு வருபவர்கள் தரும் நெல்லையே, கூலியாக தருவர். திருமண வீட்டிலும், இதே நிலை. ஓலை பெட்டி, மண்பானையை எடுத்துச் சென்றால் தான், சோறு கொடுப்பர்; வீட்டிற்கு வந்தே சாப்பிடணும். காளையார்கோவிலில், உயர் வகுப்பை சேர்ந்தவர், ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து, பெண்களை திரட்டி போராடினோம்; பலனில்லை. அதனால், இடதுசாரி கட்சியில் சேர்ந்தேன். இங்கு, ஜாதி ரீதியிலான ஒடுக்குமுறைகளை, எப்படி சரி செய்யலாம் என்ற புரிதல் கிடைத்தது. தொண்டியில், தலித் மக்கள் பயன்படுத்தும் பாதை அடைக்கப்பட்டது. மக்களோடு போராடி, பாதையை திறந்தேன். கண்டதேவி தேரோட்டத்தில், தலித் பெண்களை தேர் இழுக்க வைத்தேன். "ஒரு தலித் பொம்பளை' என, ஏராளமான எதிர்ப்புகளை சந்தித்தேன். ஓரிக்கோட்டையில், தலித்கள் தற்போது, அடிமை வேலைகள் செய்வதில்லை. "உழைக்கும் பெண்கள் இயக்கம்' ஆரம்பித்தேன். ஜாதி, பெண் கொடுமைகளுக்கு எதிராக, 22 ஆண்டுகளாக போராடி வருகிறேன். போராடினால் மட்டுமே சாதிக்க முடியும்.

சாப்பிடுவதை விட்டேன்; சிற்பமானது!
சாக்பீசில், சிற்பம் செதுக்கும் பிரியதர்ஷினி: சென்னை, கல்லூரியில், பி.காம்., இறுதியாண்டு படித்துக் கொண்டு இருக்கிறேன். நான், எல்.கே.ஜி., படிக்கும் போது, வேஸ்டாக தூக்கி போடுகிற, சின்ன சின்ன துண்டு சாக்பீசை, வீட்டுக்கு எடுத்துட்டு போய், யாருக்கும் தெரியாமல் சாப்பிடுவேன். ஒரு நாள் சாக்பீஸ் எடுத்து சாப்பிட போகும் போது, என் அப்பாவும், அம்மாவும் பார்த்து விட்டனர். அதை சமாளிக்க, சாக்பீசை வைத்து ஏதோ செய்வது போல், நடித்தேன். அதை உரசிய போது, உருவம் கொடுத்து, லிங்கத்தைப் பார்த்தேன். குண்டூசி எடுத்து கீறிக் கீறி லிங்கத்தை தனியாக எடுக்க முயற்சித்தேன். அது உடைந்து விட்டது. விடாமுயற்சியால், ஐந்தாவது சாக்பீசில், லிங்கம் செய்து முடித்தேன்.அதன்பின், கிடைக்கிற நேரம் எல்லாம், சாக்பீசை செதுக்குவேன். இதுவே, என்னோட ஹாபி ஆகிவிட்டது.ரொம்ப கஷ்டப்பட்டு செய்யும், சில உருவங்கள், கடைசியில் உடைந்து விடும். அப்போது அம்மா, "விடுடா செல்லம். அடுத்தமுறை சூப்பரா வரும்' எனச் சொல்லி, ஊக்கப்படுத்தினார்.இதுவரை, கப்பல், பார்பி டால், ஸ்பூன், நாற்காலி என, 100க்கும் மேலான உருவங்களை செதுக்கிஇருக்கேன்.இப்போ கொஞ்ச நாட்களாக, சோப்புலயும் உருவங்கள் செய்ய ஆரம்பித்து உள்ளேன். பல ஓவியப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியிருக்கேன். இது சுய ஆர்வம் தான். இந்த சாக்பீஸ் சிற்பம், ஓவியத் திறமையை என்னோட ஹாபியாக நிறுத்திடாமல், முறையாக முயற்சி எடுத்து மெருகேற்றி, சாதனை படைப்பேன்.