சனி, 24 செப்டம்பர், 2011

ravisankar: தூக்குத் தண்டனை கூடாது

அணுமின் நிலையப் பாதுகாப்பு: மக்களிடம் விளக்க விஞ்ஞானிகள் தவறிவிட்டனர்- ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர்

First Published : 24 Sep 2011 12:50:59 AM IST


தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பேட்டியளித்த வாழும் கலை அமைப்பின் நிறுவனர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர்.
தூத்துக்குடி, செப். 23: கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விளக்க விஞ்ஞானிகள் தவறிவிட்டனர் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் வெள்ளிக்கிழமை கூறினார்.  தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக மக்கள் உண்ணாவிரதம் இருந்து நல்ல முடிவு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நாட்டை பற்றி மக்கள் கவலைப்பட தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி. நாட்டு நலனில் தங்களுக்கும் பொறுப்பு இருப்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.  ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட அணு உலை விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையம் குறித்து மக்களுக்கு கவலை அதிகரித்துள்ளது. அணுசக்தி தேவைதான். ஆனால், அணு உலைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது.  கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என அரசு கூறினாலும், விஞ்ஞானிகள் அதை மக்களுக்கு விளக்கவில்லை. அணுமின் திட்டங்களில் கூட நிதி முறைகேடு இருப்பதாக நான் நினைக்கிறேன்.  ஜாதி மத மோதல்களை தவிர்த்து, அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதற்கு ஆன்மிகம் மிக முக்கியமானது. மக்கள் மத்தியில் தற்போது ஆன்மிக எழுச்சி ஏற்பட்டிருப்பது நல்ல அறிகுறி. நாடு சுபிட்சமாக இருக்க ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நமது நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளது.  ஊழலுக்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல. எல்லோரும்தான் காரணம். லஞ்சம் கொடுக்க மாட்டோம் என மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். எனது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மக்களிடம் இந்த உறுதிமொழியை நான் பெற்று வருகிறேன். ஊழலுக்கு எதிராக 14 மாநிலங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்.  அண்ணா ஹசாரே பாகிஸ்தான் செல்ல விருப்பம் தெரிவித்திருப்பது நல்ல விஷயம்தான். அந்நாட்டிலும் ஊழல் அதிகம் உள்ளது. அதை ஒழிக்க அந்நாட்டு மக்களுக்கு வழிகாட்ட அவர் வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.  இலங்கைத் தமிழர் பிரச்னை முழுமையாகத் தீரவில்லை. இங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இன்னும் குடியுரிமை வழங்கவில்லை. நாட்டில் தீவிரவாதம் ஒழிய அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.  தூக்குத் தண்டனை கூடாது என்பதுதான் எனது கருத்து. தவறு செய்வோரை சிறையில் அடைத்து நல்வழிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு திருந்த வாய்ப்பு அளிக்க வேண்டும். வாழும் கலை அமைப்பு சார்பில் 3 லட்சம் சிறைக் கைதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளோம் என்றார் அவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக