செவ்வாய், 20 செப்டம்பர், 2011

கூடங்குளம் சிக்கல்: செயலலிதாவுடன் தலைமையமைச்சர் பேச்சு

கூடங்குளம் பிரச்னை: ஜெயலலிதாவுடன் பிரதமர் பேச்சு

First Published : 20 Sep 2011 05:24:52 AM IST

Last Updated : 20 Sep 2011 05:34:38 AM IST

 சென்னை, செப். 19: கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை மாலை தொலைபேசியில் பேசினார். இந்தப் பிர்சனை குறித்துப் போராட்டம் நடத்திவரும் மக்களிடம் பேசுவதற்கு மத்திய இணையமைச்சர் நாராயணசாமியை அனுப்பி வைப்பதாக முதல்வரிடம் பிரதமர் அப்போது உறுதி அளித்தார். இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்ட செய்தி: கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை காலை கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை தில்லிக்கு அனுப்பிப் பிரதமரைச் சந்தித்துக் கோரிக்கை மனு அளிக்க இருப்பதாகவும் அதற்கு தேதி மற்றும் நேரம் ஒதுக்கித் தரும்படியும் கேட்டுக் கொண்டார். இந்தப் பிரச்னையில் சுமுகத் தீர்வு ஏற்படும் வரையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் பிரதமரை தனது கடிதத்தில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருந்தார். தொலைபேசியில் பேச்சு: இந்த நிலையில், ஜெயலலிதாவுடன் மன்மோகன் சிங் திங்கள்கிழமை மாலையில் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது "சுமார் 100 பேர்களுடன் தொடங்கிய போராட்டம், நாளுக்கு நாள் வளர்ந்து இப்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கு கொண்டுள்ளார்கள்' என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அதற்குப் பதிலளித்தப் பிரதமர், இந்தப் பிரச்னை தொடர்பாக மத்திய இணையமைச்சர் நாராயணசாமியை அனுப்பி வைப்பதாகக் கூறினார். அமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் சென்று அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாட வேண்டுமென்றும் மற்றும் தனது கடிதத்தில் தெரிவித்தபடி தமிழ்நாட்டுக் குழுவை பிரதமர் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தரும்படியும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். அதற்கு பதில் கூறிய பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் தொடர்பாக நியூயார்க் செல்ல இருப்பதாகவும் செப்டம்பர் 27-ம் தேதி திரும்பி வந்தவுடன் அதற்கான நேரம் ஒதுக்கித் தருவதாகவும் தெரிவித்தார். பிரதமரின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். நாராயணசாமி: இதனிடையில், தில்லியில் தினமணி நிருபரிடம் பேசிய அமைச்சர் நாராயணசாமி, கூடங்குளத்தில் போராட்டம் நடத்திவரும் மக்களை செவ்வாய்க்கிழமை சந்திக்க உள்ளதாகவும், முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை சந்தித்துப் பேச உள்ளதாகவும் தெரிவித்தார். அவருடன் அணுசக்தி துறை அதிகாரிகள் குழுவினர் வருவதாகவும் நாராயணசாமி கூறினார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக