வெள்ளி, 23 செப்டம்பர், 2011

தமிழ்மக்களின் குருதி படிந்த கையோடு அமெரிக்கா வந்துள்ள மகிந்தா இராசபக்சேக்கு எமது எதிர்ப்பைக் காட்டுங்கள்:

தமிழ்மக்களின் குருதி படிந்த கையோடு அமெரிக்கா வந்துள்ள மகிந்தா இராசபக்சேக்கு எமது எதிர்ப்பைக் காட்டுங்கள்:

தமிழ் படைப்பாளிகள் கழகம் கனடா.
பதிவு செய்த நாள் : 23/09/2011


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வு எதிர்வரும் 23ஆம் நாள் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் முன்பாக நடைபெறவுள்ளது. இந்திய சுதந்திரப்போரில் வந்தே மாதரம் எப்படியோ அப்படியே தமிழீழ விடுதலைப் போரில் பொங்கு தமிழுக்கு இடம் உண்டு. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழித்த சிறீலங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்தா இராசபக்சே ஐ.நா பொதுச் சபையில் பேச இருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து தமிழ்மக்களை விடுவிக்கவே மனிதாபிமானப் போர் தொடுத்ததாகச் சொல்லும் இராபக்சே முள்ளிவாய்க்காலில் 70,000 தமிழ்மக்களைக் கொத்துக் குண்டுகள் போட்டுப் படுகொலை செய்துள்ளார்.
போர் முடிந்து இரண்டு ஆண்டுக்கு மேலாகியும் எமது மக்களுக்கு இயல்பு வாழ்வு கிடைக்கவில்லை. சிங்கள இராணுவத்தின் கோரப்பிடியில் சிக்கி  அல்லல்படுகிறார்கள். அவர்களது அடிப்படைச் சுதந்திரங்கள் மறுக்கப்பட்டு அடிமைகளைவிட மோசமாக நடத்தப்படுகிறார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேலான மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடி அமர்த்தப்படவில்லை. அவர்கள் வாழ்ந்த நிலத்தில் பாரிய இராணுவ முகாம்கள் உருப் பெற்றுள்ளன. சிங்களவர்கள்  குடியேற்றப்பட்டுள்ளார்கள். பவுத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன.
புத்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் தமிழர்களது வாழ்வாதாரம் மற்றும் பண்பாடு சிதைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் சிறிலங்கா அரசு போர்க்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் புரிந்ததுக்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் இருப்பதாகவும் அதையிட்டு ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா வல்லுநர் அறிக்கை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையை ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐ.நா.வின் மனித உரிமை அவைக்கு இந்த மாத முற்பகுதியில் அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் மகிந்தா இராசபக்சாவும் அவரது இராணுவ தளபதிகளும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கும் நாள் விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம்.
இப்போது தமிழ்மக்களின் குருதி படிந்த கையோடு ஐ.நா அவையில் உரையாற்ற வந்துள்ள மகிந்தா இராசபக்சேக்கு எமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும். மகிந்த இராசபக்சேயின் கோர முகத்தை அமெரிக்காவில் வைத்துக் கிழிக்க வேண்டும்!
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தினை வீச்சுடன் முன்னோக்கி  நகர்த்தும் வகையில் நாம் அனைவரும் பொங்கும் தமிழராய் பொங்கி எழுந்து இப் பேரணிகளில் பங்கெடுத்திடுவோம்! என நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். எனவே அவரது அழைப்பை ஏற்று இந்தப் பொங்குதமிழ் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு இன உணர்வாளர்களையும் தமிழ்ப்பற்றாளர்களையும் தேசியத்தை நேசிப்பவர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக