உணர்வையும் உண்மையையும் வெளிப்படுத்தும் கட்டுரை.சிங்கள மட்டைப்பந்தாட்டக் குழுவினருக்குத் தரும் சிவப்புக் கம்பள வரவேற்பை நம் அரசுகள் எப்பொழுது நிறுத்தப் போகின்றன?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
First Published : 14 Jul 2011 03:29:48 AM IST
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டை எவ்வளவு கொடூரமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்பட அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளை வீசிக் கொன்றது. பிடிபட்டவர்களையும் சரணடைய வந்தவர்களையும் சித்திரவதை செய்தது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.இறந்தவர்களின் உடல்களில் இருந்த காயங்களைப் பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள் என்பதை உணர முடியும். கண்களைக் கட்டி, நிர்வாணப்படுத்திக் கொன்றது, உடலெல்லாம் கத்தியால் கீறி கழுத்தை அறுத்தது என உச்சகட்ட மனிதஉரிமை மீறல் நடந்திருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் இலங்கை அரசும் அதன் ராணுவமும் தங்களது தவறுகளை நியாயப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.ராஜதந்திர வளையங்களில் ஒருபக்கம் இவர்களது சதிவேலை நடந்து கொண்டிருக்க, இன்னொருபக்கம் சேனல்-4 தொலைக்காட்சியை மிரட்டுவது, எதிர்ப்பாளர்களை ஒடுக்குவது போன்ற பிறவற்றையும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. எத்தனை ஆதாரங்களை வெளியிட்டாலும் அவையெல்லாம் போலி என்பது போலத் திரித்துப் பேசுகின்றனர். எல்லாம் தேச நலனுக்காகச் செய்யப்பட்டதுதான் என்பதுபோல புனையப்படுகிறது. தேச ஒருமைப்பாடு என்பதை இனப் படுகொலையை மறைப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். இது போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சி.இலங்கையின் இந்த முயற்சிக்கு கிரிக்கெட் வீரர் சங்ககராவும் உதவப் புறப்பட்டிருக்கிறார். அதுவும் சர்வதேச அரங்கில். கிரிக்கெட் தொடர்பான பேச்சு என்கிற போர்வையில். அண்மையில் லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெüட்ரி நினைவு கிரிக்கெட் உரையில் தனது விஷமத்தனத்தை வஞ்சகமாக அரங்கேற்றினார் சங்ககரா.கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நீடித்த அவரது பேச்சு, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை குறைகூறுவதாகவே கவனிக்கப்பட்டது. அதை மட்டுமே பெரும்பாலான ஊடகங்கள் முன்னிலைப்படுத்தின. அதனால், அவரது பேச்சில் ஆங்காங்கே இலங்கை இனப்படுகொலையை நியாயப்படுத்தும் வசனங்கள் இருந்தது கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறது. இலங்கையின் வரலாற்றைப் பற்றிப் பேசிய சங்ககரா, கடந்த 30 ஆண்டுகளாக இருந்த பயங்கரவாதம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது என்று கூறி இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை ஒரே வரியில் கொச்சைப்படுத்தியிருக்கிறார். ஏதோ நியாயமற்ற காரணங்களுக்காகவும் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கிலுமே இந்தப் போராட்டங்களெல்லாம் நடந்ததாகக் கூறுவது போல அவரது பேச்சு இருந்தது. இலங்கையில் நடந்த உச்சகட்டப் போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ராணுவம் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளைச் செய்ததாகக் கூறிய அவர், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதைக் குறிப்பிடவேயில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை.போர் நடந்து முடிந்த பிறகும் பல்லாயிரக் கணக்கானோர் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். உணவும், மருத்துவவசதியும் இல்லாமல் அவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். மர்மமான வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்ட பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.போரிலும் போருக்குப் பிந்தைய ராணுவ நடவடிக்கைகளாலும் சொந்தங்களை இழந்தவர்களின் நெஞ்சங்களில் ஆறாத வடு ஏற்பட்டிருக்கிறது. உடல் ஊனமாகி நடைபிணமாக வாழ வேண்டிய நிர்பந்தம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதெல்லாம் சங்ககராவின் நினைவில் இல்லை போலும்.போர் நடந்த பகுதிகள் மட்டுமல்லாமல் கொழும்பு போன்ற போர்முனைக்குச் சம்பந்தமில்லாத நகரங்களிலும் அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; குண்டுகள் போடப்பட்டன என்றுதான் அவர் குற்றம்சாட்டினார்.அதுபோலவே, பெரும்பாலான இடங்களில் பயங்கரவாதம், "பயங்கரவாதிகள்' என்கிற சொல்லையே இவர் பயன்படுத்தியிருக்கிறார். சரி, சங்ககராவிடம் இருந்து இதைத்தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்று கேட்கலாம். எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், அவரது பேச்சுக்கு தமிழர்கள் மத்தியிலிருந்து சலசலப்புகூட கிளம்பவில்லை என்பதுதான் வேதனை. சங்ககராவின் பேச்சுக்கு மைதானத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அவர்கள் கைதட்டியது, கிரிக்கெட்டில் செய்யவேண்டிய சீர்திருத்தம் பற்றிய கருத்துகளுக்காக மட்டும்தான் இருக்க முடியும். ஆனால், அந்தப் பேச்சில் கூறப்பட்ட தமிழர் இனப்படுகொலை தொடர்பான கருத்துகளுக்கும் கிரிக்கெட் உலகமே ஆதரவு தெரிவித்தது போலல்லவா ஆகியிருக்கிறது. இதுவே இனப் படுகொலைக்கு அங்கீகாரமாயிற்றே!ஒரு முக்கியத்துவம் வாய்ந்த, உலகமே உற்று நோக்கக்கூடிய ஓர் உரையில் இந்த இடைச் செருகல்கள் எப்படி வந்தன? தனது கிரிக்கெட் வாரியத்தையே சர்ச்சைக்குரிய வகையில் குற்றம்சாட்டி, இந்தப்பேச்சை சங்ககரா பரபரப்பாக்கியது ஏன் என்பதற்கெல்லாம், "இனப்படுகொலையை நியாயப்படுத்தும் திட்டமிட்ட முயற்சி' என்பதைத் தவிர வேறு என்ன பதில் இருக்க முடியும்? இலங்கை ராணுவத்தின் புகழை உயர்த்திவிட்டதாக கோத்தபய ராஜபட்ச பாராட்டியிருப்பதற்கும் அதுதானே காரணம்.1980-களில் தாம் சிறுவனாக இருந்தபோது வன்முறைகள் நடந்ததாகவும், அதில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தனது வீட்டில் தங்குவதற்கு தனது தந்தை இடமளித்து வந்தார் என்றும் தனது பேச்சில் சங்ககரா குறிப்பிட்டார்.அந்த மனிதாபிமானம்கூட உங்களிடம் இல்லையே சங்ககரா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக