புதன், 13 ஜூலை, 2011

Dinamani editorial about train accidents: உயிருடன் விளையாடுகிறார்கள்!

பொறுப்புடனும் விளக்கமாகவும் நன்கு எழுதப்பட்டுள்ளது. உணரவேண்டியவர்கள் உணர்வார்களாக! 
பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


உயிருடன் விளையாடுகிறார்கள்!

First Published : 13 Jul 2011 12:08:49 AM IST


அதிகாரிகளின் அறிவுரையைக் கேட்காமல் ஓர் அமைச்சர் தன்விருப்பப்படி நடந்துகொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் ஓர் எடுத்துக்காட்டு. அதுபோல, அதிகாரிகளின் கையில் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, ஓர் அமைச்சர் தனது மாநில அரசியலைக் கவனிக்கச் சென்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு, ரயில்வேயின் சீரற்ற நிர்வாகமும் விபத்துகளும் எடுத்துக்காட்டு.உத்தரப் பிரதேச மாநிலத்தில், கல்கா ரயில் விபத்தில் 35 பேர் பலியான சம்பவம் குறித்து செய்தி வெளியான அடுத்த கணமே விமர்சனக் கணைகள் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாய்ந்ததில் தவறு காண முடியாது.மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தல் தொடங்கிய நாள் முதலாகவே மம்தா பானர்ஜி ரயில்வே துறையில் கவனம் செலுத்தவே இல்லை என்பது வெளிப்படையான உண்மை. அதன் பின்னர், உள்ளாட்சித் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த வெற்றி, அவரைச் சட்டப்பேரவைத் தேர்தல் பற்றிய சிந்தனையில் ஆழ்த்தி தனது ரயில்வே அமைச்சர் பதவிக்கான கடமைகளைச் செய்யாத நிலைமையை ஏற்படுத்தியது.மார்ச் மாதம் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் முழுநேரமும் தனது மாநிலத்தில் செலவிட்டாரே தவிர, ரயில்வே அமைச்சகத்துக்கு வந்தாரா என்பதேகூட சந்தேகம்தான். வெற்றி பெற்று முதல்வரானதும், அவர் இனி இந்த அமைச்சர் பதவியைத் தொடரப் போவதில்லை என்று வெளிப்படையாக, சட்டப்பூர்வமாக உறுதியான பிறகும், மே 13-ம் தேதி முதல் சுமார் இரண்டு மாத காலம் எந்த மாற்றமும் செய்யாமல், ரயில்வே அமைச்சரை மாற்றாமல் வெறுமனே வேடிக்கை பார்த்த பெருமை நமது பிரதமர் மன்மோகன் சிங்கைச் சாரும்.மம்தா பானர்ஜி தன் பொறுப்பை உணர்ந்து, இந்த அமைச்சர் பதவியை தன் கட்சியைச் சேர்ந்த மற்றொருவரிடம் ஒப்படைத்துவிட்டு விலகியிருந்தாலும்கூட நிர்வாகத்தில் ஏற்பட்ட மெத்தனப் போக்கு ஓரளவு குறைந்திருக்கும். ஆனால், அதையும் அவர் செய்யவில்லை. ரயில்வே துறை முற்றிலுமாகச் சீர்கெட்ட பிறகு இப்போதுதான் ரயில்வே அமைச்சர் பதவியைத் துறக்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.ரயில்வே துறையில் மிக முக்கிய பொறுப்புகளுக்கான பதவிகளில் சுமார் 2 லட்சம் பதவிகள் காலியாக, நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்தப் பணி நியமனங்களுக்கான உத்தரவுகளைப் போடாமல், கோப்புகள் கிடப்பில் உள்ளதற்குக் காரணம் அமைச்சர் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான். இப்பணிகளில் மிகவும் அதிகமாக காலியாக உள்ள பணிகள் எதுவென்றால், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் தொழில்பிரிவுகளில்தான்.அதிகாரிகளை அந்தந்தப் பதவிகளில் நிரப்பிவிட்டால் போதுமா, விபத்து குறைந்துவிடுமா என்று கேட்கலாம். அதிகாரிகளை நியமித்து, சரியாகப் பணியாற்றும் வாய்ப்பை உருவாக்கினால் நிச்சயமாக விபத்துகள் குறையும் என்பதில் சந்தேகமே இல்லை. கல்கா பயணிகள் ரயில் விபத்து நடந்தது குறித்து இன்னும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள் என்ற நிலையிலும், அந்த வழித்தடத்தில் அடிக்கடி பயணிக்கும் "தினமணி'யின் தில்லி வாசகர் ஒருவர் தெரிவிக்கும் கருத்தையும் சிந்திக்க வேண்டியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் அடிக்கடி ரயில் விபத்து அல்லது ரயில் தடம்புரளுதல் ஏற்படக் காரணம், கட்டுப்பாடே இல்லாமல் அபாயச் சங்கிலியை இழுத்தல் (செயின் புல்லிங்) நடைபெறுவதுதான் என்கிறார் அவர். பல வடமாநிலங்களில் ரயிலில் அபாயச்சங்கிலியை இழுத்த நிகழ்வுகளுக்கான பதிவேட்டில் இவை பதிவு செய்யப்படுவதும் இல்லை என்கிறார். இதை முறையாகப் பதிவுசெய்து அந்தத் தடத்தில் கூடுதல் போலீûஸ அனுப்பி, தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் வழக்கம் நடைமுறைக்கு வராதவரையிலும் இந்த விபத்துகள் தொடரும் என்கிறார் அவர்.தமிழ்நாட்டில், அபாயச் சங்கிலியை இழுத்து ரயில் நிறுத்தப்படுமேயானால் அந்தப் பெட்டிக்கு ரயில்வே ஊழியர் வந்து யார் இழுத்தது என்று விசாரிப்பார். காரணம் பதிவு செய்யப்படும். காரணம் சரியில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். ஆனால், உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் ரயில்களை அவரவர் வேண்டிய இடத்தில் நிறுத்துவதற்காக அபாயச் சங்கிலியை இழுப்பது என்பது மிகமிக சகஜம். ஒரு ரயில் வேகமாகச் செல்லும்போது இவ்வாறு சங்கிலியை இழுக்கும்போது, தண்டவாளம் சரியாகப் பொருத்தப்படாமல் பலவீனமாக உள்ள இடமாக இருந்தால், தண்டவாளம் விலகி ரயில் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.இந்த வேளையில் தில்லி வாழ், ரயில்வே உயர் அதிகாரி ஒருவர், ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளிக்கும்போது, ""சரக்கு ரயில்களில் எவ்வளவு டன் எடை சரக்கு ஏற்றப்பட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல், அதைக் கவனிக்க ஆளில்லாமல், நிறைய எடையுள்ள பொருள்கள் ஏற்றப்படுவதால், தண்டவாளங்கள் விரைவில் வலுவிழந்து போகின்றன. அதனால்தான் ""இதுபோன்ற ரயில் தடம்புரளுதல் நிகழ்கின்றன'' என்று கூறியுள்ள கருத்தையும் ரயில்வே நிர்வாகம் கவனிக்க வேண்டும்.மேலும், ரயில்வே துறையில் தண்டவாளங்களை இணைக்கும் ஸ்லீப்பர் எனப்படும் குறுக்குக்கட்டைகள் முன்பு மரத்தால் ஆனவை. இப்போது கான்கிரீட் பலகைகளால் நிறுவப்படுகின்றன. இதைச் செய்து தருவது தனியார் நிறுவனங்கள். இதில் மிகப்பெரும் ஊழல் நடப்பதாகவும், இதனால் தரமற்ற ஸ்லீப்பர்கள் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இரு தண்டவாளங்களைத் தாங்கிப் பிடிக்கும் இவை வலுவற்றுப்போனால் விபத்து நேரிடுவது தவிர்க்க முடியாதது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ரயில்வே அமைச்சர், இத்தகைய அடிப்படையான விவகாரங்களைக் கவனத்தில்கொண்டு செயல்பட்டால் ரயில் விபத்துகளைத் தவிர்க்கலாம். 2009-10-ம் ஆண்டில் ரயில் விபத்துகளில் பலியானோர் 225 பேர். இந்த நிதியாண்டில் ஜனவரி வரை ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 336-ஆக உயர்ந்துவிட்டது. இந்த வேதனையை சாதனையாகக் கொள்ள முடியாது என்பதை ரயில்வே அதிகாரிகளும் அமைச்சகமும் உணர்ந்தால்தான் விபத்துகள் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக