First Published : 14 Jul 2011 01:03:57 AM IST
கார்த்திகேசு சிவத்தம்பி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன்.
ஈரோடு, ஜூலை 13: உலகத் தமிழர்களுக்கு ஆய்வுலகின் உந்து சக்தியாக விளங்கியவர் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார். உலகத் தமிழறிஞர் என தமிழர்கள் அனைவராலும் போற்றப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த கார்த்திகேசு சிவத்தம்பி கடந்த 6-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் கொழும்பில் உள்ள அவரது வீட்டில் கடந்த 10ஆம் தேதி வரை வைக்கப்பட்டிருந்தது. அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்றார். அஞ்சலி நிகழ்ச்சியில் அவர் பேசியது:தமிழ் ஆய்வாளர்கள், அறிஞர்கள் தமிழை ஆய்ந்தறிவதென்றால், தமிழின் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் ஆராய்ச்சி செய்வார்கள். ஆனால் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். தமிழ் மொழியை இலக்கணம், இலக்கியம், மொழியியல், அரசியல், பொருளாதாரம், சமூகவியல், தத்துவம், வரலாறு என அனைத்து அம்சங்களோடும் பொருத்தி வளப்படுத்தியவர். தமிழகத்தில் பா.ஜீவானந்தம், தொ.மு.சி.ரகுநாதன், வானமாமலை போன்றோருக்கு இலங்கையிலிருந்த கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி போன்றோரின் தொடர்பும் தாக்கமும் இருந்துள்ளது. அதேபோன்று சிவத்தம்பி போன்றோருக்கு தமிழகத்தின் இத்தகைய தலைவர்கள், அறிஞர்களின் கருத்துகள் வளம் சேர்த்துள்ளன. பல்கலைக்கழகங்களுக்கும் மக்களுக்கும் இடையே பாலம் அமைத்தவர்.பொதுவுடைமைக் கொள்கையில் தீராப் பற்றுக் கொண்டவர். இவ்வாறு பல்வேறு சிறப்புகளுக்கு உரிய சிவத்தம்பிக்கு இலங்கையில் இருந்து வெளிவரும் அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களும் மறைந்த நாளில் இருந்து இறுதி அஞ்சலி நடைபெற்ற நாள் வரை சிறப்புக் கட்டுரைகளையும், அழுத்தமான தலையங்ககளையும் வெளியிட்டு, அழியாப் புகழ் படைத்தவர் என்பதை உலகறியச் செய்துள்ளன. சிறந்த அறிஞராக விளங்கியதோடு பண்பும், பாசமும் மிக்க நல்ல மனிதராக விளங்கி சமுதாய மாற்றத்திற்கு உந்து சக்தியாகவும், தமிழ்மொழி உலக நாடுகளை நோக்கி பயணிக்க வழி வகுத்தவர். அவரது வழியில், உலகத் தமிழர்கள் அனைவரும் சென்று தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தொண்டாற்ற வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக