புதன், 27 ஏப்ரல், 2011

War crimes and genocide by Sinhalese - U.N.O. committee report: இலங்கையில் நடந்தது போர்க் குற்றமே! ஐ.நா. குழு அறிக்கை தகவல்

அறிக்கை நடுநிலை என்ற பெயரில் தாய்நாட்டு மக்களைக் காத்த மாவீரர்களைக் குற்றம் சுமத்தினாலும் ஏற்கெனவே சொல்லப்பட்டு வந்தவாறு
சிங்களத்தின் இனப்படுகொலை வஞ்சகக் கொடூரச் செயல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகள் அப்படியே விடப்பட்டால் எல்லா நாட்டு ஆள்வோர்களுமே ஏதோ ஒரு பெயரில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காகக் கூட்டாக மக்களைக் கொலை செய்யத் தயங்க மாட்டார்கள். எனவே, சிங்களத் தலைவர்கள், படையணித் தலைவர்கள, அதிகாரிகள், உதவிய நாடுகளின் தலைவர்கள், அதிகாரிகள், படைவீரர்கள்,இந்திய அதிகாரிகள், தலைவர்கள், படையணித்தலைவர்கள், என வேறுபாடின்றி அனைவருமே போர்க்குற்றங்களுக்காகவும் இனப்படுககொலைகளுக்காகவும்  தளையிடப்பட்டு
நடுவீதியில் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்கள்  குடும்பத்தினர் , வழிமுறையினர்
யாரும், ௧௦௦ ஆண்டு காலத்திற்கு ஆட்சிப் பொறுப்பிலும்  படைப்பொறுப்பிலும் பதவி வகிக்கத் தடை விதிக்க வேண்டும். இதுவரை வாய்மூடி அமைதியாக இருந்து ஒரு வகையில் கொலைகளுக்கு உடந்தையாக இருந்த நாம், அதற்குக் கழுவாய்  தேடும் வகையில் இதனை உலகறிய முழங்கி உடனே செயற்படுத்த ஆவன செயய் வேண்டும். ஐ.நா. குழுவினருக்கும் இவற்றை வெளியிடும் தினமணி முதலான ஊடகங்களுக்கும் நம் நன்றி.  
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



இலங்கையில் நடந்தது போர்க் குற்றமே! ஐ.நா. குழு அறிக்கை தகவல்

First Published : 27 Apr 2011 02:39:25 AM IST


 நியூயார்க், ஏப். 26: இலங்கையில், பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது போர்க் குற்றம்தான் என்று ஐ.நா. குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து ஐ.நா. சபை, திங்கள்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இலங்கை அரசு மீது மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.  எனினும், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றம் குறித்து உறுப்பு நாடுகள் கேட்டுக் கொண்டால் மட்டுமே சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் இலங்கை ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இலங்கையில் நிகழ்ந்த இனப் படுகொலை குறித்து சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இலங்கையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து உலக அமைப்பு ஒன்று ஆய்வு செய்தது. இலங்கையில் போர்க் குற்றம் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு சர்வதேச விசாரணை நடத்துவது குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கி மூன், இத்தகைய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றால் உறுப்பு நாடுகள் இதற்கு கோரிக்கை வைக்க வேண்டும் அல்லது விசாரணை நடத்த இலங்கை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஆய்வு நடத்தியதாகக் கூறப்படும் உலக அமைப்பு பற்றிய விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை. சர்வதேச விசாரணை தேவை என அந்த அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளதா என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இது குறித்து சுயேச்சையான சர்வதேச குழு விசாரிக்க வேண்டும் என அந்த அமைப்பு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் வெளியிட்டுள்ளார்.  உலக அமைப்பு நடத்திய ஆய்வில் இலங்கை ராணுவமும், விடுதலைப் புலிகளும் மனித உரிமைகளை மீறி நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மூன்று பேரடங்கிய குழுவினர் கடந்த 10 மாதங்களாக இதற்கான ஆதாரத்தை திரட்டியுள்ளனர். இலங்கை போரில் 2009-ம் ஆண்டு இறுதியில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இதற்கு அரசு நடத்திய குண்டு வீச்சு தாக்குதலே காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை ராணுவம் பொதுமக்கள் வசிக்கும் இடங்களிலும், மருத்துவமனைகளிலும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உணவோ, மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை. குறிப்பாக அறுவைச் சிகிச்சை செய்ய முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை கணிப்பின்படி 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனால் குழுவின் அறிக்கைக்கு எவ்வித பதிலையும் இதுவரை இலங்கை அரசு தெரிவிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.  விடுதலைப் புலிகள் மனித உரிமை மீறல் செயலில் ஈடுபட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்களை கேடயங்களாக அவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகள் குழு வலியுறுத்தியுள்ளது.  ரஷியா, சீனா ஆகிய உறுப்பு நாடுகள் கூட இலங்கை மீது விசாரணை நடத்த முட்டுக்கட்டை போடுவதாக தன்னார்வ அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்தார். இந்த அறிக்கை குறித்து இலங்கை அரசு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். இத்தகைய விசாரணை நடத்தப்பட்டால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் நிகழாது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதி சூசன் ரைஸ் தெரிவித்தார்.  அறிக்கை குறித்து இலங்கை அரசு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்ட கருத்தை அமெரிக்கா ஆமோதிப்பதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக