வியாழன், 28 ஏப்ரல், 2011

thiruma about u.n.o.committee report: ஐ.நா. அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்: தொல். திருமாவளவன்

ரியான வேண்டுகோள்- இந்தியம் நடுநிலை நாடாகச் செயல்பட்டால். காங்கிரசு அரசுதான் உலகெங்கும் சிங்களத்திற்கு வால்பிடித்து அலைவதுடன் ஐ.நா.விலும் சிங்களத்திற்கு எதிராக முடிவெடுக்கக் கூடாது என்றும் அறிக்கை குறித்து விவாதிக்கக்கூடாது என்றும் பரப்புரை மேற்கொண்டு தடுப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறதே! தானே குற்றவாளியாக இருக்கும் பொழுது எங்ஙனம் காங். அரசு இதனை ஒப்புக்  கொள்ளும். எனவே, நாடாளுமன்ற  உறுப்பினர்களை ஓரிடத்தில் கூடச் செய்து - போட்டி நாடாளுமன்றம் போல் அமைந்தாலும்  சரிதான் - அங்கே இது குறித்துஉரையாடிக் குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோர வேண்டும்,. இனப்படுகொலை செய்த காங்.அரசு  மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கண்டனத் தீர்மானமும்  கொண்டு வந்து ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். முன்னதாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் மனித நேய ஆர்வலர்கள சந்தித்து இனப் படுகொலைகள் குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும். காங். அகற்றப்பட்டதும் தமிழ் ஈழ ஏற்புத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்,. ஆனால், தமிழகக் கட்சிகள் காங்.கிற்கு அடிமையாக இருக்கும் வரை  எதற்குமே வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொண்டு இப்பொழுதாவது திருமாவும் பிறரும் காங்.கிற்கு எதிர்ப்பு நிலையை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 




ஐ.நா. அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்: தொல். திருமாவளவன்

First Published : 28 Apr 2011 02:36:10 AM IST


சென்னை, ஏப். 27: இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு வெளியிட்ட அறிக்கை பற்றி விவாதிப்பதற்காக மத்திய அரசு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது பற்றி அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை அரசு ஈவிரக்கமற்ற முறையில் தமிழர்களைக் கொன்றதையும், உலக நாடுகளை ஏமாற்றியதையும், செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. மன்றம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை அங்கே செயல்பட விடாமல் தடுத்ததையும் ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளை விசாரித்து, அதற்கு காரணமான அதிபர் ராஜபட்ச உள்ளிட்டவர்களை தண்டிப்பதற்கு சர்வதேச அளவிலான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் ஐ.நா. அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.இந்நிலையில், இந்திய அரசும், இங்குள்ள அரசியல் கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும் உறுதியாகக் குரல் எழுப்பி, ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காப்பாற்றிட முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.பாதுகாப்புக் காரணம் என்று சொல்லி சர்வதேச அரங்குகளில் இலங்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. இனி அந்த நிலை தொடரக் கூடாது. இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையை மறு ஆய்வு செய்ய தமிழக அரசோடும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளோடும் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும்.எனவே, இந்த அறிக்கை பற்றி விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

1 கருத்து:

  1. மேலே தெரிவிக்கப்பட்ட கருத்து தினமணியில் வெளியிடப்படவில்லை. வாழ்க அதன் நடுவுநிலைமை!

    பதிலளிநீக்கு