வியாழன், 28 ஏப்ரல், 2011

டென்மார்க்கின் அரசவைப் பாடல் குழு இந்தியா வருகை

தமிழ் நாட்டிலிருந்தும் இவ்வாறு உலக நாடுகளுக்கு அனுப்பலாம். ஆனால் அதில் தமிழிசை இருக்காது; தமிழ்க்கலை இருக்காது; தமிழ்ப்பண்பாட்டை  எதிரொலிக்காது. என்றாலும் அப்படி ஒரு காலம் வராமலா போகும்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
 
டென்மார்க்கின் அரசவை பாடல் குழு இந்தியா வருகை

First Published : 28 Apr 2011 12:49:00 AM IST


புது தில்லி, ஏப். 27: டென்மார்க்கின் அரசவை பாடல் குழுவினர், முதன் முறையாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர். அங்குள்ள கோபன்ஹென் ராயல் பிரார்த்தனைக்கூடத்தின் புகழ்பெற்ற இப்பாடல் குழுவினர், இந்தியாவின் டென்மார்க் தூதரகத்துடன் இணைந்து, வரும் மே 10-ம் தேதி இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். இதற்கு முன்னர் நான் இந்தியாவுக்கு வந்ததில்லை என்றாலும், இங்கு, பாடல் குழு என்பது அதிக அளவில் பிரபலமில்லாத ஒன்று என கேள்விப்பட்டுள்ளேன். இருப்பினும், இந்திய மக்கள் எங்கள் இசையை ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்கிறார், இந்த இசைக்குழுவின் இயக்குனரும், நடத்துனருமான எபிமுன்க். சைனா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்றுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தாலும், இந்தியாவில் உள்ள இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சி நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது பெரிய விஷயம் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் இசை மேதைகளான பாலமுரளி கிருஷ்ணா, பண்டிட் ரவிஷங்கர் ஆகியோருடன் சேரும் வாய்ப்பு அமையும் என்றும் தெரிவித்தார். உலகப்புகழ்பெற்ற தாஜ்மஹாலைப் பார்க்க எங்கள் குழுவினர் ஆவலாக உள்ளோம். அந்த காதல் நினைவுச் சின்னம் முன்பாக இசைக்க வேண்டும் என்பது எங்கள் பேராவல். அடுத்த முறை இந்தியா வரும்போது அது நிறைவேறும் என எபிமுன்க் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 1924ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பாடல்குழு தற்போது பல்வேறு நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. புகழ்பெற்ற கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இந்த பாடல்குழு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பழமையான பாரம்பரியமிக்க பாடல் குழுக்களில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பேராலய இசைக்குழுக்களும், இசைப்பள்ளிகளும் முக்கியமானவை. இவற்றில் டென்மார்க், நார்வே, ஸ்வீடன் ஆகிய வடக்கு ஐரோப்பிய பகுதியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் செயல்பட்டு வரும் பாடல் குழுக்களில் கோபன்ஹென் பேராலய இசைக்குழு முக்கிய ஒன்றாக திகழ்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக