வெள்ளி, 7 ஜனவரி, 2011

EEzha refugees camps: ஈழத் தமிழ் அகதிகள் முகாமும் தமிழர் முன்னுள்ள கடமையும் – யுவபாரதி

ஈழத் தமிழ் அகதிகள் முகாமும் தமிழர் முன்னுள்ள கடமையும் – யுவபாரதி

mugaam_thalaiyuthu
ஒரு பெரிய குடோன். அதில் சிமிட்டிப் பைகளால் தடுக்கப்பட்ட 80 சதுரடி அளவிலான அறைகள். ஒவ்வொன்றிலும் ஒரு குடும்பம். தலைக்கு மேல் ஆஸ்பெஸ்டாஸ் கூரை. இது தமிழகத்திலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் முகாம் குடியிருப்பு.
மாதந்தோறும் குடும்பத் தலைவருக்கு ரூ. 400-ம், அக்குடும்பத்திலுள்ள 12 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினருக்கு ரூ. 288-ம், குடும்பத்தின் முதல் குழந்தைக்கு ரூ. 180-ம், மற்ற குழந்தைகளுக்கு ரூ. 90-ம் நிதியுதவி. புதிதாய்க் குடியமர்த்தப்படும் குடும்பத்திற்கு சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்கென ரூ. 250 உதவித் தொகை. ஈமச் சடங்குகளுக்கெனில் ரூ. 500.
முகாமை விட்டு வெளியே சென்று வர இருவர் பிணை அவசியம். 12-ஆம் வகுப்பு வரை படிக்கலாம் எனினும் பெரும்பாலும் குடும்பச் சூழல் காரணமாகவும் வெளியூர் சென்று வேலை தேட அனுமதியில்லை (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வெளியே சென்று வர அனுமதி) என்பதாலும் இடையிலேயே படிப்பு முறிகிறது. படித்தாலும் கூலி வேலையை விட்டால் வேறு வழியில்லை. இந்நிலையிலும் முகாமைச் சேர்ந்தவர்களில் சற்றே பொருளீட்டியவர்கள் / பொருளியல் வசதி உள்ளவர்கள் கூட ஒரு சிறு துண்டு நிலம் கூட வாங்க முடியாது. ஒரு இரண்டு சக்கர மோட்டார் வாகனம் வாங்கக் கூடச் சட்டம் அனுமதிப்பதில்லை. இதுவே தமிழகத்தின் 25 மாவட்டங்களில் செயல்படுகிற 113 அரசு முகாம்களில் தங்கியுள்ள சுமார் 75,000 ஈழத் தமிழ் அகதிகளின் நிலைமை.
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3 இந்தியாவில் பிறக்கும் குழந்தை இந்தியக் குடிமகனாகக் கருதப்பட வேண்டும் என்றது. 1986-இல் இதில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும் என்கிறது. ஈழத் தமிழர் விடயத்தில் அதுவும் கூடச் சரிவரப் பின்பற்றப்படவில்லை என்பதே நிதரிசனம். 1983 கருப்பு ஜூலை இனப்படுகொலைகளுக்குப் பிறகு உயிர் பிழைத்து/பிழைக்க வேண்டித் தாய்த் தமிழகத்தில் கரையேறிய ஈழத் தமிழ் அகதிகளுக்குப் பிறந்த குழந்தைகளின் குடியுரிமை கேள்விக்குள்ளானது. குடியுரிமையற்ற நிலையில் பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. கடவுச் சீட்டு பெற இயலாது என்பது மட்டுமின்றி, உலக நாடுகள் அங்கீகரித்துள்ள அகதிக்குரிய கடவுச் சீட்டும் கூட தமிழகத்தில் உள்ள இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
இதே இந்தியத் துணைக் கண்டத்தில் ஈழத் தமிழர்கள் தவிர்த்து இதர அகதிகளும் இதே முறையில்தான் நடத்தப்படுகிறார்களா என்றால் இல்லை.
ஃ ஈழத்தவர்களை விட அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் இருப்பது திபெத் அகதிகள். ஐ.நா.வின் அகதிகள் உயர் ஆணையத்தின் 2008 கணக்கீட்டின்படி, அவர்களது எண்ணிக்கை 1.10 இலட்சம். (அக்கணக்கீட்டின்படி முகாம்களிலும் வெளியிலும் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் 1.02 இலட்சம்.) திபெத் அகதிகளுக்கு அவர்களது மறுவாழ்விற்கென சொந்த நிலம் வழங்கப்படுகிறது. இந்திய நடுவண் அரசால் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் அவர்கள் ஏறத்தாழ இந்தியக் குடிமகன்களாகவே நடத்தப்படுகிறார்கள். சமீபத்தில் சீனப் பிரதமர் புதுதில்லிக்கு வந்திருந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம்.
ஃ 50,000 எண்ணிக்கையிலான நேபாள அகதிகளுக்கும் பிற தடைகள் இல்லை.
ஃ ஆப்கன் அகதிகள் 32,000 பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு மேல் இங்கேயே தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகள் தம் விருப்பத் தேர்வின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
ஃ இந்தியாவில் இருக்கும் 35,000 வங்கதேச அகதிகளில் சிலர் மேற்கு வங்கத்திலும் ஒரிசாவிலும் சட்டமன்ற உறுப்பினர்களாகக் கூட இருக்கின்றனர்.
அகதிகளை அணுகும் முறையிலும் இந்திய நடுவண் அரசின் இப் பாரபட்சத்தை என்னென்பது?
உலகின் பல நாடுகள் அகதிகளுக்கு தொழில் – வர்த்தக உரிமைகளை வழங்கியுள்ளன. ஆஸ்திரேலியா அகதிகளுக்கான நிதியுதவியாக மாதந்தோறும் ரூ. 40,000 வழங்குகிறது. நிரந்தரக் குடியிருப்பிற்கெனத் தொகுப்பு வீடு வழங்குகிறது. குழந்தைகளின் உயர்கல்விக்கு வசதி செய்து தருகிறது. ஐந்து ஆண்டுகள் அகதிகள் முகாமிலிருந்து நன்னடத்தைச் சான்று பெற்றவர்களுக்குப் பணி அனுமதி (Work Permit) அளித்து அவர்கள் பல்வேறு பணிவாய்ப்புகளைப் பெறவும் வாய்ப்பளிக்கிறது. இத்தகைய பணிவாய்ப்புகள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கருதி கனடாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் மறு அகதிகளாகச் செல்ல – உயிரைப் பணயம் வைத்து மீன்பிடிப் படகுகளிலும் பயணிக்கத் – துணிகின்றனர். கடற்படையிடம் சிக்கி மேலும் அவதியுறுகின்றனர். அகதிகள் தொடர்பான ஐ.நா.வின் 1951, 1967 ஒப்பந்தங்களில் இந்தியா இன்னமும் கையொப்பமிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நம் காவல்துறை இவ்வகதிகளை அணுகும் முறையும் கொடுமையானது. அகதிகள் முகாம்களை அடுத்துள்ள கிராம/நகரக் குடியிருப்புகளில் நிகழும் திருட்டு நிகழ்வுகளுக்கு அகதிகள் முகாமில் உள்ளவர்களைப் பொறுப்பாளியாக்குவதும், அதற்கெனத் தண்டிக்கப்படுவதும் நடக்கிறது. சமயங்களில் பீடி, பெயிண்ட், விளக்கு போன்ற பொருள்களை எடுத்துச் செல்பவர்களும் கூட விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்ற பெயரில் கைது செய்யப்படுகின்றனர். செங்கல்பட்டு, பூவிருந்தவல்லியில் உள்ள – சுற்றிலும் மின்வேலியாலும் துவக்கு தரித்த காவலர்களாலும் சூழப்பட்ட – சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை அனுபவிக்கின்றனர்.
வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பெற அரசியல் கட்சித் தலைவர்களை அணுகுவதும் பயனளிப்பதில்லை. 1997-இல் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, தாம் ஆட்சிக்கு வந்ததும் ஈழத் தமிழ் அகதிகளின் பயன்பாட்டிற்குத் தரிசு நிலங்களைத் தருவதாக உறுதியளித்தார். 2001-இல் ஆட்சிக்கு வந்ததும் மறந்து போனார்.
2008 ஜூலையில் சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், அகதிகள் சட்டவிரோத ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் சொத்து வாங்குவதாகவும் அதனால் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவதாகவும் கவலை தெரிவித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு காஞ்சியில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் அகதிகளுக்கான குடியுரிமைப் பிரச்சினை குறித்துப் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதாகவும் தெரிவித்தார்.
குடியுரிமை வழங்குவதைப் பொருத்த மட்டில் நடுவண் அரசால் மட்டுமே செய்யப்படக் கூடியது. ஆனால் வீடு, உயர்கல்வி, சுதந்திரமாக நடமாடவும் தொழில் – வர்த்தகத்திற்கானதும் சொத்து வாங்குவதற்குமான உரிமைகள் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டவையே.
பட்டா நிலம் கூட வேண்டாம், சொந்த நாடு செல்லும் வரை மானத்தோடு உழைத்துப் பிழைக்க மட்டும் நிலம் தந்தாலும் போதும் என்பதே ஈழத் தமிழ் அகதிகளின் நீண்ட நாள் கோரிக்கை.
அரசாங்கம் இங்குள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு,
ஃ குடியிருக்க ஏற்ற வகையில் எல்லா அடிப்படை வசதிகளும் உள்ள தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும்.
ஃ இதர குடிமக்களைப் போலச் சுதந்திரமாக நடமாடுவதற்கும் தத்தம் வாழ்வாதாரத்திற்கெனப் பணிவாய்ப்புகளைப் பெறுவதற்குமான உரிமை வழங்க வேண்டும்.
ஃ இந்தியாவில் பிறக்கும் அவர்களது குழந்தைகளுக்கு – முன்பு போல் – இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.
ஃ உழவுத் தொழிலில் ஈடுபட நிலம் வழங்க வேண்டும்.
ஃ மீன்பிடித் தொழிலில் இருந்தோர்க்கு அதைச் செய்ய ஏற்ற வகையில் உரிய சாதனங்கள் மற்றும் இருப்பிட வசதிகள் வழங்க வேண்டும்.
ஃ இவர்களது குழந்தைகள் பள்ளிக்கல்வி மட்டுமல்லாது உயர்கல்வி பெற வழிவகை செய்வதுடன், அதற்கென உதவித் தொகை வழங்க வேண்டும்.
ஃ சொத்துரிமை வழங்க வேண்டும்.
ஃ தொடர்ச்சியாக 7 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வோர்க்கு – அவர்களது விருப்பத் தேர்வின் அடிப்படையில் – இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.
ஈழத்து முள்வேலியில் வதைப்படும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இம்மண்ணில் – திறந்த வெளிச் சிறைகளாக உள்ள – அகதி முகாம்களில் துயருறும் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் கண்ணியமான வாழ்விற்காகவும் அரசை வலியுறுத்த வேண்டியது ஈழ ஆதரவு அமைப்பினர் மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்பினருக்கு மட்டுமின்றி இங்குள்ள தமிழர் ஒவ்வொருவருக்குமுள்ள கடமை.
- யுவபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக