சனி, 8 ஜனவரி, 2011

dinamani editorial about telungana: பிடிவாதம் சரியல்ல!

தலையங்கத்தின் முடிவு சரியாகத்தான் உள்ளது. ஆனால், மாநில எல்லைகளைக் கூட்ட, குறைக்க, மாற்ற மத்திய அரசிற்கு அதிகாரம் இருக்கும் பொழுது, பெரிய மாநிலங்களை முன்னரே மத்திய அரசு பிரித்திருக்கும் பொழுது இப்பொழுது் பிரித்தால் என்ன என்ற கேள்விதான் மேலோங்கும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தலையங்கம்: பிடிவாதம் சரியல்ல!

இந்த ஆண்டு தொடக்கத்தில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அமைக்கப்பட்டபோது "இதுவெறும் கண்துடைப்பு' என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் குறை கூறினர். எப்படியும் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் காலவரையறை நீட்டிக்கப்படும் என்பதுதான் எல்லாருடைய கருத்தாகவும் இருந்தது. வழக்கமாக அதுபோன்றுதான் எல்லா கமிட்டிகளிலும் நடக்கிறது. குறைந்த காலகட்டத்தில் அனைவருடைய கருத்துகளையும் அறிய முடியவில்லை என்பதால் மேலும் சில மாதங்கள் நீட்டிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கேட்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அக்குழு விரைவாக தனது பணியை முடித்து, அறிக்கையையும் அளித்துவிட்டது. இதற்காகவும் பாராட்ட வேண்டும்.  ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் ஆறுவிதமான யோசனைகளில் தற்போதுள்ள நிலையே நீடிக்கலாம் என்றும், மாநிலத்தைப் பிரிக்காமல், தெலங்கானா மண்டலக் குழுவை அமைத்து அதற்குப் பல்வேறு அதிகாரங்களையும் நிதியையும் அளிக்கலாம் என்றும் 6 பரிந்துரைகளில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையை, இப்போது எதிர்த்துவரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி ஏற்றுக்கொள்ளுமானால், ஆந்திர மாநிலத்தைப் பிரிக்காமலேயே தெலங்கானா மாவட்ட மக்களின் நலன் பேணப்படுவது எளிது.  தெலங்கானா போன்ற சிறு மாநிலங்கள் அமைவதால் என்ன இழப்பு நேர்ந்துவிடும்? சிறு மாநிலங்கள் தங்கள் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்துகின்றனவே என்ற எண்ணம் எழவே செய்கிறது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையை அளிக்கும் முன்பாகவே, பிரதமர் இது தொடர்பாக முக்கிய அமைச்சர்களை அழைத்து சிறுமாநிலங்கள் அமைப்பது குறித்து பேச்சு நடத்தியபோது, நிச்சயமாக தெலங்கானா உருவாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆயினும், தனிமாநிலம் உருவாக்கப்படும்போது ஆந்திரம் ஒட்டுமொத்தமாகவும், குறிப்பாக தெலங்கானாவும் இழக்க நேரிடுகிற, சந்திக்க வேண்டிய இழப்புகள், பிரச்னைகள் குறித்து கிருஷ்ணா கமிட்டி அறிக்கையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதையும் பார்க்கும்போது, மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் கொஞ்சம் நிதானம் கொண்டுவிட்டது.  மத்திய அரசின் நிதானம் புரிந்தவுடன், ஜனவரி 6-ம் தேதிதான் அறிக்கையின் பரிந்துரைகள் பொதுமக்களுக்கு வெளியாகும் என்றும், அதற்கு முன்னதாக ஆந்திரத்தின் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நடக்கும் என்று தெரிவித்தும்கூட, ஜனவரி 5-ம் தேதியே பேருந்துகள் கொளுத்தப்பட்டன. டி.ஆர்.எஸ் கட்சி இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அரசின் தயக்கம் எதுவாக இருந்தாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் நியாயத்தை வலியுறுத்தியிருக்க வேண்டும். இவர்கள் அதைச் செய்யாமல் போனது வருத்தம் அளிக்கிறது என்பது மட்டுமல்ல, இவர்கள் அரசியல் முதிர்ச்சி அற்றவர்கள் என்பதையும் அம்பலப்படுத்திவிட்டது.  கமிட்டியின் பரிந்துரைப்படி தெலங்கானா மண்டலக் குழுவுக்கு மிக விரிவான அதிகாரம் வழங்குவதுடன், அந்த அதிகாரத்தைக் கொண்டு அக்குழு தெலங்கானா பகுதிகள் அனைத்தையும் மேம்படுத்துவதற்கான நிதியையும் தனியே ஒதுக்க முடியும்.  இது ஏறக்குறைய, பிரிட்டிஷ் அரசின் கீழ் ஜில்லா பரிஷத் என்ற அமைப்பு முன்பு செயல்பட்டதைப்போலவே இருக்கும் எனலாம். இந்தக் குழு தெலங்கானாவுக்கு உள்பட்ட மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் என எல்லாரும் பங்கு பெறும் குழுவாகத்தான் அமையும். தெலங்கானா முதல்வர், அமைச்சர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாதே தவிர, இந்த மண்டலக் குழுவுக்கும் தனியான கூட்டஅரங்கு, தலைவர், துணைத்தலைவர் பதவிகள் அதிகார வரம்புகள் எல்லாமும் இருக்கும். அதிகாரங்களைச் செலுத்துவதிலும் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் தங்கள் விருப்பம்போல செயல்பட முடியும்.  சீமை ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாவட்டத்தைப் பிரித்து இரண்டு தலைநகரம் உருவாக்குவதோ அல்லது ஹைதராபாத் நகருடன் சில பகுதிகளைச் சேர்த்து யூனியன் பிரதேசமாக மாற்றுவதோ, ஆந்திர மக்களுக்குப் பயனுள்ளதாக அமையுமா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது.  ஹைதராபாத் நகரை எங்களுக்கே வழங்க வேண்டும் என்பதில் சீமை ஆந்திரம் மற்றும் தெலங்கானா இருவரும் போட்டியிடுவார்கள். பஞ்சாபும் ஹரியாணாவும் சண்டீகரைத் தலைநகராக ஏற்றுக்கொண்டதுபோல இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான். இதனால் ஆந்திர மாநிலம் முழுவதும் வன்முறை பரவும். ஆந்திர மக்களின் பொதுவாழ்க்கைக்குக் குந்தகமாக அமையும்.  இப்போது ஹைதராபாத் மாநகரம், கணினி தொழில்நுட்ப மையமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு, எந்த மாநிலத்தின் தலைநகராக மாற்றப்பட்டாலும், இந்தத் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். இந்தத் தொழில்கள் பெங்களூர் அல்லது சென்னைக்கு இடம்பெயரும் வாய்ப்புகளே அதிகம். இதனால் தொழில் வாய்ப்பு மற்றும் இழப்புகளைச் சந்திக்கப்போவதும் ஆந்திர மக்கள்தான். ஹைதராபாதை யூனியன் பிரதேசமாக அறிவிப்பதை இருதரப்புமே ஏற்றுக்கொள்ளத் தயாராகவும் இல்லை.  தெலங்கானா வேண்டும் என்று கேட்போரின் குரல் வன்முறையினால்தான் ஓங்கி ஒலிக்கிறதே தவிர, ஒற்றுமையின் பலத்தினால் அல்ல. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 119 தொகுதிகள்தான் தெலங்கானா பகுதிக்குள் இடம்பெறுகின்றன. இதில் காங்கிரஸ் 50, தெலுங்கு தேசம் 38 இடங்களைப் பெற்றுள்ளன. இவர்களிடையிலும் தெலங்கானா வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. இதில் தீவிரமான ஆர்வம் காட்டுவோர் 10 பேரவை உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தெலங்கானா ராஷ்டிர சமிதி மட்டுமே!.  அரசியல் ரீதியாகத் தனது பலத்தை தெலங்கானா ராஷ்டிர சமிதி நிரூபித்த பின்னர், தனி மாநிலம் கேட்கவும், தற்போதைக்கு தனிமாநிலத்துக்கு இணையான அதிகாரம், நிதி ஒதுக்கீடு பெறும் மண்டலக் குழுவை ஏற்று, அதையும் சோதனையடிப்படையில் முயன்று பார்ப்பதே நல்ல முடிவாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக