சனி, 11 டிசம்பர், 2010

காங்கிரசைக் கண்டு கருணாநிதி அஞ்சுகிற காலம்

அடக் கடவுளே! கலைஞரைச் செ. மிரட்டுகிற காலம் வந்து விட்டதே! அன்புடன்  இலக்குவனார் திருவள்ளுவன்


சென்னை, டிச.11- காங்கிரசை கருணாநிதி மிரட்டிய காலம் போய், காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகின்ற காலம் வந்துவிட்டது என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் இடையே கலகமூட்டும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார் கருணாநிதி.  இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கருணாநிதி தெரிவித்த கருத்தைத் தான் நான் குறிப்பிட்டு இருந்தேன்.  இளைஞன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, “ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும் போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா?” என்று பேசி இருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் மேற்படி பேச்சு 6.12.2010 முரசொலியில் வெளியாகி இருக்கிறது. இதே போன்று, ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று விட்டதாக பத்திரிகைகள் தானே பூதாகரமாக ஆக்குகின்றன? என்று தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு, அதற்கு, “ஒரு சில பத்திரிகைகளும், ஒரு சில எதிர்க்கட்சிக்காரர்களும் தான் பூதாகரமாக இந்தப் பிரச்சினையை ஆக்கி, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவருடைய வீட்டிற்குத் துhக்கிக் கொண்டு போய் விட்டதைப் போலவும், அந்தத் தொகையை ஒரு சிலர் பங்கிட்டுக் கொண்டதைப் போலவும், அதற்காக நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்றும் பேசினார்கள், எழுதினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் மேற்படி கேள்வி-பதில் 7.12.2010 அன்று முரசொலியில் வெளியாகியிருக்கிறது. இதிலிருந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு மட்டும் பங்கில்லை, மற்றவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதை இரண்டு முறை கூறி இருக்கிறார் கருணாநிதி என்பது தெளிவாகிறது. இதைத் தான் நான் குறிப்பிட்டேன்.  ஆனால், நேற்றைய அறிக்கையில், “இளைஞன்” திரைப்பட விழாவில், “ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஊழல் செய்திருக்க முடியுமா?” என்று தான் பேசியதாகவும், இதை வைத்து தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நான் சிண்டு முடியப் பார்ப்பதாகவும்  கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார். நேற்றைய அறிக்கையில் ஓர் உண்மையை கருணாநிதி மறைத்துவிட்டார். அதாவது, நேற்றைய அறிக்கையில், “இளைஞன்” திரைப்பட விழாவில் தான் சொன்ன “ஒருவர்” என்ற வார்த்தையை தனக்கு வசதியாக எடுத்துவிட்டார் கருணாநிதி. பொய்யும், புளுகும், புனைசுருட்டும் கருணாநிதிக்கு கை வந்த கலை என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. மொத்தத்தில், காங்கிரசை கருணாநிதி மிரட்டிய காலம் போய், காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகின்ற காலம் வந்துவிட்டது என்பது கருணாநிதியின் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. என்ன தான் புலம்பினாலும், திமுக ஆட்சி வீழ்வது உறுதி.  இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக