திங்கள், 8 நவம்பர், 2010

தமிழ்நாட்டரசின் பார்வைக்கு

தமிழ்நாட்டரசின் பார்வைக்கு...


மொழிக்கு உயிர் போன்றது இலக்கணம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர், எழுத்து, சொல், பொருள் எல்லாவற்றுக்கும் தனித்தனியே விரிவான இலக்கணம் வகுத்துள்ளார். இதில் எழுத்து, சொல்லுக்கான இலக்கணம் உலக மொழி எல்லாவற்றுக்கும் உண்டு. ஆனால் பொருளுக்கு இலக்கணம் வகுத்த பெருமை தொல்காப்பியருக்கு மட்டுமே உரித்தானது.÷இத்தகைய தனிச்சிறப்பு உலக மொழிகளில் தமிழ்மொழிக்கு மட்டுமே உள்ளது. இன்றளவும் பலமொழிகள் இலக்கண முறையில் இருந்து விலகி இருந்தாலும், தமிழ் மொழி மட்டும் எழுத்து, சொல்லுக்கான இலக்கணத்தைப் பெருமளவு பின்பற்றி வருகிறது.  காலமாற்றத்தால் ஒரு மொழி, பிற மொழியோடு கலக்கும்போது உருவாகும் சொற்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிக்கூட தொல்காப்பியர் அன்றே இலக்கணம் வகுத்துள்ளார். இத்தகைய இலக்கணத் தொன்மையும், வளமும் கொண்டது தமிழ் மொழி. 1956-க்குப் பின்னர் மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது சென்னை மாநிலம் உருவானது. பின்னர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. படிப்படியாகத் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டு வரும் செயல்திட்டங்கள் தீட்டப்பட்டன. இதைத்தொடர்ந்து "எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்' என்ற முழக்கங்கள் எழுந்தன. படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் தமிழ் கொண்டுவரப்பட்டது. கோப்புகள் தமிழ் வழியில் எழுதப்பட்டன. அரசு ஊழியர்கள் தமிழில் கையொப்பமிட வலியுறுத்தப்பட்டனர். வணிகப் பலகைகள் தமிழில் எழுத அறிவுறுத்தப்பட்டது.÷தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கிக் கெளரவிக்கப்படுகின்றன. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பரிதிமாற்கலைஞரால் செம்மொழி என முன்மொழியப்பட்டு இன்று செம்மொழி மாநாட்டையும் நடத்தியுள்ளோம்.  எனினும் நம் தமிழ் மொழி மீது நம் முன்னோர்கள் கொண்டிருந்த பற்றும், காதலும் இப்போது நமக்கு இல்லை என்பதே உண்மை. தமிழ்த் தாயை வளர்த்தெடுப்பதில் அவர்கள் காட்டிய முனைப்பும், ஆர்வமும் இன்று நாம் காட்டவில்லை என்றே சொல்ல வேண்டும். நவீன உலகம் என்று சொல்லக்கூடிய இந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயமும் தமிழை எழுதவும், பேசவும் செய்யும் விதம் தமிழறிஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் கவலையளிக்கிறது. இன்று முறையாக இலக்கணத்தோடு தமிழைக் கற்பிக்கும், கற்கும் ஆர்வம் மக்களிடையே இல்லை. இலக்கணம் என்றாலே இளைஞர்களுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. தமிழ் வழியிலேயே கல்லூரி வரை படித்தவர்களால்கூட தமிழைப் பிழையின்றி எழுத முடியாத சூழல் நிலவுகிறது. அன்றாடம் காலை முதல் இரவு வரை மக்களோடு இரண்டறக்கலந்து கிடக்கும் தகவல்தொடர்பு சாதனங்களான ஊடகங்களில் தமிழின் நிலையோ அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.  தொலைக்காட்சிகளில் தோற்றப் பொலிவுக்குக் கொடுக்கப்படும் முதன்மை இடம், மொழி உச்சரிப்புக்குக் கொடுக்கப்படுவதில்லை. இதே நிலைதான் பண்பலைகளிலும் தொடர்கிறது.  ஆங்கிலம் கலந்து பேசுவதையே அறிவாளித்தனமாக எண்ணுகின்றனர். பிற மொழியையும், தமிழ் மொழியையும் பிரித்தறிய முடியாத வண்ணம் பத்திரிகை உலகிலும் எழுதி வருகிறார்கள். ஒரு சில பத்திரிகைகளே தனித்தமிழ்க் கொள்கையை உயர்த்தி உறுதியாகப் பிடித்துள்ளன. தமிழில் அகரமுதலி என்ற தொகுப்பு இருப்பதே பலருக்கும் தெரியாது.  இதுபோன்ற இக்கட்டான சூழலில் தமிழன்னையைக் காப்பற்ற வேண்டிய தலையாய பொறுப்பு தமிழக அரசு, தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஊடகங்கள், மக்கள் ஆகியோருக்கு உண்டு. இதில் அரசுக்குப் பெரும்பங்கு உள்ளது. தமிழ் மொழியை வளர்க்கவும், பரப்பவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு, தமது துறை சார்ந்த பெயரில் முதலில் கவனம் செலுத்த மறந்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.  குறிப்பாக, அரசுத் துறையான போக்குவரத்துக் கழகத்துக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்று தவறாகப் பெயர்சூட்டி இலக்கணப் பிழையைச் செய்து வருகிறது. தமிழ்நாடு + அரசு = தமிழ்நாட்டரசு என்றுதானே எழுத வேண்டும். அப்படிப்பார்த்தால் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பது பிழை. தமிழ்நாட்டரசு போக்குவரத்துக் கழகம் என்பதே சரியானதாக இருக்கும். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்று பிழையற்ற தமிழில் ஒரு நிறுவனம் குறிப்பிடப்படும்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏன் வந்தது? தமிழ் இலக்கணத்தில் ஒற்று இரட்டித்தல் என்ற விதிமுறை இங்கு பின்பற்றப்படவில்லை. இதனை தமிழறிஞர்கள் பல முறை சுட்டிக் காட்டியும் அரசு திருத்திக் கொள்ளவில்லை. இனிமேலாவது தமிழ்நாட்டரசு இதைத் திருத்திக் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்டுமா?
கருத்துகள்

தமிழ்நாட்டரசு என்பது போல் தமிழ்நாடு அரசு என்பதும் சரிதான் எனப் பல தமிழறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் தமிழ் வளர உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன? தமிழ், தமிழ், எனப் பேசும் ஆட்சித் தலைமை தன் குடும்பத்தினர் தமிழில் பெயர் சூட்டவும் தமிழ் மொழி, தமிழ்க்கலை, தமிழ்ப்பண்பாட்டைத் தம் குடும்ப ஊடகங்கள் வளர்க்கவும் வாக்குக்குத் தமிழ் வளர்ச்சி தம் குடும்ப வளர்ச்சிக்குத் தமிழ்ச் சிதைவு என்றில்லாமல் பிறருக்கு முன்மாதிரியாகத் தம் குடும்பத்தாரைத் திகழச் செய்தல் என்னும் நன்னிலையில் நிறுத்தச் செய்யவும்ஆவன செய்ய வேண்டும். ஊருக்கு அறிவுரை உனக்கில்லையடி கிளியே என ஆளும் தலைமை நடந்து கொள்ளும் வரை தமிழுக்கு உரிய இடம் கிடைக்காது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/8/2010 4:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக