வியாழன், 13 மே, 2010


பார்வதி அம்மாளுக்கு நிபந்தனைகள்: இதயமற்ற போக்கைக் காட்டுகிறது: விஜயகாந்த்



சென்னை, மே 12: நிபந்தனைகளுடன் பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சை பெறலாம் என்ற மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை இதயமற்ற போக்கைக் காண்பிக்கிறது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சை பெற முயன்றதில், மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரியது.சென்னைக்கு விமானத்தில் சிகிச்சை பெற வந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பார்வதி அம்மாள் மீண்டும் தமிழகத்துக்கு வந்து சிகிச்சை பெற, முதல்வர் கருணாநிதி சில நிபந்தனைகளுடன் அனுமதி கேட்டது ஏன்?.இந்திய அரசு அந்த நிபந்தனைகளை ஏற்று, 6 மாத காலத்துக்கு மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் விசா வழங்கலாம் என்று அனுமதித்ததை சட்டப்பேரவையில் பெருமையாகப் பேசினாரே, அப்பொழுது பார்வதி அம்மாள் அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டவரா என்று உறுதி செய்யாதது ஏன்?எந்த அரசியல் கட்சியினருடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், குறிப்பாகத் தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு சம்பந்தப்பட்டவர்களிடம் எத்தகைய தொடர்பும் கூடாது என்றும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவமனையிலேயே தங்க வேண்டும் என்றும் பார்வதி அம்மாளுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 80 வயது மூதாட்டியான பார்வதி அம்மாள் நோயாளியா? அல்லது தீவிரவாதியா? இந்தப் போக்கு மத்திய, மாநில அரசுகளின் இதயமற்ற போக்கையே எடுத்துக் காட்டுகிறது.இத்தனை ஆண்டுகாலம் இல்லாமல் இப்பொழுது சிறையில் இருக்கும் நளினியிடம் செல்போன் கண்டுபிடித்ததைப் போல, பார்வதி அம்மாள் ஒரு வேளை இந்த அரசுகளின் கோரிக்கையை ஏற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், எந்த அரசியல்வாதி மேலும் பழிபோட்டு, பார்வதி அம்மாள் நிபந்தனைகளை மீறிவிட்டார் என்று அவரை மீண்டும் நாடு கடத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்திய அரசும், தமிழக அரசும் கையாண்ட நடவடிக்கை நம்பத் தகுந்தவை அல்ல என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

சரியான அறிக்கை. ஆனால், இந்நாள்வரை விசயகாந்த் உறங்கிக் கொண்டிருந்தாரா? கூட்டணி முயற்சியின் குழப்பத்தில் இருந்து என்ன சொல்லலாம் எனத் திணறிக் கொண்டிருந்தாரா? ஈழத் தமிழர்களின்பால் பற்றுக்கொண்ட விசயகாந்த் தம் கட்சியினரையும் பிற பொது மக்களையும் ஒன்று திரட்டித் தமிழ் ஈழத்திற்கும் தமிழினத்திற்கும் எதிராகச் செயல்படும் காங்கிரசு அரசின் போக்கைத்தடுத்து நிறுத்த வேண்டும். கள்ளக்காதலி போல் நடந்து கொள்ளக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/13/2010 3:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக