திங்கள், 10 மே, 2010

ஏரிப்படுகையா, ரியல் எஸ்டேட்டா?



முன்னொரு காலத்தில் மும்பை நகர் ஓர் அழகிய மாங்குரோவ் வனமாக விளங்கியதாம். மும்பையின் வரலாறைத் தக்க ஆவணங்களை அடிப்படையாக வைத்து எழுதிய ஜகதீஷ்காந்தி, ஒரு வரலாற்று ஆய்வாளர் மட்டுமல்ல; மும்பை மெட்ரோபாலிட்டன் ரீஜன் டெவலப்மெண்டை எதிர்த்து ஒரு பொது நடவடிக்கை தொடுத்தவர். ஆங்காங்கே பல்வேறு தடுப்புகளால் காணாமல் போயிருந்த மைத்தி நதியை மீட்டவர். அத்தோடு, மும்பையில் வெள்ளநீர் விரைவில் வடிவதற்கும் அவர் வழி செய்தார். இந்த விஷயம் மாநகர்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மாளிகைகள் எழுப்பும் ரியல் எஸ்டேட்டுகள் மற்றும் மாநில அரசுகளுக்கும் ரயில்வே நிர்வாகத்துக்கும் பாடமாக விளங்கும்.மராட்டிய மன்னர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மும்பையில் பிரிட்டிஷார் ஆட்சியின்போது கூட வனப்பகுதிகள் பாதிக்கப்படவில்லையாம். மலபார்ஹில்ஸ், கம்பாலிஹில்ஸ், சீவரி வனங்கள் நன்கு நிர்வகிக்கப்பட்டனவாம். மைத்தி ஆறு அதன் போக்கில் விடப்பட்டிருந்தது. மைத்தி நதியின் போக்கு மெட்ரோ பாலிட்டன் ரயில்வே ஆக்கிரமிப்பு காரணமாகத் தடைப்பட்டதால் நகரில் பெருமழை பெய்தபோது வெள்ளம் சூழ்ந்தது.மைத்தி நதியின் தடைகளை எவ்வாறு ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தியிருந்தது என்பதை ஜகதீஷ் காந்தி யதேச்சையாகக் கண்டுபிடித்தார். 26-7-2005-ல் மும்பையில் வரலாறு காணாத மழை. மும்பை நகர் மிதந்தபோது இடையில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பல்லாயிரம் மக்களில் இவரும் ஒருவர்.சயான் ரயில்வே நிலைய மேம்பாலத்தில் இரவைக் கழித்துவிட்டுக் காலை 4 மணி சுமாருக்கு ரயில்வே பிளாட்பார்முக்கு வந்தால் பிளாட்பாரமே கண்டுபிடிக்க முடியாதபடி நீரில் மூழ்கியிருந்தது. இந்த லட்சணத்தில் மும்பையில் அண்டர் கிரவுண்ட் ரயில் விடும் திட்டம் உள்ளதை நினைத்துப் பதைத்துப் போனார். அப்பர் கிரவுண்ட் ரயில்வேயிலேயே பிளாட்பாரமே மூழ்கிவிட்டது. அண்டர் கிரவுண்ட் என்றால் வெள்ளத்தில் மூழ்கி ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலி அல்லவா ஏற்படும் என்று சிந்தித்தார். அப்போது அவருக்கு, வேறு ஏதோ குறை இதில் உள்ளதென்று பொறி தட்டியது.மறுநாள் வெள்ளத்துக்குக் காரணம் மைத்தி நதி என்று அதிகாரிகள் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து பழைய தஸ்தாவேஜுகளைக் கொண்டு மைத்தி நதியின் போக்கைக் கண்டுபிடித்தார். இந்திய ரயில்வேயின் ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்தார். பிரிட்டிஷார் காலத்து ரயில்வே பாலங்களில் இடைவெளி 600 - 700 மீட்டர் வரை விடப்பட்டு வெள்ளநீர் ஸ்டேஷனுக்குள் வராமல் மைத்தி நதி அதன்போக்கில் விடப்பட்டிருந்தது. ஆனால் இன்றுள்ள இந்திய அரசாட்சியில் ரயில்பால இடைவெளி 40 மீட்டராகக் குறைக்கப்பட்டு மைத்தி தடைப்பட்ட விவரம் அவருக்குப் புரிந்தது. வரலாறு - நில அளவை ஆவணங்களுடன் நீதிமன்றத்தை நாடி வெற்றியும் பெற்றுள்ளார் . ரயில்வே மட்டுமல்ல, விமான நிலையமும் மைத்தியை ஆக்கிரமித்துப் பல இடங்களில் நதியின் போக்கைத் திருப்பியுள்ளதையும் காந்தி குறிப்பிடத் தவறவில்லை. மும்பையில் மைத்தி நதி ஆக்கிரமிப்பு சந்திசிரித்த பின்பு இப்போது ஓரளவு நதியின் போக்கு சரிசெய்யப்பட்டுள்ளது. இங்கு சென்னை மட்டும் ஆக்கிரமிப்புக்கு விதிவிலக்கா - என்ன?மும்பையைப் போலவே சென்னை நகரமானது பிரிட்டிஷ் ஆட்சியின்போது எழில்மிகு நகரமாயிருந்தது. நுங்கம்பாக்கம் ஏரி, கோடம்பாக்கம் ஏரி, மேற்கு மாம்பலம் ஏரி ஆகியவை இருந்தன. அடையாறு சுத்தமாயிருந்தது. கூவம் நதியில் வண்ணாந்துறை இருந்தது. சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு பகுதிகளில் ஏராளமாக மரங்கள் இருந்து, அடையாறின் இருமருங்கும் இயற்கையால் சூழப்பட்டிருந்தது. படகு சவாரி நிகழ்ந்தது. வடசென்னையை எடுத்துக்கொண்டால் பக்கிங்காம் கால்வாயை ஒரு குட்டி தேம்ஸ் நதிபோல் பிரிட்டிஷ் அரசு உருவாக்கி படகு வழியே ஆந்திர மாநிலத்திலிருந்து சரக்கு வணிகம் நிகழ்ந்தது. அன்று பூங்கா நகரில் மிகப் பெரிய பூங்கா இருந்தது. பூங்காவை ஒட்டி நீச்சல் குளம், உயிரியல் பூங்கா வனம் ஆகியவை பழைய மூர்மார்க்கெட்டின் பின் பகுதி சென்னை நகரின் எழிலைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.இப்படியெல்லாம் இயற்கையின் சூழலில் சென்னை மாநகரம் இருந்ததை இன்றுள்ள தலைமுறை அறிய வாய்ப்பில்லை. அந்த அளவில் சென்னையிலும் மெட்ரோபாலிட்டன் இருப்புப்பாதை அமைப்புகளும் சென்ட்ரல் ரயில்வேயின் விஸ்தரிப்பு மாளிகைகளும் வனங்களைத் தின்றுவிட்டன. தினமும் டன் கணக்கில் ஆக்சிஜன் உற்பத்திக் கணக்கு நின்றுபோய் இன்று தினமும் அங்கு டன் கணக்கில் கார்பன்-டை-ஆக்சைடு உற்பத்தி மட்டுமே உள்ளது.இந்தியா விடுதலையாவதற்கு முன்பு - 1946-47-ம் ஆண்டு நிலஅளவைப் பதிவுகளில் உள்ள கணக்குப்படி விளங்கிய அரசுக்குச் சொந்தமான ஏரிநிலம், ஆயக்கட்டுப் பகுதி, நீர்வரத்துக் கால்வாய்கள் புறம்போக்கு நத்தம் ஆகியவற்றை இன்று 2010-ல் உள்ள கணக்கோடு ஒப்பிட்டால் ஏரிப்படுகைகள் எப்படி ரியல் எஸ்டேட் ஆயிற்று என்பது விளங்கும். இந்திய விடுதலைக்குப் பின்பு நீர்நிலைப் பகுதிகள் புறம்போக்காயிருந்தன. பின்னர் பட்டாநிலமாக மாறியுள்ளன. காந்திகிராமம், சின்னாளப்பட்டி போன்ற சிறு ஊர்களில்கூட ஏரிப்படுகைகள் மீது திருமகள் காலனி, திரு.வி.க. காலனி, அந்த நகர், இந்த நகர் என்றெல்லாம் புதிய பெயர் சூட்டப்பட்டு மரங்களும், ஏரிகளும் இருந்த இடத்தில் கட்டடங்கள் தோன்றியுள்ளன.சென்னை நகரின் புறநகர்ப்பகுதி, இந்த விஷயத்தில் முதல் பரிசு பெறும் தகுதி உள்ளது. முன்பெல்லாம் மாம்பலத்துக்குத் தெற்கேயும், பெரம்பூருக்குத் தெற்கேயும் உள்ள ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷன் உள்ள இடங்களிலும் ஏரிகள் இருந்தன. பழவன்தாங்கல் என்ற பெயரில் தாங்கல் என்பது ஏரிக்குள்ள மறுபெயர். பழவன்தாங்கல் ஏரியால் நெல் விளைந்த பூமி இது. அங்கும் ஏரிகள் உண்டு. மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் போன்ற எல்லா ஊர்களிலும் ஏரிகள் உண்டு. இப்போது ஏரிகள் இல்லை. ஏரிகள் மீது கட்டடங்கள் வந்துள்ளன. வடிகால்கள் தூர்ந்துவிட்டன. மழைநீர் வடியாமல் இன்றும் சென்னை புறநகர்ப் பகுதியில் பெருமழை பெய்தால் வெள்ளம் சூழ்ந்து ஓடாமல் நிற்பதைப் பார்க்கலாம்.பிரிட்டிஷ் ஆண்ட காலகட்டத்திலும் பின்னர் 1946-47 காலகட்டத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஏரி, குளங்கள் இருந்தன. ஒருசில கிராமங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏரிகள் இருந்தன. சிறிய ஏரிகள், சிறிய குளம், குட்டைகள் காலப்போக்கில் வறண்டும் தூர்ந்தும் போனதால் புறம்போக்கு நிலமாக மாறியது.பல லட்சக்கணக்கான நீர்நிலைகள் மீது இன்று குடியிருப்புகளும் கட்டடங்களும் எழும்பியுள்ளன. சென்னை மட்டுமல்ல; வளர்ந்துவரும் சேலம், கோவை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர், தூத்துக்குடி என்ற எல்லா மாவட்டத் தலைநகரங்கள் மட்டுமல்ல; வட்ட, வட்டாரங்களிலும் அதேநிலை. தமிழ்நாட்டில் விவசாயம் செய்தவர்களில் பலர் நிலத்தை விற்றுவிட்டு நிலத்தரகர்களாக மாறிவிட்டார்கள். நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டால் மிகவும் கௌரவமாக ""ஐயா, ரியல் எஸ்டேட்?'' செய்கிறேன் என்பார். "தரகு' என்றால் அவ்வளவு கௌரவமாக இல்லையே!விவசாயத்தை ஊக்குவிக்கும் அளவில் விளைபொருள்களுக்கு விலை இல்லை. ஏற்றுமதி நோக்கில் விவசாயம் திசை திரும்பிவிட்டது. விவசாயத்துக்குத்தான் மதிப்பு இல்லை. விவசாய நிலத்துக்குரிய மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு ஏறிவிட்டது. இரண்டாண்டுகளுக்கு முன்பு மானாவாரி நிலம் மிகவும் வறண்ட பூமி ரூ. 26,000-க்கு விற்ற நிலை மாறி 5 லட்சம், 6 லட்சம் என்று ஏக்கர் விலை உயர்ந்து வருகிறது.அன்று 5 லட்சம் விற்ற நிலம் இன்று 20 லட்சம், 30 லட்சம் என்று விலைபோகிறது. வறண்ட ஏரிப்படுகையுடன் ஒட்டிய மானாவாரியில் - குறிப்பாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் பருத்தி, துவரை, உளுந்து, பயறு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி என்று பயிர் செய்வார்கள்.சுமார் 40 ஆண்டுகள் கழித்து முன்பு பருத்தியும், பருப்பும், புஞ்சைதானியங்களும் பயிரான அதே நிலங்களில் இன்று கட்டடங்கள் வந்துவிட்டன. சில ஊர்களில் விளைநிலங்கள் புதிய பேருந்து நிலையமாகியுள்ளது. மிச்சம்மீதியுள்ள நிலங்களில் பசுமையைக் காணோம். அங்கு கல் ஊன்றப்பட்டு ""ப்ளாட் ஃபார் சேல்'' ஆகிவிட்டது.ஏரிப்படுகை மனைக்கட்டாகும் நிலையை என் சொந்த அனுபவமே எடுத்துக்காட்டும். இரண்டாண்டுகளாகப் போராடி ஒரு குளத்தை மீட்டுள்ளேன். திண்டுக்கல்லில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் 13-வது கி.மீ. தூரத்தில் சீவல்சருகு கிராமத்தில் நான் புதிதாக நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்கிறேன். எனது நிலத்துக்கு மேற்கே டொம்பன்குளம் என்ற குளம் உள்ளது. எனது நிலம் டொம்பன்குள நீர்ப்பாசனத்துக்கு உள்பட்டது என்று சான்று உள்ளது. ஆனால், டொம்பன்குளம் நிரம்பி 20, 30 ஆண்டாகிறது. நீர்வரத்துப் பகுதியில் ஆக்கிரமிப்புள்ளது.சமீபத்தில் குடிசை போட்டுக் கட்சிக் கொடியையும் நட்டுள்ளனர். 100 ஏக்கர் நிலத்தில் உள்ள இக்குளம் எவ்வளவு மழை வந்தாலும் நிரம்பாது. மழை வெள்ளத்தை குடவனாறுக்குத் திருப்பி விட்டுவிடுவார்கள். நான் இரண்டாண்டுகளாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதியும் பலன் இல்லை.கடைசிபட்சமாக, முதலமைச்சருக்கு மனுச் செய்ததில் பலன் கிட்டியது. எனது கோரிக்கை ஏற்கப்பட்டு டொம்பன்குளத்தை நிரப்ப 5 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வட்டார அலுவலர் முதலமைச்சருக்கு எழுதி எனக்கும் ஒரு நகல் அனுப்பியுள்ளார். பொதுவாக, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உள்ளூர் மக்கள் பொருள்படுத்துவதாகத் தெரியவில்லை. விவசாயம் செய்யும் ஆர்வமே இல்லாததும் ஒரு காரணம்.நஞ்சை நிலங்களை எடுத்துக்கொண்டால், நெல், கரும்பு, வாழை பயிரிட்ட இடங்களில் இப்போது மூங்கில், தேக்கு, மலைவேம்பு, முகிழ் மரம் என்று மரசாகுபடி நிகழ்கிறது. ஏன் என்று கேட்டால், விறகு 1 டன் விற்றால் ரூ. 2,000 கிடைக்கிறது.லாபகரமான விவசாயம் மரசாகுபடி என்று பலர் முடிவுக்கு வந்துவிட்டதால் இனி எதிர்காலத்தில் கோதுமை, அரிசியை மறந்துவிட்டு மரத்தைப் பொடியாக்கி மரக்கூழ் குடித்துப் பசியாறும் சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
கருத்துக்கள்

இன்றைக்கு வண்ணான்துறை என்னும் பெயரிலான பகுதிகள் அவற்றிற்குரிய அடையாளங்கள் இன்றி இருப்பதில் இருந்தே அவை முன்பு எவ்வாறு இருந்திருக்க முடியும் என ஊகிக்க முடிகிறது. நல்ல பல வினாக்களை எழுப்பியுள்ளார் கட்டுரையாளர். ஆனால் ஏதோ முழுமையின்றி இருப்பதாகத் தோன்றுகிறது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/10/2010 4:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக