வெள்ளி, 14 மே, 2010

எம்.ஜி.ஆர். தான் என்னை முதல்வராக்கினார்: முதல்வர் கருணாநிதி
First Published : 14 May 2010 01:09:34 AM IST


சென்னை, மே 13: அண்ணா மறைவுக்குப் பிறகு நான் தமிழக முதல்வர் ஆனதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.முதல்வர் பதவியில் 18 ஆண்டுகளை பூர்த்தி செய்து 19-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதல்வர் பதவியில் 19-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும், நிதியமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்து பேசினர். அப்போது குறுக்கிட்டு முதல்வர் கருணாநிதி பேசியது:அண்ணா மறைந்த பிறகு யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர். எனது வீட்டுக்கே வந்து முதல்வர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டார். நான் முதல்வராக பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவித்த எனது குடும்பத்தினரையும், குறிப்பாக நாவலர் தான் முதல்வராக வேண்டும் என்று கூறிய முரசொலி மாறனையும் அவர் தான் சமாதானப்படுத்தினார்.எனக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தவர்களுக்கும், வாழ்த்த இயலாத சூழ்நிலையில் அவையில் இருப்பவர்களுக்கும் கனிவான அன்பை வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். எந்தப் பண்பாடும், நாகரிகமும் அரசியலில் தலைகாட்ட வேண்டும் என்று இந்தியாவின் மாபெரும் தலைவர்கள் பாடுபட்டார்களோ, அந்த நாகரிகம் சட்டப் பேரவையில் ஒரளவுக்கு ஈடேறியுள்ளது. அந்த நாகரிகம் முழுவதும் ஈடேற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.நீதிமன்றத்தில் வாதாடி விட்டு வெளியே வந்து இரண்டு வக்கீல்களும் தோழமையோடு கைகோர்த்துக் கொள்வது போன்ற நிலைமை அரசியலிலும் வர வேண்டும். தில்லியில் சோனியா காந்தியும், அத்வானியும் திருமண விழாக்களில் அருகருகே அமர்ந்து குசலம் விசாரித்துக் கொண்டு அன்போடு பழகுகிறார்கள். இந்த நிலை தமிழகத்தில் இல்லையே என்ற பொறாமை எனக்கு ஏற்படுகிறது. அண்ணா முதல்வராக இருந்தபோது சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டை காமராஜர் தான் தொடங்கி வைத்தார். அதன் பிறகு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் நான் கலந்து கொள்ளவில்லை. அதனை விவாதப் பொருளாக மாற்ற விரும்பவில்லை. எம்.ஜி.ஆர். மறைந்த போது நான் தான் முதல் மாலையை அணிவித்தேன். எனது தாயார் மறைந்தபோது எனக்கு முன்பாக அஞ்சலி செலுத்துவதற்காக காத்திருந்தவர் காமராஜர். ராஜாஜி மறைந்தபோது பெரியார் கதறி அழுததை அருகில் இருந்து பார்த்தவன் நான்.காமராஜருக்கும் எனக்கும் எத்தனையோ அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் அவர் மறைந்தபோது சகலவிதமான அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. அதுபோல எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஹிந்தி மொழி எதிர்ப்பில் நானும், கருணாநிதியும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று எம்.ஜி.ஆர். பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது. அரசியலில் ஏற்படும் காழ்ப்புகள் தனிப்பட்ட தோழமைக்கு விரோதமாக ஆகி விடக்கூடாது என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன். நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். எல்லாவற்றையும் விட தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்று இருக்கிறது. அதனைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது என்றார் கருணாநிதி.
கருத்துக்கள்

3/3)அதிமுக உறுப்பினர்களும் மதிமுக உறுப்பினர்களும் தங்கள் முந்தைய தலைவர் என்ற முறையில் வாழ்த்தியிருக்க வேண்டும்.அதே நேரம் கலைஞரும் தேவைக்கேற்ப அரசியல் பண்பாட்டைப் பேசுவதைவிட எப்பொழுதும் இதனைக் கட்டிக்காக்க வேண்டும். அதிமுக உறுப்பினரைக் கொண்டு அரசு விழாவை நடத்திய வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுத்தது இவர் ஆட்சிதானே. வைக்கோ பங்கேற்ற பழ.கருப்பையா நூல் வெளியீட்டு விழாவில் தலைமை தாங்க இருந்த தமிழறிஞரை அவ்விழாவில் பங்கேற்காமல் செய்ததும் இவரது ஆட்சியில்தானே. அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் திமுகவினர் கலந்து கொள்ள யலுமா? அடுத்த தலைமுறை ஆட்சியின்பொழுதுதான் தமிழகம் கலைஞர் குறிப்பிடும் அரசியல் பண்பாட்டை மீட்டெடுக்கும். விரிவாக எழுத வேண்டிய இச் செய்தியைச் சருக்கமாக முடிக்கின்றேன். அரசியல் பண்பாடு குறித்துப் பேசாமல் தாமும் தம் கட்சியினரும் முன் மாதிரியாக இருக்குமாறு செயல்படட்டும். மீண்டும் வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/14/2010 3:30:00 AM

2/3) பால் தயிரான பின்பு அதைப் பாலுக்கு மாற்றாகப் பயன்படுத்தக் கூடாது. மக்கள் திலகம்தான் அவரை முதல்வர் ஆக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.அந் நன்றி மறந்து அவரையே ஓரம் கட்ட எண்ணிச் செயல்பட்டதால் உருவானதே அதிமுக என்பதும் அனைவரும் அறிந்ததே.எனவே. தேவைக்கேற்ப கடந்த காலச் சுவடுகளைப் பயன்படுத்தும் போக்கை நிறுத்த வேண்டும். மக்கள் நலத்திட்டங்களில் முன்னோடியாகச் செயல்பட்ட தம் சொந்தக் காலில் நிற்க வேண்டும். அல்லது மக்கள் திலகத்திற்கு எதிராகச் செயல்பட்ட தம் கடந்த காலத் தவறுகளுக்கு வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும். மீண்டும் வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/14/2010 3:28:00 AM

1/3)முதல்வர் பதவியில் மூவெட்டு ஆண்டை முடித்த முத்தமிழறிஞருக்கு மனம் கனிந்த பாராட்டுகள். இனிமேல் தமிழ் நாட்டில் இப்படிப்பட்ட அருந்திறலை யாரும் நிகழத்த முடியாது. இனி, முதல்வராகக் கட்சிநிலைக்கு அப்பாற்பட்டுச் செயலாற்றவும் தமிழ்இனநலப் பாதைக்குத் திரும்பவும் தமிழர் தாயகத்தை மீட்டெடுக்கவும் தொண்டாற்ற வாழ்த்துகள். வரலாற்றில் படிந்த கறையைத் துடைக்க அண்மைய நிலைப்பாடுகளில் இருந்து மாறுபட்டுத் தம் செல்வாக்கை மத்திய அரசில் தமிழ் ஈழ ஏற்பிற்காகச் செலவிட்டு வெற்றி காண வேண்டும். இல்லையேல் நாளைய வரலாறு அவர் பற்றி என்ன சொல்லும் என்பது அவர் அறிந்ததே. மீண்டும் வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/14/2010 3:28:00 AM

I would like to say congrats to Dr.Kalaingar. Good matured speech.all party leaders must keep in their mind . Vazhka Mutamizh Aringar. G.S.Soundararajan. D.R.Congo

By G.S.Soundararajan
5/14/2010 1:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக