புதன், 12 மே, 2010

அரசியலில் மோசமான விமர்சனங்கள் கூடாது: முதல்வர் கருணாநிதி



சென்னை, மே 11: அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மோசமான விமர்சனங்கள் கூடாது என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை அதிமுக உறுப்பினர்கள் கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது குறுக்கிட்டு முதல்வர் கருணாநிதி பேசியது:தேனிக்கு அருகே உள்ள முத்துதேவன்பட்டியில் கருணாநிதி ஒரு தோட்டம் வாங்கியிருக்கிறார் என்று எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அமைச்சராக இருந்த குழந்தைவேலு குற்றம்சாட்டினார். அப்போது பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேர்தல் பணிக்காக நான் தங்கியிருக்கிற இடம் நான் வாங்கிய தோட்டம் அல்ல. அந்தத் தோட்டம் கம்பம் ராமகிருஷ்ணனின் அண்ணனுக்குச் சொந்தமான தோட்டம். அதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தேர்தல் பிரசாரத்தின்போது நான் சொல்லிப் பார்த்தேன்.அதன்பிறகும் அது கருணாநிதி வாங்கிய தோட்டம்தான் என்று குழந்தைவேலு வலியுறுத்தினார். ஆதாரம் எங்கே என்று கேட்டதற்கு சட்டப் பேரவையில் தருகிறேன் என்றார். அதன் பிறகு முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையில் இந்த விவாதம் வந்தது. அப்போது துரைமுருகன், முத்துதேவன்பட்டியில் கருணாநிதி நிலம் வாங்கியிருந்தால், அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் குழந்தைவேலு, நான் ஆதாரத்தோடு நிரூபிக்கிறேன். இல்லாவிட்டால் பதவியிலிருந்து விலகுகிறேன் என்றார்.அவரின் அறைகூவலை ஏற்றுக்கொண்ட நான், அமைச்சர் குழந்தைவேலு ஆதாரத்தை கொடுத்தால் நான் எம்.எல்.ஏ. பதவியை மட்டுமல்ல, பொதுவாழ்க்கையில் இருந்தே விலகிக் கொள்கிறேன். ஆனால், குறைந்தபட்சம் அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவாரா என்று கேட்டேன். அப்போது அவைத் தலைவராக க. ராஜாராம் இருந்தார். ஒரு வாரத்தில் நிரூபிக்கிறேன் என்றார் குழந்தைவேலு. தினமும் எங்கே ஆதாரம் என்று நான் கேட்பேன். நாளைக்கு நாளைக்கு என்று அவர் சொல்லிக் கொண்டே வந்தார். ஒரு வாரத்துக்கு பிறகு ஆதாரத்தை கொண்டு வந்து கொடுத்தார்.அதில் போலி கையெழுத்து போடப்பட்டு எனது மகன் அழகிரி பெயரில் அந்தத் தோட்டத்தை நான் வாங்கியதாக காட்டப்பட்டிருந்தது. அது குறித்து பேரவைத் தலைவர் அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் கருத்து கேட்டார். அனைவரும் இது தவறான குற்றச்சாட்டு என்று சொன்னார்கள். அதன் பிறகு எப்போது பதவி விலகப் போகிறீர்கள் என்று நான் கேட்டேன். எம்.ஜி.ஆர். ஒரு புன்னகை மூலம் என்னை சமாதானப்படுத்தி இத்தோடு விட்டுவிடுங்கள் என்றார். பாவம் அவரே கேட்கிறாரே என்பதற்காக அதோடு விட்டுவிட்டேன்.குழந்தைவேலு அன்றைக்கு அந்த அறைகூவலை எப்படிச் சமாளித்தாரோ, அதைப்போலவே நீங்களும் (ஓ. பன்னீர்செல்வம்) சமாளிக்க முன்வராதீர்கள். திங்கள்கிழமை (மே 10) இந்தப் பிரச்னைக்காக வெளிநடப்பு செய்தபோது, வெளியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் என்னைப் பற்றியும், அரசைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் கேவலமான சொற்களை பிரயோகித்திருக்கிறார்கள். இவையெல்லாம் உங்களுக்கு உகந்ததுதானா, இவற்றை நீங்கள் அனுமதிக்கிறீர்களா இப்படியெல்லாம் ஒரு நாகரிகத்தை நாம் வளர்க்க வேண்டுமா என்பதை நான் உரிமையோடும், பழகிய பாசத்தோடும் கேட்க விரும்புகிறேன். இதெல்லாம் சரிதானா என்பதை நீங்கள் தயவுசெய்து ஓ. பன்னீர்செல்வம் எண்ணிப்பார்க்க வேண்டும்.அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் வரலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் இவ்வளவு வேகமாக, மோசமாக விமர்சிப்பது, கோஷம் போடுவது நியாயம்தானா என்பதை எண்ணிப் பார்த்து இந்தப் பிரச்னையில் தொடர்ந்து பேசுங்கள் என்றார் முதல்வர் கருணாநிதி.அதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர் கோ. அரி எழுந்து ஏதோ கூற முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, அரியைப் பற்றி அவருடைய கட்சியிலேயே என்ன அபிப்ராயம் உள்ளது என்பது எனக்குத் தெரியும் என்றார்.
கருத்துக்கள்

ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகாரர்களுக்கு எதிராக மட்டும் மோசமாகப் பேச ஒருவருக்கு மட்டுமே உரிமை உண்டு. அதனைமுன் மாதிரியாக எண்ணி யாரும் பேச வேண்டா. வெவ்வேறு கட்சியினராக இருந்தாலும் ஒரே குடும்பம் என்ற நிலையில் பழக வேண்டும். ஆனால் அவ்வாறு பழகினால் கட்சிப் பகைவன் என்ற முத்திரை வந்து விடும். அமைதியாகப் பேசினால் கட்சியிலிருந்து நீக்கப்படுவதும் எதிராளர்களுக்கு எதிராக வீர உரை ஆற்றினால் தலைமையால் கவனிக்கப்படுவதும் மாற வேண்டும். இன்றைய கட்சிகள் அனைத்தும் கலைக்கப்பட்டு இளந்தலைமுறையினர் பங்கேற்கும புதிய சில கட்சிகள் மட்டும் உருவாக இசைவு அளித்தால் அரசியல் பண்பாட்டை எதிர்பார்க்லாம். இல்லையேல் கும்பிடத் தோன்றுபவரைக் கூப்பிடத் தோன்றும். கூப்பிடத் தோன்றுபவரிடம் அடிபணியத் தோன்றும். கட்சியில் இருந்தால் ஒரு பேச்சு; மாறினால் மறு பேச்சு என்னும் நிலையே இருக்கும். எல்லார்க்கும் தெரிந்த இது குறித்து நான் கூற என்ன இருக்கிறது?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/12/2010 4:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக