வெள்ளி, 13 நவம்பர், 2009

அடக்க விலையில் ஆய்வு மலர்: "தினமணி' செய்திக்கு அரசு மறுப்பு



சென்னை, நவ. 12: எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய மலர், தமிழகத்தில் உள்ள நூலகங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து, "தினமணி' வெளியிட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்:கடந்த 1995-ல் தஞ்சாவூரில் நடைபெற்ற 8-வது உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் கட்டுரைகள் ஏற்கெனவே ஐந்து தொகுதிகளாக அச்சிடப்பட்டன.ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் அவை முறையாக வெளியிடப்படாமலும், விநியோகிக்கப்படாமலும் இருந்து வந்தன.கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது பற்றிய ஆலோசனை நடைபெற்றபோது, இந்தத் தகவல் முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.அதனைத் தொடர்ந்து, ரூ. 3 ஆயிரம் விலையில் உள்ள ஐந்து தொகுதிகளையும் அடக்க விலைக்கு அதாவது ரூ. 1,400-க்கு விற்பனை செய்யவும், அவற்றைப் பொதுநூலகங்கள் வாங்கி பயன்பெறவும், அதன் மூலம் கிடைக்கும் தொகையை உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்திற்கே வழங்கவும் உரிய அரசாணை பிறப்பிக்குமாறு முதல்வர் அறிவுரை வழங்கினார்கள்.அதன்படி 23-9-2009 அன்று தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அரசாணை (அரசாணை எண் 291) வெளியிட்டது.அந்த உத்தரவுப்படி, 8-வது உலகத் தமிழ் மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய மலர்களில் 50 பிரதிகள் உலகத் தமிழாராய்ச்சி சங்கத்துக்கும், 50 பிரதிகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும், 5 பிரதிகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கும், மீதமுள்ள தொகுப்புகளை தமிழ்நாட்டு பொதுநூலக இயக்கத்துக்கும் ரூ. 1,400-க்கு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது'' என்று அரசு தெரிவித்துள்ளது.நூலகங்கள் மூலம்... இதுகுறித்து, பொது நூலக இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, ""தமிழகத்தில் மொத்தம் 4,002 நூலகங்கள் உள்ளன. அதில், மாவட்ட மைய நூலகங்கள், வட்ட அளவிலான நூலகங்கள், கிளை நூலகங்கள் என மொத்தம் 1,600 நூலகங்களுக்காக ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய மலர் வாங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, ஆயிரம் பிரதிகளை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினர்."கிராமப்புறங்களில் உள்ள நூலகங்கள் உள்பட அனைத்து நூலகங்களுக்கும் இந்த மலரின் பிரதிகள் வாங்கப்பட வேண்டும்' என்று தமிழறிஞர்களும், ஆய்வாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துக்கள்

தினமணியின் மனக்குறை சரிதான். இப்பொழுதுதான் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது; அதுவும் ஒரு பகுதி நூலகங்களுக்குத்தான். எனவே, அறிஞர்களோ ஆய்வாளர்களோ மாணாக்கர்களோ பொது மக்களோ கல்விநிலையங்களோ அவற்றை வாங்கிப் பயனடைய வாய்ப்பில்லை. எனவே, முதல்வர் தலையிட்டு ஆர்வம் உள்ள யாவரும் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2009 3:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக