பழந்தமிழ் மக்கள் அறிவியல் நோக்கிலேயே எதனையும் சிந்தித்தனர். ஆனால், பிற நாடுகளில் அறிவியல் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டபொழுது அறிவியலாளர்கள் சமயவாதிகளால் தண்டிக்கப்பட்டனர்; உயிர்பறிக்கப்பட்டனர்.
1548 இல் பிறந்த இத்தாலிய அறிவியலாளர் கியார்டனோ புருனோ (Giordano Bruno) எனப்பெறும் பிலிப்போ புருனோ (Filippo Bruno) அண்டங்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியவர். 1584இல், முடிவற்ற அண்டமும் உலகங்களும் (Infinite Universe and Worlds) முதலான இரு நூல்களை வெளியிட்டார். சமய நம்பிக்கைக்கு எதிரான செய்திகள் என 1592இல் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டு 17.2.1600இல் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
. போலந்து அறிவியலாளர் நிக்கோலசு கோபர்னிகசு (Copernicus, Nicolaus;1473-1543) செருமானிய அறிவியலாளர் யோன்னசு கெப்ளர் (Kepler, Johannes; 1571-1630) உடன் இணைந்து பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். எனினும், சமயவாதிகளின் தொல்லைகளால் உண்மைகளை வெளியிட முடியாமல் நண்பர்களின் துணையால் அவர் மறைவிற்குப் பின்பே 6 நூல்கள் வந்தன. இவர்களின் வழியில் இத்தாலிய அறிவியலாளர் கலிலியோ (1564-1642), கோபர்னிகசு கருத்தான பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்பதை மேலும் ஆராய்ச்சி செய்து நிலைநாட்டிப் பரப்பி வந்தார். 1632இல் இவற்றை விளக்கி இருபெரும் உலக அமைப்புகள் பற்றிய சொற்போர் (Dialogue of The Two Chief World Systems) என்னும் நூலை வெளியிட்டார். இதனால் வீட்டுச் சிறை வைக்கப்பெற்றார்; 1637இல் கண்பார்வையை இழந்தார்; 1642இல் வீட்டுச் சிறையிலேயே உயிரிழந்தார்.
ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமி சுற்றுவதை அறிந்து அதன் கால அளவை நாள் என்றும் பூமியைத் திங்கள் (நிலா) சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவைத் திங்கள் (மாதம்) என்றும் பூமி சூரியனைச் சுற்ற ஆகும் கால அளவை ஆண்டு என்றும் குறிப்பிட்டுப் பயன்படுத்தினர் நம் முன்னோர்.
சுற்றிக் கொண்டிருக்கும் உலகத்தில் உள்ள மக்கள் வாழ்வு, உழவர்களைச் சுற்றி உள்ளதாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர், சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை (திருக்குறள் 1031) என்கிறார். உலவும் பூமியை உலகம் என்று எவ்வளவு பொருத்தமாக அறிவியல் நோக்கில் பெயரிடுள்ளனர்!
அறிவியல் வளத்தில் சிறந்திருந்த முன்னோர் வழியில் (தாய் மொழியாம் தமிழில் கற்று) அறிவியல் வளங்களைக் கண்டறிய இப் பொங்கல் நாளில் உறுதி கொள்வோம்! பொங்கல் சிறக்கட்டும்! அறிவியல் பெருகட்டும்!
அறிவியல் ஆய்வகங்களில் ஒரு பொருளை அதன் வெப்பம் அல்லது குளிர்ச்சி மாறாமல் காப்பது என்பது பெரும்பாடாக இருந்தது. இதற்கு 1892இல் ஒரு தீர்வு கண்டார் அறிவியல் அறிஞர் சேம்சு திவியார் (Sir James Dewar). அவர் கண்டுபிடித்த வெப்பக்குடுவை (Thermos Flask) வெப்பத்தைப் பாதுகாக்கவும் குளிர்ச்சியைப் பாதுகாக்கவும் உதவியது. அறிவியல் உலகில் இப்படி ஒரு தேவை உள்ளதை அக்கால நம் நாட்டவர் உணர்ந்திருந்தார்கள் எனில் நம் முன்னோரைப் பின்பற்றி எளிதில் சேமக்கலனை மீள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கலாம்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குளிர்ச்சியை அல்லது வெப்பத்தை உள்ளவாறே சேமிப்பதற்குச் சேமச்செப்பு என்னும் ஒன்றைப் பயன்படுத்தி உள்ளனர் பழந்தமிழர்கள்.
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் சேமச் செப்பல் பெறீஇயரோ (குறுந்தொகை 277).
என்கிறார் ஓரில் பிச்சையார் என்னும் புலவர் பெருந்தகை.
அற்சிரம்-பனிக்காலம்; வெய்ய-விரும்பத்தக்க; பெறீஇயரோ-பெறுவாயாக; பனிக் காலத்தில் விரும்பிக் குடிக்கும் வகையில் வெப்ப நீரைச் சேமித்து வைக்கும் சேமச்செப்பினைப் பெறுவாயாக எனக் குறிப்பிடுகிறார். புலவரின் பெயர் தெரியாததால் இப்பாடலில் இடம் பெறும் ஓரில் பிச்சை என்னும் தொடரின் பெயரால் ஓரில் பிச்சையார் என அழைக்கப்படுகிறார். எனவே குறுந்தொகை தொகுக்கப்பட்ட காலத்திற்கு முன்பே புலவரும் சேமச் செப்பும் இருந்திருக்க வேண்டும் எனலாம்.
சேமக்குடுவையின் அமைப்பு முறை வெவ்வேறாக இருந்தாலும் அதன் நோக்கமும் பயனும் ஒன்றுதானே! அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்களான நாமே அதை அறிந்து உணராதபொழுது அயலவர் எவ்வாறு உணர்வார்கள் என எதிர்பார்க்க முடியும்?
1902ஆம் ஆண்டு உலக மக்களை வியப்பில் ஆழ்த்தினார் அறிஞர் சகதீசு சந்திரபோசு. அவர் வெளியிட்ட உயிரினங்கள்-உயிற்றவற்றின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்னும் நூலில் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்றதால் குழப்பமும் வியப்பும் ஏற்பட்டு இறுதியில் உலகம் அவரைப் போற்றியது. நம்மிடம் உள்ள அறிவியல் புதையலை அறியாத நாமும் அறியாமையால் இன்று வரையும் அவ்வாறுதான் படித்து வருகிறோம். பாடல் வடிவில் உள்ள தமிழ் இலக்கிய உண்மைகள் யாவும் கற்பனையே என்னும் மாயையில் உள்ளதால் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிஞர் தொல்காப்பியர் தமக்கும் முன்னரே தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை வெளிப்படுத்தியதை உரியவாறு உலக அறிவியல் அறிஞர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லத் தவறியுள்ளோம்.
ஓரறிறவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களை வகைப்படுத்தி நெறிப்படுத்தியுள்ளனர் அவருக்கும் முன்னோர். அத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. புல்லும் மரனும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
(தொல்காப்பியம்: மரபியல் )
என வரிசையாக ஓரறிவு- ஆறறிவு உயிர்களை விளக்குகிறார்.
தமிழ்வழிக் கல்வியை நாம் இழந்ததால் நம் அறிவியல் வளத்தையும் இழந்தோம்! உலகினர்க்குத் தமிழ் அறிவியல் சிறப்பை எடுத்துரைக்கவும் தவறி விட்டோம்! அறிவியல் மேதைகளாகும் வாய்ப்புகளையும் தவற விட்டோம்! அறிவியலில் இப்பொழுதும் சிறந்திருந்தால் உலக நாடுகள் நம்மை மதித்து நம் குரல்களுக்குச் செவிமடுத்து நம் இனமக்களைக் காப்பாற்ற முன் வந்திருப்பார்கள் அல்லவா?
விலங்கு என்பது குறுக்காக நடப்பவற்றைத்தான் குறிப்பிடும். கைகளில் குறுக்காக மாட்டப்படும் சங்கிலிக்காப்பை விலங்கு என்கிறோம் அல்லவா? வளைந்த அமைப்பு உள்ளதுதானே வில். எனவே, குறுக்காக உடலுடைய உயிரினங்கள் விலங்குகள் எனப் பட்டன. எனினும் அறிவியலில் பறவை வகைகளும் விலங்கு வகையில் அடங்கும். ஏன், மனிதனே ஒரு மன்பதை விலங்குதானே! தமிழ்ப் பெருநிலப்பரப்பு, புவி அமைந்த தொடக்கக் காலத்தில் இன்றைய ஆப்பிரிக்கா முதல் ஆசுதிரேலியா வரை இருந்தமையால் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்திருந்தன. அவற்றையெல்லாம் ஆராயும் நோக்கில் மாணாக்கர் அறிவு வளம் பெருக வேண்டும். பொதுவாக இப்புவியில் வாழ்ந்த, வாழ்கின்ற சில உயிரினங்களைப் பற்றி இங்கு அறிவோம்.
தமிழில் ’மா என்றால், விலங்கு, பெரிய, மா மரம், குதிரை, மாவு, ஓர் அளவு முதலிய பல பொருள்கள் உண்டு. எனினும் ’மாப்பெயர் வகை என்னும் தலைப்பில் புள்வகை, விலங்கு வகை, பாம்பு வகை, நீர் வாழ்வன வகை முதலிய அனைத்து உயிரிகளையும் முன்னோர் குறித்தனர்.
சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள முப்பந்தைக்கும் மேற்பட்ட விலங்கு வகைகளை அறிஞர் பி.எல்.சாமி குறிப்பிட்டுள்ளார்.(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்)
அவற்றுள் குறிப்பிடத்தக்கன, குரங்குகள். வருடை, ஆமான், மான்கள், கேழல்,நரி, கோநாய், தீநாய், செந்நாய்,கரடி,வெருகு,புலி,யானை, நீர் நாய், எலி, அணில், முளவுமா, கவரிமா என்பனவாகும். கவரிமா என்பதை நாம் கவரிமான் எனக் குறிப்பிட்டு மான்வகையாக எண்ணுகிறோம். தெய்வப்புலவர் திருவள்ளுவர் ,
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். (969)
என்கிறார். தன் மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால் அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள் எனத் தவறாகக் கருதுகிறோம். கவரிமா என்பது பனிமலைப்பகுதிகளில் குளிரைத் தாங்கும் வகையில் அடர்முடியுடன் வாழும் ஆட்டினமே ஆகும். இயற்கைச் சூழலுக்கேற்ப இதன் உடல் அமைந்துள்ளது. எனவே அச்சூழலில் முடியை இழப்பின் குளிரைத் தாங்க இயலாமல் அவை மாண்டு விடும். இதையே தெய்வப்புலவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அனைத்துப் பகுதிகளிலும் அனைத்துச் சூழல்களிலும் வாழும் விலங்கின வகைகளைப் பழந்தமிழர் அறிந்திருந்தமை அவர்களின் விலங்கியல் அறிவைப் புலப்படுத்துகின்றது.
மேலும், மான், கழுதை ஆகியவற்றின் ஐந்தைந்து வகைகளையும்
குரங்கு, நாய் ஆகியவற்றின் நன்னான்கு வகைகளையும்
எலி, முதலை ஆகியவற்றின் மும்மூன்று வகைகளையும்
புலி, அணில் ஆகியவற்றின் இரண்டிரண்டு வகைகளையும்
பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன.
உயிரினங்களின் ஆண்மரபு, பெண்மரபு ஆகியவற்றின் அறிவியல் உண்மைகளையும், இவற்றின் பிள்ளைத் தன்மைகளையும் முன்னைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
விலங்குகளின் ஆண் இனமானது
உம்பல்,
ஏட்டை,
ஏறு,
ஒருத்தல்,
ஓதி,
கடுவன்,
கபடு,
கலை,
களிறு,
சே,
சேவல்
தகர்,
போத்து,
மா,
என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் விளக்கம் வருமாறு:-
இவற்றுள் ஆண்யானையானது களிறு, பகடு, ஒருத்தல், உம்பல், மா என அழைக்கப்பெற்றுள்ளமை போல், ஒரே விலங்கிற்கு வெவ்வேறு பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன.
ஒரே இனத்தின் வகைப்பாட்டிற்கு ஏற்ப இவை அமைந்து பின்னர்ப், பொதுப்பெயர்களாக மாறி இருக்கலாம். இது குறித்து ஆராய்ந்தால் நுண்ணிய வேறுபாடுகளைக் கண்டறிய வாய்ப்பு உள்ளது.
பெண்விலங்கினங்கள்
பிணை
பாட்டி
பேட்டை
பிணா
ஆ
ஆன்
பிடி
நாகு
மந்தி
மூடு
கடமை
என அழைக்கப்பெறும். இவற்றுள்ளும் ஒரே இனத்திற்கு வெவ்வேறு பெண்பால் பெயர்கள் உள்ளன.
பெண் விலங்கினங்கள் எவ்வெவ்வாறு அழைக்கப்பெற வேண்டும் எனப் பார்ப்போம்.
வரிசை எண்
உயிரிகள்
பெண்பால் பெயர்
1.
உழை, நாய், பன்றி, புல்வாய்
பிணை
2.
பன்றி, நாய், நரி
பாட்டி
3.
ஒட்டகம், குதிரை, கழுதை, மரை(மான்), சிங்கம்
பெட்டை
4.
பன்றி, புல்வாய், நாய்
பிணை
5.
எருமை, பசு, மரை
ஆ
6.
ஆ,எருமை,மரை
ஆன்
7.
கவரி, ஊகம்(கருங்குரங்கு)
பிடி
8.
மரை, பெற்றம், எருமை, நந்து, நீர்வாழ்வன
நாகு
9.
குரங்கு, ஊகம, முசு
மந்தி
10.
ஆடு
மூடு, கடமை
ஆண் பன்றி, பெண்பன்றி, ஆண் நாய், பெண் நாய், என்பன போன்று உயிரினங்கள் அனைத்தும் ஆண் அல்லது பெண் எனச் சேர்த்து அழைக்கப்பெறும். இவை போல் பெண் விலங்கினங்கள் அனைத்தும் பிணை மான் என்பது போன்று பிணை என்று சேர்த்தும்அழைக்கப் பெறும்.
ஆண் பெண் வேறுபாடின்றி விலங்கின் பிள்ளைகள் குருளை,
குட்டி,
பறழ்,
பிள்ளை,
மறி,
கன்று,
குழவி,
பார்ப்பு,
மகவு
என அழைக்கப் பெறும்.
வரிசை எண்
உயிரிகள்
பிள்ளைமைப் பெயர்
1.
புலி, முயல், பன்றி, நரி, நாய்
பறழ், குட்டி
2.
ஆடு, குதிரை, மான், அழுங்கு
மறி
3.
கலை, மான்,கழுதை, மரை, பசு, எருமை, கடமை, யானை, ஒட்டகம், கவரி, கராம்
கன்று
4.
குரங்கு போன்று மரக்கொம்புகளில் வாழ்வனவற்றின் பிள்ளைகள்
குழவி, மகவு, குட்டி, பிள்ளை, பறழ், பார்ப்பு,
5.
வெருகு, நரி, முயல்
பறழ், குட்டி
6.
தவழ்வன
பிள்ளை, பறப்பு, பறழ்
7.
யானை, கடமை,மரை, எருமை
குழவி
8.
மான்
குருளை, கன்று, குழவி, பிள்ளை
9.
முசு
குழவி
10.
சங்கேறு, குருளை
பிள்ளை
11.
பாக்கன்(பூனை), அணில்
பறழ், குட்டி
மரபியலும் அறிவியல்தான். அவ்வகையில் இலக்கண நூலாக மட்டும் அல்லாமல், வாழ்வியல் அறிவியல் நூலாகவும் உள்ள தொல்காப்பியத்தில் ஆசிரியர் தொல்காப்பியர், இவை பற்றி நன்கு விளக்கி உள்ளார். எடுத்துக் காட்டாக ஒரு நூற்பாவைப் பார்ப்போம்.
தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில்தான் மேலே பட்டியல்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுடன் இவற்றையும் சேர்த்துப்படித்துப் பார்த்தால் , இலக்கண நூல் உணர்த்தும் அறிவியலே சிறந்ததாக இருக்கும் பொழுது உரிய அறிவியல் நூல்களைப் படித்திராமல் இத்தகைய அறிவு வளம் வளர்ந்திருக்காது என நன்கு புரியும்.
மிகச்சிறந்தஅறிவு வளப்பரப்பு உடைய தமிழறிவியலில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் முயன்று செம்மையாக்குவதையே நம் கடமையாகக் கொள்வோம்! அறிவியல் துறைகள் அனைத்திலும் தமிழை வளர்ப்போம்!