புதன், 4 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 4 - இளமையின் தேவை: துறவா? துய்ப்பு வெறியா?

 அகரமுதல







(தோழர் தியாகு எழுதுகிறார் 3 தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 4

இளமையின் தேவை: துறவா? துய்ப்பு வெறியா?  

இளையோரிடம் வளர்ந்து வரும் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடும்,  பாலியல் விடுமை ஆர்வமும் குறித்து கிளாரா செட்கினுடன் உரையாடும் மா இலெனின் இந்தப் போக்குகளை மார்க்குசிய நோக்கில் குற்றாய்வு செய்யக் கண்டோம்.

‘இலெனினுக்கு வயதாகி விட்டது, அதனால்தான் இப்படிச் சிந்திக்கிறார்’ என்று கிளாரா எண்ணி விட மாட்டார் என்பதை இலெனின் அறிந்தவரே என்றாலும் “நான் வாழ்க்கையை வெறுத்து விட்ட துறவி அல்ல” என்று அறிவித்துக் கொள்கிறார். இளம் வயதினரின் நலனிலும் குமுக நலனிலும் புரட்சியின் நலனிலும் அக்கறை கொண்டு விளக்குகிறார்:

“தோழரே, கேளுங்கள்! குறிப்பாகச் சொன்னால் இளம் வயதினருக்கு வாழ்க்கையின் மகிழ்ச்சியும், ஆற்றலும் தேவை. நலம்பயக்கும் விளையாட்டு, நீச்சல், ஓட்டம், நடை… ஒவ்வொரு வகை உடற்பயிற்சியும் தேவை. பன்முக அறிவுத் துடிப்பு தேவை, கற்றல், படித்தல், ஆராய்தல், இயன்ற வரை பொதுவாக இருக்க வேண்டும். அது பாலியல் சிக்கல்கள் குறித்தும், “முழு அளவுக்கு வாழ்ந்து பார்ப்பது” என்பார்களே அது குறித்தும் நிலைபேறுடைய கோட்பாடுகளையும் உரையாடல்களையும் இளையோர்க்கு வழங்கும். நலமிகு உடல்கள்! நலமிகு உள்ளங்கள்! பிக்குவாகவும் இருக்கத் தேவையில்லை இயான் துவானாகவும்(John Duane) இருக்கத் தேவையில்லை. இரண்டுக்கும் இடையில் செருமானிய பிலித்தியன்களின் போக்கும் தேவையில்லை.” 

பிக்கு என்றால் புரிகிறது. துறவியாக இருக்க வேண்டியதில்லை என்கிறார். தான் இயூவான்(Don Juan) என்பது பெண் வேட்டைக்கான இசுபானியத் தொன்மம். தீராத விளையாட்டுப் பிள்ளை! ‘பிளேபாய்’! [பிலித்தியர்கள் என்ற சொல்லை இலெனின் எதிர்மறைக் குறிப்பாக ஆள்வது இங்கே மட்டுமன்று. விவிலியத்தில் பாலத்தீனர்களை இப்படிக் குறிப்பதாகத் தெரிகிறது. அவர்கள் ஒருபுறம் இன்ப நாட்டம் கொண்டவர்களாகவும் மறுபுறம் அறிவுக்கூர்மை அற்றவர்களாகவும் இருந்ததாக ஒரு கருத்து நிலவிற்று. இனக் காழ்ப்பிப்னால் எழுந்த தப்பெண்ணமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களைக் குறிக்கும் சொல்லாக இது ஐரோப்பிய மொழிகளில் நுழைந்து விட்டது. இக்காலத்தில் இந்தச் சொல்லை யாரும் இவ்வாறு ஆள்வதில்லை. ஆனால் பழைய இலக்கியத்தில் இச்சொல் வரும் போதெல்லாம் மொழி பெயர்ப்பாளர்களுக்குத் தலைவலிதான்! ஒருசிலர் பிலித்தியர்கள் என்பதை அற்பவாதிகள் என்று தமிழாக்கம் செய்வதுண்டு. மரமண்டைகள் என்றும் சொல்லலாம். நான் பிலித்தியர்கள் என்றே சொல்லி விடுகிறேன். இப்போது வழக்கொழிந்து விட்டது என்பதால் பாலத்தீனர்கள் யாரும் இந்தச் சொல்லாட்சிக்கு மறுப்புச் சொல்லவில்லை எனத் தோன்றுகிறது.] 

கிளாராவிடம் எதிர்மறை எடுத்துக்காட்டாக இளம் தோழர் ஒருவரை (பெயர் குறிப்பிடாமல்) இலெனின் சுட்டுகின்றார்:

“அந்த இளம் தோழனை ____ உங்களுக்குத் தெரியும் அல்லவா? அருமையான இளைஞன்! படுசுட்டியான திறமைசாலி! ஆனால் அவனால் நன்மை ஏதும் விளையப் போவதில்லை என்பது என் அச்சம். இன்று ஒரு காதல், நாளை ஒரு காதல் என்று மாற்றிக் கொண்டே செல்கிறான். இஃது அரசியல் போராட்டத்துக்கு சரிவராது. புரட்சிக்குச் சரிவராது.”

பெண்களைப் பற்றியும் பேசுகிறார்:

“சொந்த முறையிலான காதல் நாட்டங்களை அரசியலோடு குழப்பிக் கொள்ளும் பெண்களை நம்பி நிற்க முடியுமா? போராட்டத்தில் உறுதியாகத் தாக்குப் பிடிப்பார்களா? என்னால் உறுதியளிக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணையும் துரத்திக் கொண்டும், ஒவ்வொரு  பெண்ணிடமும் சிக்கிக் கொண்டும் தத்தளிக்கும் ஆண்களும் கூட இப்படித்தான்! இல்லை, இல்லை, புரட்சிக்கு இந்தப் போக்கு ஒத்துவராது.”

இதைச் சொல்லி விட்டு இலெனின் துள்ளி எழுந்தார், மேசையை ஓங்கித் தட்டினார், சிறிது நேரம் அறையை அளப்பது போல் நடந்தார். புரட்சிக்கு என்ன தேவை? யார் தேவை? என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லத் தொடங்கினார். கிளாரா அந்தக் காட்சியையும் சொற்களையும் நினைவுக் குறிப்புகளாகப் பதிகிறார்.

(நாளை பார்ப்போம்)

தரவு: தியாகுவின் தாழி மடல் 4

செவ்வாய், 3 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 3-காமத்தின் உடலியலும் காதலின் குமுகியலும்

 அகரமுதல





(தோழர் தியாகு எழுதுகிறார் 2 தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 3

காமத்தின் உடலியலும் காதலின் குமுகியலும்

சில ஆண்டுகள் முன்னதாகச் சூனியர் விகடனில் ‘காதல் படிக்கட்டுகள்’ என்ற கட்டுரைத் தொடர் வெளிவந்தது. காதலைச் சிறப்பித்தும் அவரவர் காதல் பட்டறிவைச் சொல்லியும் எழுத்தாளர்கள் / கலைஞர்கள் / பாவலர்கள் / அரசியல் தலைவர்கள் எழுதினார்கள். குமுக நோக்கில் காதல் என்பதை மனத்திற்கொண்டு நானும் எழுதியிருந்தேன். இது காதல் பற்றிய நல்லதொரு தொகுப்பு. இது பல்வேறு காதல் பார்வைகளின் பூங்கொத்து.

இந்தப் பார்வைகளில் ஒன்று: காதல் என்பதெல்லாம் வெறும் சுரப்பு நீர்களின் ஆட்டமே தவிர வேறில்லை என்பதாக இருந்தது. இதுதான் காதல் பற்றிய ‘பகுத்தறிவுக் கொள்கை’ என்ற கருத்து சிலருக்குண்டு. இதன் பொருள்: காதல் வேட்கை என்பது வெறும் காம வேட்கையே தவிர வேறல்லவாம்! இந்த நோக்கில் காதல் விடுமையும் பாலியல் விடுமையும் ஒன்றுதானாம்!  

பாலியல் விடுமையும் காதல் விடுமையும் ஒன்றல்ல; காதல் விடுமை குமுக நலனுக்குகந்தது என்று மார்க்குசியம் போற்றுகிறது. காதலினால் இன்பம் உண்டு, காதலிப்போர்க்கு மட்டுமல்ல, அவர்கள் வாழும் குமுகத்துக்கே இன்பமும் நன்மையும் உண்டு. நம் காலத்தில் சாதியொழிப்பில் காதலுக்குள்ள பங்கினைப் போற்றுகின்றோம்.

அதே போது பாலியல் விடுமையைக் குமுகத்துக்குப் பகை (சமூக விரோதம்) என்று மா இலெனின் சாடக் கண்டோம்.

பாலியல் விருப்பமும் வேட்கையும் இயற்கை சார்ந்தவை. குமுக அமைப்புகளைப் பொறுத்தவை அல்ல. ஆனால் இயற்கையிலிருந்து எழும் பாலியல் வேட்கை குமுகத் தன்மையால் செம்மையுறும் போதுதான் காதல் என்ற உயர்நிலை அடைகிறது. இதைத்தான் கிளரா செட்கினிடம் மா இலெனின் எடுத்துரைக்கிறார்.

இரண்டாவதாகப், பண்பாட்டு வாழ்வில் காதலுக்குரிய தனியிடத்தை மறுத்து அதனைப் பொருளியல் நலன்களின் வெளிப்பாடாகக் கருதும் கொச்சையான வகுப்புப் பார்வையும் (வருக்கப் பார்வை) மார்க்குசியத்தின் பெயரால் கூத்தடிக்கிறது.

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை, வருக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்று தோழர் மாவோ கூறியதாகத் திருமண அழைப்பிதழிலேயே அச்சிட்டுத் தங்கள் மனத்தில் பட்டதையெல்லாம் மாவோ தலையில் கட்டும் போக்கும் உள்ளது. அவர் எங்கே எப்போது சொன்னார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்காது. முதலாண்மை அமைப்பில் எல்லா உறவுகளும் காசுபண உறவுகளாகச் சீரழிந்திருப்பது மெய். ஆனால் அதை மறுத்து வெல்வதுதான் காதல்நெறி. சாதிய அமைப்பில் சாதியை மறுக்கும் காதல் திருமணங்கள் போல், முதலாண்மை அமைப்பிலும் முதலாண்மை அமைப்பை மறுக்கும் காதல் திருமணங்களுக்கு உறுதியான இடமுண்டு.

சாதியமைப்பில் சாதித் திருமணங்களும் முதலாண்மை அமைப்பில் முதலாண்மைத் திருமணங்களும் தவிர்க்கவியலாதவை என்று சொல்வதற்கு மார்க்குசியம், பகுத்தறிவு, முற்போக்கு எல்லாம் எதற்கு?

தாகம் தணிக்கத் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும். பாலியல் வேட்கையும் தணிக்கப்படத்தான் வேண்டும். ஆனால் இதற்குக் குமுக வரையறைகள் உண்டு, கடைப்பிடிக்க வேண்டிய விழுமியங்கள் உண்டு. நீர் அருந்துவதையே எடுத்துக் கொள்வோம். இயல்பான சூழலில் இயல்பான மாந்தர் எவரும் சாக்கடையில் படுத்துக் கொண்டு குட்டையில் தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீரை அள்ளிப் பருகுவதுண்டா? (நம் கழக(டாசுமாக்) குடிமக்களை மறந்து விடுங்கள்.) அல்லது பலரும் கவ்விக் குடித்து எச்சில் பட்டுப் பிசுபிசுக்கும் கோப்பையில் தண்ணீர் குடிப்பதுண்டா? இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டு உவமைக்குள் அடைபடாமல் இலெனின் சொல்கிறார்:

“குமுகக் கூறுதான் அனைத்திலும் முதன்மையானது. நீர் பருகுதல் அவரவர்க்கே உரியது. ஆனால் காதல் ஈருயிர்கள் தொடர்பான ஒன்று; இதிலிருந்து ஒரு மூன்றாவது உயிரும் பிறக்கிறது. இவ்வாறு குமுக அக்கறைக்குரியதாகிறது. குமுகாயத்தின் பால் ஒரு கடமையும் பிறக்கிறது.”

இல்வாழ்க்கை பண்பும் பயனும் உடைத்தாவது இணையரின் நலனுக்கும் குமுக நலனுக்கும் தேவை. குமுகக் கடமையும் குமுகப் பொறுப்பும் இல்லாமல் எப்படியும் யாரோடும் காமப்பசியைத் தணித்துக் கொள்வதற்கான பாலியல் விடுமையைக் காதல் விடுமையாக மார்க்குசியர் ஒப்பார். மா இலெனின் இந்தச் செய்தியை கிளாரா செட்கினிடம் சாற்றக் கேளுங்கள்:

“ஒரு பொதுமையனாக (கம்யூனிசுட்டாக) எனக்கு இந்தக் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாட்டிடம் எள்முனையளவும் பரிவு கிடையாது. ‘காதலில் மனநிறைவு’ என்ற நளினமான பெயர் சூடி வந்தாலும் அதனை ஏற்பதற்கில்லை. எப்படிப் பார்த்தாலும், இந்தக் காதல் விடுதலை புதியதும் அன்று, பொதுமையும் அன்று. உங்களுக்கு நினைவிருக்கும், மீப்புனைவு இலக்கியத்தில் இது ‘இதயத்தின் விடுதலை’ என்று போதனை செய்யப்பட்டது. முதலாண்மை நடைமுறையில் தோல் விடுதலை ஆகி விட்டது. இன்றைக் காட்டிலும் அந்தக் காலத்தில் அது கூடுதல் திறமையுடன் போதனை செய்யப்பட்டது. நடைமுறை எப்படி என்று என்னால் கணிக்க இயலாது. நான் எனது குற்றாய்வின் வழி துறவு போதனை செய்ய நினைக்கவில்லை. இல்லவே இல்லை. பொதுமை என்பது துறவைக் கூட்டி வராது. அது வாழ்க்கையின் மகிழ்வை, வாழ்க்கையின் வலுவைக் கூட்டி வரும். மனநிறைவான காதல் வாழ்வு அதற்குத் துணை செய்யும். ஆனால் பாலியல் செய்திகளில் இப்போது பரவலாகக் காணப்படும் மீத்துடிப்பானது வாழ்க்கைக்கு மகிழ்வும் வலிவும் தராமல், அவற்றைப் பறித்துக் கொள்ளவே செய்யும் என்பதே என் கருத்து. புரட்சிக் காலத்தில் இது மோசம், படுமோசம்.”

காதலைப் போற்றுவதில் தடையில்லை! காதலில் காமத்துக்குரிய இடத்தை அறிந்தேற்பதிலும் தடையில்லை. அதனைக் குமுகியலற்ற வெறும் உடலியல் தேவையாகக் கருதுவதுதான் கேடு! இளைஞர்களின் வாழ்க்கையில் எல்லா வகையிலும் மகிழ்வு நிறைந்திருக்க வேண்டும், பாலியல் வகையிலும் கூட! இலெனின் சொல்லி விட்டாரே, நாம் வாழ்க்கையை வெறுத்த துறவிகள் அல்லோம். ஆனால்…. நாளை பார்ப்போம்.

தரவு: தியாகுவின் தாழி மடல் 3

திங்கள், 2 ஜனவரி, 2023

உமர் (இரலி) புராணம் நூல் வெளியீட்டு விழா, எழும்பூர், சென்னை

 அகரமுதல


நாள் :

மார்கழி 21, 2053 / 05-01-2023, வியாழக்கிழமை

மாலை 5:00 மணி முதல் 9;00 மணி வரை

இடம் :

இரமதா ஓட்டல்,

எண் : 2அ, பொன்னியம்மன் கோயில் தெரு,

எழும்பூர், சென்னை – 600008

உமர் (இரலி) புராணம் நூல் வெளியீட்டு விழா

இருபத்தோராம் நூற்றாண்டில் 21 படலங்களுடன் வெளியாகும் இணையில்லாப் புராணம்

இசுலாமியத் தமிழ் இலக்கியச் சோலையில் சீறாப் புராண மரபில் மலர்ந்திருக்கிறது உமர் இரலி புராணம்

முதலாவது உதய காண்டம்

முத்தமிழ் ஞானி, அல் ஆரிஃபு பில்லாஃகு சங்கைக்குரிய சமாலிய்யா அசய்யித்து கலீல் அவ்ன் அல் அசனிய்யுல் ஃகாசுமிய் மௌலானா  (சே.எசு.கே.ஏ.ஏ.எச்சு. மௌலானா) அவர்களின்  கைவண்ணத்தில் 21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற இசுலாமியத் தமிழ்க் காவியம்.

அண்ணல் நபிகளாரின் அன்புத் தோழர், இசுலாமியப் பேரரசின்  இரண்டாவது கலீபா உமர் இபுனு கத்தாப்பு இரலியல்லாஃகு அன்கு அவர்களின் அற்புத வரலாற்றின் முதற் பாகம் செந்தமிழ்ப் புராணமாக மலர்ந்திருக்கிறது.

மூன்று பெரிய காண்டங்களாக அமையப் பெற்றுள்ள இப்புராணத்தின் முதலாவது உதய காண்டம் தற்போது உலகத் தமிழ் இலக்கிய வானில் மங்காச் சுடர்விட்டு ஒளிவிடத் துவங்கியுள்ளது ,  எல்லாப் புகழும் ஏக இறைக்கே உரித்தாகட்டும்.

முதலாவது உதய காண்டம்  21 படலங்களையும் 682 பாடல்களையும் (செய்யுள்களையும்) உள்ளடக்கியது,  அனைத்துச் செய்யுள்களுக்கும்  கொண்டுகூட்டு,  பொருள்,  குறிப்பு என பூரணமான விளக்கத்துடன் வெளியாகியுள்ளது.

தலைமை

கலைமாமணி, முனைவர், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மசுதான் அவர்கள்

சிறுபான்மையினர் நலன் – வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை.

உயர்திரு சா.பீட்டர் அல்போன்சு

தலைவர், தமிழ்நாடு மாநிலச் சிறுபான்மையினர் ஆணையம்.

முனீருல் மில்லத்து பேராசிரியர் காதர் முகைதீன்

தேசியத் தலைவர், இந்திய யூனியன் முசுலிம் லீக்கு

குறிப்பு: நூல்  வெளியீட்டு விழா அழைப்பிதழ்  நூலாசிரியர் விவரங்கள் இத்துடன் தரப்பட்டுள்ளன.












 



தோழர் தியாகு எழுதுகிறார் 2

 அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 1 தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 2

காதல் விடுமையா? பாலியல் விடுமையா?

கிளாரா செட்கினுடன் பாலியல் சிக்கல்கள் குறித்து உரையாடுகிறார் மா இலெனின். இந்த உரையாடலின் போக்கில்தான் “கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு” எனும் பாலியல் விடுமைக் கொள்கை பற்றிப் பேசுகிறார்.

இளைஞர்கள் பலரும் தாங்கள் நம்பும் பாலியல் விடுமைப் போக்குதான் புரட்சியமானது என்று நம்புகின்றனர். இதுதான் பொதுமைத் தனமானது (கம்யூனிசுட்டுகளுக்குரியது) என்றும் புரிந்து கொள்கின்றனர். இலெனின் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. எம்மைப் போன்ற  [அல்லது நம்மைப் போன்ற?] வயதானவர்களை இது ஈர்க்கவில்லை என்று சொல்லும் போது இலெனினுக்கு 50 வயதிருக்கலாம். கிளாராவுக்குக் கிட்டத்தட்ட 63. இலெனின் எச்சரிக்கையாகச் சொல்கிறார்:

“அடியேன் ஒன்றும் வாழ்க்கையை வெறுத்து விட்ட துறவி அல்லேன். ஆனால் இந்த இளைஞர்களின் — சிலநேரம் முதியவர்களின் — ‘புதிய பாலியல் வாழ்வு’ எனப்படுவது முழுக்க முழுக்க முதலாண்மைத்தனம் என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது, இது முதலாண்மைய விலைமாதர் விடுதிகளின் நீட்சிதான் எனத் தோன்றுகிறது. இதற்கும் பொதுமையராகிய நாம் புரிந்து கொண்டுள்ள காதல் விடுமைக்கும் பொதுவானது ஒன்றுமில்லை.”

காதல் விடுமை வேறு, பாலியல் விடுமை வேறு. இதைத்தான் கிளாராவிடம் இலெனின் விளக்கிச் சொல்கிறார். பாலியல் விடுமையை வலியுறுத்தும் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாட்டைக் குறிப்பிட்டு “இது நம் இளையோரை வெறி கொள்ளச் செய்து, இளம் ஆண்பெண்களின் அழிவுக்குக் காரணமாகியுள்ளது என்று வருத்தப்படுகின்றார். காதல் விடுமைக்கு மாறான பாலியல் விடுமைக் குளறுபடிக்குப் பூசப்படும்  மார்க்குசிய வண்ணப் பூச்சை இலெனின் உரித்தெறிகின்றார்.

இது என்ன வகையான மார்க்குசியம்? குமுகத்தின் [சமூகத்தின்] கருத்தியல் மேல்கட்டுமானத்தில் ஏற்படும் நிகழ்வுகள், மாற்றங்கள் அனைத்துக்கும் பொருளியல் அடிப்படையைக் காரணங்காட்டும் இவ்வகையான ‘மார்க்குசியம்’ காட்டுவது போல் இந்தச் சிக்கல் அவ்வளவு எளிமையானதன்று. மெய்யியல் அறிஞர் பிரெடெரிக்கு எங்கெல்சு நெடுங்காலமுன்பே வரலாற்றுப் பொருண்மியம் [‘வரலாற்றுப் பொருள்முதல்வாதம்’] தொடர்பாக இந்த உண்மையைச் சுட்டிக்காட்டினார் என்று இலெனின் நினைவுபடுத்துகிறார்.

“இந்தக் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு மார்க்குசியத்துக்கு அறவே புறம்பானது, மேலும் குமுகப் பகையான [சமூக விரோதமான] ஒன்று பாலியல் வாழ்வில் கருத்தில் கொள்ள வேண்டியது இயற்கை மட்டுமன்று. பண்பாட்டுத் தனித்தன்மைகளும்தாம். அவை உயர்வானவையா, கீழானவையா என்பதையும் கருதிப் பார்க்க வேண்டும்.” என்கிறார் மா இலெனின்.

பொதுவான பாலியல் வேட்கை தனியொருவரின் பாலியல் காதலாக வளர்ந்து செம்மையுறுவது எவ்வளவு முகன்மையானது என்பதை பிரெடெரிக்கு எங்கெல்சு குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற புகழார்ந்த நூலில் எடுத்தியம்பினார். எங்கெல்சின் இந்த விளக்கத்தின் அடிப்படையில் பாலியல் விடுமைப் போக்கை –– கோப்பைத் தண்ணீர்க் கோட்பாட்டை —  இலெனின் குற்றாய்வு செய்வதை நாளை பார்ப்போம்.

இப்போதைக்கு ஒன்று: திருக்குறளில் அறம், பொருள் போலவே காமம் அல்லது இன்பத்துக்கும் நம் திருவள்ளுவப் பெருந்தகை தந்த இடத்தை எண்ணிப் பார்க்கிறேன். அவருக்குக் காவி உடுத்திக் காட்சிப்படுத்தும் கயவர்களின் கொலை வெறியை என்னென்பீர்! பாலியல் வேட்கையையும் அவ்வேட்கையின் நிறைவையும் அவர் போல் சுவைமிளிர வண்ணிக்க [வர்ணிக்க அல்ல, வண்ணிக்க] எவருளர்? குறளில் மிகவும் வலியுறுத்தப்படுவது பாலியல் விடுமையா? காதல் விடுமையா? என்பதற்கு ஒரு பட்டிமண்டபம் தேவையா?

தமிழ் என்ற சொல்லே இல்லாமல் தமிழ்மக்களின் அறநெறி வகுத்தது போலவே, காதல் என்ற சொல்லே இல்லாமல் காதல் நெறி போற்றியவர் நம் வள்ளுவப்பெருந்தகை.

தம் பிள்ளைகளின் காதலை ஏற்க மறுக்கும் தமிழாசிரியர் இருப்பின் அவரிடமிருந்து திருக்குறளைப் பறித்து விடுங்கள்.

தரவு: தியாகுவின் தாழி மடல் 2

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 1

 அகரமுதல






தோழர் தியாகு எழுதுகிறார் – முன்னுரை

இனிய அன்பர்களே!

தாழி மடலுக்கு நான் எந்த வரம்பும் வைத்துக் கொள்ளவில்லை. இந்த ஊடகம் இடமளிக்கும் வரை உள்ளடக்கத்தை விரிவாக்கிக் கொள்ள முடியும்.

தாழி மடலில் தன்வரலாறு, பிறர் வரலாறு, தன்னாட்டு வரலாறு. பன்னாட்டு வரலாறு, பொருளியல், அரசியல், மெய்யியல், கலை இலக்கியம், ஐயந்தெளித்தல், ஐயந்தெளிதல் இன்னும் என்னவெல்லாம் முடியுமோ இடம்பெறச் செய்வோம். சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள், விலங்கிற்குள் மனிதர்கள் … இவற்றின் தொடர்ச்சியாக எழுத வேண்டியவை ஏராளம். சொல்லடித்தல் என்று நான் குறிப்பிடும் புதிய சொற்களின் உருவாக்கம். செவ்வகராதி படைக்க வேண்டும். அரைகுறையாக நிற்கும் தூய தமிழாக்க முயற்சிகள் தொடர வேண்டும். பழைய, புதிய நூல்களின் அறிமுகம். எழுதுபொருளுக்கு எல்லை என்பதே இல்லை! நீங்களும் முன்மொழியலாம். எழுதலாம்.

தாழியில் வெண்ணெய்த் தாழியும் உண்டு. முதுமக்கள் தாழியும் உண்டு. எதுவானாலும் உடையும் வரைதான் அல்லது புதையும் வரைதான். விரைந்திடு தோழா! என்பது எனக்கான என் கட்டளை!

தோழர் தியாகு எழுதுகிறார் 1

கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு

(இப்படி ஒரு பாலியல் கொள்கை?)

பொதுமைக் குமுகத்தில் பாலியல் விருப்பங்களையும் காதலையும் நிறைவு செய்து கொள்வது எப்படி இருக்கும்? அது சிக்கலற்றதாக இருக்கும்; எளிமையானதாக இருக்கும். கோப்பைத் தண்ணீர் அருந்துவது போல் அவ்வளவு எளிமையானதாக இருக்கும். முகன்மையற்றதாக (‘சர்வ சாதாரணமானதாக’) இருக்கும். அலட்டிக் கொள்ள வேண்டியிராத ஒன்றாக இருக்கும். பாலியல் தொடர்பான இந்தக் கொள்கை — இந்தக் கோட்பாடு — கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு (glass of water theory) எனப்படுகிறது.

பொதுமைக் குமுகத்தில் இதுதான் பாலுறவுக் கொள்கை என்றால், பொதுமைக் குமுகத்தைக் குறிக்கோளாகக் கொண்டு உழைத்திடும் பொதுமையரின் பாலுறவுக் கொள்கையும் இப்படி இருப்பதுதானே இயல்பு? பாலியல் விடுமைக்காரர்கள் இப்படித்தான் கேட்கின்றார்கள். பாலுறவு தொடர்பான இந்தப் போக்கு பொதுமைக் கொள்கை என்றும் புரட்சிக் கொள்கை என்றும் போற்றப்படும் நிலை ஏற்பட்டால் என்னாகும்?

பாலியல் விடுமை (sexual freedom) என்ற பெயரால் இந்தக் கொள்கையை முன்னிறுத்துவோர் உண்டு. இப்படி முன்னிறுத்தும் அனைவரும் சொந்த வாழ்வில் பாலியல் விடுமையைக் கடைப்பிடிக்கிறவர்களாக இருப்பார்களோ என்று ஐயுற வேண்டா. ‘கற்புநிலை’யில் கண்டிப்பாக இருந்து கொண்டே நேர்மையாகவும் உண்மையாகவும் பாலியல் விடுமையை ஒரு கொள்கையாக வலியுறுத்துகிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

‘பாலியல் விடுமை’ குறித்தும் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு’ குறித்தும் உருசியப் புரட்சியின் தலைவர் மா இலெனின் பேசியுள்ளார். நெருங்கிய நண்பரும் அணுக்கத் தோழருமாகிய கிளாரா செட்கினுடன் உரையாடும் போது இலெனின் கூறிய பல செய்திகளையும் அவரைப் பற்றிய நினைவுக் குறிப்புகளில் கிளாரா சுவைபடப் பதிவு செய்கிறார். நினைவுக் குறிப்புகளின் இந்தப் பகுதிக்கு அவர் கொடுத்திருக்கும் தலைப்பு: ‘பெண்கள், மணவாழ்வு, பாலியல்’ என்பதாகும். இலெனின் சொல்வதைக் கேட்போம்:

புரட்சி நடந்து முடிந்து விட்டது. பாலுறவுச் சிக்கல்கள் தொடர்பில் ‘ஒழுக்கம் பற்றிய முதலாண்மைப் பார்வைகளை’த் திருத்தியமைக்கும் துடிப்பு நிறைய இளைஞர்களிடம் காணப்படுகிறது. போரும் புரட்சியும் நடந்த நிலைமைகளில் பழைய கருத்தியல் விழுமியங்கள் மறைந்து போயின, அல்லது நம்மைக் கட்டிப் போடும் படியான ஆற்றலை இழந்து விட்டன. போராட்டப் போக்கில் புதிய விழுமியங்கள் மெல்ல மெல்ல உருப்பெற்று வருகின்றன. மாந்தர்களிடையிலான –– ஆணுக்கும் பெண்ணுக்குமான —உறவுகளில் உணர்ச்சிகளும் எண்ணங்களும் புரட்சிய மாற்றங்கள் அடைந்து வருகின்றன. தனியொருவரின் உரிமைகளுக்கும் முழுமையின் உரிமைகளுக்கும் இடையே — தனியொருவர்களின் கடமைகளில் — புதிய எல்லைகள் வரையப்பெறுகின்றன. இது தொடர்பில் ஒரு குழப்பநிலை காணப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் சட்டென்று நடந்து விடாது. இது பையப்பைய நடந்தேறுகின்ற ஒன்று. இது வலிநிறைந்த செயல்வழி.

குறிப்பாகச் சொன்னால் பாலியல் உறவுமுறைகள், மணவாழ்வு, இல்லறம் (குடும்பம்) — இவற்றில்தான் மாற்றத்தின் வலி கூடுதலாக உள்ளது.

முதலாண்மை+ (முதலாளித்துவ) மணவாழ்வின் சீர்கேடு பற்றி இலெனின் குறிப்பிடுவது இன்றைக்கும் நமக்குப் பொருத்தப்பாடு கொண்டுள்ளது. நமக்குள்ள சாதி மதச் சிக்கல் இந்தச் சீர்கேட்டை இன்னுங்கூட மோசமாக்கி விடுகிறது.

சீர்கேடு! ஊழல்! குப்பை! — இலெனின் சீறுகிறார்; முதலாண்மை (முதலாளித்துவ) மணவாழ்வை இப்படித்தான் சாடுகிறார். ஆணுக்கு விடுமை! பெண்ணுக்கு அடிமைத்தனம்! பாலியல் ஒழுக்கம், பாலுறவுகள் குறித்து வஞ்சகப் பொய்மை! இதைப் பார்க்கும் போது துடிப்பான நல்ல உள்ளம் கொண்டோர், உயர்வானவர்கள் ஆழ்ந்த அருவருப்பு அடைவார்கள்.

முதலாண்மை மணவாழ்வின் கட்டுத்தளையும் முதலாண்மை அரசுகளின் இல்லறச் (குடும்ப) சட்டங்களும் இந்தக் கேடுகளையும் பூசல்களையும் கடுமையாக்கி விடுகின்றன. புனிதமான தனிச் சொத்துடைமையின் வலிமை அப்படி! காசுக்கு விலைபோவதை, கெட்டழிவதை, இழிசெயல் செய்வதைப் புனிதமாக்கி விடுகின்றன. முதலாண்மைக் குமுகத்துக்கே உரிய வாடிக்கையான பொய்மை வேறு.

இந்த அழுகலுக்கும் போலித்தனத்துக்கும் எதிர்ப்பு தலைதூக்கி வருகிறது. தனியொருவரின் உணர்ச்சிகளில் விரைவான மாற்றம் ஏற்பட்டு வருகிறது. வலிமைபொருந்திய பேரரசுகள் ஆட்டம் கண்டு, பழைய ஆட்சிமுறைகள் முறிவடைந்து வரும் நேரத்தில், ஒரு குமுக உலகம் முழுவதும் மறைந்து வரும் நேரத்தில், இன்பம் துய்க்கும் விருப்பமும் வேட்கையும் கட்டுக்கடங்கா வேகம் பெறுவது எளிதாகிறது. பாட்டாளியப் புரட்சிக்கு இணையாகப் பாலுறவிலும் மணவுறவிலும் ஒரு புரட்சி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. சிக்கல்கள் பின்னிக் கிடக்கின்றன. இதனால் இளைஞர்கள், இளம் பெண்களின் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள தவிப்பு எளிதில் புரிந்து கொள்ளத்தக்கதே என்கிறார் இலெனின். இக்காலத்தில் (அவர் காலத்திலும் நம் காலத்திலும்) இளையோர்க்குப் பாலியல் மனக்குறைகள் உள்ளன. அகவைக்கே உரிய வேகத் துடிப்புடன் அவர்கள் கலகம் செய்வதைப் புரிந்து கொள்ளலாம் என்கிறார்.

இந்த இளைஞர்களிடம் போய், முற்றுந்துறந்த முனிவர்களாக இருக்கச் சொல்வது, அழுக்கடைந்த முதலாண்மை ஒழுக்கத்தை அறிவுறுத்துவது…. இதை விடப் பெரிய பொய்மை வேறில்லை என்கிறார் இலெனின். பாலுணர்வு உடல்வகையில் வெளிப்படும் அகவையில் அதுவே மனத்தின் முதற்கவலை ஆகி விடுமானால் பெரிதும் கவனத்துக்குரியது.

அப்படியானால், என்ன சொல்ல வருகிறார் இலெனின்? பாலியல் விடுமைதான் தீர்வு என்கிறாரா? ‘கோப்பைத் தண்ணீர்க் கொள்கை’யைப் பரிந்துரைக்கிறாரா? நாளை சொல்கிறேன்.

+முதலாளித்துவத்திற்கு முதலிய என்னும் சொல்லைத் தோழர் தியாகு கையாள்கிறார். பொருட்குழப்பம் வரலாம் என்பதால் அவருடன் கலந்துபேசி முதலாண்மை எனக் குறித்துள்ளேன்.

தரவு: தியாகுவின் தாழி மடல் 1

சனி, 31 டிசம்பர், 2022

நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 





நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

நானிலம் சிறக்கவே

நன்னெறி காணவே

நலம் திகழவே

வளம் நிறையவே

அல்லன அழியவே

நல்லன பெருகவே

நல்லோர் உயரவே

இல்லார்க்கும் வல்லார்க்கும்

நல்லார்க்கும் பொல்லார்க்கும்

எல்லார்க்கும் வாழ்த்துகள்

நடைமுறை யாண்டில்

என்றென்றும் வாழிய!

– இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல