திங்கள், 17 ஏப்ரல், 2017

செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு! அயல்நாட்டுத்தமிழறிஞர்களுக்கு அவமதிப்பு!





செம்மொழித்தமிழுக்கான 2014-2015,  2015-2016 ஆம் ஆண்டுகளுக்குரிய குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவை வருமாறு :-

2014-2015

தொல்காப்பியர் விருது – முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
இளம் அறிஞர் விருதுகள்
  1. முனைவர் அ.சதீசு
  2. முனைவர் செ.முத்துச்செல்வன்
  3. முனைவர் ப.திருஞானசம்பந்தம்
  4.  முனைவர்  மா.வசந்தகுமாரி
  5. முனைவர் கோ.சதீசு

2015- 2016

தொல்காப்பியர் விருது – முனைவர்  இரா.கலைக்கோவன்
இளம் அறிஞர் விருதுகள்
  1. முனைவர் மு.வனிதா
  2. முனைவர் வெ.பிரகாசு
  3. முனைவர் சிரீ. பிரேம்குமார்
  4. முனைவர் க.பாலாசி
  5. முனைவர்  மு.முனீசு மூர்த்தி
வழக்கம்போல் இவ்வாண்டுகளிலும் அயல்நாட்டுத் தமிழறிஞர்களுக்கான குறள்பீட விருதுகள் அறிவிக்கப்படவில்லை.  இந்திய அரசின் கண்களுக்கு அயலகத் தமிழறிஞர்கள் ஒருவர்கூடப்  படவில்லை போலும்!
இது கண்டிக்கத்தக்கது!
  ஆர்வமாகச் செயல்படுவதாகக் கூறப்படும் இப்போதைய இயக்குநர் திரு அ.பழனிவேல் (பதிவாளர், தேசியத் தொழில்நுட்பக்கழகம், திருச்சிராப்பள்ளி),  பதிவளார்  முனைவர் முகிலை இராசபாண்டியன் ஆகியோர் உரிய  பரிந்துரைகளை அனுப்பிஅயலகத்தமிழறிஞர்களுக்கான குறள்பீட விருதுகளை வழங்க நடிவக்கை எடுக்க வேண்டும்.
விருதாளர்களுக்கு அகரமுதல இதழ் சார்பில் வாழ்த்துகிறோம். விருதாளர்கள் விருதுகளுக்குத் தகுதியானவர்கள் என மெய்ப்பிக்க எப்பொழுதும் செம்மையான நடையில் பேசவும் எழுதவும் வேண்டுகிறோம்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

16 ஆவது உலகத்தமிழிணைய மாநாடு – முழக்கம், இலச்சினைக்கானபோட்டிகள்




16 ஆவது உலகத்தமிழிணைய மாநாடு – முழக்கம், இலச்சினைக்கானபோட்டிகள்

அன்புடையீர்,
வணக்கம்.
16-ஆவது உலகத் தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மிகு

தொராண்டோ மாநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017

ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது.
இவ்வாண்டு கனடாவின் 150 ஆண்டுநிறைவும் ஆகும்.
 மாநாட்டின் கருத்து முழக்கங்கள் அல்லது உள்ளுறைத் தலைப்புகள்
ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning)என்பதும்
தமிழில் தரவு அறிவியல் (Data Science)என்பதும் ஆகும்.
 தமிழ்க்கணிமை ஆய்வுலகில்  இயற்கைமொழியியல் ஆய்வுகள் பெருகிவருகின்றன.  ஒளிவருடி எழுத்துணரி நுட்பம், எழுத்துரையிலிருந்து ஒலிவடிவப் பேச்சுரையாக்குவது, திராவிடமொழிகளுக்கிடையே இயந்திர மொழிபெயர்த்தல், மொழியியல் நோக்கில் மொழித்தொகுப்பியல்  (Corpus Linguistics) ஆய்வுபோன்ற பற்பல  துறைகளில்  நல் வளர்ச்சியைக் காண முடிகின்றது.  இவற்றில் இன்னும் பற்பல முன்னேற்றங்கள் அடைந்து கொண்டேயிருக்க வேண்டிய இக்காலத்திலேயே அடுத்தக்கட்ட  நுட்பியல்  வளர்ச்சியாக மலர்ந்து கொண்டிருக்கும்  ஆழக்கற்றல் (Deep Learning) என்னும் துறையிலும் தரவறிவியல் (Data Science) துறையிலும் கால்பதிக்க வேண்டியுள்ளது. செயற்கை அறிவுத்திறன் என்னும் துறையின் உட்துறையான இயந்திரக்கற்றலின் உட்துறையில் பெருவளர்ச்சியாக ஆழக்கற்றல் எழுந்துள்ளது.
  மகிழுந்துகளும் சுமையுந்துகளும் சாலைகளில் ஓட்டுநர் இல்லாமலே ஓடுவதற்கும், சதுரங்க விளையாட்டிலும் வெய்ச்சி(Go)என்னும் விளையாட்டிலும் உலகத்திலேயே தலைவல்லவரையே தோற்கடிக்கும் வல்லமையும் கொண்டுவளர்ந்து வருகின்றது.
 மாந்தனைப்போலவே இடம்சார்ந்து சூழல்சார்ந்து கற்று முடிவுகளுக்கு வரும் ஆழக்கற்றல் திறன்கள் வளர்ந்துவருகின்றன. தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு தமிழரைப் போலவே கேட்டு  விடையளிக்கவல்ல அல்லது செயலாற்றக்கூடிய கணியியந்திர நுட்பங்கள் வளரவிருக்கின்றன. ஆகவே இதைக் கருமுழக்கங்களுள் ஒன்றாகஇவ்வாண்டு கொண்டிருக்கின்றோம்.
பெருந்தரவறிவியலாலும் ஆழக்கற்றல் திறனாலும் வியப்பூட்டும் புதுத்தீர்வுகளும் அணுகுமுறைகளும்  கிட்டும்  என்பது தெளிவாகின்றது. ஒரு வியப்பூட்டும் அறிவியல் கிடுகிடுவென எழுகின்றது.
இவற்றைக்கருத்தில்கொண்டு
  1. மாநாட்டுக்கென ஓர் இலச்சினை
  2. மாநாட்டுப் பதாகையில் முழக்கம்
ஆகியவற்றுக்கான வடிவமைப்புகளை (Designs) சித்திரை 17 / ஏப்பிரல் 30 ஆம் நாளுக்குள் படைத்தளிக்க வேண்டுகின்றோம்.

  இப்போட்டியில் இவை இரண்டுக்கும் தனித்தனியான பரிசுகள்உண்டு. மாநாட்டில் அறிவித்து பரிசுகள் வழங்கப்பெறும். பரிசுத்தொகைகளை உத்தமம் நிறுவனம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

 உங்களது படைப்புகளை ed@infitt.org  மற்றும்  cpc2017@infitt.org ஆகிய இரண்டு மின்னஞ்சல்களுக்கு மட்டுமே அனுப்பிவைக்கவும். எங்களது முடிவுகளை வெளியிடும்வரை உங்களது படைப்புகளை வேறு எந்த மின்னஞ்சலுக்கோ குழுவுக்கோ அனுப்பக்கூடாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் உத்தமம் நிறுவனத்தின் முழுக்காப்புரிமைக்கு உட்பட்டதாகும் ஒப்புதலை படைப்பாளர்கள் கொடுக்கவேண்டியிருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இலச்சினைகள்
300 விரற்கிடைப்புள்ளி(300 DPI)யில் இருக்கவேண்டும்;
செபநீ (RGB), வாஈமக(CMYK ) அடிப்படையில்  தரப்படவேண்டும்.
-மாநாட்டுக்குழு

16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு

16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு

சிறந்த கட்டுரைகள் படைக்கும் மாணவர்களுக்கோ
இளம் ஆய்வாளர்களுக்கோ பயணப்படியாக

  கனடிய வெள்ளி 500 என நால்வருக்கு

சிறப்பு உதவித்தொகைகள் வழங்கப்படும்.
ஆய்வரங்கக் குழுவின் முடிவே இறுதியானது. 

இது தவிர சிறந்த கட்டுரைகளுக்கெனப் பல பரிசுகள் உள்ளன