writers லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
writers லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 நவம்பர், 2011

அசாமிய எழுத்தாளர் இந்திரா கோசுவாமி காலமானார்


அசாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி காலமானார்

First Published : 29 Nov 2011 09:12:15 AM IST


புதுதில்லி, நவ.29: புகழ்பெற்ற அசாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி (வயது 69) இன்று கௌஹாத்தியில் காலமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இவருடைய உடல்நிலை மோசமாக இருந்தது. ஆறு மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று காலை 7.45க்கு காலமானார்.  இவர் உல்ஃபா பயங்கரவாதிகளுடனான அரசுத் தரப்பு பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராகச் செயல்பட்டவர். ஞானபீட விருது பெற்ற எழுத்தாளரான இவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.பாஜக நாடாளுமன்றத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திரா கோஸ்வாமியின் மறைவு இலக்கிய உலகுக்கு மிகப் பெரும் இழப்பு என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதன், 21 செப்டம்பர், 2011

Gnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது

3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது

First Published : 21 Sep 2011 02:08:03 AM IST


அமர்காந்த், ஸ்ரீலால் சுக்லா, சந்திரசேகர் கம்பாரா
புதுதில்லி, செப். 20:புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர்களான அமர்காந்த், ஸ்ரீலால் சுக்லா ஆகியோர் 2009-ம் ஆண்டுக்கான, இலக்கியத்துக்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அதேநேரம், 2010-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதினை கன்னட இலக்கியவாதியான சந்திரசேகர் கம்பாரா பெறுகிறார். இதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. சிறந்த எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்றவருமான டாக்டர் சீதாகாந்த் மஹாபத்ரா தலைமையில் கூடிய தேர்வுக் குழு 45 மற்றும் 46வது ஞானபீடவிருதுக்குரியவர்களைத் தேர்வு செய்தது.  86 வயதாகும் அமர்காந்த் ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆவார். அவர் எழுதிய நாவலுக்கு 2007-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவரது பல சிறுகதைகள் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.  உத்தரப் பிரதேசத்தில் 1925-ல் பிறந்த சுக்லா, சாகித்ய அகாதெமி மற்றும் வியாஸ் சம்மான், பத்மபூஷன் விருதுகளை பெற்றவர். 74 வயதாகும் கம்பாரா சாகித்ய அகாதெமி, சங்கீத நாடக அகாதெமி விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

சனி, 12 பிப்ரவரி, 2011

P.M.says :Indian writers should shine international level? இந்திய மொழி எழுத்தாளர்கள பன்னாட்டு அளவில் ஒளிவிட வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங்

கேரளாவிற்கே சென்று ஞான பீட விருதுவழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் தலைமை அமைச்சர், தமிழாய்வாளர்களுக்கான செம்மொழி விருதுகளை வழங்காதிருப்பது ஏன்? வங்காளத்திற்கும் மலையாளத்திற்கும் செம்மொழித் தகுதி ஏற்கப்பட்டதாயும் விரைவில் அறிவிக்க இருப்பதாயும் அடுத்து அசாமி முதலான பிற மொழிகளுக்கும் அறிவிக்க இருப்பதாகவும் கூறுகின்றனர். செம்மொழிக்காலத்தைக் கி.மு.  என்று இல்லாமல்  ௧௫௦௦ ஆண்டு எனக் குறைத்த சதியால் இவ்வாறு அறிவிக்கப்படுகின்றன. நீதிமன்றத் தடைஇருக்கும் பொழுதே மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்வதன் காரணம், தமிழுக்கான செம்மொழி ஏற்பினைப் பொறுத்துக் கொள்ள  இயலாமைதான். இத்தகையோர் ஆட்சி நமக்குத் தேவையா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இந்திய மொழி எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங்

First Published : 12 Feb 2011 02:22:37 AM IST


திருவனந்தபுரம்,பிப்.11: இந்திய மொழி எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்தார்.கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை 2007-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கும விழா நடைபெற்றது. விழாவில் பிரபல மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குருப்புக்கு விருதை வழங்கி பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். விழாவில் அவர் மேலும் பேசியது: இந்திய மொழிகளின் இலக்கியங்கள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை. எனினும் இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியது ஏளாளம் உள்ளது. இலக்கியப் படைப்புத் திறனாளிகளை உருவாக்குவதிலும், ஊக்குவிப்பதிலும் நாம் இன்னும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும். ஒருகாலத்தில் சர்வதேச அளவில் இந்திய எழுத்தாளர்கள் பிரகாசிப்பது அபூர்வமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல.இந்தியாவில் உள்ள ஆங்கில எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளனர். இது பாராட்டுக்குரியது. இதைப்போல, இந்திய மொழிப் படைப்பாளிகளும் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பையும், தளத்தையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இலக்கியப் படைப்பாளிகளின் திறமையை அங்கீகரிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.இந்திய மொழிப் படைப்புகளின் தனிச்சிறப்பையும், மேன்மையையும் உலகத்தார் அறிய வேண்டுமானால் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். அதேபோல ஒரு இந்திய மொழியில் உள்ள படைப்புகளை மற்ற இந்திய மொழிகளுக்கும் மொழிப்பெயர்ப்பு செய்வது முக்கியம்.இதன் மூலம் ஒரு மொழி படைப்புகளின் சிறப்பை மற்றொரு மொழியினர் அறிந்து கொள்ள இயலும். இந்தப் பணியை சாகித்ய அகாதமி செய்து வருவது போற்றத்தக்கது. இப்போது ஞானபீட விருது பெற்றுள்ள கவிஞர் ஓ.என்.வி. குருப்பு மலையாளத்தில் சிறப்பான படைப்புகளை உருவாக்கியுள்ளார். அவரது படைப்புகளை மராத்தி, வங்க மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.மலையாளத்துக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்க வேண்டும்-அச்சுதானந்தன்: இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய கேரள முதல்வர் அச்சுதானந்தன், மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும் அவர் பேசியது: தென்னிந்திய மொழிகளில் மலையாளத்துக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால் செம்மொழி அந்தஸ்து கோரி ஏற்கெனவே பிரதமரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் பரிசீலித்து மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.கேரளத்தில் உள்ள மத்தியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் ஆங்கிலம், ஹிந்தியை மாணவர்கள் பயில்வது கட்டாயமாகவுள்ளது. ஆனால் மாநிலத்தின் தாய்மொழியான மலையாளத்தைப் பயில்வது கட்டாயமில்லை. இதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். இதில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார் அச்சுதானந்தன்.

திங்கள், 17 ஜனவரி, 2011

world Recognition for tamil writers: தமிழ் எழுத்தாளனுக்கு உலகளாவிய ஏற்பு கிடைக்க வேண்டும்: தினமணி ஆசிரியர் பேச்சு

தகுதியுள்ள நூலகர்களை அமர்த்த வேண்டும் என்றால் முன்னரே அமர்த்தப்பட்ட நூலகர்களை என்ன செய்வது?  எனவே, நூலகர்களிடமும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். அதற்காகப் பணிநேரத்தில் வெட்டிக் கதைகளைப்படிப்பவர்களாக  இருக்கக்கூடாது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மிழ் எழுத்தாளனுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்: தினமணி ஆசிரியர் பேச்சு

சென்னை, ஜன. 16: ""தமிழ்ப் படைப்புகளுக்கு இன்றும் உலகளாவிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது'' என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.  சென்னைப் புத்தகக் காட்சியையொட்டி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில், புத்தகக் காட்சி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உரை அரங்கில் "நோக்கும் திசையெல்லாம்' என்ற தலைப்பில் அவர் பேசியது:  தமிழகத்தில் நூலகங்களைப் பயன்படுத்தும் நல்ல வழக்கம் குக்கிராமங்களிலும்கூட இன்றளவும் தொடர்கிறது. அரசும் ஒவ்வோர் ஊராட்சியிலும் நூலகங்கள் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், நூலகங்களை அமைத்துவருகிறது. அந்த நூலகங்களுக்கு நல்ல படைப்புகள் வாங்கப்படுகிறதா என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. இருந்தாலும் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது பத்து இளைஞர்களாவது நூலகர்களையும் வாசக சாலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.  ஆனால், நம்முடைய நூலகங்களில் - குறிப்பாக கிராமப்புற நூலகங்களில் பணியமர்த்தப்படும் நூலகர்களின் திறன் எப்படி இருக்கிறது? இன்றைய கால சூழலுக்கும் பெருகிவரும் புத்தகங்களுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் அவர்கள் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்களா என்றால் இல்லை.  நூலகர் பணி என்பது வெறுமனே புத்தகங்களை எடுத்துக்கொடுக்கும் பணி அல்ல; அது புத்தகங்களுடன் வாசகர்கள் உறவாட உதவும் ஒரு கலை. எத்தனை எத்தனைத் துறைகள், எத்தனை எத்தனைப் படைப்பாளர்கள், எத்தனை எத்தனைப் புத்தகங்கள் வெளியாகின்றன? இவற்றைப் பற்றியெல்லாம் ஆழ்ந்த அறிவு இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் அடிப்படை அறிவாவது நூலகர்களுக்கு அளிக்கப்பட வேண்டாமா?  ஆகையால், நூலகங்களை அமைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அந்த நூலகங்கள்தோறும் தகுதி பெற்ற நூலகர்கள் அரசால் பணியமர்த்தப்பட வேண்டும்.  அடுத்து, இப்படிப்பட்ட புத்தகக் காட்சிகளைப் பார்க்கும்போது, மகாகவி பாரதி கண்ட கனவு நினைவுக்கு வருகிறது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்றார் பாரதி. உலகின் தலைசிறந்த படைப்புகள் எல்லாமே தமிழில் இப்போது மொழிபெயர்க்கப்படுகின்றன.  இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழில் இயற்றல் வேண்டும் என்பது பாரதியின் இன்னொரு கனவு. வெளிநாடுகளுக்கு இணையாக எல்லா துறைகள் சார்ந்தும் நம் மொழியிலும் ஏராளமான நூல்கள் வெளிவருகின்றன; ஏராளமான படைப்பாளிகள் உருவாகிவருகிறார்கள்.  ஆனால், பாரதி கண்ட இன்னொரு கனவு திறமான புலமையெனில் அதை அயல்நாட்டார் வணக்கம் செய்தல் வேண்டும் என்பது. அந்தக் கனவு மட்டும் நிறைவேறவில்லை. இதுவரை எந்தவொரு தமிழ்ப் படைப்புக்கும் உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே, ஏன்? நமது படைப்புகள் தரமற்றவையா? நமது படைப்பாளிகள் திறமையற்றவர்களா?  இன்று தமிழன் உலகின் எல்லா மூலையிலும் பரவிக் கிடக்கிறான். ஆனால் தமிழ் எழுத்தாளன் உலக அரங்கில் முறையான அறிமுகம் கிடைக்காமல் தவிக்கிறான். இதற்குக் காரணம் நாம் உலக எழுத்தாளர்களுடன் உறவு கொள்ளவும் அவர்கள் நமது எழுத்துக்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் வழியில்லாமல் இருப்பதுதான்.  இதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இதுபோன்ற பெரிய அளவிலான புத்தகக் காட்சிகளின்போது வெளிநாடுகளைச் சேர்ந்த, வெளிமாநிலங்களைச் சேர்ந்த படைப்பாளிகளை நாம் இங்கு அழைக்க வேண்டும். நம்முடைய படைப்பாளிகள் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் கலந்துரையாடவும் நம் படைப்பாளிகளைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ளவும் அது உதவும். நம் படைப்பாளிகளின் பெருமை நம்மைத் தாண்டிச் செல்லவும் அவர்கள் உலகளாவிய அங்கீகாரம் பெறவும் இது உதவும்.  மொழி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டங்கள்தோறும் இலக்கியச் சந்திப்புகள், விவாதங்கள், புத்தகம் தொடர்பான நிகழ்வுகளை நடத்தத் தக்க அரங்குகள் அமைக்கப்பட வேண்டும். அங்கே இலக்கிய நிகழ்ச்சிகளை குறைந்த கட்டணத்தில் நடத்த வழிவகை செய்ய வேண்டும். தமிழக அரசின் "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' முழக்கம் உறுதிசெய்யப்பட புத்தகங்கள் சார்ந்த இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை''.  சென்னைப் புத்தகக் காட்சிக்கு என்று நிரந்தரமான ஓர் இடத்தை அரசு ஒதுக்க வேண்டும்; தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  உரை அரங்குக்கு, மூத்த பதிப்பாளர் அருணோதயம் அருணன் தலைமை வகித்தார். பேச்சாளர் பாரதி பாஸ்கர், நூலகர் எம். முத்துசாமி ஆகியோர் பேசினர்.  முன்னதாக, பதிப்பாளர் மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்றார். நிறைவில், சுப. மெய்யப்பன் நன்றி கூறினார்.