viduthalai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
viduthalai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 டிசம்பர், 2011

viduthalai editorial about Ilakkuvanar, Feb 6,2010 : வாழ்க இலக்குவனார்!

கடந்த ஆண்டு ஆசிரிய உரை


என் வாழ்க்கையே தமிழ் நாடிய போராட்டக் களம்தான்; இளமையில் வறுமையோடு போர்; சாதியோடு போர்; சமயத்தோடு போர்; மூட நம்பிக்கைகளோடு போர்; போர்! போர்!! என்றும் ஓயாத போர்! என்று தன்னிலை விளக்கம் கொடுத்த தன்மானப் புலவர் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டு இது (17.11.1909-3.9.1973).
திராவிட இயக்கப்பெரும் புலவருக்குத் திராவிடர் கழகம் இன்று நூற்றாண்டு விழா எடுப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் ஒரு கட்டத்தில் தமிழாசிரியர் பெருமக்கள்தான் தந்தை பெரியார் அவர்களின் தன்மான உணர்வுக் கருத்துக்களை ஊட்டியவர்கள் ஆவர். அதில் இலக்குவனாருக்குத் தனித்த சிம்மாசனமே உண்டு.
தமிழ்மொழியைக் காக்கவும். வளர்க்கவும் மதுரையில் தமிழ்க் காப்புக் கழகம் நிறுவினார். அந்த அமைப்பின் சார்பில் மாணவர்களுடன் ஊர்வலமாகச் சென்று கடைப் பெயர்களைத் தமிழில் எழுதுமாறு கோரினார். அவர் உருவாக்கிய தமிழ்க் காப்புக் கழகத்தின் குறிக்கோள் என்ன தெரியுமா?
புரட்சிக்கவிஞரின் தமிழ் இயக்கம்தான். இலக்குவனாரின் இலக்கு ஏற்றமிக்கது என்பதற்கு ஈடில்லா இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?
எங்கு சென்றாலும் தமிழ், தமிழர் என்று மொழிமான இனமான உணர்வு. எந்த ஓரிடத்திலும் அவரை நிலையாகப் பணியாற்றிட விடவில்லை. 1936 முதல் 1971 வரை உள்ள அந்தக் காலக்கட்டத்தில். 35 ஆண்டுகளில் அவர் பணியாற்ற நேர்ந்த இடங்களின் எண்ணிக்கை பதினொன்று என்றால், அதன் அதன் தன்மையைத் தக்க முறையில் உணர்ந்துகொள்ளலாம்.
புலவர் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோதே வடமொழியை எதிர்த்துப் புலியெனப் பாய்ந்தவர். திருவையாறு கல்லூரியின் முதல்வர் பி.சா. சுப்பிரமணிய சாத்திரி என்பவர் வடமொழியைத் தூக்கித் தமிழ் மொழியைத் தாழ்த்தும் பார்ப்பனர்; தனித்தமிழ் வீரராக விளங்கிய அந்தப் புலிக்குட்டியின் பாய்ச்சலை அவர் எப்படித்தான் பொறுப்பார்? தொல்லைகள் பல கொடுத்தார். பணிந்தாரில்லை இலக்குவனார். தகுதியற்ற தலைவரின்கீழ்த் தமிழ்க் கல்லூரியின் நிலை என்ற துண்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுத் தமிழ் உணர்ச்சியின் வெப்பத்தை வெளிப்படுத்தினார்.
கம்பன் கழகத்தார் ''கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்; சங்கத் தமிழை சங்கக் கடலில் எறிவோம் என்று முழக்கமிட்டபோது. அதனை எதிர்த்துப் பொடியாக்க 'சங்க இலக்கியம், என்ற இதழைத் தொடங்கிய தமிழ்த் தொண்டர் அவர்.
அரசியல் காரணங்களுக்காக விருதுநகர் கல்லூரியிலிருந்து அவரை விலக்கியபோது தந்தை பெரியார் தீட்டிய எழுத்துக்கள் ஒன்றுபோதும் இலக்குவனாரின் புகழ்பாட!
''தமிழ்ப் பற்று காரணமாக இலக்குவனார் பழிவாங்கப்பட்டு. வேலையை விட்டுத் துரத்தப்பட்டிருக்கிறார். இவரைப்பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் நம் இரத்தம் கொதிக்கிறது. மனம் பதைக்கிறது. தமிழனுக்கும். தமிழுக்கும் பாடுபட்ட இவர் நிலையைப் பார் என அபாய அறிவிப்புக் கை காட்டியதாகத் தமிழ் அறிஞர் காட்சியளிக்கிறார் என்று தந்தை பெரியார் பதறி எழுதும் அளவுக்கு இலக்குவனார் இனவுணர்வின் இமயமாக எழுந்து நின்றுள்ளார்.
இந்த எதிர்ப்புக் காலகட்டத்தில் 1965இல் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (D.I.R.) மூன்றரைத் திங்கள் சிறை வாசமிருந்தார்.
புலவர் வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தவர். 'தமிழ் மொழியின் தோற்றமும். வளர்ச்சியும் பற்றி ஆய்வு செய்து எம்..எல். பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். சங்க இலக்கியம். திராவிடக் கூட்டரசு. குறள்நெறி. Kuralneri,Dravidian Federatrion, ஆகிய இதழ்களை அவ்வப்போது நடத்தி நட்டப்பட்டுள்ளார். 14 ஆய்வு நூல்களையும். நான்கு கவிதை நூல்களையும் தமிழுலகுக்குத் தந்த பெருமகன் அவர்.
ஆங்கிலத்தில் இவர் மொழி பெயர்த்த தொல்காப்பியத்தைத்தான் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் யேல் பல்கலைக் கழகத்திற்குச் செல்லும்பொழுது எடுத்துச் சென்றார்.
நெடிய உருவம், வீரம் கொப்பளிக்கும் நேர் கொண்ட பார்வைக்குச் சொந்தக்காரரான திராவிடர் பேரியக்கத்துக்குரிய அந்த மாபெரும் புலவரின் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் இன்று பெருமையுடன் கொண்டாடுகிறது.
திராவிடர் இயக்கத்தின்  தன்னிகரில்லாத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அவரின் படத்தினைத் திறந்து வைப்பதும். இலக்குவனாரின் அருமை மகனார் முனைவர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்குப் பெரியார் விருது அளித்துப் பாராட்டுவதும் பொருத்தம்தானே!
இலக்குவனார் ஊட்டி வளர்த்த அந்தத் தமிழ் உணர்வு. இன உணர்வு மேலும் கூர்தீட்டப்பட வேண்டிய காலம்தான் இது. இந்நாளில் அதனை நினைவூட்டுவோம்! வாழ்க இலக்குவனார்!!
விடுதலை - தலையங்கம் - பிப்ரவரி 6.2010

செவ்வாய், 21 டிசம்பர், 2010

Ilakkuvanar awards to 100 scholars

செந்தமிழ் அரிமா சி. இலக்குவனார் விருதினை, உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர். இலட்சுமணன், தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி மற்றும் ஏராளமான அறிஞர்களுக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வழங்கினார். உடன் இலக்கிய வீதி இனியவன் உள்ளார். விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு அண்ணா நகர் தமிழ்ச்சங்கம் சார்பில் இராமலிங்கம் நினைவுப் பரிசினை வழங்கினார். பேராசிரியர் க. திருமாறன் அவர்களுக்கு சுந்தர்ராசு நினைவுப் பரிசினை வழங்கினார் (சென்னை, 19.12.2010).
++++++++++++++++++++++

லட்சுமிகாந்தன் பாரதி, வா.மு.சேதுராமன், பொன்னவைக்கோ, சிலம்பொலி செல்லப்பன், பாவலர் வீரமணி, மணிமேகலை, திருக்குறள் பாஸ்கர், பாவலர் மறைமலையான் ஆகியோர்க்கு தமிழர் தலைவர் விருது வழங்குகினார்.
சென்னை, டிச. 20- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இலக்குவனார் பெயரில் அறக்கட்டளை அமைக் கப்படும் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.
சென்னை அண்ணா நகரிலுள்ள வள்ளியம் மாள் மேனிலைப் பள்ளி யில் செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் நூற் றாண்டு நிறைவு விழா மற்றும் இலக்குவனார் விருது வழங்கும் விழா வும் மிகச் சிறப்பாக நடை பெற்றது.
அனைவரையும் வரவேற்று இலக்கிய வீதி இனியவன் உரை யாற்றினார். பின்னர் அண்ணா நகர் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த இரா மலிங்கம் முன்னுரை வழங்கினார். துரை. சுந் தரராசன் உரைக்குப் பின் னர் தமிழறிஞர் சி.இலக் குவனார் பெயரில் உரு வாக்கப்பட்ட விருதினை 100 தமிழறிஞர்களுக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி வழங்கினார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன், தமி ழறிஞர் வா.செ.குழந்தை சாமி, லட்சுமிகாந்தன் பாரதி (முன்னாள் அய். ஏ.எஸ்.), சிலம்பொலி செல்லப்பன் மற்றும் ஏராளமானோருக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழறிஞர்கள்
தோழர் இரா.நல்ல கண்ணு, நீதியரசர் அரு. இலக்குமணன், பாவலர் குலோத்துங்கன் (வா. செ. கு.), இலட்சுமிகாந்தன் பாரதி, வழக்கறிஞர் காந்தி, பேராசிரியர் அவ்வை நடராசன், சிலம் பொலி சு.செல்லப்பன், பேராசிரியர் பொற்கோ, பாவலர் மறைமலை யான், தொல்.திருமா வளவன்,
போராசிரியர் கண.சிற்சபேசன், ஈரோடு தமிழன்பன், பாவலர் பொன்னடியான், பொன் னவைக்கோ, பாவலர் பேகன், பாவலர் சுப்பு ஆறுமுகம், பாவலர் புரட்சிதாசன், முகம் மாமணி, பாவலர் வேள் நம்பி, கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பாவலர் தமிழழகன், பாவலர் ம.இலெ.தங் கப்பா, பெருங்கவிக்கோ வா.மு.சே., பாவலர் சாமி. பழனியப்பன், பாவலர் இரா.மணியன், பாவலர் தென்மொழி ஞானபண் டிதன், பேராசிரியர் கா. அரங்கசாமி, பேராசிரி யர் பா.வளன்அரசு, ஆய் வுக் களஞ்சியம் பதும நாபன், பாவலர் முத்து லிங்கம்,
பாவலர் மின்னூர் சீனிவாசன், ப.கி. பொன் னுசாமி, தெ.பொ. இளங் கோவன், பேராசிரியர் பி.யோகீசுவரன், பேரா சிரியர் ஞானபுட்பம், பேராசிரியர் தாயம்மாள் அறவாணன், மணி மேகலை கண்ணன், புலவர் கோ.தேவராசன், பேராசிரியர் மு.பி.பா., பாவலர் அமுதபாரதி,
பேராசிரியர் ச.சு.இரா மர் இளங்கோ, மலைய மான், வ.வேம்பையன், சுப.வீ., செங்கைப் பொது வன், பாவலர் இரா. குமாரவேலன் மு.ச.சிவம், பேராசிரியர் ந.தெய்வ சுந்தரம், நெல்லை ந. சொக்கலிங்கம், பாவலர் பூவை அமுதன், பாவலர் வான்முகில்,
புலவர் ப.வீரமணி, ச.சாம்பசிவனார், பேரா சிரியர் மீனாட்சி முருக ரத்தினம், செம்பை சேவி யர், பாவலர் மு.மணி, பாவலர் இளஞ்சேரல், பாவலர் பல்லவன், பாவ லர் மலர்மகன், பேரா சிரியர் இரா.மோகன், சுந்தரராசுலு,
பாவலர் ஞானச்செல் வன், பாவலர் உ.தேவ தாசு, வேலூர் செந் தமிழ்க்கோ, பாவலர் பெரு.முல்லையரசு, பேராசிரியர் சாகுல் அமீது, பாவலர் மு.இளங் கண்ணன், பாவலர் இளஞ்செழியன், வாய் மைநாதன், பாவலர் கருமலைத் தமிழாழன், பாவலர் கந்தையா,
பாவலர் கடவூர் மணி மாறன், இராமதாசு, பாவலர் ஓடைப்பட்டி சுப்பையா, பேராசிரியர் ப.அர.அரங்கசாமி, கண் ணியம் குலோத்துங்கன், பாவலர் பிச்சினிக்காடு இளங்கோ, பாவலர் பொன்.செல்வகணபதி, திருக்குறள் பாஸ்கரன், தமிழ்க்கூத்தன், பேரா சிரியர் மா.ரா.அரசு,
மருத்துவர் தெய்வநா யகம், இல.மா.தமிழ்நா வன், த.சுந்தரராசன், ஏர்வாடி சு.இராதா கிருட்டினன், கோ.பார்த் தசாரதி, மு.தருமராசன், எழுகதிர் அரு.கோ., பூங் குன்றன், மூவேந்தர் முத்து, புலவர் த.இராம லிங்கம்,
நாக.சுந்தரம், நெடுஞ்சேரலாதன், வா.மு.சே.திருவள்ளுவர், ஒய்.எம்.சி.ஏ.கெ.பக்தவத்சலம், சத்தியநாராயணன், கலசம் இராமலிங்கம், பாவலர் வேணு குண சேகரன், தவமணி வெற் றியழகன், பாவலர் மறை தி.தாயுமானவன், மலேசியத் தமிழ்வள்ளல் ஓம் தியாகராசன் ஆகி யோர் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர். விருது பெற்றோர்களின் சார்பாக நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன், ஈரோடு தமிழன்பன், இலட்சுமி காந்தன் பாரதி ஆகி யோர் உரையாற்றினார்.
பேராசிரியர் க.திருமாறன்
பேராசிரியர் க.திருமா றன் அவர்கள் சிறப்பு ரையாற்றினார். தமது உரையில் தமிழறிஞர் இலக்குவனார் பெயரில் விருது வழங்கி, அவரைப் பற்றி பேச வாய்ப்பளித் தமைக்கு நன்றி. இவ் வளவு தமிழறிஞர்களை அழைத்து ஒன்று சேர்த்து விருது வழங்கி இருப்பது பாராட்டுக் குரியது. இவ்வளவு அறி ஞர்கள் கிடைத்தால் நான் விருதுநகரில் பல மாநாடுகளை நடத்தி இருப்பேன் என பல் வேறு சிந்தனைகளை எடுத்து கூறினார்.
ஏ.ஆர்.லட்சுமணன்
உயர்நீதிமன்ற முன் னாள் நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் தமது உரையில், தமிழறிஞர் இலக்குவனார் பெயரில் உள்ள விருதினை மதிப் பிற்குரிய வீரமணி அவர் களது கையால் பெறு வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறிய அவர் இலக்கு வனாரிடம் பயின்ற பழைய கால சிந்தனை களை நினைவு கூர்ந்து எடுத்து கூறினார்.
தமிழர் தலைவர் உரை
இறுதியாக தலைமை உரையாற்றிய தமிழர் தலைவர் கி.வீரமணி தமது உரையில், 28 ஆண்டு களாக அண்ணா நகர் தமிழ்ச் சங்கம் சிறப்பாக நடைபெறுவது மிகுந்த பாராட்டுக்குரியது. 100 தமிழறிஞர்களை ஒன்று திரட்டுவது மிகுந்த சிரமம் - இலக்குவனார். நூற்றாண்டு நிறைவு விழாவிலே ஒன்று திரட்டி அவர்களுக்கு விருது வழங்குவது மிகுந்த பாராட்டுக்குரியது 100 பேரும் ஒரே கருத் தினைக் கொண்டவர் கள் அல்லர். பல்வேறு கருத்துகளை கொண்ட வர்களை தமிழ் உணர்வு, மொழி உணர்வு கொண் டவர்களை ஒன்றிணைத் தது இலக்குவனார் விழா ஆகும். இலக்குவனார் தந்தை பெரியாருட னேயே பல்வேறு சுற்றுப் பயணங்களில் சென்று பங்கேற்றவர். தந்தை பெரியார் கொள்கையை ஏற்ற இலக்குவனார் பல் வேறு பிரச்சினைகளை யெல்லாம் துணிச்சலா கச் சந்தித்தவர்.
அவருடைய துரத் தப்பட்டேன் என்ற நூல் மிகுந்த உணர்வு பூர்வமான நூலாகும். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இலக்குவனார் பெயரில் அறக்கட்டளை உருவாக் கப்படும். அந்த அறக்கட் டளை சார்பாக ஆண்டு தோறும் சொற்பொழிவு, விருதுகள் வழங்கப் படும். அடுத்த ஆண்டு முதல் இவ்வறக்கட்டளை செயல்படும். அந்தக் துறையின் சார்பிலேயே இலக்குவனார் நூல்கள் வெளியிடப்படும்.
திராவிடர் கழகம் ரூ. 10 ஆயிரம்
அந்த அறக்கட்டளைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்த அறக்கட்டளைக்கு நிதி வழங்க விரும்புவோர் அனைவரும் வழங்கலாம் எனக் கூறி, இலக்குவனா ரின் தொண்டினை எடுத்து கூறினார். மறைமலை இலக்குவனார் விருது பெறும் அறிஞர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறினார். இலக்குவனார் நூற்றாண்டு நிறைவு விழாவினை இலக்கிய வீதி அமைப்பும், அண்ணா நகர் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தின. தமிழறிஞர்களின் எழுச்சி விழாவாக ஏராளமான அறிஞர்கள் பங்கேற்றது சிறப்புக்குரியது.





ஞாயிறு, 14 மார்ச், 2010



தலை வணங்காத் தமிழ்ச் சிங்கம்
பேராசிரியர்இலக்குவனார்

டாக்டர் ப. காளிமுத்து எம்.ஏ., பிஎச்.டி. விடுதலை ஞாயிறுமலர் 13-03-2010

தமிழகம் ஏறக்குறைய மறந்துவிட்ட நிலையில் பேராசிரியர் இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவை நினைவுபடுத்தி வரலாற்றைத் திருப்பிப் பார்க்க வைத்திருக்கிறது திராவிடர் கழகம்! மற்றவர்கள் செய்யாததை, மற்றவர்-களால் செய்ய முடியாததைத் திராவிடர் கழகம் செய்து காட்டும் என்று தமிழர் தலைவர் முழங்கிவருவது எவ்வளவு பொருத்தமுடைய வரலாற்று உண்மை என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் உணர்ந்துகொள்ள வேண்டும். பேராசிரியர் இலக்குவனாரைப் பற்றி எவரும் நினைக்காது போய்விட்டனரே என்று வருந்திக் கொண்டிருந்த நேரத்தில் விடுதலை ஏடு இலக்கு-வனாரைப் பற்றி மிக அருமையான முறையில் எழுதி எம்மை மகிழ்வித்தது!

தமிழக வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்-டமாகும். இப்போராட்டம் மதுரையில் கால்கொண்டு பெரும் புரட்சியாக வெடிப்பதற்குப் பேராசிரியர் இலக்கு-வனாரும் காரணமாவார். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து மதுரையிலிருந்து சென்னை வரை நடைப்பயணம் மேற்கொள்ளவிருந்த பேராசிரியர் இலக்குவனாரை அன்றைய காங்கிரசு அரசு இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தில் (ஞிமிஸி) கைது செய்து சிறையில் அடைத்-தது. இதனால் மாணவர் உலகம் கொந்-தளித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்-டம் தீவிரமடைந்தது.

மாண்புமிகு கலைஞர் நடத்தி வந்த முத்தாரம் இதழின் முன் அட்டையில் சிறைக்கம்பிகளுக்குள் இலக்குவனார் இருப்பதைப் போன்று பெரிய படம் ஒன்றை வெளியிட்டுத் தமிழ்த் தாயே சிறையில்! என்று அதற்குத் தலைப்புக் கொடுத்திருந்தார். மாண்புமிகு கலைஞர் அவர்கள் பேராசிரியர் இலக்குவனாரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலையாகி வெளியே வந்தபோது பேராசிரியர் இலக்குவனார்க்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. காங்கிரசுக் கட்சி முதலமைச்சராக இருந்த பக்தவத்சலத்தின் தொல்லை தாங்க முடியாமல், கருமுத்து தியாகராசர் விருப்பமின்றிப் பேராசிரியர் இலக்கு-வனாரை வேலையிலிருந்து விலக்கி விட்டார். காங்கிரசாட்சியின் வரலாற்-றில் தமிழ் இன உணர்வு கொண்டோர் பணிநீக்கம் செய்யப்படுவதும் ஊர் ஊராய் இட மாற்றம் செய்யப்படுவதும் அன்று வாடிக்கையாக இருந்தது!

மிகுந்த தொல்லைக்கிடையே குறள்நெறி இதழை விடாது நடத்தி-வந்தார் இலக்குவனார். அவருக்குப் பொருளுதவி செய்ய வேண்டும் என்று மாணவர்களும் தமிழ் அன்பர்களும் கூடி முடிவு செய்தோம். மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் பொன். தினகரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்-பட்டது. இலக்குவனாரின் அன்புக்குரிய மாணவராக விளங்கிய திரு.வீ. முத்து-சாமி அவர்கள் பொருளாளராக இருந்-தார். அல்லும் பகலுமாய் அலைந்து மாணவர்களும், மற்றையோரும் பொருள் திரட்டினர்.

நிதியளிப்பு விழாவிற்குப் பேரறிஞர் அண்ணா வந்திருந்தார். மதுரை தமுக்-கம் கலையரங்கில் விழா மிகச்சிறப்பாக நடந்தது. அண்ணா, இலக்குவனார்க்கு நிதிவழங்கிச் சிறப்புரையாற்றினார். இலக்குவனாரின் பணிகளையெல்லாம் மனந்திறந்து பாராட்டிய அண்ணா, வேலை போய்விட்டது என்று கவலைப் படாதீர்கள்; 67_ இல் தி-.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும். அப்போது பேரா. இலக்குவனார்க்கு உயர்ந்த பதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளி-யிட்டார். கலையரங்கமே கையொலி-யால் அதிர்ந்து போயிற்று!

அண்ணா அறிவித்ததைப் போலவே தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. சென்னை மாநிலக்கல்லூரியின் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக இலக்குவனார் நியமிக்-கப்பட்டார். தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ந்-தன!

ஓராண்டுக் காலம் மாநிலக் கல்லூரியில் பணியாற்றி விட்டு, அதன் பின்னர் ஆந்திராவிலுள்ள உசுமானி-யாப் பல்கலைக் கழகப் பேராசிரிய-ரானார் இலக்குவனார்.

எதிர்பாராத விதமாக அறிஞர் அண்ணா நோய்வாய்ப்பட்டார். அண்ணா மறைந்த நாளன்று பேரா-சிரியர் இலக்குவனார் நேராக என் அறைக்கு வந்துவிட்டார். (அப்போது திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் நான் தயங்கியி-ருந்தேன். அது மாநிலக் கல்லூரியின் மாணவர்-விடுதி) என் அறையே கண்ணீ-ரால் நிறைந்திருந்ததைக் கண்ட பேராசிரியர், ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதார். அவருக்கு நாங்கள் ஆறுதல் சொல்ல வேண்டிய-தாகிவிட்டது.

இதற்குச் சில திங்கள் முன்பாக இலக்குவனாரின் இனிய மாணவரான திரு. வீ. முத்துசாமி அவர்களையும் மதுரை தியாகராசர் கல்லூரி நிருவாகம் பணி நீக்கம் செய்துவிட்டது. பேரா-சிரியர் இலக்குவனார் தொலைபேசி-யில் என்னை அழைத்து முத்துசாமிக்கு உதவுங்களையா என்றார். பேரா-சிரியர் மிகவும் மனம் வருந்தியிருந்தார் என்பதை அவருடைய குரல் உணர்த்-தியது. திரு.வீ.மு. அவர்கள் மாசில்லாத தமிழன்பர், தன்மான உணர்ச்சி மிக்க-வர். தந்தை பெரியார் மீது அளவற்ற அன்பு கொண்டவர். பேராசிரியர் இலக்கு-வனார் என்னைத் தொலை பேசியில் அழைத்துப் பேசிக் கொண்-டிருந்த போதே திரு. வீ.மு. அவர்கள் என்னைப் பார்ப்பதற்கு வந்துவிட்டார்.

உடனடியாக அவரை அழைத்துக் கொண்டு தமிழர் தலைவரிடம் சென்று நிலைமையை விளக்கினேன். தமிழர் தலைவரின் நன்முயற்சியால் இரண்டே நாட்களில் திரு. வீ.மு. அவர்களுக்கு அரசினர் கல்லூரியில் விரிவுரையாளர் பணி கிடைத்தது. பேராசிரியர் இலக்குவனார் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.

ஊசுமானியாப் பல்கலைக் கழகத்திலிருந்து தமிழகத்திற்குத் திரும்பிய பேராசிரியர் இலக்குவனார் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆவதற்குப் பெரிதும் முயற்சி செய்தார். இரவு பகலாகப் பல்வேறு துறை வல்லுநர்-களையும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துத் தன் பெயரைத் துணை வேந்தர் பதவிக்குப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார். பேராசிரியரின் பையைத் தூக்கிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து நான் ஓடினேன்!

பேராசிரியர் இலக்குவனார் தமிழுக்-காகவும், தமிழ் இனத்திற்காகவும் பல்வேறு ஈகங்களைச் செய்தவர். அவர் கேட்காமலேயே துணைவேந்தர் பதவியை நாம் அவருக்குக் கொடுத்-திருக்க வேண்டும். அவர் கேட்டும் அது கிடைக்காது போயிற்று. ஆடை-யில் அழுக்குப் படாமல் தமிழ்த்-தொண்டு செய்தவர்களுக்குத் துணை-வேந்தர் பதவி கிடைத்தது. திராவிடர் இயக்க வரலாற்றில் நாம் கவனிக்காமல் விட்ட அறிஞர் பெருமக்கள் பலராவர். அது தனி ஆய்விற்குரியது! சிறையில் வாடிய செந்தமிழ்ச் சிங்கமாம் இலக்குவனார்க்குத் துணை வேந்தர் பதவி மட்டுமல்ல, எந்தப் பதவியும் கிட்டவில்லை. அவரையும் மொழி-நூல் மூதறிஞர் தேவநேயப் பாவாண-ரையும் பன்மொழிப்புலவர் அப்பாத்-துரையாரையும் நாம் சரியாகப் பயன்-படுத்திக் கொள்ளாமல் போய்-விட்டோம்.

பேராசிரியர் இலக்குவனார் தொல்-காப்பியத்தை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவருடைய ஆய்-வேட்டை இரண்டு முறை திருப்பி அனுப்பிவிட்டார்கள். தொல்காப்பியரின் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று இலக்குவனார் தம் ஆய்வேட்டில் நிறுவியிருந்தார். இக் கருத்தினை ஏற்காத_விரும்பாத பார்ப்-பனச் சார்புடைய தேர்வுக்குழுவினர் தொல்காப்பியர் காலத்தைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குக் கொண்டு-வருமாறு தெரிவித்தனர். ஆனால் பேரா. இலக்குவனார் தம் கருத்தை மாற்றிக் கொள்ளாமல், டாக்டர் பட்டத்தை விடத் தொல்காப்பியர் காலமே இன்றியமை-யாதது என்று கருதினார். அதனால் மேலும் பல சான்றுகளை எடுத்துக் காட்டித் தொல்காப்பியர் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று துணிவுடன் எடுத்துக் கூறினார். வேறுவழியின்றிப் பேராசிரி யரின் கருத்தை ஏற்றுக் கொண்டு சென்னைப் பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

பேராசிரியர் இலக்குவனாரின் ஆய்வேடு _ ‘Tholkappiam in English with ciritical studies’ என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. அந்தக் காலத்தில் தமிழைப் பற்றி ஆராய்ச்சி செய்தாலும் ஆங்கிலத்தில்தான் ஆய்-வேட்டை எழுதித்தரவேண்டும். பேரறி-ஞர் அண்ணா இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அண்ணா மேல் நாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது தொல்-காப்பியத்தையும் திருக்குறளையும் உடன் எடுத்துச் சென்றார்கள். பேராசிரியர் இலக்குவனார் ஆங்கிலத்தில் மொழி-பெயர்த்த தொல்காப்பியத்தை மதுரையி-லிருந்து வரவழைத்து அதனைக் கொண்டு சென்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழக வடமொழிப் பேராசிரி-யாக இருந்த பி. சுப்பிரமணிய சாஸ்திரியும் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். எது சிறந்தது, எது நம்முடையது என்பதை அண்ணா நமக்கு அடையாளம் காட்டுவதற்காக இலக்குவனார் மொழி பெயர்த்த தொல்காப்பியத்தை எடுத்துச் சென்றார் என்பதை அன்பர்கள் உற்று நோக்க வேண்-டும். யேல் பல்கலைக் கழக மாண-வர்களுக்கு இலக்குவனாரின் புத்தகத்-தையே அண்ணா பரிசாக அளித்துள்-ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சென்னை மாநிலக் கல்லூரியில் இலக்குவனார் பணியாற்றியபோது அவரிடம் பயின்ற மாணவர்கள் அவரு-டைய படத்தைத் தமிழ்த்துறையில் திறந்து வைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அப்போது மாநிலக் கல்லூரித் தமிழ்ப் பேரவையின் மாணவர் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். பேராசிரியரிடம் படத்திறப்பு நிகழ்ச்சியைப் பற்றிக் கலந்துரையாடினேன். முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்களை அழைத்துத் தன் படத்தைத் திறக்குமாறு பேரா. இலக்குவனார் அறிவுறுத்தினார். மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நேரம் கிடைக்காது போனமையால் மாண்புமிகு மதியழகன் அவர்களையும் அமைச்சர் கோவிந்தசாமி அவர்களை-யும் அழைத்து வந்து இலக்குவனாரின் படத்தையும் திருவள்ளுவர் படத்தையும் திறந்து வைத்து விழாவைச் சிறப்புடன் நடத்தினோம்.

கல்வி அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் பயிற்றுமொழிச் சிக்கல் வந்தபோது ஆங்கிலத்திற்குச் சார்பாகச் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். கொதிப்படைந்து போன பேரா. இலக்-குவனார், உடனே தமிழ் நாவலர் ஆங்கி-லத்தின் காவலராகிவிட்டார் என்று துணிவுடன் அறிக்கை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார். (அறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களும் கூட நாவலரின் கருத்தைக் கண்டித்து நீண்ட-தோர் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை அன்பர்கள் யாரிட-மாவது இருந்தால் அதன் நகல் ஒன்றினை எனக்கு அனுப்பி உதவுமாறு வேண்டுகிறேன்.) பேரா. இலக்குவனார் தம்மைக் கண்டித்து அறிக்கை வெளி-யிட்டுவிட்டாரே என்று நாவலருக்கு அவர்மீது வருத்தம்!

பேரா. இலக்குவனார் யாருக்கும் அஞ்சாது தம் கருத்துகளை வெளிப்-படுத்தியவர். பதவிக்காகத் தம் கருத்து-களை அவர் ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. தமிழ்மொழியை ஆரியத்-தின் பிடியிலிருந்து விடுவிப்ப-தற்காக உழைத்த பெருமகன் அவர். தன் மகனுக்கு மறைமலை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர். தன்மான உணர்ச்சி மிக்கவர். தமிழுக்குத் தீங்கு வருகிறது என்றால் அதனைக் களைவதற்காக களம் அமைத்தவர். பணியிழப்பைப் பற்றியோ சிறைச்சாலையைப் பற்றியோ அவர் சிறிதும் கவலைப் பட்டதில்லை.

தந்தை பெரியார் தமிழைக் காட்டு-மிராண்டி மொழி என்று கூறியவுடன் சிலருக்குச் சினம் பொத்துக் கொண்டு வந்தது. இந்து நாளிதழில் கூட அவர்கள் தந்தை பெரியாரின் கருத்தைக் கண்டித்துக் கடிதம் எழுதினார்கள். பேரா. இலக்குவனார் அவர்களை அழைத்துத் தந்தை பெரியார் ஏன் அவ்-வாறு கூறினார் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறித் தெளிவுபடுத்தினார். அடடா அவசரப்பட்டு இந்துவுக்கு எழுதிவிட்டோமே என்று வருத்தப்-பட்ட பேராசிரியர்களை நான் அறி-வேன்.

யாருக்கும் தலைவணங்காது வாழ்ந்த தன்மானத் தமிழ்ச் சிங்கமாம் பேரா-சிரியர் இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவைத் தமிழக அரசு சிறப்புடன் நடத்தவேண்டும் என்பது தமிழன்பர்-களின் வேண்டுகோளாகும்

திங்கள், 8 பிப்ரவரி, 2010

தமிழின உணர்வோடு தொண்டறத்திற்காக பாடுபடுகிற தமிழர்களை தோளில் தூக்கி வைத்து வெளிச்சம் போட்டு பாராட்ட வேண்டும்
தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழாவில் தமிழர் தலைவர் பேச்சு

சென்னை, பிப்.7_ தமி-ழின உணர்வோடு பாடு-பட்டு வருகின்ற-வர்களை தோளில் தூக்கி வைத்து அவர்களை வெளிச்சத்-திற்கு கொண்டு வர-வேண்டும். அவர்களைப் பாராட்டி வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என்று திராவி-டர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு-ரையாற்றினார்.

நேற்று மாலை 6.2.2010 அன்று சென்னை பெரியார் திடலில் நடை-பெற்ற தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரை-யாற்றினார். அவரது உரையில் குறிப்பிட்ட-தாவது:

தமிழர்களைப் பெருமைப்படுத்திட

தமிழினத்திற்காகப் பாடுபடுகின்ற தமிழர்-களை அடையாளம் கண்டு அவர்களை பெரி-யார் திடலில் இன்றைக்கு முத்தமிழ் மன்ற விழா மூலம் நாம் பாராட்டி-யிருப்பது பெரியார் வலைக் காட்சி மூலமாக, விடுதலை இதழ் வாயி-லாக உலகம் பூராவும் உள்ள தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்-பதற்காக இந்த நிகழ்ச்-சியை நாம் ஏற்பாடு செய்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களை-யும் முனைவர் மங்கள-முருகேசன் அவர்களையும் அழைத்து இந்த விழா-விலே பெரியார் விருது வழங்கி பாராட்டியிருக்-கின்றோம். தமிழர் தளபதி இலக்குவனார்

இங்கே பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்க-ளுடைய நூற்றாண்டை ஒட்டி அவரது படத்தைத் திறந்து வைத்திருக்-கின்-றோம். நம்மவர்களைப் பற்றிய பல செய்திகள் வெளியில் தெரிவதில்லை.

பேராசிரியர் சி. இலக்கு-வனார் அவர்களை தந்தை பெரியார் அவர்-கள் தமி-ழர் தளபதி என்று அழைத்து அந்தப் பட்டத்தை அவர்-களுக்கு சூட்டினார்கள். பலருக்கு இந்த செய்திகள் தெரியாது. காரணம் தந்தை பெரியார் அவர்-களுடைய கொள்கையை ஆரம்ப காலத்திலிருந்தே பின்பற்றியவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்-திலே கலந்து கொண்டு தண்டனை பெற்று சிறை சென்று வெளியே வந்தவர்.

நாடெங்கும் கொண்டாடவேண்டும்

நாடெங்கும் இலக்குவ-னாருடைய நூற்றாண்டு விழாவை தமிழர்களாகிய நாம் கொண்டாட வேண்-டும் என்ற நமதுஅன்பான விழைவை வேண்டு-கோளாக வைக்கின்றோம். (கை தட்டல்)

அதே போல சி.இலக்கு-வனாருடைய மகன், மறைமலை இலக்குவனா-ருக்கு இங்கே தந்தை பெரியார் விருது அளித்து பெருமைப்படுத்தப்பட்ட அவர் தனது தந்தையார் வழியிலே நின்று திரா-விட இயக்கப் புலவராக விளங்கி, நமது கொள்கை வழியிலே நின்று பாடு-பட்டு வருகின்றார்.

தோளிலே தூக்கி பெருமைப்படுத்த வேண்டும்

தமிழர்களை நல்ல இன உணர்வாளர்களை, பகுத்தறிவாளர்களை, சுயமரியாதை வழியிலே நின்றவர்களை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு மட்டு-மல்ல, அவர்களைத் தோளிலே தூக்கிப் பெரு-மைப்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாகும் (கை தட்டல்).

விழுது, - விருது என்-பதைப் பற்றி நாங்கள் அடிக்கடி சொல்வ-துண்டு. விழுதுகள் அடுத்த தலை முறையினர். விழுதுகள் இன்றைக்கு சிறப்பாக இருக்கின்றன.காரணம் வேர்கள் சரியாக இருந்த காரணத்தால்தான் விழுதுகளும் சரியாக இருக்கின்றன.

இலக்குவனாரை நான் நன்கு அறிந்தவன்

பேராசிரியர் இலக்கு-வனார் அவர்களை நேரில் கண்டு பேசிய பல வாய்ப்புகளை நான் பெற்-றவன். விடுதலையைப் புரட்டினால் ஏராள-மான செய்திகள் உண்டு.

விடுதலை தலையங்கத்தில்

இன்றைக்கு இலக்கு-வனார் அவர்களைப் பற்றி விடுதலையில் எழுதப்பட்டிருக்கின்ற தலையங்கம் மிகச் சிறப்-பானது. நேரம் இருந்தால் நானே படித்துக் காட்ட வேண்டும் என்று இருந்-தேன். இன்றைய விடு-தலை தலையங்கத்தைப் படித்து எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்-டும்.

இவர்கள் எல்லாம் சிறுவயது முதற்-கொண்டே மொழி உணர்வு, தந்தை பெரி-யார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள்கை உணர்வோடு ஆளான-வர்கள்.

இலக்குவனார் மாண-வர்; இவருக்கு ஆசிரியர் யார் என்றால் சாமி. சிதம்பரனார். அந்தக் காலத்து சுயமரியாதை உணர்வு கொண்ட புல-வர்கள்.

இலக்குவனாரிடம் கேள்வி

இராமாயணத்தைக் கண்டித்துப் பேசக் கூடியவர் புலவர் இலக்கு-வனார். அவரிடமே குதர்க்கமாகக் கேள்வி கேட்பார்கள். உங்களு-டைய பெயரே இலக்கு-வனார் ஆயிற்றே, நீங்கள் போய் இராமாய-ணத்-தைக் கண்டித்துப் பேச-லாமோ? என்று கேட்ட-துண்டு.

இது போன்று தந்தை பெரியார் அவர்களிட-மும் பலர் கேள்வி கேட்ட-துண்டு. உங்களுடைய பெயரே ராமசாமி, நீங்கள் இராமாயணத்-தைக் கண்டித்துப் பேச-லாமா? என்று கேட்ட-துண்டு. அதற்கு தந்தை பெரியார் அவர்கள் பதில் சொன்னார். நான் ராமனுக்கே சாமி போ! என்று சொல்லுவார். அது போல அந்தக் கேள்விக்கு இலக்கு-வனார் பதில் சொன்-னார். இலக்குவனார் என்றால், இலக்கு நோக்-கிச் செல்வது. இலட்சி-யத்தை நோக்கிச் செல்-வது என்று அவர் பதில் சொன்னார்.

சுயமரியாதைக் கொள்-கையை, தந்தை பெரியார் கொள்கையை ஏற்காத-வர்கள் கூட பல வகை-யில் பயன் பெற்றதுண்டு. ஆனால் இலக்குவனார் குடும்பமோ பல தொல்-லைகளுக்கு ஆளாகி ஏராளமான இழப்பு-களை சந்தித்த குடும்பம்.

துரத்தப்பட்டேன்

விருதுநகர் நாடார் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் சி. இலக்கு-வனாரை கல்லூரி நிரு-வாகம் வெளியேற்றியது. ஜாதி உணர்ச்சிப் போராட்-டத்தால் வெளியேற்றப்-பட்டார். அந்தக் கல்லூ-ரிக்கு தந்தை பெரியார் அவர்கள் இலக்குவ-னா-ருக்காக பரிந்துரை செய்தும் அந்த நிருவாகம் அதை ஏற்கவில்லை.

தந்தை பெரியார் அதைக் கண்டித்து அறிக்-கையே எழுதினார். கண்-ணீர் விடக்கூடிய அள-வுக்கு நிலைமைகள். இலக்-குவனார் அவர்கள் துரத்தப்பட்டேன் என்று ஒரு காவியத்தையே எழுதி-யிருக்கிறார்.அதைப் பற்றி அவருடைய-மகனார் மறைமலை இலக்குவ-னாரிடம் சொன்னேன். அந்த நூலைத் தேடித் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை என்று சொன்னார்.

பெரியார் நூலகத்தில் இருக்கிறது. நான் தருகி-றேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கின்றேன்.

பெரியார் அடைக்கலம் கொடுத்தார்

தந்தை பெரியார் அவர்கள் இலக்குவ-னாரை அழைத்து திருச்சி பெரியார் மாளிகையில் அருகிலேயே தங்க வைத்-தார். தன்னுடன் சுற்றுப் பயணத்தில் அழைத்துச் சென்றார். அவருக்கு தந்தை பெரியார் மதிப்பூ-தியம் தர முன்வந்தார். ஆனால் அதை இலக்கு-வனார் ஏற்க மறுத்தார். தந்தை பெரியார் இலக்கு-வனாருக்கு வலுக்கட்-டாயப் படுத்திக் கொடுத்-தார்கள்.

தந்தை பெரியாரிடம் கொண்ட அன்பால், உணர்வால்தான் அவர்-1965 இல் இந்தி எதிர்ப்-புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை தண்டனை பெற்று வெளியே வந்தார்.

அவர் தந்தை பெரி-யார், அண்ணா, கலைஞர் ஆகியோருடைய நன்ம-திப்பைப் பெற்றவர். இறுதி வரையிலே அவர் கொண்ட திராவிடர் இயக்கக் கொள்கை உணர்-வோடு வாழ்ந்து மறைந்தார்கள். கஷ்ட நஷ்டங்களைப் பெற்றார்-களே தவிர, எந்தப் பல-னையும் அவர்கள் பெற-வில்லை.

மறைமலை இலக்குவனாரின் பெருமை

இலக்குவனார் அவர்க-ளு-டைய மகன் மறை-மலை இலக்குவனார் அவர்களை அமெரிக்-காவில் உள்ள கலிஃ-போர்னியா பல்கலைக் கழகம் அழைத்தது. ஹார்வர்டு பல்கலைக் கழகம், எம்.அய்.டி. பல்-கலைக் கழகங்கள் எல்-லாம் இருந்தது. அமெரிக்-கப் பல்கலைக் கழகம் ஒரு தமிழரை அழைத்து இதை எங்களுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று அழைத்-தது என்றால், அப் பெருமை தமிழராகிய நமது மறைமலை இலக்-குவனார் அவர்களையே சாரும். அந்தப் பெருமை அவர்களுக்குத்தான் உண்டு. தான் ஒரு நாத்திகன் என்பதை அங்கே காட்டினார். நாத்திக நன்நெறியைப் பற்றி அவர் ஒரு நூல் எழுதுவேன் என்று சொன்னார். அதை அவர்-கள் சிறப்பாக செய்ய வேண்டும். அந்த சிறப்-பான நூல் வெளி வருவ-தற்கு நாங்கள் துணை-யாக இருப்போம். நாத்-திகன் என்று சொன்-னால் அவர்கள் நன் நெறியாளர்கள். அவரு-டைய குடும்பத்தாரையும், அவருடைய சேவைகளை-யும் இந்த நேரத்திலே பாராட்டி வாழ்த்து-கிறோம்.

அவர்களுக்கு நாங்கள் பெரியார் விருது கொடுத்-திருக்கிறோம் என்றால் அது தமிழர்களுடைய உள்ளத்தின் பிரதிபலிப்-பாகும்.

மங்கள முருகேசனின் சிறப்பான பணி

அதே போல பேராசி-ரியர் மங்கள முருகேசன் அவர்கள் மதுரை கல்-லூரியிலே இருந்து வந்தவர். அது பார்ப்பன ஆதிக்கக் கல்லூரி. அந்தக் கல்லூரியில் இருந்து வந்தவர் சுயமரியாதை உணர்வோடு இருக்-கிறார் என்றால் அவருக்கு இன்-னொரு விருதும் வழங்க-வேண்டும். அவர் ஓய்வு பெற்ற பிறகும் புது முறுக்கோடு பணியாற்றிக் கொண்டு வருகின்றார். சுயமரியாதை இயக்கத்-தைப் பற்றி எழுதி இருக்கின்றார். முத்தையா முதலியாரைப் பற்றி எழுதியிருக்கின்றார். உலகத் தலைவர் பெரி-யார் என்ற நூலை எழுதிக் கொண்டு வரு-கின்றார். அன்னை மணி-யம்மையாரைப் பற்றிய வரலாற்றையும் எழுதிக் கொண்டிருக்கின்றார். ஓய்வறியாத அவருடைய தொண்டறம் சிறப்பா-னது. இவர்கள் எல்லாம் மக்களுக்காகப் பாடு-பட்டுக் கொண்டிருக்கிற-வர்கள்.

அவருடைய வாழ்வி-ணையர் அவருக்கு எல்லா நிலையிலும் துணையாக இருந்து, அவர் படிப்-படியாக முன்னேற உறுதுணையாக இருந்து வருகின்றார். அவர்க-ளையும் இந்த நேரத்திலே பாராட்டி இரு குடும்பத்-தவர்களையும் பாராட்ட இந்த குடும்பங்கள் எல்-லாம் நம்முடைய சுயமரி-யாதைக் குடும்பங்கள்.

தமிழர்களுக்கு சங்கடம் என்றால்

தமிழர்களுக்கு எங்கோ ஒரு மூலையில் சங்கடம் ஏற்பட்டால் அதற்கு துடித்தெழக் கூடியவர்-களாக நாம் இருக்க வேண்டும். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீர-மணி உரையாற்றினார்.

முத்தமிழ்மன்ற விழா

தந்தை பெரியார் முத்-தமிழ்மன்ற முதல் நாள் விழா இயல், நாடக விழாவாக (6.2.2010) சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது-. நடிகர் குமரிமுத்து பங்-கேற்றார். தந்தை பெரி-யார் முத்தமிழ் மன்றத்-தின் 14ஆம் ஆண்டு விழா (முதல் நாள் விழா) சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.-ஆர்.ராதா மன்றத்தில் 6.2.2010 அன்று இரவு 7 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கவிஞர் கலி.பூங்குன்றன்

தந்தை பெரியார் முத்தமிழ்மன்றம் தமிழர் தலைவர் தலைமையில் எப்படி சிறப்பாக இயங்கி தமிழர்களை அடை-யாளம் கண்டு சிறப்பித்து வருகிறது என்பதை கழகப்பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரை-யாற்றினார்.

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வடசென்னை மாவட்ட தி.க தலைவர் கவிஞர் செ.-வை.ர.சிகாமணி அனை-வரையும் வரவேற்று உரையாற்றினார்.

முதல்நாள் விழா இயல், நாடக விழாவாகத் தொடங்கியது. வரியியல் அறிஞர் ச.ராசரத்தினம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து முத்தமிழ்மன்ற விழாப் பெருமையையும், பாராட்டு பெறவிருக்-கின்ற பேராசிரியர் மறைமலை இலக்குவ-னாரையும் பேராசிரியர் மங்கள முருகேசன் அவர்களையும் பாராட்டி வாழ்த்திப் பேசினார்.

இலக்குவனார் படத்திறப்பு

பேராசிரியர் சி.இலக்கு-வனார் படத்தை திராவி-டர் கழக தலைவர் தமி-ழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்-தார்.

பெரியார் விருது முனைவர் மறைமலை இலக்குவனார், முனைவர் ந.க.மங்களமுருகேசன் ஆகியோருக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழா குழு சார்பாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீர-மணி அவர்கள் அனை-வருடைய கரவொலிக்-கிடையே பொன்னாடை அணிவித்து பெரியார் விருதினை வழங்கினார்.

வாழ்க்கை குறிப்புகள்

பேராசிரியர் முனை-வர் மறைமலை இலக்கு-வனார் வாழ்க்கைக் குறிப்பை பெரியார் நூலக வாசகர் வட்ட துணைச் செயலாளர் சுப்பிரம-ணியம் படித்தார். பேராசி-ரியர் முனைவர் ந.க.மங்-கள முருகேசன் வாழ்க்-கைக் குறிப்பை தலை-மைச் செயற்குழு உறுப்-பினர் க.பார்வதி படித்-தார்.

மங்கள முருகேசன்

பேராசிரியர் மங்கள-முருகேசன் தமது ஏற்பு-ரையில் திராவிடர் இயக்க உணர்வோடு நூல்-களை எழுதி வருவதையும், பேசி வருவதையும் குறிப்-பிட்டார். பெரியார் விருது வழங்கிய தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்ததோடு, உலகத் தலைவர் பெரியார், அன்னை மணியம்-மை-யார் வாழ்க்கை வரலாறு பற்றியும் நூலாக எழுதி வருவதை விவரித்தார்.

மறைமலை இலக்குவனார்

அடுத்து மறைமலை இலக்குவனார் தமது ஏற்புரையில், தமிழர் தலைவரால் பெரியார் விருது பெற்றதை பெரு-மையாகக் கூறினார். தமிழின உணர்வோடு தந்தை பெரியார் கொள்கை வழிநின்று தமது பாடு-பட்டு வருவதை எடுத்துக் கூறினார்.

நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்-றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலைமாமணி நடிகர் குமரிமுத்து உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வந்து பங்கேற்றார். நாடகம்

அடுத்து அன்னை மணியம்மையார் கலைக் குழுவினர் சார்பில் கழக கலைத்துறை அமைப்-பாளர், பகுத்தறிவுக் கலைச்சுடர், இனமான நடிகர் மு.அ.கிரிதரன் இயக்கிய அகல்யா என்ற சமூக சீர்திருத்த நாடகம் நடைபெற்றது. நாடகத்தின் இடை-வேளை நேரத்தில் நா-டகத்தில் நடித்த கலைக் குழுவினரை பாராட்டி பேசினார். அதில் பங்-கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசினை தமிழர்தலைவர் கி.வீர-மணி அவர்கள் வழங்கி-னார்.

மீண்டும் நாடகம் தொடர்ந்து நடந்து இரவு 10 மணிக்கு முடி-வுற்றது. நாடகத்தைப் பார்த்த அனைவரும் இடையிடையே கர-வொலி எழுப்பி நாட-கத்தை மகிழ்ந்து பார்த்-தனர். தி.பெரியார் சாக்-ரட்டீஸ் நன்றி கூறினார்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

பத்திரிகைகள்

விஷயங்களால் தான் மனிதன் அறிவு பெற முடியுமே தவிர விஷயங்களே காதிற்கு எட்டாமல் செய்துவிட்டால், எப்படி மனிதன் அறிவாளியாக முடியும்? அதைத்தான் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்து வருகின்றன.

(விடுதலை, 14.7.1970)


வாழ்க இலக்குவனார்!

என் வாழ்க்கையே தமிழ் நலம் நாடிய போராட்டக் களம்தான்; இளமையில் வறுமையோடு போர்; ஜாதியோடு போர்; சமயத்தோடு போர்; மூட நம்பிக்கைகளோடு போர்; போர்! போர்!! என்றும் ஓயாத போர்! என்று தன்னிலை விளக்கம் கொடுத்த தன்மானப் பெரும்புலவர் பேராசிரியர் சி. இலக்-குவனார் அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டு இது (17.11.1909 _ 3.9.1973).

திராவிட இயக்க இப்பெரும் புலவருக்கு திராவிடர் கழகம் இன்று நூற்றாண்டு விழா எடுப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் ஒரு கட்டத்தில் தமிழாசிரியர் பெரு-மக்கள்தான் தந்தை பெரியார் அவர்களின் தன்மான உணர்வுக் கருத்துகளை ஊட்டியவர்கள் ஆவர். அதில் இலக்குவனாருக்குத் தனித்த சிம்மாசனமே உண்டு.

தமிழ்மொழியை காக்கவும், வளர்க்கவும் மதுரையில் தமிழ்க் காப்புக் கழகம் நிறுவினார். அந்த அமைப்பின் சார்பில் மாணவர்களுடன் ஊர்வல-மாகச் சென்று கடைப் பெயர்களைத் தமிழில் எழுதுமாறு கோரினார். அவர் உருவாக்கிய தமிழ்க் காப்புக் கழகத்தின் குறிக்கோள் என்ன தெரியுமா?

புரட்சிக்கவிஞரின் தமிழ் இயக்கம்தான். இலக்குவனாரின் இலக்கு ஏற்றமிக்கது என்பதற்கு ஈடில்லா இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?

எங்கு சென்றாலும் தமிழ், தமிழர் என்று மொழிமான இனமான உணர்வு, எந்த ஓரிடத்திலும் அவரை நிலையாகப் பணியாற்றிட விடவில்லை. 1936 முதல் 1971 வரை உள்ள அந்தக் காலகட்டத்தில், 35 ஆண்டுகளில் அவர் பணியாற்ற நேர்ந்த இடங்களின் எண்ணிக்கை பதினொன்று என்றால், அதன் தன்மையைத் தக்க முறையில் உணர்ந்துகொள்ளலாம்.

புலவர் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோதே வடமொழியை எதிர்த்துப் புலியெனப் பாய்ந்தவர். திருவையாறு கல்லூரியின் முதல்வர் பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர் வடமொழியைத் தூக்கி தமிழ் மொழியைத் தாழ்த்தும் பார்ப்பனர்; தனித்-தமிழ் வீரராக விளங்கிய அந்தப் புலிக்குட்டியின் பாய்ச்சலை அவர் எப்படித்தான் பொறுப்பார்? தொல்-லைகள் பல கொடுத்தார். பணிந்தாரில்லை இலக்கு-வனார். தகுதியற்ற தலைவரின்கீழ் தமிழ்க் கல்லூரி-யின் நிலை என்ற துண்டறிக்கை ஒன்றினை வெளி-யிட்டு தமிழ் உணர்ச்சியின் வெப்பத்தை வெளிப்படுத்தினார்.

கம்பன் கழகத்தார் கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்; சங்கத் தமிழை வங்கக் கடலில் எறிவோம் என்று முழக்கமிட்டபோது, அதனை எதிர்த்துப் பொடியாக்க சங்க இலக்கியம் என்ற இதழைத் தொடங்கிய தமிழ்த் தொண்டர் அவர்.

அரசியல் காரணங்களுக்காக விருதுநகர் கல்லூரியிலிருந்து அவரை விலக்கியபோது தந்தை பெரியார் தீட்டிய எழுத்துகள் ஒன்றுபோதும் இலக்குவனாரின் புகழ்பாட!

தமிழ்ப் பற்று காரணமாக இலக்குவனார் பழிவாங்கப்பட்டு, வேலையை விட்டுத் துரத்தப்பட் டிருக்கிறார். இவரைப்பற்றி நினைக்கும்பொழுதெல் லாம் நம் ரத்தம் கொதிக்கிறது. மனம் பதைக்கிறது. தமிழனுக்கும், தமிழுக்கும் பாடுபட்ட இவர் நிலையைப் பார் என அபாய அறிவிப்புக் கை காட்டியதாகத் தமிழ் அறிஞர் காட்சியளிக்கிறார் என்று தந்தை பெரியார் பதறி எழுதும் அளவுக்கு இலக்குவனார் இனவுணர்வின் இமயமாக எழுந்து நின்றுள்ளார்.

இந்தி எதிர்ப்புக் காலகட்டத்தில் 1965 இல் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (DIR) மூன்றரைத் திங்கள் சிறை வாசமிருந்தார்.

புலவர் வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தவர், தமிழ் மொழியின் தோற்றமும், வளர்ச்சியும்பற்றி ஆய்வு செய்து எம்.ஓ.எல். பட்டத்தை சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெற்றார். சங்க இலக்கியம், திராவிடக் கூட்டரசு, குறள்நெறி, (Dravidian Federation, Kural Neri) ஆகிய இதழ்களை அவ்வப்போது நடத்தி நட்டப்பட்டுள்ளார். 14 ஆய்வு நூல்களையும், நான்கு கவிதை நூல்களையும் தமிழுலகுக்குத் தந்த பெருமகன் அவர். ஆங்கிலத்தில் இவர் மொழி பெயர்த்த தொல்காப்பியத்தைத்தான் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் யேல் பல்கலைக் கழகத்திற்குச் செல்லும்பொழுது எடுத்துச் சென்றார்.

நெடிய உருவம், வீரம் கொப்பளிக்கும் நேர் கொண்ட பார்வைக்குச் சொந்தக்காரரான திராவிடர் பேரியக்கத்துக்குரிய அந்த மாபெரும் புலவரின் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் இன்று பெருமையுடன் கொண்டாடுகிறது.

திராவிடர் இயக்கத்தின் தன்னிகரில்லாத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அவரின் படத்-தினைத் திறந்து வைப்பதும், இலக்குவனாரின் அருமை மகனார் முனைவர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்குப் பெரியார் விருது அளித்துப் பாராட்டுவதும் பொருத்தம்தானே!

இலக்குவனார் ஊட்டி வளர்த்த அந்தத் தமிழ் உணர்வு, இன உணர்வு மேலும் கூர்தீட்டப்பட வேண்டிய காலம்தான் இது. இந்நாளில் அதனை நினைவூட்டுவோம்! வாழ்க இலக்குவனார்!!