mother லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mother லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

மகனை க் காக்க உயிரை ப் பணயம் வைத்த தாய் - Mother saves her son

மகனை க் காக்க உயிரை ப் பணயம் வைத்த தாய்

மூணாறு: நீச்சல் தெரியாத தாய், 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த, தன், இரண்டு வயது மகனை, உயிரை பணயம் வைத்து, கிணற்றில் குதித்துக் காப்பாற்றினார்.

கேரளா, இடுக்கி மாவட்டம், தொடுபுழாவைச் சேர்ந்த தம்பதி, ஜோஷி-சுஜா. தன், இரண்டாவது மகன் ஸ்ரீகுட்டனுடன், சகோதரி சுமித்ரா வீட்டிற்கு, சுஜா சென்றார். அங்கு, ஸ்ரீகுட்டனை குளிப்பாட்டத் தயாரானார். மறுத்த சிறுவன், போக்குக்காட்டி ஓடிய போது, சுற்றுச்சுவர் இல்லாத, 30 அடி ஆழ கிணற்றில் விழுந்தான்.கிணற்றுக்குள் மகனின் அழுகுரலைக் கேட்ட சுஜா, நீச்சல் தெரியாவிட்டாலும், உள்ளே குதித்தார். மகனை மீட்டு, அங்குள்ள குழாயைப் பிடித்துத் தத்தளித்தார். இவர்களின் அபயக்குரல் கேட்டு, அப்பகுதியினர் மீட்டனர்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

பின்னதாகச் செல்ல வேண்டிய இடத்தில் முன்னதாகத் தவிக்க விட்ட மகன்

உணவு வாங்கி வருவதாக ஏமாற்றி பெற்ற தாயை மயானத்தில் தவிக்க விட்டுச்சென்ற மகன்
உணவு வாங்கி வருவதாக ஏமாற்றி பெற்ற தாயை மயானத்தில் தவிக்க விட்டுச்சென்ற மகன்
நகரி, ஆக. 1-

ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பைடிதல்லி (வயது70). இவரது மகன் சீனு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.

சீனுவின் தாயார் பைடிதல்லிக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பைடிதல்லி அங்கு இருப்பது சீனுவின் மனைவிக்கு பிடிக்கவில்லை. அவரை எங்காவது கொண்டு விட்டு விடுமாறு சீனுவை மனைவி அடிக்கடி நச்சரித்தார்.

இதனால் சீனு மனதை கல்லாக்கிக் கொண்டு தாயை எங்காவது விட்டுவிட முடிவு செய்தார். சம்பவத்தன்று வெளியில் சென்று வரலாம் என்று சீனு தாயாரை அழைத்து சென்றார். அவர்கள் விசாகப்பட்டினத்தில் வந்து இறங்கினார்கள். பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தாயரை சீனு அழைத்து சென்றார்.

ஸ்ரீராம் நகரில் உள்ள மயானம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்தினார். அங்கு தாயாரை இறக்கி விட்டார். நான் சென்று சாப்பிட ஏதாவது வங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி விட்டார்.

மகன் சாப்பாடு வங்கி வருவான் என்று பைடிதல்லி காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் மகன் வராததால் அவர் அங்கேயே தவித்தார். எப்படியாவது மகன் வந்து விடுவான் என்ற எண்ணத்தில் 10 நாட்களாக அவர் மயானம் அருகிலேயே பட்டினியுடன் கிடந்தார். ஆனால் மகன் வராததால் அவர் மெல்ல மெல்ல நடந்து அருகில் இருந்த ஊருக்குள் சென்று பசியால் மயங்கி கீழே விழுந்தார்.

அந்த பகுதி மக்கள் அவருக்கு உணவு கொடுத்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பைடிதல்லியை மீட்டு விசாரித்தனர். மகனை கண்டுபிடித்து அவரிடம் பைடிதல்லியை ஒப்படைக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

திங்கள், 25 ஜூன், 2012

என்னோட நியூயார்க் வந்துடும்மா...

ஏமாற்றுதல், மோசடி, நயவஞ்சகம் முதலான பல குற்றங்கள் புரிந்ததுடன் பெற்றதாயின் மனத்தைக்    கொலை செய்த பாவி இருக்கும் ஊரிலும் பணியாற்றும் இடங்களிலும் இத்தகவலைப் பரப்புங்கள். இக் கொடுமையை நினைக்கும் பொழுது ஒன்றும் எழுத வரவில்லை. வேதனையுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /




என்னோட நியூயார்க் வந்துடும்மா...


[பட உதவி: கூகிள்]
புது தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தின் T3 ஓய்விடத்திலிருந்த இருக்கையில் சரிந்து அமர்ந்திருந்தார் அந்த வயதான பெண்மணி. வாழ்வில் பெற்ற அனுபவங்கள் வரிவரியாக சுருக்கங்களை அவரது தோலில் ஏற்றியிருந்தது. பலவித நாடுகளிலிருந்து வந்த/செல்லும் எண்ணிலடங்கா மனிதர்களுக்கு நடுவே இந்தப் பெண்மணி எங்கே பயணம் செய்யக் காத்திருக்கிறார்? அவரது மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள்தான் என்ன? பார்ப்போமா?


“அப்பாடி…. எவ்வளவு வருடங்கள் ஆயிற்று இப்படி நிம்மதியாய் உட்கார்ந்து. வாழ்வின் தொடக்கத்திலிருந்தே ஓடி ஓடி, மணமுடித்து, “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” என ஒரு மகனைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி என ஓட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. ஒரு வருடமா, இரண்டு வருடமா, கடந்த 72 வருடங்களாக ஓடிட்டே தான் இருந்திருக்கேன்….
ஆச்சு, ஒரே பையனும் கல்யாணம் பண்ணி நியூயார்க்-லயே செட்டிலாயிட்டான். ஆனாலும் எனக்கென்னமோ இந்த தில்லியை விட்டு போகணும்னு நினைச்சுக்கூட பார்க்கமுடியல. வயசு தான் ஏறிட்டு போகுதே, எப்படி தனியாக இருக்க முடியும்னு அப்பப்ப மனசுல தோணிட்டே இருந்தாலும், ஏனோ போக மனசு வரல. ஆனா இந்த ஒரு வருஷமா உடம்பு ரொம்பதான் படுத்துது. எவ்வளவு நாள் தான் ஓட முடியும், என்னிக்காவது ஒரு நாள் உட்கார்ந்து தானே ஆகணும்.
இப்படி ஒரு நாள் உடம்பு சரியில்லாம பக்கத்து வீட்டுக்காரங்க துணையோட ஆஸ்பத்திரி போன போதுதான் என் பையன் அமெரிக்காவிலிருந்து ஃபோன் பண்ணான். “ஏம்மா, இன்னும் எத்தனை நாள் தான் தனியா கஷ்டப்படுவே, இங்கேயே வந்துடேன்னு” கூப்பிட்டான். உடம்பு சரியில்லாத கஷ்டத்திலேயே சரின்னு சொல்லிட்டேன்.
அவனும் அங்கே இருந்தே, இன்டர்னெட் மூலமா நான் இருந்த எங்க சொந்த வீட்டை விக்கிறதுக்கும், பாஸ்போர்ட், விசா, எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டு, என்னை அழைச்சிட்டுப் போக ஒரு மாசம் முன்னாடி வந்தான். எல்லா வேலையும் கடகடன்னு முடிச்சு, இதோ இங்கே ஏர்போர்ட் வரைக்கும் வந்தாச்சு, அடுத்து நியூயார்க் தான்.”
அவரோட எண்ண ஓட்டத்தை தடை செய்யறமாதிரி, பாதுகாப்பிற்கு நின்றிருந்த ஒரு போலீஸ்காரர், அந்தப் பெண்மணியை “மாதாஜி ரொம்ப நேரமா இங்கே உட்கார்ந்து இருக்கீங்களே, ஏதாவது உதவி வேணுமா?”ன்னு கேட்டார். அட பழைய நினைவுகளில் மூழ்கியதில் நேரம் போனதே தெரியலையேன்னு நினைச்சு சிரிச்சுக்கிட்டே, “என் பையனோட நியூயார்க் போகக் காத்திருக்கேன், உள்ள போய் போர்டிங் பாஸ் மத்த ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு வரேன்னு போயிருக்கான், இப்ப வந்துடுவான்”_னு சொல்ல, அவர் விடாம “உங்க பையன் பேர் சொல்லுங்கம்மா, நான் விசாரிச்சு சொல்றேன்னு” பேர் கேட்டுட்டு உள்ளே போனார். 

[பட உதவி: கூகிள்]
உள்ளே போய் அரை மணி நேரம் கழித்து வந்த போலீஸ்காரர் முகத்தில் ஒரு வித அதிர்ச்சியும், அயர்ச்சியும். ”ஏம்மா, நல்லாத் தெரியுமா, உங்க பையன் உங்களுக்கும் டிக்கெட் வாங்கி இருக்காரான்னு?, ஏன்னா அவர் ஒரு மணி நேரம் முன்பு கிளம்பின நியூயார்க் விமானத்திலே போய்ட்டாரே…”  ன்னு சொன்னதைக் கேட்ட பெண்மணிக்கு மாத்திரமல்ல, நமக்கும் அதிர்ச்சி.
அந்த வயதான பெண்மணிக்கு உட்கார்ந்திருந்தாலும், தரை கீழே நழுவி உள்ளே விழுந்துவிட்டது போன்ற உணர்வு.  “நல்லா விசாரிச்சீங்களா, என் பையன் அப்படி எல்லாம் பண்ண மாட்டானேன்னு” கேட்க, ”நல்லா விசாரிச்சேம்மா, அந்த விமானத்துல அவருக்கு மட்டும் தான் டிக்கெட் வாங்கி இருக்காரு, உங்களுக்கு வாங்கவே இல்லை, விமானம் போயிடுச்சேம்மா” என்று சொல்லி, ”உங்களுக்கு வீட்டுக்கு போகணும்னா சொல்லுங்க, வண்டி ஏற்பாடு பண்ணித் தரேன்னு” சொல்லியிருக்கார்.
இத்தனை வருடம் கஷ்டப்பட்டு, வளர்த்து ஆளாக்கி விட்ட மகன் பணத்திற்காக இப்படிச் செய்வான்னு எதிர்பார்க்காத அந்த பாட்டி அதிர்ச்சியில் அங்கேயே மயங்கிச் சரிந்தார். செல்வதற்கு வீடும் இல்லாமல், கையில் பணமும் இல்லாது என்ன செய்ய முடியும் அந்த மூதாட்டியால்? 
பணத்திற்காக பெற்ற தாயையே இப்படி நட்டாற்றில் விட்டுச் சென்ற அவலம் இந்தத் தலைநகர் தில்லியில் உண்மையாகவே நடந்தது. வடக்கு தில்லியில் நிறைய அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஒன்றில் இருந்த ஒரு பெண்மணிக்கு நேர்ந்த கதி இது. விஷயம் கேள்விப்பட்டு அந்தக் குடியிருப்பில் இருந்த சில பெரியவர்கள் அந்த மூதாட்டியை அழைத்து வந்து மேற்கொண்டு என்ன செய்யமுடியுமோ அதைச் செய்தார்கள். இப்படியும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெற்ற தாயை இப்படி நடுத்தெருவில் விட்டுப்போன அந்த படுபாவியை என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்.
மீண்டும் சந்திப்போம்…
வெங்கட்.
புது தில்லி.

செவ்வாய், 20 மார்ச், 2012

breast feeding is best for child's health

சொல்கிறார்கள்                                                                                                                       
தாய்ப்பாலே குழந்தையின் ஆரோக்கியம் குழந்தைகள் நல மருத்துவர் ஆனந்தி:



சுகப்பிரசவம் எனில், குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள்ளாகவும், சிசேரியன் எனில், நான்கு மணி நேரத்திற்குள்ளாகவும், தாய்ப்பால் புகட்ட வேண்டும். பிரசவித்த தாய்மார்களுக்கு, முதலில் சுரக்கும் சீம்பால், 10 முதல், 40 மில்லியே இருக்கும். ஆனால், அதில் அடங்கியுள்ள சத்துக்களும், அது தரவல்ல நோய் எதிர்ப்புச் சக்திக்கும் இணை எதுவும் இல்லை. எனவே, தாயின் உடல் சோர்வு, குழந்தையின் அழுகை என எக்காரணம் கொண்டு, தவறவிட்டு விடாமல், சீம்பாலை கட்டாயமாக குழந்தைக்குப் புகட்ட வேண்டும்.பொதுவாக குழந்தை பிறந்த இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும். அதற்குத் தேவையான பால், இயற்கையாகவே தாயின் உடலில் சுரக்கும். "எனக்குப் பால் பத்தல' என்ற கவலை மூடத்தனம். சீம்பாலுக்கு, அடுத்து சுரக்கும் பால், "போர் மில்க்...' அதையடுத்து, "ஹைண்ட் மில்க்' - இவையிரண்டும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை. "போர் மில்க்' தண்ணீராகவும், அடுத்து சற்று அடர்த்தியான கொழுப்பு, புரதம் என அனைத்து சத்துக்களும் அடங்கிய, "ஹைண்ட் மில்க்! இது, குழந்தைக்குத் தேவையைப் பூர்த்தி செய்யும்.தாயின் ஆரோக்கியம் தான் சேய்க்குப் பால் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் என்பதால், தாய்ப்பால் புகட்டுவதற்கு முன், தாய் ஒரு டம்ளர் ஜூஸ் அல்லது பால் அருந்துவது நல்லது. சரியான முறையில் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டாவிட்டால், அதன் சுரப்பு குறைந்துவிடும். அமைதியான, காற்றோட்டமான அறையில் பால் புகட்ட வேண்டும். சிசேரியன் ஆன, தாய்மார்கள் ஆனாலும், படுத்த நிலையில் குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது.குழந்தையின் தலையை கையில் தாங்கிக் கொண்டு, தலை முடியை கோதி விடுவது, காதை மென்மையாக வருடுவது, உடலை வருடுவது போன்ற, அன்பான அரவணைப்பை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட அதிக பருமன், தாய்ப்பால் புகட்டும் போது, குறைந்து விடும். இதனால், கொழுப்புச் சத்து குறைவதுடன், கருமுட்டை புற்றுநோய், மார்பகப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

ஞாயிறு, 18 மார்ச், 2012

International mother lagnguage day by thamizh meetpu kuuttamaippu

                         ஞாலத் தாய்மொழி நாள்
                  ஞால உழைக்கும் மகளிர் நாள்
                                   கருத்தரங்கம்

                     தி.ஆ.பங்குனி 5, 2043 / 18.3.2012  ஞாயிறு  பிற்பகல் 3.00 மணி

                தேசிய விண்மீன் பள்ளி, வ.உ.சி.தெரு, அரும்பாக்கம், சென்னை 106

தலைமை:                                                                      அ.சி.சின்னப்பத் தமிழர்
வரவே ற்பு:                                                                   கிள்ளிவளவன்
விளக்கவுரை:
தாய்மொழி நாள் :                                                      இலக்குவனார் திருவள்ளுவன்
உழைக்கும் மகளிர் நாள்:                                      கார்குழலி
மார்க்சியமும் பெண்ணுரிமையும் :               குமரன்
அம்பேத்கரும் பெண்ணுரிமையும்:               தமிழ்மறையான்
தமிழ் இலக்கியமும் பெண்ணுரிமையும்:  மா.வீர அரசு
பெரியாரும் பெண்ணுரிமையும்:                  சிவ.காளிதாசன்
பங்கேற்பாளர் சிறப்பித்தல் :                         விசய்  & வேம்பார் சித்திரவேல்
நன்றி:                                                                        தமிழேந்தி

                      ஒருங்கிணைப்பு :  தமிழ் மீட்பு அமைப்புகளின் கூட்டமைப்பு
                        பேசி :  99411 41894

திங்கள், 12 செப்டம்பர், 2011

daily one time food-mother of Santhan: அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்!- சாந்தனின் தாய்

என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்!- சாந்தனின் தாய்

என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்…எந்தப் பிழையும் செய்யாமல் மாட்டிக்கொண்ட என்ட பிள்ளை, எங்களுக்கு வேணும் அய்யா… வேணும்!” என்று மனம் வெடித்து அழுதார் மரணதண்டனைக் கைதிகளில் ஒருவரான சாந்தனின் தாயார்.
மரண வாசலில் இருந்து மீண்டு நிற்கும் மூவரில், சற்று வித்தியாசமானவர் சாந்தன். சாய்பாபாவின் தீவிர பக்தரான இவர், சாய் பக்தர்கள் குழாம் ஒன்றையே சிறையில் உருவாக்கிவிட்டார்.
சாந்த சொரூபியாக வலம் வரும் சாந்தன் பேசுவது ரொம்பவும் குறைவு. பெயர் மாற்றக் குழப்பத்தால் ராஜீவ் வழக்கில் சேர்க்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும் இவருக்கு, ‘ஈழத்தில் இருக்கும் தாய், தந்தையர் உயிரோடு இருக்கிறார்களா? அவர்களின் கதி என்ன?’ என்றே தெரியவில்லை.
அந்தத் துயரத்தை ஜூனியர் விகடன் வாயிலாகவும் வெளிப்படுத்தி இருந்தார்!
பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு மிகவும் சிரமப்பட்டு, இலங்கையில் வசித்து வரும் சாந்தனின் தாயார் மகேஸ்வரி அம்மாளைக் கண்டுபிடித்துத் தொடர்புகொண்டோம்.
‘தமிழகத்தில் இருந்துபேசுகிறோம்…’ என்றவுடனே, அவர் குரலில் பரவசம் பரவ… திக்குமுக்காடிப் போனார். சட்டென்று அவருக்கு வார்த்தைகளும் வரவில்லை. பின்னர், தீராத அந்த சந்தோஷத்துடன் பேசினார்.
‘எங்கட பிள்ளைக்காக எங்களால போராட முடியலை… உங்கட முதலமைச்சர் அம்மாவுக்கு நன்றியும் வணக்கமும். அங்க போராடற அத்தனை தமிழ்நாட்டு மக்களுக்கும் எங்கட நன்றியைத் தெரிவிச்சுக்கொள்றம். உங்க எல்லாரையும் தெய்வம் போல நாங்க நினைக்கிறம்!” என்ற அவரிடம் சாந்தன் பற்றிக் கேட்டோம்!
ஐயா, எங்கட பிள்ளை படிச்சுப்போட்டு… வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக ஆசைப்பட்டு அங்க வந்தார். பிள்ளைக்காக எங்கட சொந்தக் காணியை (நிலம்) ஈடு வெச்சு, பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாட்டுக்கு அனுப்பினம்.
ஆனா, ஐயா அங்க என்ன நடந்ததென்டே தெரியாது. எங்கட பிள்ளைய பிடிச்சுவச்சுக்கொண்டு, இவ்வளவு காலம் வெச்சிருக்கிறாங்கள். அவரை விட்டுடுவாங்கள் என்ற நம்பிக்கையிலதான் உறுதியோடு இருந்தம். ஆனா, திடீரென்டு இடிபோல செய்தி வந்தது ஐயா…”
தொடர்ந்து அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், ”10 மாசம் சுமந்து பெத்த அந்தப் பிள்ளைய, 20 வருஷமா பார்க்காம இறக்கிறம் ஐயா… 20 வருஷத்தில இடையில ஒருமுறைகூட அவரைப் பார்க்க ஏலலை (இயலவில்லை)… வேலைக்காக வெளிக்கிட்டவர், (புறப்பட்டவர்) தன்னோட தம்பி ஆசையா கேட்ட பலூன் வாங்கித் தந்து போட்டுப் போனார்.
தங்கை மேல அவருக்கு ரொம்பப் பிரியம்… தங்கை சைக்கிள் ஓட்டி விழுந்துபோட்டால் என்டு சொல்லி, தானே அவளை ட்யூஷனுக்குக் கூட்டிக்கொண்டு போவார். அந்த அளவுக்குச் செல்லம்…
புறப்பட்டுப் போனபோதுகூட, தங்கையின் கையப் பிடிச்சுக்கொண்டு, ‘அம்மா பாவம்… நம்ம வெச்சுக்கொண்டு கஷ்டப்படுறாங்க. வெளிநாட்டுக்குப் போய் அண்ணன் உழைச்சு பணம் அனுப்புறன். தம்பியும் நீயும் கனக்கப் படிச்சு, டாக்டரா வரவேணும்’ என்டு கனக்க புத்திமதி சொல்லிக்கொண்டு போனார்.
அந்த பிள்ளையத்தான், பிடிச்சுப் போட்டுட்டாங்கள்… எங்களால் ஒண்டும் செய்ய முடியேல்ல. 20 வருடங்கள் ஓடிப்போயிட்டது… எங்கட பிள்ளை எப்படி இருக்கிறார்? அவருடைய தோற்றம் எப்படி இருக்குது? காணக் கொடுத்து வைக்கலையே, ஐயா…
எங்கட குடும்பத்தைக் காப்பாத்துவார் என்டுதான் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பிச்சு வெச்சம். கடவுள் இப்படிச் செய்திட்டாரே?
என்ட கணவருக்கு 70 வயது. அவருக்கும் உடல் நிலை மோசம். ஒரு கண் பார்வை குறைஞ்சிட்டது. அவரையும் பார்த்துக்கொண்டு, என்ட பிள்ளையப் பார்க்க முடியாத நிலைமை… ரெண்டு பேராலயும் தூரப் பயணம் செய்யமுடியாது.
வறுமை இன்னொரு பக்கம்… வயோதிக காலத்தில சரியான கஷ்டம், துன்பம் அய்யா! கிடைக்கிற கூலித்தொழிலைச் செய்து, கஷ்டப்பட்டுத்தான் ஜீவியம் பண்ணிக்கொண்டு இருக்கிறம்…
என்ட கணவர் கடுமையான வேலைகளைச் செஞ்சுதான் நாளாந்தம் செயல்பட்டுக்கொண்டு இருந்தவர். இந்தியா ஊடாக வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வந்த பிள்ளைய, அங்க பிடிச்சுப் போட்டதில் இருந்தே மனுஷருக்கு உடம்பு போச்சுது.
இடையில ஒரு முறை (2000, தி.மு.க. ஆட்சியில்) பிள்ளைக்கு கருணை மனு போட்டதில, நல்ல உத்தரவை நம்பிக்கையா எதிர்பார்த்தோம், ஆனா, அதில பெரிய ஏமாற்றம். அப்போது முதலே அவருக்கு உடம்பு பிரச்னையாகிப் போயிட்டது…
தொடர்ந்து மருத்துவ சிகிச்சையால குணமாக்கிக்கொண்டு வாறம். இருந்தாலும் அவரால சகஜமா செயல்படமுடியாத நிலைமை… 20 வருஷமா விரதம் இருக்கிறதால, என்னுடைய உடம்பும் மோசமாயிட்டது. ஏற்கெனவே, எங்களுக்கு உடல்நலப் பிரச்னைகள். அதனால செயல்பட முடியலை… வந்து பார்க்க முடியலை.
இன்னும் கொஞ்ச காலம்தான் உயிரோட இருப்போமென்டு இருக்கிறம். எங்கட பிள்ளைய பார்க்கவேணும். அவருக்கு என்ட கையால சாப்பாடு கொடுக்க வேணும்… (அழுகை பீறிட்டவருக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை. அழுகையோடு தொடர்கிறார்)
என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன். அதுவரைக்கும் ஒரு வேளைச் சாப்பாடுதான்…
எந்தப் பிழையும் செய்யாமல் மாட்டிக்கொண்ட என்ட பிள்ளை, எங்களுக்கு வேணும் அய்யா… வேணும்!” என்று மனம் வெடித்து மீண்டும் அழத் தொடங்கியவரை, நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த ஈழத் தமிழ் அப்பாவித் தாயின் ஓலத்துக்கு பலன் கிடைக்குமா?
ஜூனியர் விகடன்
Short URL: http://meenakam.com/?p=34807