learn thamizh லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
learn thamizh லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 மார்ச், 2012

Chinese student studying Tamil/Thamizh - சாதனைக்காக தமிழ் கற்கும் சீன மாணவி!

சாதனைக்காக தமிழ் கற்கும் சீன மாணவி!

First Published : 23 Mar 2012 02:17:14 AM IST


புதுச்சேரி, மார்ச் 23:   தொழிலில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனாவைச் சேர்ந்த மாணவி ஜெயா (எ) லீலூஸ் (படம்) தமிழ் கற்று வருகிறார். சீனாவில் பெய்ஜிங் பகுதியைச் சேர்ந்தவர் லீலூஸ். இவர் சீனாவில் உள்ள கம்யூனிகேஷன் யுனிவர்சிட்டி ஆப் சீனா என்ற பல்கலைக்கழகத்தில் ஆர்வமுடன் தமிழ் பயின்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு சீனாவில் உள்ள தமிழ் வானொலியில் வேலை கிடைத்தது. சீன மொழியில் இருக்கும் செய்திகளை இவர் தமிழில் மாற்றித் தர வேண்டும் என்பதே இவரது பணி. இப் பணியை இவர் தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார். லீலூஸ் என்ற சீனப் பெயரையும் இவர் தமிழர்களின் பெயருக்கு தகுந்தாற்போல் ஜெயா என்று மாற்றிக் கொண்டார்.எழுத்து வடிவில் இருக்கும் தூய தமிழைப் போல் இவர் பேசுகிறார். இந் நிலையில்  தமிழர்கள் பேச்சு வழக்கில் மொழியை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று அறிவதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி வந்த இவர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 5 மாதமாக பேச்சு வழக்கில் உள்ள தமிழை பயின்று வருகிறார். இவருக்கு பேராசிரியர்கள் ரவிசங்கர், பரசுராம் ஆகியோர் தமிழ் கற்றுக் கொடுக்கின்றனர்.இது குறித்து ஜெயா (எ) லீலூஸிடம் கேட்டபோது, நான் தமிழ் வானொலியில் பணி செய்வதால் தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டது. சீனாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் பயின்றேன். அங்கு பேச்சு வடிவில் மக்கள் எவ்வாறு தமிழை பேசுகிறார்கள் என்பதை பயில்வதற்கான வசதி இல்லை. பேச்சு வடிவிலான தமிழ் தெரிந்தால் எனது தொழிலில் சாதிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கருதினேன். இதனால் இங்கு தமிழ் பயின்று வருகிறேன் என்றார்.இவரது கணவர் வாங்க் ஹுயும் உறுதுணையாக இவருடன் புதுச்சேரி வந்து தங்கியுள்ளார். தமிழ் கற்று சாதிக்க நினைக்கும் சீன மாணவியின் செயல்பாடு தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வெள்ளி, 7 ஜனவரி, 2011

Web for Learn Thamizh through english: ஆங்கில வழியில் தமிழ் கற்க புதிய இணையதளம் தொடக்கம்

பாராட்டுகள். இப்போதைக்கு நடைமுறையில் இருக்கும் பிற இணைய தளங்களில்  இருந்து மாறுபட்டுத் தமிழ் மரபினையும் தமிழ் உணர்வினையும் கலந்து கற்பிக்கும் வகையில் பாடத்திட்டங்களை அமைக்க வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


ஆங்கில வழியில் தமிழ் கற்க புதிய இணையதளம் தொடக்கம்

First Published : 07 Jan 2011 01:19:38 AM IST


சென்னை, ஜன. 6: ஆங்கில வழியில் தமிழ் கற்பதற்கான புதிய இணையதளத்தை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.  "காவ்யா கிரியேடிவ் மீடியா' என்ற நிறுவனத்தின் சார்பில் "தமிழ் டைஜஸ்ட்' என்ற இந்தப் புதிய இணையதளத்தின் மூலம் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழை எளிதாகக் கற்கலாம்.  உரையாடல்கள், விளையாட்டுகள், பயிற்சிகள் மூலம் தமிழ் கற்பிக்கும் புதிய முறையை இந்த இணையதளம் அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் பேசியதாவது: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களது குழந்தைகள் தமிழ் கற்பதை மிகவும் விரும்புகின்றனர்.  ஏனெனில், பெரும்பாலான குழந்தைகள் இளம் வயது முதல் ஆங்கில வழியில் கல்வி கற்பதால் தமிழ் கற்க வாய்ப்பு கிடைப்பது இல்லை.  இவர்களுக்கு முதல்முறையாக இப்போது இணையதளத்தில் ஆங்கிலம் மூலம் தமிழைக் கற்க வாய்ப்பு வழங்கியுள்ளது புதிய முயற்சி ஆகும்.  தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் ஆங்கிலத்தில் பேசுவதில் சிறப்பான திறன் பெற்று விளங்குகின்றனர்.  தாய்மொழி என்பது தாய்ப்பாலுக்கு நிகரானது. காந்தியடிகள் தனது சுய சரிதத்தை தனது தாய்மொழியான குஜராத்தியில்தான் எழுதினார். தாய்மொழியில்தான் எல்லா உணர்வுகளையும் சிறப்பாக வெளியிட முடியும்  உலகில் உள்ள எந்த மொழியைக் காட்டிலும் இனிமையும், சொல் வளமும் மிக்கது தமிழ். காந்தியடிகள்கூட திருக்குறளைப் படித்தபின் அடுத்த பிறப்பு இருந்தால் தமிழகத்தில் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் என்றார் அமைச்சர் ஜெகத்ரட்சகன்.