labourer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
labourer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 ஜூன், 2012

Engineer work as labourer :சிற்றாள் வேலைக்குத் தகுதி பொறியியல் படிப்பா?


சித்தாள் வேலை செய்யும் சிவில் இன்ஜினியர்கள்

மேட்டூர்:மேட்டூர் புதுஅனல்மின் நிலையத்தில், முன்னுரிமை அடிப்படையில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், சிவில் இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் பலர், சித்தாள் வேலையும், பி.இ., மெக்கானிக் படித்தவர்கள் வெல்டிங் வேலையும் செய்கின்றனர்.
மேட்டூரில், 3,550 கோடி ரூபாய் செலவில் புதிதாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி, 2008 ஜூன் 25ல் துவங்கியது. கடந்த செப்டம்பர் மாதம் கட்டுமான பணி முடிந்து, மின் உற்பத்தி துவங்க வேண்டும்.கட்டுமான பணி தாமதம் காரணமாக இன்னமும் மின் உற்பத்தி துவங்கவில்லை.

சோதனை ஓட்டம்:கடந்த, மார்ச் இறுதியில் ஆயில் மூலம் "சோதனை ஓட்டம்' நடத்தப்பட்ட நிலையில், மின் உற்பத்தி துவங்க மேலும் பல மாதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது' "புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணியில்', சப்-கான்ட்ராக்டர்களில் கீழ், 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் பலர், பி.இ., மற்றும் டிப்ளமோ சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் படித்தவர்கள். சப்-கான்ட்ராக்டர்கள் இவர்கள் தகுதிக்கு ஏற்ற வேலை தருவதில்லை என்ற போதிலும், இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் பலர், புதிய அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கும்போது, தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் பணிபுரிகின்றனர்.

மேட்டூர் அனல்மின் நிலையம், "மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஸ்டாலின்' கூறியதாவது:மேட்டூர் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்டுமான பணியில், 20க்கும் மேற்பட்ட சப்-கான்ட்ராக்ட் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் பகுதியை சேர்ந்த சில அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் புது தெர்மலில் மின் உற்பத்தி துவங்கும் போது, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என கூறி ஏராளமான தொழிலாளர்களை பணியில் சேர்த்து விட்டனர்.இதற்கான தொழிலாளர்களிடம் சிலர் மறைமுக பணம் பெற்றுள்ளனர். புது தெர்மலில் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மேட்டூர் பகுதியை சேர்ந்த, பி.இ., மற்றும் டிப்ளமோ சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் படித்த இளைஞர்கள் பலர் வேலை செய்கின்றனர்.இதில், சிவில் இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் பலர், கூலியாட்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் தாங்களே சித்தாள் வேலையும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் பலர், வெல்டிங் வேலை, வெல்டர்களுக்கு உதவியாளராகவும், எலக்ட்ரிக்கல் படித்தவர்கள் வயரிங் வேலையும் செய்து வருகின்றனர்.

பணமோசடி:இந்நிலையில், மோசடி கும்பலை சேர்ந்த சிலர், புது தெர்மலில் பராமரிப்பு பணிக்கு ஆள் சேர்த்து விடுகிறோம் என, கூறி மறைமுக பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி "தொழிற்சங்கம்' சார்பில் நோட்டீஸ் வெளியிட்டுள்ளோம். கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு புதுதெர்மலில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இதற்கு மின் உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில் மேற்பார்வை பொறியாளர் (பொதுவியல்) எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், "மேட்டூர், 600 மெகாவாட் அனல்மின் நிலைய கட்டுமான பணியில், பி.ஜி.ஆர்., நிறுவனம், துணை நிறுவனங்கள்தான் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமித்துள்ளது. மின்உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில் தொழிலாளர்கள் நியமிக்கபடவில்லை. புதுதெர்மலுக்கு பணியாளர்கள் தேர்வு செய்வது தலைமையின் முடிவை பொறுத்தது, என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.



செவ்வாய், 8 மே, 2012

ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கான பிரித்தானிய வீரர்களின் உடை சிறிலங்காவில் உருவாக்கம்

ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கான பிரித்தானிய வீரர்களின் உடை சிறிலங்காவில் தயாரிக்கப்படுவதால் புதிய சர்ச்சை

SU-20-forcedlabour2-getty
ஒலிம்பிக் நிகழ்வில் பிரித்தானிய வீரர்களுக்கான அதிகாரபூர்வ உடைகளை பிரித்தானியாவின் நெக்ஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், லண்டனிலிருந்து வெளியாகும் இன்டிபென்டன் நாளேடு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஒலிம்பிக் விழாவின் அதிகாரபூர்வ உடைகளைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள நெக்ஸ்ட் நிறுவனத்தின், சிறிலங்காவில் உள்ள தொழிற்சாலையில் குறைந்த ஊதியத்துடன் அளவுக்கதிகமான மேலதிக நேரத்திற்கு, ஏராளமான தொழிலாளர்களிடம் வேலை வாங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியில் அதிகாரபூர்வமாகப் பங்கெடுக்கும் நிறுவனத்தின் தகைமையை கேள்விக்குட்படுத்தக் கூடிய இந்தக் குற்றச்சாட்டை நெக்ஸ்ட் நிறுவனம் மறுத்திருக்கிறது.
ஆனால், இது தொடர்பாக விசாரணை ஒன்றை நடத்துவதற்கு அந்த நிறுவனம் உடன்பட்டிருப்பதாக இன்டிபென்டன் நிறுவனத்தின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நெக்ஸ்ட் நிறுவனத்தின் சிறிலங்கா தொழிற்சாலையில் சுமார் 2500 தொழிலாளர்கள் லண்டன் 2012 என்ற ஒலிம்பிக் விழாவுக்கான உடைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழிமூலம் – பிபிசி

செவ்வாய், 27 டிசம்பர், 2011

Social service by railway labourers: இதுவல்லவோ மனித நேயம்! :




கோவை: கோவையில், ஆதரவற்ற குழந்தைகளை மீட்டு, மறுவாழ்வு அளிப்பதற்கு ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள், பிளாட்பார வியாபாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களை கொண்ட, 50க்கும் மேற்பட்ட, சமூக தன்னார்வ பாதுகாப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இக்குழுவினர், 74 குழந்தைகளை மீட்டுள்ளனர். அந்த சிறுவன் பெயர் சுரேஷ் பாபு. 20 ஆண்டுகளுக்கு முன், கோவையின் ஏதோ ஒரு தெருவில் இருந்து, மீட்டு வரப்பட்ட அந்த சிறுவனுக்கு, கோவை டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில், அடைக்கலம் கிடைத்தது. அந்த சிறுவன் இன்று வளர்ந்து, அதே அன்பு இல்லத்தில் பணியாற்றுகிறார்.
தன்னைப் போன்ற, ஆதரவற்ற சிறுவர்களை மீட்டு, மறுவாழ்வு அளிப்பது தான், அவரது குறிக்கோள். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு பகுதிகளில், உற்றார் உறவினர்களை இழந்து, நிர்கதியாக நிற்கும் ஆதரவற்ற குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறார். இதனால், ரயில்வே தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், பிளாட்பார கடை வியாபாரிகள் என பலருக்கும் அறிமுகம் ஆனார். இவர்களை இணைத்து, "சமூக தன்னார்வலர் குழு' என்ற, மீட்புக்குழுவை அமைத்துள்ளார், சுரேஷ்பாபு.
இவரது முயற்சியால், இன்று ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொது இடங்களில் 50 சமூக தன்னார்வ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 74.

சமூக தன்னார்வ குழுவின் பணி குறித்து, சுரேஷ்பாபு கூறியதாவது: ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்கும், டான் பாஸ்கோ அன்பு இல்லம், சைல்டுலைன் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து இப்பணியை மேற்கொள்கிறோம். எங்கள் குழுவில் இருப்பவர்கள், சாதாரண தொழிலாளர்கள் தான். அன்றாட வருமானத்திற்காக தினக்கூலி செய்யும் ரயில்வே பார்சல் தொழிலாளர்கள், ஆட்டோ - டாக்சி டிரைவர்கள் என, சிலரை தேர்வு செய்து, இந்த குழுவை அமைத்துள்ளோம். ஆதரவற்ற குழந்தைகள், மனநலம் குன்றியோர் என யாராவது ஒருவரைப் பார்க்க நேரிட்டால், தன்னார்வ குழுவினர், உடனடியாக சைல்டுலைன் மற்றும் போலீசாருக்கு, தகவல்களை தெரிவிப்பர். முதலில் குழந்தைகளை மீட்டு, உணவு மற்றும் உதவிகளை அளிப்பர். குழந்தைகள் பேசும் நிலையில் இருந்தால், "சைல்டுலைன்' கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவர். விபத்தில் சிக்கியவர்களை, மருத்துவமனையில் அனுமதிப்பது, ரத்தம் தேவைப்பட்டால் ரத்த தானம் செய்வது,பெற்றோரிடம் கோபித்து வந்த குழந்தைகளுக்கு கவுன்சலிங் அளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். இவ்வாறு, சுரேஷ் பாபு கூறினார்.

சமூக பாதுகாப்பு குழுவில், இடம்பெற்றுள்ள, ரயில்வே பார்சல் தொழிலாளிகள் ராமமூர்த்தி, செந்தில்குமார் கூறியது: வழியும், மொழியும் தெரியாத வட மாநில குழந்தைகள், குடிகார தந்தையால் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட குழந்தைகள், வீட்டு எஜமானர்களின் சித்ரவதையை தாங்க முடியாத வேலைக்கார சிறுவர்கள், தாயின் கள்ளக்காதலனால் விரட்டப்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், மனநலம் குன்றியோர் என, பலரும், கோவையின் பல்வேறு தெருக்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, கோவை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில், சித்தபிரமை பிடித்தது போன்று, முழு நிர்வாணமாக நின்ற 13 வயது சிறுவன் மீட்கப்பட்டான். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உடலும், மனமும் சோர்ந்த நிலையில் நின்ற, அந்த சிறுவனை மீட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது' என்றனர்.

50 குழுக்களில் 900 உறுப்பினர்கள் : சமூக தன்னார்வ பாதுகாப்பு குழுவின், ஒருங்கிணைப்பாளர் ஜாக்குலின் கூறியதாவது: மீட்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் அல்லது உறவினர்களிடம் சேர்ப்பது, பெற்றோரை இழந்த குழந்தைகளை ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்து, அவர்களுக்கு கல்வி உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறோம். சமூக தன்னார்வலர் குழுவில் சேர்ந்துள்ள, ரயில்வே தொழிலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளோம். 50 குழுக்களில் மொத்தம் 900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுடன் அடிக்கடி தொடர்பு வைத்துக்கொண்டு, பணி குறித்து ஆய்வு செய்வோம். மாதாந்திர கூட்டங்கள் நடத்தி பணியின் மேம்பாடு குறித்து விவாதிக்கப்படுகிறது. சிறந்த பணிக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில், குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகள் மனோபாவம், குழந்தைகள் நல திட்டங்கள், சமூக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். குழந்தைகள் கடத்தல், துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வு குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு, ஜாக்குலின் தெரிவித்தார்.

வெள்ளி, 3 ஜூன், 2011

labourer became doctor: a fact: மருத்துவர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல..உண்மை.

உழைத்து முன்னேறும்  மருத்துவர் தேவேந்திரனுக்கும் அவர்  குடும்பத்தினருக்கும் பாராட்டுகள். அவருக்குப்பிறர் உதவியை என்றும் நினைவில் கொண்டு தானும் பிறருக்கு எப்பொழுதும் உதவ வேண்டும் என்னும் மனப்பான்மை நிலைக்க வேண்டும்.பிறருக்கத் தூண்டுதலாக அமையும் வண்ணம் எழுதி உள்ள செய்தியாளர் இராசாவிற்கும் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம்


கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார்.

சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. "எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்' என்றார் தேவேந்திரன்.

வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, "அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க' என்று சொல்கிறார். "நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது' என, தன் சாதனை பயணத்திற்கு, "பிரேக்' போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார்.

நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார். "மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க' என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், "மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும். அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்!'

- அ.ப.இராசா -