வரவேற்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரவேற்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஜூன், 2013

அரசு பள்ளி மாணவர்களுக்கு மயக்கும் வரவேற்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு மயக்கும் வரவேற்பு: மகுடம் சூட்டிய ஆசிரியர்கள்
 
மேட்டுப்பாளையம்: ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, மகுடம் அணிவித்து, "இளவரசர், இளவரசி' பட்டம் சூட்டி, அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் மகிழ்வித்தனர்.

கோவை மாவட்டம், எஸ்.புங்கம்பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, கடந்தாண்டு, 74 குழந்தைகள் படித்தனர். 20 பேர், 6ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்று, வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். கடந்த சில நாட்களாக,பெற்றோரை சந்தித்து ஆசிரியர்கள், ஒன்றாம் வகுப்பில் குழந்தைகளை சேர்க்கும்படி வலியுறுத்தினர். மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களுக்கு கல்வி அளிக்க உள்ளதாக உறுதி அளித்து, பிரசாரம் செய்தனர். நேற்று பள்ளி திறந்ததும், ஒன்பது குழந்தைகள், ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு மகுடம் அணிவித்து, இளவரசர், இளவரசி பட்டம் சூட்டி, ஆசிரியர்கள் மகிழ்வித்தனர். இதனால், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர்; குழந்தைகளும், மிகவும் உற்சாகமாக காணப்பட்டனர். பள்ளி தலைமை ஆசிரியை, கிருஷ்ணவேணி கூறுகையில், ""மே 20ம் தேதியிலிருந்து, இப்பகுதியில் நான்கு கிராமங்களில், வீடு வீடாக சென்று, குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும்படி பிரசாரம் செய்து வருகிறோம்,'' என்றார்.
 

திங்கள், 25 மார்ச், 2013

கெயில் நிறுவன விவகாரம்: முதல் அமைச்சரின் அறிவிப்புக்கு வைகோ வரவேற்பு

கெயில் நிறுவன விவகாரம்: முதல் அமைச்சரின் அறிவிப்புக்கு வைகோ வரவேற்பு

கெயில் நிறுவன விவகாரத்தில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பை மதிமுக வரவேற்பதாக அதன் பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வையே பாழ்படுத்தும் விதத்தில், விவசாய நிலங்களின் ஊடே எரிவாயு கொண்டுசெல்லும் குழாய்களை அமைக்க கெயில் நிறுவனம் அக்கிரமமான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தது.
விவசாயிகளின் எதிர்காலம் அடியோடு நாசமாகின்ற ஆபத்தில் இருந்து அவர்களைப் பாதுகாக்கின்ற விதத்தில், தமிழக முதல் அமைச்சர் மிகச் சரியானதும், மக்கள் நலனைக் காப்பதுமான சீரிய முடிவினை எடுத்து சட்டமன்றத்தில் அறிவித்து உள்ளார்.
விவசாய நிலங்களின் வழியாக எரிவாயுக் குழாய்களை அமைக்கக்கூடாது; நெடுஞ்சாலைகள் ஓராமாகவே குழாய்களைப் பதிக்க வேண்டும்; விவசாய நிலங்களில் தோண்டிய குழிகளை கெயில் நிறுவனமே சமன்படுத்தி, ஏற்பட்ட இழப்புகளுக்கு நட்ட ஈடும் வழங்க வேண்டும்; பதிக்கப்பட்ட குழாய்களை நிலங்களில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என முதல் அமைச்சர் அறிவித்து இருப்பது, விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்து ஆறுதலைத் தந்து உள்ளது.
கெயில் நிறுவனத்தின் தான்தோன்றித்தனமான போக்கைத் தடுத்து, விவசாயிகளைக் காப்பதற்கு தமிழக முதல் அமைச்சர் மேற்கொண்ட இந்த மிகச் சரியான நடவடிக்கையை வரவேற்கிறேன்.
- என்று கூறியுள்ளார்