மருத்துவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

எல்லா க் கட்டிகளும் புற்றுநோய் அல்ல!

எல்லா க் கட்டிகளும்  புற்றுநோய் அல்ல!

மார்பக ப் புற்றுநோய்ச் சிறப்பு மருத்துவர், செல்வி இராதாகிருட்டிணா: நான், சென்னையை சேர்ந்தவள். பெண்களை பொறுத்தவரை, அவர்களுக்கு கேன்சர் இல்லாத கட்டிகள் தான், 80 சதவீதம் வருகின்றன. எனவே, பெண்களுக்கு வருகிற எல்லா கட்டிகளும், "கேன்சர்' எனும், புற்றுநோய் கட்டிகள் தான் என, பயப்பட தேவையில்லை. எனக்கு வந்திருப்பது கேன்சர் கட்டி தான் என, பதற்றமோ, பயமோ அதிகரித்தால், உடனே மருத்துவ பரிசோதனை செய்யலாம். இதன் மூலம், தேவையற்ற மன உளைச்சல் நீங்கும். "மேமோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' மற்றும் திசு பரிசோதனை மூலம், மார்பக புற்றுநோயை தெளிவாக கண்டறியலாம். ஒருவேளை, மார்பக புற்றுநோய் இருப்பதாக, ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்ட்டால், பயப்பட தேவையில்லை. ஏனெனில், குறைந்த செலவிலேயே நிச்சயம் குணப்படுத்தி விடலாம். அப்படி குணமடைந்த பின், எந்த பிரச்னையும் இன்றி நார்மலான வாழ்க்கை வாழலாம். மார்பக புற்றுநோய் என்பது, தொற்றுநோய் இல்லை. இந்நோய் இருப்பதாக கண்டறியப்பட்டால், அப்பகுதியை உடனே அகற்றியாக வேண்டும் என்ற, தவறான கருத்து பெண்களிடம் உள்ளது. கட்டி, ஆரம்ப கட்டத்தில் சிறிதாக இருக்கும் போது, கட்டியை மட்டும் அறுவை சிகிச்சையால் அகற்றலாம். பின், "ரேடியோதெரபி' எனும் கதிர்வீச்சு சிகிச்சை செய்து, மருத்துவ அறிக்கைக்கு பின், "கீமோதெரபி' செய்யலாம். இது, வேண்டாத செல்களை அழிக்க கூடிய திறன் கொண்ட மருந்துகளை, ரத்த ஓட்டத்தில் கலக்க செய்கிறது. இச்சிகிச்சைக்கு, நோயாளியின் வயது, உடல்நிலை, நோயின் தீவிரம் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். ஆனால், நோய் முற்றிய நிலையில், உடலின் மற்ற உடல் உறுப்புகளையும் சிதைக்கும் என்ற நிலையில், அப்பகுதியை அகற்ற வேண்டிய நிலை வரும். எனவே, மார்பக புற்றுநோய் பற்றிய தெளிவான கருத்து மற்றும் விழிப்புணர்வை, மருத்துவர்களிடமிருந்து பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

கருப்ப க் காலத்தில் பல் பிடுங்கலாமா!

கருப்ப க் காலத்தில் பல் பிடுங்கலாமா!

கரு உருவான ஆரம்பத்தில், பல் சொத்தை காரணமாக, கர்ப்பிணிகள் பல் பிடுங்க க் கூடாது என, வலியுறுத்தும் பல் மருத்துவர், ஏமமாலதி: கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதத்தில் தான், குழந்தையின் உடல் உறுப்புகள் வளரும். அச்சமயத்தில், தாயின் பற்களில் ஏதாவது பிரச்னை அல்லது, "இன்பெக்ஷன்' இருந்தால், அது தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு, பல பாதிப்புகளை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தின், முதல் மூன்று மாதங்கள் மற்றும் கடைசி மூன்று மாதங்களில், பல் சொத்தை காரணமாக, பல்லை பிடுங்க முடியாது. மீறி பிடுங்கினால், கர்ப்பிணியால் வலியை தாங்க முடியாது. அதிகப்படியான வலியால், சாப்பிடவும் முடியாது. பல்லின் இன்பெக்ஷனை தடுக்க, பல் வலியை குறைக்க என, எந்த, "ஆன்டிபயாடிக்' மற்றும் வலி நிவாரணி மருந்துகளும் கொடுக்க முடியாது. எனவே, கர்ப்பத்தின் போது பல் பிடுங்குவதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் பல் பிடுங்க வேண்டும் என்ற நேரத்தில், "ரூட் கெனால் தெரபி' செய்யலாம். பல்லையும், பல்லை தாங்கி நிற்கும் எலும்பையும் இணைக்கும், தசைநார்கள் மற்றும் திசுக்களையும் இன்பெக்ஷன் தாக்கினால், "பெரிடான்டைட்டிஸ்' எனும் பிரச்னை ஏற்படலாம். இதனால், பல்லின் தசை நார்களுக்குள் இருக்கும் ரத்த அணுக்கள் உடைந்து, தாயின் உடம்பிற்குள் கிருமிகள் செல்லும். இதனால், கருவின் வளர்ச்சியை பாதிப்பதோடு, கருச்சிதைவு ஏற்படவும், குறைமாத குழந்தை மற்றும் எடை குறைந்த குழந்தையும் பிறக்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது, "புளோரைடு டூத் பேஸ்ட்' மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும், "மவுத் வாஷை' பயன்படுத்தலாம். மசக்கையின் போது, அடிக்கடி வாந்தி வரும். வாந்தி வந்த பின், வாய் கொப்பளிப்பது நல்லது. ஏனெனில், வாந்தியோடு வரும், "ஆசிட்' பல்லை பாதிக்கும். இது போன்ற பிரச்னையை முன்னரே தடுக்க, கருத்தரிக்கும் முன் பல் மருத்துவரிடம் சென்று, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில், நமக்கு தெரியாமல் பல்லில் இருக்கும் சில பிரச்னைகளை, சின்னதாக இருக்கும் போதே சரி செய்யலாம்.

வியாழன், 4 ஜூலை, 2013

மலத்தில் இரத்தம் வெளியேறினால் மருத்துவரை அணுக வேண்டும்

மலத்தில் இரத்தம் வெளியேறினால் மருத்துவரை அணுக வேண்டும்





வாந்தி மற்றும் மலத்தின் வாயிலாக ரத்தம் வெளியேறினால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இரைப்பை, குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர்.ரவி தெரிவித்தார்.
சென்னையில் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் "இரைப்பை குடல் ரத்த கசிவு மையத்தை' சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் டாக்டர் ஆர்.ரவி கூறியதாவது: இரைப்பை மற்றும் குடலில் ஏற்படும் ரத்தக் கசிவானது, ரத்த வாந்தியாகவோ அல்லது மலத்தில் ரத்தம் கலந்தோ வெளிபடுகிறது.
சில நேரங்களில் வயிறு மற்றும் இரைப்பையிலேயே தேங்கிவிடும். இதன் காரணமாக ரத்தம் நிறம் மாற்றமடைந்து வாந்தியெடுக்கும்போது, காபி தூள் போலவும் அல்லது மலத்தில் கருப்பு நிறத்தில் தார்போலவும் தோற்றமளிக்கக் கூடும். இதன் காரணமாக நோயாளிகள் தலை சுற்றல், மயக்கமடைதல், மூச்சுவிட இயலாத நிலை, பலவீனம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
இரைப்பை குடல் ரத்த கசிவு உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்ககூடிய தன்மையைக் கொண்டிருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த இரைப்பை குடல் ரத்த கசிவு மையத்தில் செரிமானப் பாதையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றார் டாக்டர் ஆர்.ரவி.
இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையின் மண்டல இயக்குநர் விஜயரத்னா, இரைப்பை குடலியல் துறை நிபுணர் டாக்டர் பி.பாசுமணி ஆகியோர் பங்கேற்றனர்.

புதன், 24 ஏப்ரல், 2013

கத்தரி வெயில்


அக்னி நட்சத்திரம்!

கத்தரி வெயிலின் தாக்கத்தை, தண்ணீர் மூலம் சமாளிக்கும் முறையை கூறும், மருத்துவர் சவுந்தரராஜன்: நான், ராமச்சந்திரா மருத்துவமனையில், சிறுநீரகத் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றுகிறேன். குழந்தைகள் முதல், வயது முதிர்ந்தவர்கள் வரை, அனைவருமே வெயிலினால் பாதிக்கப்படுவர். கோடை ஆரம்பிப்பதற்கு முன்பே, வெயிலின் தாக்கம் உச்சநிலையில் இருந்தது.தற்போது, 100 டிகிரி பாரன்ஹீட்டை தொடும் வெயில், கோடை வெயிலின் முக்கிய காலகட்டமான, "அக்னி நட்சத்திரம்' எனும் கத்தரி வெயிலின் போது, 110 டிகிரியை தொடும் நிலையில் உள்ளது. இதனால் வேர்க்குரு, நீர்ச்சத்து இழப்பு, அக்கி, தோல் சுருக்கம், மஞ்சள் காமாலை, அம்மை, சிறுநீர் கடுப்பு, வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் தாக்க ஏதுவாக இருக்கும்.மூளைக்கும், கபாலத்திற்கும் நடுவில், நீர் போன்ற திரவம் தான், மூளையை பாதுகாக்கிறது. அதிகப்படியான வெயிலின் தாக்கம், நேரடியாக தலையை தாக்கும் போது மயக்கமும், தலை சுற்றலும் ஏற்படுகிறது. இதனால், உடலின் நீர் சத்து குறைந்து, "சன் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு மரணம் ஏற்படுவதை தவிர்க்கவே, வட மாநிலத்தவர்கள், தலையில் பெரிய தலைப்பாகை கட்டியிருப்பர்.வெயில் காலத்தில் தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்படும். இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிக சிக்கல் ஏற்படும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உப்புச் சத்தின் அளவு மாறுபட்டு சிறுநீரக பாதிப்பு ஏற்படும். இந்நோய்களை தவிர்க்க, தண்ணீரே சிறந்த மருந்து.கோடைக் காலங்களில், மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் மட்டுமே, நீர்க்கடுப்பு உட்பட சிறுநீர் பாதிப்புகளை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு அம்மை, வாந்தி, பேதி, மஞ்சள் காமாலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உச்சி வெயிலில் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டாம்.ஐஸ்கிரீம், குளிர்பானம் போன்ற, அதிக குளிரான பொருட்களை தவிர்த்து, தண்ணீரை பயன்படுத்துவதே நல்லது. முடிந்தவரை வெள்ளை நிற ஆடைகளை அணிவது நல்லது.
 
 
 

காக்க... காக்க.... கல்லீரல் காக்க...!






காக்க... காக்க.... கல்லீரல் காக்க...!
நம் உடலின் உட்பகுதியில் இருக்கும் பெரிய திண்ம உறுப்பு கல்லீரல். "அதிகம் மது அருந்தினால், கல்லீரல் கெட்டுப் போகும்' என்பது தான், சாதாரண மக்களுக்கு, கல்லீரல் பற்றிய அதிகபட்ச விழிப்புணர்வு. மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்று, கல்லீரல் நோய்கள் தொடர்பாக, நம்மிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.
இதயமாற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்று, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இப்போது தான் பிரபலமாகி வருகிறது. ஆனால், இந்தியாவில், பத்து லட்சம் பேர், பல்வேறு கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் அதிர்ச்சி தகவல்.
இந்தியாவில், இதுவரை நடந்துள்ள, இரண்டாயிரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில், 500 சிகிச்சைகளில் பங்கேற்றவர் பிரபல டாக்டர் ஆனந்த் ராமமூர்த்தி. லண்டனில், இது தொடர்பாக சிறப்பு பயிற்சி பெற்றவர். சென்னை அப்பல்லோ மருத்துவமனை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான இவர், கல்லீரல் நோய்கள் தொடர்பாக கூறியதாவது:
உடலின் வளர்சிதை மாற்றம், புரோட்டீன் உற்பத்தி, ரத்த உறைவு உட்பட பல முக்கிய செயல்களை கல்லீரல் செய்கிறது. நம் உடலின் மையத்தில் உள்ள கல்லீரல், முற்றிலும் பாதிக்கப்பட்டால், மற்ற உறுப்புகளும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்து விடும். எனவே, கல்லீரலை கவனமாக காக்க வேண்டும். அது, நம் கையில் தான் உள்ளது.
மது அருந்துதல், கொழுப்பு மிக்க துரித உணவு, சுகாதாரமற்ற உணவு சாப்பிடுவது, தூய்மையற்ற தண்ணீர் அருந்துவது, அதிக உடல் எடை, உடல் பருமன், டென்ஷன் அடைவது, சர்க்கரை நோய், ரத்தம் பெறும் போது ஏற்படும் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால், கல்லீரல் நோய்கள் உண்டாகின்றன. சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே, என்சைம் கோளாறுகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது.
மஞ்சள் காமாலை மற்றும் பலவகை ஹெபடைடிஸ், கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய், கல்லீரலில் கட்டிகள் போன்றவை முக்கிய நோய்கள்.
பசி இல்லாமை, உடல் சோர்வு, எடை குறைதல், மயக்கம், கால் வீக்கம், ரத்த வாந்தி, ரத்தம் வெளியேறுதல் போன்றவை, கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள். கல்லீரல், 70 சதவீதம் பாதிக்கும் வரை, நிறைய பேருக்கு அறிகுறிகள் தெரிவது இல்லை. மஞ்சள் காமாலை போன்றவை, உடனடி சிகிச்சையின் மூலம் குணமாகும். மற்ற கல்லீரல் நோய்களுக்கும் தொடர் சிகிச்சைகள், தடுப்பூசிகள் உள்ளன. ஆனால், முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.
நம் நாட்டில் பதிமூன்று ஆண்டுகளாக, இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து வருகிறது. எனினும், இது தொடர்பான விழிப்புணர்வு, பொதுமக்களிடம் போதிய அளவில் இல்லை. சென்னை அப்பல்லோவில் மட்டும், 225 மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
சிறுநீரகம் போன்று, "டயலிசீஸ்' செய்ய இயலாது. கல்லீரல் மட்டும் பாதிக்கப்பட்டு இருந்தால், உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். ஆனால், மற்ற உறுப்புகளும் பாதிக்கப்பட்ட பின், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது இயலாத காரியம்.
உடல் உறுப்பு தானம் செய்வோரிடம் இருந்து, இறந்த குறிப்பிட்ட மணி நேரத்திற்குள், கல்லீரல் பெறலாம்; அல்லது நெருங்கிய உறவினரிடமிருந்து, கல்லீரலின், 70 சதவீத பகுதி வரை வெட்டி எடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தலாம். இதனால், இருதரப்பிற்கும் பாதிப்பு இல்லை. கல்லீரல் அளித்தவர், அறுவை சிகிச்சைக்கு பின், ஏழு நாட்கள் மருத்துவமனையில் தங்கினால் போதும். புண் ஏற்படும், வலி ஏற்படும் என்ற பீதி ஏதும் வேண்டாம். பின்னர், வழக்கமான வாழ்க்கை வாழலாம். வெட்டப்பட்ட கல்லீரல், இரண்டு மாதத்திற்குள் வளரும்.
எனவே, ஒருவர் முற்றிலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை விட, நெருங்கிய உறவினர் கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்தால், அந்த உயிரை காப்பாற்றலாம். ஒருவர் தினமும் மது அருந்தினால், உறுதியாக கல்லீரலை பாதிக்கும். சிலர் எப்போதாவது மது அருந்துபவர்களாக இருக்கலாம். ஆனால், அவருக்கு, கொழுப்பு படிந்து, கல்லீரல் பாதிப்பு ஏற்கனவே இருந்தால், அது ஆபத்து. எனவே, நம் வாழ்க்கை முறை, உணவு முறைகளை மாற்றினால் கல்லீரலை காக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்லீரல் பாதிப்பால் உயிர் இழப்புகளை தவிர்க்க, உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்போம்! தொடர்புக்கு, அலைபேசி எண்: 97911 90000.

சி.வி. இரமேசுகுமார்