தோழர் தியாகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோழர் தியாகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 8: கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது!

 அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 7: முனைமுகத்தே துவாலு- இன் தொடர்ச்சி)

கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது!

ஒல்லாந்து (Holland) நாட்டின் வீரச் சிறுவன் பீட்டரின் கதை பள்ளிப் பருவத்தில் ஆங்கிலப் பாடத்தில் படித்த நினைவுள்ளது. நீங்களும் படித்திருக்கலாம்.

அந்தச் சிறுவன் ஒரு நாள் அந்தி சாயும் நேரம் தனியாக நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அந்தக் காட்சியைப் பார்த்தான்: கடல்நீர் ஊருக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த அணையில் சிறிய ஓட்டை வழியாகத் தண்ணீர் பீய்ச்சிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரின் அளவும் வேகமும் கூடிக் கொண்டிருந்தன. இப்படியே போனால் அணை உடைந்து கடல்நீர் ஊரையே (அல்லது நாட்டையே) மூழ்கடித்து விடும். பீட்டர் சுற்றுமுற்றும் பார்த்தான், யாருமில்லை. கத்தினாலும் கேட்காது.

உடனே அவன் ஒன்று செய்தான்: அணையோரத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து அந்த ஓட்டைக்குள் விரலை நுழைத்தான். தண்ணீர் வரத்து நின்று விட்டது. விரலை எடுத்தால்… மீண்டும் வைக்க முடியாது. அதற்குள் வெள்ளம் புகுந்து விடும், அணை உடைந்து விடும். எனவே வலியையும் கொடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அப்படியே இருந்து விட்டான். விடியும் வரை யாரும் அந்தப் பக்கம் வரவில்லை. இரவெல்லாம் நடுக்கும் குளிரில் ஒற்றை விரலால் ஊர் காத்தான் பீட்டர்.

பீட்டரின் கதை மெய்யோ புனைவோ (இ)டச்சு மக்களின் தொன்மங்களில் ஒன்று. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கூட வீரச் சிறுவனுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் கதை. கடல்நீரோ ஆற்று நீரோ ஊருக்குள் நுழைந்து விடாமல் அணைகட்டிக் காக்கும் நாடுகளிலும் ஊர்களிலும் பீட்டரின் கதை தெரிந்திருக்க வேண்டும். துவாலு நாட்டு மக்களுக்குத் தெரியுமா?

துவாலுவைக் கடல் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க பீட்டர்கள் இருந்தாலும் முடியாது. அணை இருந்து அதில் ஒரு துளை இருந்தால்தானே பீட்டர் விரல் நுழைத்து நீர் தடுத்து ஊர் காக்க முடியும்?

துவாலு நாட்டின் தீவுகளில் கடல்நீர் கரையேற விடாமல் அணை கட்டலாம் அல்லவா? தலைநகரின் ஆட்சி மையத்தைக் காக்கக் கடல் சுவர் கட்டும் பணி ஐநா வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) நிதியுதவி கொண்டு தொடங்கப்பெற்று நிறைவடையாமல் இருக்கிறது.

ஆசுதிரேலியச் சுரங்கங்கள் வெளியேற்றும் கழிவை இறக்குமதி செய்து தீவுகளை வளைத்து ஆற்றல்-மதில் (energy wall) கட்டி கடலின் தாக்குவலியைக் கட்டுப்படுத்தலாம் என்பதோர் ஆசைத் திட்டம். இது நிறைவேறுவதாகவே கொண்டாலும் பவழப் பாறைசார் சுற்றுச் சூழலை அடியோடு சிதைத்து விடும்.

தலைநகரம் ஃபாங்கஃபேலுக்குத் தெற்கே கடல் விழுங்கிய நிலத்தை மீட்டு நிலமட்டத்தை 10 பேரடி உயர்த்தி வலுவான வீடுகள் கட்டவும் நகர மன்றம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்காகும் செலவு 300 பேராயிரம்(மிலியன்) அமெரிக்க தாலருக்கு எங்கே போவது? யாராவது நிதியளித்தால்தான் உண்டு. அளிக்க யாரும் முன்வரவில்லை.

மற்றுமொரு கனவுத் திட்டம் மிதக்கும் தீவு கட்டி நாட்டையே தெப்பம் போல் கடலில் மிதக்க விடுவது! இதெல்லாம் கவைக்குதவாது என்பதால், துவாலு கடலின் வயிற்றுக்குள் போவதற்குள் தீவுகளை விட்டு மக்களை வெளியேற்றி விடலாம்! துவாலுவர்கள் பசிபிக்கு அண்டை நாடுகளில் ஏதிலியராகத் தஞ்சம் புகுவார்கள்! போர் ஏதிலியர் போல் காலநிலை மாற்ற ஏதிலியர்!

வேறு வழியே இல்லை என்றால்தான் வெளியேறுவோம் என்கிறார்கள் அம்மக்களும் ஆட்சியாளர்களும்.

மக்கள் அனவரையும் 1,200 அயிரைப் பேரடிதெற்கே கொண்டுவந்து குடியமர்த்த நிலம் தருகிறோம் என்று பிசி நாடு திரும்பத் திரும்ப அழைக்கிறது, துவாலு அரசு இதை ஏற்கவில்லை. அரசே ஏற்றுக் கொண்டாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமே! எந்த ஊர் ஆனாலும் சொந்த ஊரைப் போலாகுமா?

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே”  (பாரதியார்)

சொந்த நாட்டைக் கடலுக்கு இரையாக்கி விட்டு ஏதிலிகளாகப் புலம்பெயர்ந்து புலம்பித் திரிய துவாலுவர்கள்தாம் கிடைத்தார்களா? அட, போங்கையா!

ஆசுதிரேலியாவின் முன்னாள் தலைமையமைச்சர் கெவின் உருத்து முன்மொழிந்தார்: துவாலு நாட்டின் கடல்சார் வளங்கள், மீன் வளங்கள் மீதான உரிமைகளுக்கு மாற்றாக அந்நாட்டின் குடிமக்களுக்கு ஆசுதிரேலியா முழுக் குடியுரிமை வழங்கலாம். எப்படி இந்தப் பண்டமாற்று!

துவாலுவின் அப்போதைய தலைமையமைச்சர் சொபோகா “இது பேரரசுச் சிந்தனை” என்று சொல்லிப் புறந்தள்ளி விட்டார்:  

“துவாலு மக்களை வெளியே அழைத்துப் போய் விட்டால் காலநிலை மாற்றச் சிக்கல்கள் தீர்ந்து விடுமா? இந்த மக்களைத் தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளில் கொண்டுபோய் இருக்கச் செய்தால், அந்த நாடுகளிலும் நுகர்வு பெருகிப் பசுங்குடில் வாயு உமிழ்வுகள் கூடுதலாகும்.”

தாழ்நில நாடுகளில் இவ்வாறு இடர்ப்பட்டிருக்கும் மக்களையெல்லாம் பெயர்த்து வெளியே அனுப்புவது தோல்வி மனப்பான்மை என்கிறார் சொபோகா. இந்தச் சிக்கல் அந்த நாடுகளின் சிக்கல் மட்டுமன்று. இது உலக முழுமைக்குமான சிக்கல். அதன் விளைவுகளைப் புரிந்து கொண்டால் இப்படிக் குறுக்கு வழித் தீர்வுகள் தேட மாட்டோம்.

துவாலு மட்டுமல்ல, பசிபிக்கு தீவுகள் பலவும் இன்று நாளை என்று மூழ்கிப் போகும் இடர்நிலையில்தான் உள்ளன. அதே பசிபிக்கின் கரைகளில் அமெரிக்கா, ஆசுதிரேலியா போன்ற நாடுகள்  வளர்ச்சியின் பெயரால் களிபேருவகையுடன் நிலக்கரியை எரித்துப் புவியைச் சூடாக்கிக் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றன. ஈட்டமே பெரிதென்று கொட்டமடிக்கும் இந்த நாடுகளின் குரலாகத்தான் அமெரிக்கக் குடியரசுத் தலைவரான போது தொனால்டு துரும்பு ஒலித்தார்:

“காலநிலை மாற்றமா? அப்படி ஒன்று இருப்பதாக நம்ப மாட்டேன்.”

துரும்பு மட்டும்தானா? மற்றத் தலைவர்கள் நம்புகிறார்களா? பிடன் நம்புவதாகச் சொல்கிறார். சொன்னால் மட்டும் போதுமா?

என்ன செய்தால் துவாலுவைக் காக்கலாம்? தவறு, உலகைக் காக்கலாம்? பார்ப்போம்.

தரவு: தியாகுவின் தாழி மடல் 8

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்! – தோழர் தியாகு

 

அகரமுதல




ஊனுருக்கி விளக்கேற்றிய திலீபன்!

தமிழ்நாட்டில் 1980களின் இறுதியிலும், 90களிலும் பிறந்த ஏராளமான குழந்தைகளுக்குத் திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. (1988 பிப்பிரவரி முதல் நாள் பிறந்த என் மகளுக்குத் திலீபா என்று பெயர் சூட்டினேன்.) சொட்டு நீரும் அருந்தாமல் திலீபன் நடத்திய பட்டினி  வேள்வியும், அவரது ஈடிணையற்ற உயிர்த் தியாகமும் தமிழ் மக்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய ஆழமான பெருந்தாக்கத்துக்கு இது ஒரு சான்று. 

ஆனால் திலீபனின் போராட்டத்த்துக்கும் ஈகத்துக்கும் இதையும் கடந்த ஒரு வரலாற்றுச் சிறப்பு உண்டு என்பதை நாம் போதிய அளவு உணர்ந்து உள்வாங்கியிருக்கிறோமா?

1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் எனப்படும் இராசீவ் – செயவர்த்தனா உடன்படிக்கையின் படி இந்திய அமைதிப் படை ஈழத்தில் கால்பதித்த போது தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு புதிய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.  இந்திய வல்லரசின் அரசியல்-இராணுவத் தலையீட்டினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும், அதற்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையையும் தலைவர் பிரபாகரனின் சுதுமலைச் சாற்றுரை தெளிவாக உணர்த்தியது. ஆனால் மக்கள்? 

இந்தியாவைத் தங்களின் பண்பாட்டுத் தாயகமாக அவர்கள் எண்ணிப்  பழகி யிருந்தார்கள்.  தமிழீழ மக்களும் தமிழ்நாட்டு மக்களும் ஒருகொடியில் பூத்த இருமலர்கள், தொப்பூழ்க்கொடி உறவுகள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களின் இனப் பாசத்தையும் இந்தியப் பேரரசின் இனப் பகையையும் வேறுபடுத்திப் பார்க்கின்ற தெளிவு ஈழ மக்களுக்கு இல்லை. ஈழத்து அறிஞர்கள் சிலருக்கே இல்லை – அன்றும் இல்லை, இன்றும் இல்லை! 

சிறிலங்கா வேறுதமிழீழம் வேறு என்று புரிந்து கொண்டவர்களுக்குஇந்தியா வேறுதமிழ்நாடு வேறு என்று விளங்கவில்லை.  

சிங்களப் பேரினவாதத்தைப் பகையாகக் கருதி எதிர்த்துப் போராடி வந்த மக்கள் இந்தியப் படையை  அப்படிப் பார்க்கவில்லை. ஆனால் இந்திய அரசின் உண்மையான உள்நோக்கத்தை மக்களுக்கு விரைவாகவும் உடனடியாகவும் உணர்த்த வேண்டிய தேவையை நிறைவு செய்வதாகத் திலீபனின் பட்டினிப் போர் அமைந்தது. இந்திய வல்லரசியத்தின் அமைதி முகத் திரையைப் பட்டினிக் கூர்வாளால் கிழித்துப் போட்டு பகையைப் பகையென்று காட்டினார் திலீபன். அது இந்திய மயக்கம் எனும் நோய்க்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.  

திலீபன் தமிழீழ விடுதலைக்காகக் கருவியெடுத்த ஆய்தப் போராளி. ஆனால் அரசியலின் நீட்சிதான் போர் என்ற தெளிவு புலிகளுக்கு இருந்தது. ஆய்தப் போராட்டத்தின் இடையில் குறுக்கிட்ட தடையை நீக்க அவர்களால் அரசியல் வழியில் அறப் போராட்டத்தையும் திறம்பட நடத்த முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது திலீபனின் போராட்டம்.

உண்ணாநோன்பிருந்து ஒரு தேசம் விடுதலை பெற முடியாது என்ற தெளிவு திலீபனுக்கு இருந்தது. அவர் விடுதலைக்காக நோன்பு நூற்றவர்  அல்லர் என்பதை அவரது போராட்டக் கோரிக்கைகளிலிருந்தே அறியலாம்.      

திலீபனின் ஐந்து கோரிக்கைகள்:

1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

2. சிறைக் கூடங்களிலும் இராணுவக் காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

4. ஊர்க் காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.

5. தமிழர் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

சிங்களப் பேரினவாதம் இந்த ஒப்பந்தத்தையெல்லாம் விழுங்கி ஏப்பம் விடக் கூடியது என்பதை இந்தியாவுக்கு உணர்த்தவும், இந்தியப் படையெடுப்பின் உண்மை நோக்கத்தைத் தமிழீழ மக்களுக்கு உணர்த்தவும் திலீபன் ஊனுருக்கி விளக்கேற்றினார் என்பதே உண்மை.

ஐந்து கோரிக்கைகளுக்காகப் போராடும் போதே தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டக் குறிக்கோளில் அவர் குறியாக இருந்தமைக்குப் பட்டினிக் களத்திலிருந்து அவர் ஆற்றிய உரைகளே சான்று. 

ஒவ்வொரு முறையும் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வருவதாய் செய்தி பரவும் போதும் கூட்டத்தினரிடையே மகிழ்ச்சி பொங்கியது. திலீபன் காப்பற்றப்பட்டு விடுவார் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு ஒவ்வொரு முறையும் கிடைத்தது ஏமாற்றம்தான்.

திலீபனின்  போராட்டம் தமிழீழ மக்களைக் கிளர்ந்தெழச் செய்தது. தமிழீழப் பரப்பெங்கும் மக்கள் பல்வேறு போராட்டங்களைத் தொடங்கியிருந்தனர். நல்லூர் வீதியில் மக்கள் கூட்டம் உச்சம் தொட்டது. யாழ்க் கோட்டையிலிருந்த இந்திய அமைதிப் படையினர் வெளியே வர முடியாதவாறு மறித்துத் தமிழர்கள் மறியல் போராட்டம் தொடங்கினார்கள். திலீபன் விரும்பிக் கேட்கும் பாடலான “ஓ..மரணித்த வீரனே! உன் சீருடைகளை எனக்குத் தா! உன் பாதணிகளை எனக்குத் தா! உன் ஆயுதங்களை எனக்குத் தா!” எனும் பாடல் உண்ணாவிரதக் களத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. கூட்டத்தின் கண்ணீருக்கு இடையில், மக்கள் நாம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம் என்பதை உணரத் தொடங்கினார்கள். திலீபனின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது! 

அணு அணுவாகச் சாவை நெருங்கிக் கொண்டிருந்தார் திலீபன். காந்தியின் தேசம் அகிம்சைக்கு மதிப்பளித்துக் கோரிக்கைக்கு செவி கொடுக்கும் என நம்பியிருந்த தமிழர்களின் எண்ணம் தகர்ந்து போயிற்று. ஈழத்தமிழர்களைக் கண்ணீரில் மிதக்க விட்ட திலீபனின் போராட்டம் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் எழுச்சி கொள்ள வைத்தது. 

உண்ணாவிரதப் போராட்டத்தின் 12ஆம் நாள்  1987 செட்டம்பர் 26 காலை 10:48 மணிக்கு திலீபன் உயிர் பிரிந்தது. 265 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தி முடித்து விடை கொடுத்துச் சென்றிருந்தார் திலீபன்உயிர் தமிழீழ விடுதலைக்குஉடல் மருத்துவக் கல்விக்குஎன்ற முறையில் திலீபனின் முடிவு அமைந்தது

அமைதிப்படை அதிகாரிகள் எச்சரித்த போதும் இராசீவ் காந்தியின் இந்திய அரசு திலீபனின் பட்டினிப் போராட்டத்தை அலட்சியம் செய்தது என்பதைக் கட்டளைத் தளபதி  அர்கிரத்து சிங்கு தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். சுருங்கச் சொன்னால் திலீபனைச் சாகடித்தது  இந்தியாதான்! திலீபன் இறப்பதற்கு முன் இறுதியாக ஆற்றிய உரையில் “இங்கே ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்று அறைகூவி அழைத்தார்.

திலீபனின் வாழ்வை விடவும் வலிமையானது அவரது சாவு! இந்திய ஆக்கிரமிப்புப் படையைத் தமிழீழ விடுதலைப்புலிகள் விரட்டியடித்த வெற்றியின் வேர்களில் திலீபனின் மகத்தான ஈகம் உரம் சேர்த்தது என்றால் மிகையன்று. 

இத்தனைக்குப் பிறகும் இந்திய வல்லரசின் மோடி வித்தைகள் தொடர்வதன் சான்றுதான் ஐநாவில் தமிழீழ மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு எதிராக இந்தியா நடத்தி வரும் ‘13 வகை’ புவிசார் அரசியல் சூதாட்டம். இந்தியாவின் சூதும் வாதும் புரியாமல் அது ஆட்டுவித்தபடி  ஆடிக் கொண்டிருக்கும்  தமிழீழத் தலைமைகள் ஆனாலும், புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் ஆனாலும், அவர்களுக்கெல்லாம் திலீபனின் போராட்டமும் ஈகமும் சொல்லும் சேதிஇந்தியாவிடம் எச்சரிக்கைஎப்போதும் எச்சரிக்கை!

–  தோழர் தியாகு

https://youtu.be/x9ZQmalPzA4

தியாக தீபம் திலீபன் அவர்களைப் பற்றித் தோழர் தியாகுவின் நேர்காணல்.

திங்கள், 7 அக்டோபர், 2013

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தோழர் தியாகு!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
6:20 PM (40 minutes ago)

to bcc: me
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தோழர் தியாகு!

காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்திஇலங்கையில் காமன்வெல்த் - எதிர்ப்பியக்கம்சார்பில், காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 1 முதல், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தோழர் தியாகுவுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உண்ணாப் போராட்டத்தில் பங்கெடுத்து வந்தன.

அவ்வகையில், போராட்டத்தின் 7ஆம் நாளான இன்று (அக்டோபர் 7) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில், .தே.பொ.. தோழர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் .முருகன், தோழர் .ஆனந்தன், தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் .அருணபாரதி, துணைப் பொதுச் செயலாளர் தோழர் .குபேரன், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் உள்ளிட்ட திரளான .தே.பொ.. தோழர்கள், இதில் பற்கேற்றனர்.

போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வந்த மருத்துவர் குழு தோழர் தியாகுவின் உடல்நிலையை சோதித்தது. அதன்பின், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, தோழர் தியாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்பட்டாலும் உண்ணாப் போராட்டம் தொடரும் என அறிவித்தார்.

‘இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே! தோழர் தியாகுவின் போராட்டத்தை முடக்காதே!’ என கூடியிருந்த தோழர்கள் எழுப்பிய முழக்கங்களுக்கிடையில், அரசு மருத்துவ வாகனத்தில் தோழர் தியாகு கொண்டு செல்லப்பட்டாது. தற்போது, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

தோழர் தியாகுவின் போராட்டம், நம் அனைவரின் போராட்டம்! போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய, அனைவரும் ஒருங்கிணைந்து உழைப்போம்!

 (செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)
6 attachments — Download all attachments   View all images   Share all images  

வியாழன், 3 அக்டோபர், 2013

தோழர் தியாகுவின் சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டம்

திருவள்ளுவன் இலக்குவனார் shared Natarajan Periyar Thondan's status.
தோழர் தியாகுவின் சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டம் வள்ளுவர் கோட்டம் முன் இன்று மாலை 5 மணி முதல் தொடர்கிரது.முன்னதாக நேற்று காலை 6மணிக்கு வள்ளுவர் சிலைக்குமுன் தொடங்கிய உண்ணாநிலைப்போராட்டம் இன்று இரண்டாம்நாளாக தொடர்கிறது.இந்த செய்தியை நமது ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. தோழர்கள் இதனை பகிர்ந்து பரப்புமாறு வேண்டுகிறேன்.
காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது,காமன் வெல்த் கூட்டமைப்பில் இலங்கையை நீக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தோழர் தியாகு சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்க்கொண்டு உள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்புத் தென்னரசன்,அறிவுச்செல்வன்,ஆவல் கணேசன், அமுதா நம்பி,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெரியார் அன்பன்,புகழ் மாறன்,வாகை வேந்தன்,அரசகுமார்,காஞ்சி ராசன் மற்றும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். — with சாரதாதேவி சத்தியமூர்த்தி and 19 others.



வெற்றி அல்லது வீரச்சாவு.
தோழர் தியாகுவின் இரண்டாம்நாள் உணவுமறுப்பு போராட்டம்.