சமந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமந்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 63

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 62 தொடர்ச்சி)

சமந்தா எழுதுகிறார்:

1.   இந்திய மாறுதலுக்கான தேசிய நிறுவனத்தின் (NITI) பரிந்துரை

வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வேளாண் அல்லாத பிற துறைகளின் தொழிலாளர்கள் போன்ற பிற நலிந்த பிரிவினரையும் உள்ளடக்கித் தலைமை யமைச்சர்,உழவர் திட்டத்தை அனைவருக்குமான அடிப்படை வருமானத்திற்கான (UBI) திட்டமாக மத்திய அரசு மாற்ற வேண்டும் என்றும், பின்னர் பிற மானியங்களையும் இதனுடன் இணைத்துக் கொள்ளலாம் என்றும்  இ.மா.தே.நி.உறுப்பினர் இரமேசு சந்து பரிந்துரைத்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என்ற போதும் போதாக் குறையானது. ஆண்டிற்கு 6,000 உரூபாய் / மாதத்திற்கு 500 உரூபாயை அடிப்படை வருமானம் என்று குறிப்பிடுவது தகுமா? அதன் மூலம் வறுமையை ஒழிக்கலாம் என்று கருதினால் அஃது ஓர் இழிய நகைச்சுவையாகவே, கேலிக் கூத்தாகவே இருக்கும்.  இத்தகைய அனைவருக்குமான அடிப்படை வருமானத்திற்கான (UBI) திட்டத்துடன் பிற நல்கைகளையும் இணைத்துக் கொள்ளலாம் எனும் போதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. உணவு மானியத்திற்கும், பொது வழங்கல் முறையில் உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்திற்கும் மூடுவிழா நடத்தவுள்ளார்களா? என்ற ஐயம் ஏற்படுகிறது. அவ்வாறு இருப்பின் அதனால் வறுமை மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.

2022 திசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்ட த.அ.ஏ.உ.பா.தி.( PMGKAY) (பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோசனா என்னும் மூலப்பெயரைச் சொன்னாலேயே மூச்சு முட்டுதே.)   திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.  அதற்கு மாற்றாக இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தானியங்களை வெளிச் சந்தையில் விற்று தானியங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று இ. மா.தே.நி.உறுப்பினர் இரமேசு சந்து  பரிந்துரைத்துள்ளார்.

+ இத்திட்டம் மகுடை(கோவிட்டு) தாக்கத்தால் வேளாண்மை அல்லாத துறைகளின் வளர்ச்சியில் தேக்கநிலை ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களில் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் துயர்தணிப்பை நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும்,

+ இயல்பு நிலை மீண்டுள்ளதால் இலவசப் பொது வழங்கல்-பகிர்வு திட்டத்திற்கான நிதி ஆதாரங்களை இன்னுஞ் சிறந்த நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம் என்றும்,

+ பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னும் இத்திட்டத்தைத் தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை என்றும்,

+ இந்தத்  திட்டத்தைச் செயல்படுத்த மாதந்தோறும் ஒதுக்கப்படும் 4 பேராயிரம் பார( மில்லியன் டன்) அரிசி, கோதுமையைப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இந்திய சேம வங்கியின் மீதுள்ள பணக் கொள்கையை மேலும் கடுமையாக்குவதற்கான அழுத்தத்தைக் குறைக்கவும் ஒதுக்க வேண்டும் என்றும்  

இந்த மகானுபாவர் (இரமேசு சந்து ) பரிந்துரைத்துள்ளார்.

மகுடை(கோவிட்டு) தாக்கம், வேலையின்மை, ஊதியக் குறைவு, உயரும் பணவீக்கம் ஆகியவற்றால் வீழ்ந்த மக்களின் வாங்கும் திறன் இன்னும் மீட்கப்படாத நிலையில் இத்திட்டத்தை நிறுத்துமாறு பரிந்துரைப்பது கடும் கண்டனத்திற்குரியது. உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் கடைநிலை என்பதன் பொருள் என்ன? அனைவருக்கும் பொது வழங்கல் முறையில் உணவு தானியங்களும்  இன்றியமையாப் பண்டங்களும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதுதான். அனைவருக்குமான அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் இந்த இரமேசு சந்து  பரிந்துரைத்த போதே பொது வழங்கலுக்கு மூடுவிழா நடத்துவதற்கான ஏற்பாடு நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என மேலே எச்சரித்திருந்தது சரிதான்..

2.   பணவீக்கம்

ந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் எனப்படும் நுகர்வோர் விலைக் குறியீடு நவம்பரில் 5.88% உயர்ந்துள்ளது; பணவீக்கம் சனவரி யிலிருந்து தொடர்ந்து 10 மாதமாகச் சேம வங்கியின் உச்ச வரம்பான 6 விழுக்காட்டிற்கு மேல் இருந்து வந்துள்ள நிலையில் நவம்பர் மாதத்தில் 5.88 விழுக்காடாகக்குறைந்துள்ளது. சில்லறைப் பணவீக்கம் 2022 அட்டோபரில் 6.77 விழுக்காடாகவும், கடந்த ஆண்டு நவம்பரில் 4.91 விழுக்காடாகவும் இருந்துள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் 4.67 விழுக்காடு உயர்ந்துள்ளது. அட்டோபர் மாதத்தில் இது 7.01 விழுக்காடாக இருந்தது.

நவம்பரில் தானியங்களின் விலைவாசி 12.96% உயர்ந்துள்ளது. பால் பொருட்களின் விலைவாசி 8.16% உயர்ந்துள்ளது. பழங்களின் விலைவாசி 2.62% உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 8.08% குறைந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 3.15% உயர்ந்துள்ளது. வாசனைப் பொருட்களின் விலைவாசி 19.52% உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 5.9% உயர்ந்துள்ளது. இந்திய மாநிலங்களிலேயே அதிக அளவாக தெலங்கானாவில் பணவீக்கம் 7.89% உயர்ந்துள்ளது.

3. அட்டோபரில் தொழில்துறை வளர்ச்சி

ட்டோபர்  மாதத்திற்கான தொழில் துறை  உற்பத்திக்  குறியீடு  புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. தொழில் துறை உற்பத்திக் குறியீடு அட்டோபர் மாதத்தில் 4 விழுக்காடு குறுக்க மடைந்துள்ளது. சென்ற ஆண்டு செட்டம்பரில் 4.2% வளர்ச்சியடைந்திருந்தது. அட்டோபரில்  சுரங்கத் துறையின் உற்பத்தி 2.5% வளர்ச்சியடைந்துள்ளது. உற்பத்தித் துறை 5.6% குறுக்கமடைந்துள்ளது. மின்சார உற்பத்தி 1.2% உயர்ந்துள்ளது. அட்டோபரில் முதன்மைப் பொருட்களின் உற்பத்தி 2% உயர்ந்துள்ளது. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 2.3% குறைந்துள்ளது. இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி 2.8% குறைந்துள்ளது. உள்கட்டமைப்பு, கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி 1% உயர்ந்துள்ளது. விரைவில் நுகரக்கூடிய பொருட்களின் ஆக்கம் 13.4% குறைந்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் ஆக்கம் 15.3% குறுக்கமடைந்துள்ளது.

இந்தத் தரவுகள் அட்டோபரில் தொழில்துறை, குறிப்பாகச் செய்பொருளாக்கத்  துறை (manufacturing sector) தேக்கநிலையில் இருப்பதையே காட்டுகின்றன.

+++++++

அன்பர் ஆசுபான் சோசுவா எழுகிறார்:

தாங்கள் அனுப்பும் தாழி மடல்களுக்கு மிகவும் நன்றி. என் அன்பு. என் பெயர் ஆசுபான். நான் ஒரு திருச்சபை போதகர். எல்லாம் வல்ல இறை அருளாலும் இயற்கையின் அன்பிலும் நூறாண்டு கடந்து நீங்கள் வாழ வாழ்த்துகிறேன். வயதில் சிறியவன். உங்களுக்காக இறையிடம் இறைஞ்சுகிறேன்.

நன்றிங்க அன்பரே! உங்கள் அன்புக்காகவும் வாழ்த்துக்காகவும்!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 38

புதன், 5 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 61 - சமந்தா எழுதுகிறார்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 60 தொடர்ச்சி)

சமந்தா எழுதுகிறார்

பொருளியல்:

1.   தொழிலாளர் உரிமைக் குரல்

Ø   இருபது நாடுகள் குழு(G-20) கூட்டமைப்பின் தொழிலாளர் தொடர்பான சிக்கல்களை விவாதிக்கும் அமைப்பாக த20(L 20) உள்ளது. கடும் கண்டனத்துக்குரிய வகையில் தேசியத் தொண்டர் அணி (ஆர்.எசு.எசு.), ஆதரவு இந்தியத் தொழிலாளர்கள் ஒன்றியத்தை  (Bharatiya Mazdoor / Sangh BMS) த -20இன் தலைவராக நியமித்துள்ளது பாசக அரசு.

இ.தொ.ச.மையம்(சி.ஐ.டி.யு.), இ.தொ.ச.பே.(ஐஎன்டியுசி), இ.தொ.அ.(HMS) முதலான  10 மத்தியத் தொழிற்சங்கங்கள் ஈகியர் நாளான  சனவரி 30ஆம் நாள் தில்லியில் கூடி, தேசிய மாநாடு நடத்தி, நரேந்திர மோதி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்க்கத் திட்டமிட்டுள்ளன. தொழிலாளர்களை மேலும் அணிதிரட்டுவது, காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று இந்து மசுதூர் அவையின்பொதுச் செயலாளர் அர்பசன் சிங்கு சித்து கூறியுள்ளார்.

 தாங்கள் முன்வைத்த எந்தவொரு சிக்கலுக்கும் அரசு சரியாக விடையிறுக்கவில்லை. என்றும், நான்கு தொழிலாளர் சட்டங்களின் பெரும்பாலான விதிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவானவை அல்ல என்றும், அவை முதலாளிகளுக்கு நன்மை செய்வதையே நோக்கமாகக் கொண்டவை என்றும் அவர் கூறினார். பல வருடங்களாக இந்தியத் தொழிலாளர் மாநாடு கூட்டப்படாமல் உள்ளது. மற்றொரு சிக்கல் என்னவென்றால், தே.தொ.அ.(இரா.சே.ச. )ஆதரவு பாரதிய மசுதூர் சங்கம்  கு.20(G 20) இன் தொழிலாளர் தொடர்பான சிக்கல்களை விவாதிக்கும் த(எல்)-20 இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது. இச்சிக்கலை அனைத்துத் தொழிற்சங்கங்களும் கிளப்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இ.தொ.ச.பே.(ஐஎன்டியுசி), இ.தொ.ச.மையம்(சி.ஐ.டி.யு.), இ.தொ.அ.(HMS) முதலான   தொழிற்சங்கங்கள், தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள் குறித்தும், இந்தியத் தொழிலாளர் மாநாடு போன்ற முத்தரப்புக் கூட்டங்கள் நடத்தப்படாதது குறித்தும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் தனியார்மயமாக்கம் குறித்தும் கண்டனம் தெரிவித்துள்ளன.

2.    எண்ம (DIGITAL) ஏற்றத் தாழ்வு

Ø  புதிய ஆஃசா குழு அறிக்கை – இந்திய சமத்துவமின்மை அறிக்கை 2022: எண்மப் பிரிவினை. பெண்கள், வேலையில்லாதோர், சிற்றூர்ப்புற ஏழைகள் எண்மப் பிரிவினையால் பின்னடைந்துள்ளனர் என்கிறது புதிய ஆஃசா குழு அறிக்கை. இந்தியாவில் சாதி, பாலினம், இருப்பிடம், வகுப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள் ஏராளமாக உள்ளன.  “இந்தியச் சமத்துவமின்மை அறிக்கை, 2022: ப் பிரிவினை” என்ற தலைப்பில் இந்தியா பற்றிய புதிய ஆஃசா குழு அறிக்கையின்படி, தற்போது எண்ம வெளியிலும் பிரிவினை பரந்த அளவில் காணப்படுகின்றது.

Ø  இந்த அறிக்கையின் படி 2021ஆம் ஆண்டில் ஆண்களில் 61 விழுக்காட்டினர் கைபேசி வைத்திருந்தனர், ஆனால் பெண்களில் வெறும் 31 விழுக்காட்டினர் மட்டுமே கைபேசி வைத்திருந்தனர். பெரும்பாலும் ஆண்கள், நகர்ப்புறத்தில் வசிப்போர், ‘உயர்சாதியினர்’, உயர்வகுப்பினர்க்கே எண்மத் தொழில்நுட்பங்களை அணுகக்கூடிய வாய்ப்பு உள்ளது. சாதி அடிப்படையில் பார்த்தால் பொதுப் பிரிவில் 8 விழுக்காட்டினர் கணிணி அல்லது மடிக் கணிணி வசதியைப் பெற்றிருந்தாலும், பட்டியலினத்தவரில் பட்டியல் சாதிப் பிரிவினரில் 2 விழுக்காட்டினராலும் பட்டியல் பழங்குடியினரில் 1 விழுக்காட்டினராலும் மட்டுமே கணிணி அல்லது மடிக் கணிணி வாங்க முடிந்துள்ளது.

Ø  2021ஆம் ஆண்டில் ஊதியம் பெறும் நிரந்தரத் தொழிலாளர்களில் 95 விழுக்காட்டினரிடம் கைபேசி இருந்ததாகவும், ஆனால் வேலையில்லாதவர்களில் 50 விழுக்காட்டினரிடம்  மட்டுமே அது இருந்தது என்றும் புதிய ஆஃசா குழு அறிக்கை கூறுவது வேலைவாய்ப்புக்கும் எண்மப் பிரிவினைக்குமான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது.

Ø  பொதுவாக நம்பப்படுவது போலல்லாமல், சிற்றூர்ப்புறங்களில் கணினிச் சாதனங்களின் பயன்பாடு குறைந்துள்ளது என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மகுடைக்(கோவிட்டு) கொள்ளை நோய்க்கு முன்னர் சிற்றூர்ப்புற மக்களில் 3 விழுக்காட்டினர் கணிணி வைத்திருந்தனர், மகுடை(கோவிட்டு)க்குப் பிறகு இது 1 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

Ø  கல்வி, நலவாழ்வு போன்ற இன்றியமையாச் சேவைகளை வழங்குவதில் எண்மத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் நாட்டின் எண்மப் பிளவும், அதன் விளைவுகளும் எதிரொலிக்கிறது. 2020 செட்டம்பரில் பொதுமுடக்கத்தின் போது ஐந்து மாநிலங்களில் நடத்திய விரைவான கணக்கெடுப்பின்படி, 82% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எண்மக் கல்வி கிடைக்கச் செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகத் தெரிகிறது. குறிப்பலை(சிக்னல்), இணைய வேகம் தனியார் பள்ளிகளில் மிகப் பெரிய சிக்கலாக மாறியுள்ளது. அரசுப் பள்ளிகளில், 80% பெற்றோர்கள் பொதுமுடக்கக் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். 84% அரசுப் பள்ளி ஆசிரியர்களும் சாதனங்கள், இணைய வசதி இல்லாததால் இணைய ஊடகங்கள் மூலம் கல்வியளிப்பதில் சிரமப்பட்டுள்ளனர்.

Ø  “எண்மத் தொழில்நுட்பங்கள் பொது சேவைகள், திட்டங்களை மேலும் அணுகக் கூடியவையாக மாற்ற வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை பணக்காரர்களுக்கும் சலுகை பெற்றவர்களுக்குமே எண்மத் தொழில்நுட்பங்கள் அணுகக்கூடியவையாக உள்ளன என்பதையே அறிக்கை.  எடுத்துக்காட்டுகிறது. கல்வியறிவு இல்லாத ஒருவருடன் ஒப்பிடும் போது முதுகலைப் பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் தொலைபேசி வைத்திருப்பதற்கான வாய்ப்பு 60% அதிகம் என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது” என்று ஆஃசா குழு(ஆக்குசுபாம்)-இந்தியா தலைமை நிருவாக அதிகாரி அமிதாப்பு பெஃகர் கூறியுள்ளார்.

Ø  “இந்தியாவில் உயர்ந்து வரும் சமத்துவமின்மை எண்மப் பிளவு காரணமாக மேலும் உயர்ந்துள்ளது. சாதனங்கள், இணையம் இல்லாதவர்கள் கல்வி, நலவாழ்வு மற்றும் பொதுச் சேவைகளை அணுகுவதில் உள்ள இடர்ப்பாடுகளால் மேலும் ஓரங்கட்டப்படுகிறார்கள். சமத்துவமின்மையின் இந்தத் தீய சகடம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என்றும் அமிதாப்பு பெஃகர் கூறினார். மத்திய, மாநில அரசுகள் எண்ம  அகக்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் அனைவருக்கும் இணைய இணைப்பு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று ஆஃசா குழு வலியுறுத்தியுள்ளது, இணையத்தை அணுகக் கூடியதாக மாற்றுவதோடு, திறன்பேசிகளையும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இனிய அன்பர்களே!

பொ ந பி (EWS) இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஐவர் ஆயத்தின் பெரும்பான்மைக் கருத்துடன் மாறுபாட்டுக் கருத்துரைத்த இரு நீதியரில் ஒருவர் இரவீந்திர பட்டு.. அவரது தீர்ப்புரையில் முதல் பத்தியின் முகன்மை கருதி அதனை ஆங்கிலத்தில் அவர் எழுதியவாறே தருவதோடு, அதற்கான என் தமிழாக்கத்தையும் படைக்கிறேன்:   

I regret my inability to concur with the views expressed by the majority opinion on the validity of the 103rd Amendment on Question No. 3, since I feel – for reasons set out elaborately in the following opinion – that this court has for the first time, in the seven decades of the republic, sanctioned an avowedly exclusionary and discriminatory principle. Our Constitution does not speak the language of exclusion. In my considered opinion, the amendment, by the language of exclusion, undermines the fabric of social justice, and thereby, the basic structure.

தமிழில்:

அரசமைப்புச் சட்டத்துக்கான 103ஆம் திருத்தம் கேள்வி எண் 3இன் அடிப்படையில் செல்லுபடியாவது பற்றிய பெரும்பான்மை நீதியர் தீர்ப்பில் சொல்லியிருக்கும் கருத்துகளோடு உடன்பட இயலாமைக்கு வருந்துகிறேன். ஏனென்றால் இந்தியக் குடியரசின் எழுபதாண்டு வரலாற்றில் முதல் முறையாக இந்த நீதிமன்றம் வெளிப்படையாகவே ஒரு பகுதியினரை மட்டும் விலக்கி வைப்பதும், அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுமான ஒரு கொள்கைக்கு இடமளித்துள்ளது என்று நான் கருதுகிறேன். இந்த என் கருத்துக்குரிய காரணங்களைக் கீழ் வரும் என் தீர்ப்புரையில் விரிவாகத் தருகின்றேன். நமது அரசமைப்புச் சட்டம் விலக்கி வைத்தலின் மொழி பேசாது. இந்தச் சட்டத் திருத்தம் விலக்கி வைத்தலின் மொழி பேசுவதால் சமூக நீதியின் நெசவியலையும், எனவே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும் சீர்குலைக்கிறது என்பது என் தீர்க்கமான கருத்து.

offends the basic structure…

ஆய்வுக்குரிய கேள்வி எண் மூன்று:

“அல்லாத பிற” என்ற விலக்கி வைக்கும் தன்மையிலான விதி         அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தாக்குகிறதா?

 [குறிப்பு: பொநபி இட ஒதுக்கீடு குறித்து நாம் நடத்திய இணையக் கருத்தரங்கில் உரையாற்றிய மேனாள் நீதியர் அன்பர் அரி பரந்தாமன் அவர்கள் நீதியர் இரவீந்திர பட்டின் இந்தக் குற்றாய்வைச் சிறப்பாக எடுத்துக் காட்டினார். பட்டுக்கே தெரிகிறது, இந்தியவாத இடதுசாரிகளுக்குத் தெரியவில்லையே!]

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 37

சனி, 1 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 57; வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி – சமந்தா

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 56 தொடர்ச்சி)

சமந்தா எழுதுகிறார்:

பொருளியல்:

வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி…

பசித்தவர் புசிக்க உணவு தர வேண்டும்.. உணவா?… தவித்த வாய்க்குத் தண்ணீர் கூடத் தராமல் காயப் போடுவதுதான் இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளின் வாடிக்கையான நடைமுறையாக உள்ளது.

அதன் படி, இந்தியச் சேம( ரிசர்வு) வங்கியின் ஆறு உறுப்பினர் கொண்ட பணவியல் கொள்கைக் குழு, திசம்பர் 5 முதல் 7 வரையிலான தனது இருமாதக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதமான மறு கொள்முதல் ஒப்பந்தம்(‘ரெபோ’) விகிதத்தை 0.35% உயர்த்தியுள்ளது.  ம.கொ.ஒ.(ரெபோ)விகிதம் 5.9%இலிருந்து 6.25%ஆக உயர்ந்துள்ளது. இதனால் கல்வி, வாகனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும். சேம வங்கி இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ம.கொ.ஒ.(ரெபோ விகிதத்தை 2.25% உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக, நிலையான வைப்பு வசதி (SDF) விகிதம் 6.00% ஆகவும், துணை நிலை வசதி (MSF) விகிதம் , வங்கி விகிதம் 6.50% ஆகவும் உள்ளது.

பொதுத்துறை அமைப்புகள் ஒன்றையொன்று வலுப்படுத்த வேண்டும். அது நவீன தாராளமயத்திற்கு (புதுத் தாராளியத்துக்கு) பிடிக்குமா? பிடிக்காது… அப்படியென்றால் அதன் ஒட்டுவாலான பாசக-விற்கும் பிடிக்காது. தனியார் துறையை வலுப்படுத்துமாறு பொதுத்துறை நிறுவனங்களை நெருக்குகிறது பாசக அரசு. தற்போது பொதுத்துறை நிறுவனங்களின் உபரி நிதியை தனியார் துறை பரிமாற்ற நிதிகளின் குறுகியக் காலத் திட்டங்களில் முதலீடு செய்ய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தும் இந்த தாராளமய முடிவு கடும் கண்டனத்திற்குரியது. இது வரை, மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் (சிபிஎசுஇ) தங்கள் உபரி நிதியை இந்தியப் பங்கு, பரிவர்த்தனை வாரியம்(SEBI/செபி) ஒழுங்குமுறைக்குட்பட்ட பொதுத்துறை பரிமாற்ற நிதிகளில் வைப்பு முதலீடு செய்யவே அனுமதிக்கப்பட்டன.

இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி(ஐடிபிஐ) வங்கியில் வெளிநாட்டு நிதி, முதலீட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு 51% க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

பொருளாதார வல்லுநர்கள் 51 பேர் நிதியமைச்சர் நிருமலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வரவிருக்கும் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களை உயர்த்துமாறும், போதுமான மகப்பேறு சலுகைகளை வழங்குமாறும் கேட்டுள்ளனர்.

தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் (NOAPS) கீழ் முதியோர் ஓய்வூதியத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பை மாதத்திற்குக் குறைந்தது உரூ.200 என்பதிலிருந்து (2006 முதல் மாற்றப்படாமல் உள்ளது) உரூ.500 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், ஓய்வூதியம் பெறும் 2.1 கோடி பேருக்கு இதற்கெனக் கூடுதலாக உரூ. 7,560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கைம்பெண் ஓய்வூதியத்தை 300   உரூபாயிலிருந்து குறைந்தது 500 உரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் இதற்குக் கூடுதலாக உரூ.1,560 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) விதிமுறைகளின்படி மகப்பேறு உரிமைகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், இதற்குக் குறைந்தது 8,000 கோடி உரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் தில்லி பொருளியல் பள்ளி( )மதிப்புநிலைப் பேராசிரியர்  சீன் திரேசு (Jean Drèze); இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனப்(IGIDR)பொருளியல் பேராசிரியர் ஆர். நாகராசு, தில்லி இதொ.நு.(ஐஐடி) பொருளியல் பேராசிரியை இரீத்திகா கேரா, கலிபோர்னியா பெருக்குலி பல்கலைக் கழகப் பொருளியல்  பேராசிரியர் பிரணாபு பருதான் ஆகியோர் அடங்குவர்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 36

திங்கள், 9 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 9: புவித்தாய்க்குக் காய்ச்சல்!

 அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 8: கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது! தொடர்ச்சி)

புவித்தாய்க்குக் காய்ச்சல்!

சூழலரண் அறிக்கையில் தோழர் சமந்தா இப்படி எழுதுகிறார்:

“காலப்போக்கில் மனித இனம் இயற்கையை மதிக்கவும் பாதுகாக்கவும் தவறியதாலும், நஞ்சையே விதைத்ததாலும் நம் புவித்தாய் காய்ச்சல் கொண்டிருக்கிறாள், இரண்டு நாளில் சரியாகும் சாதாரணக் காய்ச்சல் அல்ல இது. உயிரைப் போக்கும் நச்சுக் காய்ச்சலால் உயிர்க்கோளம் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.” 

புவித் தாய்க்கு அவள் பெற்ற மக்களின் செயலாலேயே காய்ச்சல் கண்டுள்ளது! அதே மக்கள்தாம் அந்தக் காய்ச்சலைத் தணிக்கவும் கடமைப்பட்டவர்கள்.   

அரசியல் நெருக்கடியையும் பொருளியல் நெருக்கடியையும் விஞ்சக் கூடியவாறு காலநிலை மாற்ற நெருக்கடி முற்றி வருகிறது.

இந்த உண்மையை அறிந்தேற்காமல் அதற்கு முகங்கொடுத்துத் தீர்வு காண முடியாது. துவாலு உள்ளிட்ட பசிபிக்கு தீவுகள்  வலிக்க வலிக்க இந்த நெருக்கடியோடு போராடி வருகின்றன.

ஆனால் பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வைக் கட்டுப்படுத்துவது எப்படி? புவி வெப்பமாதலைத் தணிப்பது எப்படி? தனியாட்கள் முயன்று மட்டும் இதனைச் செய்ய முடியாது என்னும் நிலையில் அரசுகள் முன்முயற்சி எடுத்தால்தான் புவி வெப்பமாதலைக்  கட்டுப்படுத்த முடியும் என்பதால்தான் உலக நாடுகள் 2015 திசம்பரில் பாரிசு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டன. ஏட்டளவில் அது பெருஞ்சாதனை! பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வெப்பமாதலை 1.5 பாகை (டிகிரி) என்னுமளவுக்குள் நிறுத்த வேண்டும் என்பது உடன்பாடு.

தொழிற்புரட்சி என்பது மாந்தக் குல வரலாற்றில் பெரியதொரு பாய்ச்சல்தான். ஆனால் அதே தொழிற்புரட்சிதான் புவியின் தட்ப வெப்ப நிலையில் முன்காணாத மாற்றத்தையும் தொடங்கி வைத்தது. தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலைக்கு புவி வெப்பத்தை மீட்க முடியுமா? முடியாது. ஆனால் அந்த முந்தைய நிலைக்கு மேல் 2 பாகைக்குள் புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்த முடிந்தாலே பெரிய நன்மை விளையும்.

பாரிசு ஒப்பந்தத்தை அடுத்தடுத்துப் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு விட்டன. ஆனால் எல்லாம் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காய்தான்! புதைபடிவ எரிபொருள் ஆக்கம் குறையவில்லை என்பதோடு கூடிக் கொண்டே போகிறது. தானாகக் கூடவில்லை, அரசுகள் திட்டம் போட்டுக் கூட்டுகின்றன என்பதே மெய். கடந்த பத்தாண்டு காலத்தில் மட்டும் கரியமில வாயு(கார்பன்-டை-ஆக்சைடு) உமிழ்வுகளில் 86 விழுக்காடு… பெற்றோல், எரிவாயு, நிலக்கரி காரணமாக ஏற்பட்டுள்ளது என்று காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா குழு தெரிவிக்கிறது.

நிலத்தடிக் கனிமங்களில் கறுப்புத் தங்கமாக மதிக்கப்படும் நிலக்கரி, எரிநெய் (பெற்றோல்) போன்றவற்றை எடுத்துப் பயன்படுத்தவே கூடாதா? என்ற கேள்வி எழும். மாந்தக் குலம் அப்படி ஒரு கூட்டு முடிவு எடுத்தாலும் தவறில்லை என்பேன். தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக் கொள்வோமா? வயிரம் என்பதால் வாய்க்குள் போட்டுக் கொள்வோமா?

புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை இன்று முடிவெடுத்து நாளை முதல் கைவிட முடியாது என்பதே மெய். அப்படியானால் முதற்கட்டமாகக் கட்டுப்படுத்தலாமே? இந்தப் பயன்பாடு மேலும் பரவாமல் தடுக்கலாமே?

புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தாமல் பாரிசு ஒப்பந்தம் போல் எத்தனை ஒப்பந்தம் போட்டாலும் புவிக் காய்ச்சலைத் தணிக்க முடியாது.

புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் போதே பொருளியல் கட்டமைப்பைப் பன்மயப்படுத்தும் முயற்சிகளும் தேவைப்படுகின்றன. இந்த முயற்சிகளுக்கு முதலாண்மை (முதலாளித்துவ) வளர்ச்சிப் பாதையும், அதனைக் கைப்பிடித்துள்ள அரசுகளும் பெருந்தடைகள் என்பதால் மக்கள்-போராட்டங்கள் வழியாகவே முன்னேற்றம் காண முடியும்.

மூன்றாம் உலகப் போர் பற்றி அடிக்கடிப் பேசுகிறோம். இந்த மூன்றாம் உலகப் போர் காலநிலை மாற்றத்தின் மீதான போராக அமைய வேண்டும். ஒரு வகையில் ஏற்கெனவே அந்தப் போர் தொடங்கி விட்டது. அந்தப் போரின் முனைமுகத்தே துவாலுவும் அதையொத்த பசிபிக் தீவுகளும் நிற்கின்றன.

நாம் எங்கே நிற்கிறோம்?

இன்று (15/11/2022) தி இந்து ஆங்கில நாளேட்டின் 7ஆம் பக்கத்தில் “Climate change debates while the Earth heats up” (புவி வெப்பமாதல் கூடும் போதே காலநிலை மாற்ற விவாதங்கள்) என்ற தலைப்பில் வந்துள்ள எழுத்துரையை வாய்ப்புள்ளவர்கள் படித்துப் பாருங்கள்.

இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி இந்தோனேசியாவில் பாலி சென்றுள்ளார். இருபது நாடுகள் குழு (G-20) சந்திப்புக்காகச் சென்றுள்ளார். உலகத்தின் கவலைக்குரிய சிக்கல்களைப் பற்றி விவாதிக்கப் போகின்றார்களாம். அவற்றுள் ஒன்று சுற்றுச்சூழல். காலநிலை மாற்ற நெருக்கடி குறித்தும் பேசுவார்கள். ஆமாம், பேசுவா…ர்…க…ள்! பார்ப்போம்.

தரவு: தியாகுவின் தாழி மடல் 9