கோடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 மே, 2013

கோடையில் அறுவடை செய்யலாம்!

கோடையில் அறுவடை செய்யலாம்!

கோடையில், நம் தாகத்தை குறைக்கும் தண்ணீர்ப் பூசனி, விவசாயம் பற்றி கூறும், விவசாயி இராசேந்திரன்: நான், கடலூர் மாவட்டத்தில் உள்ள, அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவன். சொட்டு நீர் பாசனத்தின் மூலம், தர்பூசணி விவசாயம் செய்யலாம் என்பதால், குறைந்தபட்ச நீர் ஆதாரம் இருந்தாலே போதும். தர்பூசணியை, எப்போது வேண்டுமானாலும் பயிரிடலாம். ஆனால், அதிக குளிர்ச்சி மற்றும் அதிக வெயில் காலங்களில், நோய் பாதிப்பு ஏற்படுவதால், ஜனவரி முதல், ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் பயிரிட்டால், நல்ல பலன் கிடைக்கும். ஏக்கர் ஒன்றுக்கு, 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். தர்பூசணி, ஒரு குறுகிய கால பயிர் என்பதால், தினமும் அதன் வளர்ச்சியை கணக்கிடுவது அவசியம். ஏனெனில், விதை ஊன்றிய, 90 நாட்களிலேயே அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு, 5 டன் தொழு உரமிட்டு, இரு முறை நிலத்தை உழுது, சொட்டு நீர் பாசனத்திற்கான வசதிகளை மேற்கொள்ள வேண்டும். வரிக்கு வரி, 6 அடி அகலமும், செடிக்கு செடி, 2 அடி இடைவெளியும் விட்டு, ஒரு அடி ஆழத்தில் குழி எடுத்து, ஏக்கருக்கு, 25 கிலோ பொட்டாஷ், 50 கிலோ, டி.ஏ.பி., உரங்கள், வேர் புழுக்களை தடுக்க, 8 கிலோ போரைட் கலந்து, ஒவ்வொரு குழிக்குள்ளும் சமஅளவில் போட்டு, மூட வேண்டும்.பின், குழிக்கு, 3 விதைகள் என்ற வீதத்தில், 1 அங்குலம் ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

ஊன்றிய ஒரு வாரத்தில், செடிகளாக வளர்ந்து வரும். சரியாக வளராத செடியை, குழிக்கு ஒன்று என்ற வீதத்தில் அகற்ற வேண்டும். ஒரு ஏக்கருக்கு, 200 கிராம் விதைகள் போதுமானது. விதை விதைத்த, 45ம் நாளிலிருந்து, தர்பூசணி காய்கள் பழுக்க ஆரம்பித்து, 60 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம்.ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தது, 10 முதல், 15 டன் வரை அறுவடை செய்யலாம். தர்பூசணி, கோடை கால சீசனுக்கு ஏற்ற பயிர் என்பதால், வெயில் காலங்களில் இதன் தேவை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. ஒரு கிலோ தர்பூசணியை, குறைந்தபட்சம், 6 ரூபாய்க்கு விற்றால் செலவு போக, 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் ஈட்டலாம்.தொடர்புக்கு 92446 81350.

திங்கள், 22 ஏப்ரல், 2013

கோடையில் இலவசப் பயிற்சி!




கோடையில் இலவச ப் பயிற்சி!பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஜின்னா: நான், பார்வையற்ற மாற்றுத்திறனாளி. தேர்வு முடித்த மாணவர்கள், கோடை விடுமுறையை சிறப்பாக பயன்படுத்த, சில பயிற்சி வகுப்புகளுக்கு செல்வர். இதுபோல், பார்வையற்ற மாணவர்களுக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்ற சிந்தனையில், "இந்தியன் அசோசியேஷன் பார் பிளைண்ட்' என்ற தொண்டு நிறுவனத்தை துவக்கினேன்.இந்நிறுவனம் மூலம், "சாதனா சிறப்பு பயிற்சி பள்ளி'யை உருவாக்கி, பார்வையற்ற மாணவர்களுக்கு பயிற்சியளித்து, வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம். பார்வையற்ற மாணவர்களை கையாளத் தெரிந்த ஆசிரியரை நியமித்து, இலவசமாகவே பயிற்சி தருகிறோம்.பார்வையற்ற மாணவர்கள், அரசு பணியில் சேர முன் போட்டித் தேர்வுகளை எழுத தேவையில்லை என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது பார்வையற்ற மாணவர்களும், மற்றவர்களோடு போட்டித் தேர்வு எழுதியே, பணிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வுக்கு பயிற்சி தரும் தனியார் பயிற்சி பள்ளிகளில், பிரெய்லி புத்தகங்கள், பயிற்சி உபகரணங்கள் என, பார்வையற்றோருக்கு எந்த வசதியும் கிடைக்காததால், பார்வையற்ற மாணவர்களுக்கு என, தனியாக சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தேன்.அரசு துறை மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பணி வாய்ப்புகள் உள்ளன. அதற்கு ஏற்றார் போல், ஆங்கில அறிவை வளர்க்க, "ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகள், பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கணினி பயிற்சி என, சாதாரண மனிதர்களோடு பார்வையற்ற மாணவனும் போட்டி போடும் அளவிற்கு, பயிற்சி தருகிறோம்."யுனைட்டட் வே ஆப் சென்னை' என்ற நிறுவன உதவியுடன், 25 கணினிகள் வாங்கி, பார்வையற்ற மாணவர்களுக்கான கணினி மையத்தையும் நடத்துகிறோம். கோடையில் நடத்தப்படும் இவ்வகுப்புகளை, இனி ஆண்டு முழுவதும் நடத்த முயற்சித்து வருகிறோம்.தொடர்புக்கு: 96008 22994.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

கோடைக்குத் தீர்வு!

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_68554420130408212119.jpg

கோடைக்கு த் தீர்வு!

கோடைக் காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு த் தீர்வு சொல்லும், மருத்துவர் கோமதி அம்பிகா: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல், ஜூன் வரையிலான நாட்களில், பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக, குறிப்பிட்ட நோய்கள் தாக்குகின்றன. "டெங்கு' காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதால், இந்த கோடைக் காலத்தில், புதிதாய் தொற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.அம்மை, மஞ்சள் காமாலை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, டைபாய்டு, கண்களில் தொற்று, சிறுநீரகத் தொற்று என, வழக்கமான நோய்கள் வரவே வாய்ப்புகள் அதிகம். வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில், வெளியில் சென்றால், "சன் ஸ்ட்ரோக்' வரும். இதை தவிர்க்க, "சன் ஸ்கிரீன்' திரவங்கள் உபயோகித்து, புற ஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.வெயிலின் பாதிப்பால் தோலில் ஏற்படும், சிறு கொப்பளங்கள், தடிப்புகளுக்கு, நாமே நிவாரணம் செய்யாமல், மருத்துவரிடம் மட்டுமே சிகிச்சை பெறுவது நல்லது.

உடல் வெப்பத்தை அதிகரிக்கும் எண்ணெய், மசாலாப் பொருட்கள் சேர்ந்த உணவுகளை தவிர்த்து, பழங்கள், காய்கறிகளை உண்பது நல்லது.கோடைக் காலத்தில் ஓட்டல்களில் உண்பவர்களுக்கு, காலரா, வயிற்றுப் போக்கு மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகள் வரும். தள்ளு வண்டிகளில் நறுக்கி வைத்திருக்கும் பழங்களை உண்பதை தவிர்க்க வேண்டும். முழுப் பழத்தை அப்படியே வாங்கி, கழுவி சாப்பிடலாம். பழச்சாறு, தயிர், மோர், இளநீர் போன்ற பானங்களை, முடிந்த அளவு குடிக்கலாம். பாட்டில்களில் விற்கப்படும் நீராக இருந்தாலும், நன்கு காய்ச்சி ஆற வைத்து குடிப்பதே நல்லது.தினமும் இரு முறை குளிப்பது, வியர்வை இல்லாமல் சுத்தமான உடைகளை அணிவது, அதிக மக்கள் கூட்டமான பொது இடங்களுக்கு சென்று வந்தவுடன் கை, கால்களை கழுவுவது, முகம் மற்றும் கழுத்து பகுதியை குளிர்ந்த நீரால் துடைப்பது ஆகியவற்றால், உடலின் வெப்பம் குறைந்து, சுகாதாரமாக இருக்க உதவும். கோடைக் காலத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை பின்பற்றினால் மட்டுமே, கோடைக்கால நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.