ஏ. எம். கே. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏ. எம். கே. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 33: ஏ. எம். கே. (10)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 32 தொடர்ச்சி)

பிரிந்தவர் கூடி. . .

தோழர் ஏ.எம். கோதண்டராமனின் வழிகாட்டுதலில் ஓராண்டுக் காலத்துக்கு மேல் இயக்கப் பணி ஆற்றியவன் நான். நாங்கள் பல முறை சேர்ந்து பயணம் செய்தோம் என்றால், பல கல் தொலைவு வயல் வரப்புகளில் நடந்து சென்றோம் என்று பொருள். நாங்கள் பல முறை சேர்ந்து உணவருந்தினோம் என்றால், பல நாள் சேர்ந்தே பட்டினி கிடந்தோம் என்றோ, நாலணாப் பொட்டுக் கடலையும் குவளை நீரும் பகிர்ந்து பசியாறினோம் என்றோ பொருள். இன்ப துன்பங்களில் பங்கேற்றல் என்றல்லவா சொல்வார்கள்? இங்கு துன்பங்கள் மட்டுமே உண்டு. வெந்ததைத் தின்று விதி வந்து சாகும் பிழைப்பல்ல, புரட்சிக்காக வாழ்ந்து புரட்சிக்காக மடியும் வாழ்க்கை வாழ்கிறோம் என்ற உணர்வு தரும் தனியின்பத்தால் அந்தத் துன்பங்களை வெற்றி கொள்ளும் தெளிவு எங்களுக்கு இருந்தது.

எங்கள் புரட்சிப் பணி என்று அப்போது நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தது அழித்தொழிப்பு என்ற ஒற்றைப் போராட்ட வடிவத்துக்கு ஆள் சேர்ப்பதுதான். அது அவ்வளவு எளிதாயில்லை. எங்களோடு வந்து சேர்ந்தவர்கள் ஒவ்வொருவராகத் திரும்பிப் போய் விட்டார்கள். நகரத்திலிருந்து புரட்சிக் கனவுகளோடு வந்த மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிற்றூர்ச் சேரிகளில் நீண்ட கடின வாழ்க்கை சரிப்படவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும்தான் மிச்சமிருந்தோம். இரவின் இருளில் ஒரு வயற்கரையில் உட்கார்ந்து அடுத்த வேலைத்திட்டம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.

கீழத்தஞ்சை உழவர்களின் ஆய்த எழுச்சி பற்றி ’லிபரேசன்’ ஆரவாரமாய் எழுதிக் கொண்டிருந்தது. பீக்கிங் வானொலியோ “வங்கக் கடலலைகள் தீப்பிடித்து எரிவதாக” அறிவித்துக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் இந்த நகைச்சுவையை எண்ணிச் சிரித்து விட்டு, அடுத்துச் செய்ய வேண்டியன பற்றி அக்கறையோடு பேசிக்கொண்டிருந்தோம். என்ன நடந்தாலும் எங்கள் உறுதியை அசைக்க முடியாது என்பதில் தெளிவாக இருந்தோம். ஆளுக்கொரு பக்கம் போய் புதிய தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ள முடிவெடுத்துப் பிரிந்தோம்.

சில நாள் கழித்துப் புதிய தொடர்புகள் பற்றிய நல்ல செய்தியுடன் ஏஎம்கே என் புதிய தொடர்புக்குத் திரும்பி வந்தார். இருவரும் அவரவர் பணிகளையும் பட்டறிவையும் பகிர்ந்து கொண்டோம். இப்படி ஏஎம்கே கண்டெடுத்த புதிய தோழர்கள் பந்துவக்கோட்டை எனும் சிற்றூரைச் சேர்ந்தவர்கள் – தோழர்கள் இராசப்பா, குருமூர்த்தி, ரெங்கசாமி (இலெனின்) மேலும் சிலர்.

தோழர் இலெனினைப் பொறுத்த வரை பெரியவரிடம் முழு நம்பிக்கை கொண்டு அரசியலுக்கு வந்தவர். அது என்ன கூடிக் கும்மாளமடிக்கும் அரசியலா? இல்லை, அதிகபட்சத் தியாகத்தைக் கோரும் ஆயுதப் போராட்ட அரசியல். 

ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அழித்தொழிப்புக்கான கரந்தடி(கொரில்லா)க் குழுவுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. குடும்பத்தை விட்டு வெளியேறித் தலைமறைவு வாழ்க்கைக்கு வர வேண்டும். அனைத்து வகைத் தியாகங்களுக்கும் அணியமாக வேண்டும். ஏஎம்கே இதையெல்லாம் ஒளிவுமறைவின்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். கடுமையானதைக் கடுமையாகவே சொல்வது அவர் பாணி. ஈட்டிக் குத்தில் ஏது சரசக் குத்து?

ஒவ்வொருவராகப் பேசி முடித்தாயிற்று. இலெனின்தான் கடைசி. குழுவில் முதல் ஆளாக இடம்பெறப் போவது அவர்தான் என்பது அனைவரின் எதிர்பார்ப்புமாக இருந்தது. ஏஎம்கேயும் அப்படித்தான் கணக்கிட்டிருந்தார். இலெனின் சொன்னார்:

“நான் வருவதாகச் சொன்னது சொன்னதுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், எனக்கு இன்னும் இரண்டு, மூன்று மாதம் அவகாசம் வேணும்.”

“ஏன்?”

“என் பெண்டாட்டி பிள்ளைகளைப் பற்றிக் கவலப்படவில்லை. அஞ்சலை கூலி வேலை செய்து பிள்ளைகளைக் காப்பாற்றிடுவாள்.  அதுக்கும் மேல் என் அம்மா! எங்க அப்பா சிங்கப்பூரில் செத்தப்பிறகு என்னையும் என் அக்கா தங்கச்சிங்களையும் பாடுபட்டுக் காப்பாற்றி இப்ப மருமகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் உடம்பைப் பிழிஞ்சி கஞ்சி ஊத்திருவாங்க. எனக்கிருக்கிற ஒரே கவலை…” 

“சொல்லுங்க…”

“நான்தான் எங்க அப்பா அம்மாவுக்கு ஒரே ஆண்பிள்ளை. நாலு அக்கா, ஒரு தங்கச்சி, நாலு அக்காளையும் கட்டிக் குடுத்தாச்சு. மிச்சமிருக்கறது ஒரே ஒரு தங்கச்சி. அதையும் யார்கிட்டயாவது பிடித்துக் கொடுத்துவிட்டால், என் கடமை தீர்ந்து விடும். அதற்குத்தான் நேரம் கேட்கிறேன்.”

இலெனின் முகத்தை உற்றுப் பார்த்து ஏஎம்கே சொன்னார்:

“ஒரே தங்கச்சிங்கறீங்க, ஆனால், யார்கிட்டயாச்சும் பிடித்துக் கொடுக்கவேண்டும் என்கிறீர்கள். யார்கிட்டயாச்சும் பிடித்துக் கொடுப்பதுதான் கடமையா? பொருத்தமான ஒருத்தனுக்குக் கட்டிக் கொடுக்கவேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் தங்கச்சியைப் பத்தி உங்களுக்கு மட்டும்தான் கவலையா? எங்களுக்கு இல்லையா? நாம் என்ன குடும்பத்தை வெறுத்துச் சந்நியாசமா போகிறோம்? தலைமறைவு என்பது எதிரிக்கிட்டே இருந்துதான். இயக்கத்துக்கு வருவதால குடும்பத்தைக் கை விடவேண்டும் என்பதில்லை.  சுரண்டுற குடும்பம்னா கூட அப்படி இருக்கலாம். உங்கள் குடும்பம் உழைக்கிற குடும்பம். உங்கள் தங்கச்சி இரண்டு ஆம்பளைங்களுக்குச் சமமா உழைக்கக் கூடியவர்கள். ஏர் உழுறாங்க, கவலையேத்தத்துல தண்ணி இறைக்கிறாங்க. உழைப்பாளிப் பெண் அவர்களையும் இயக்கத்துக்குக் கொண்டுவரலாம். உடனே இல்லன்னாலும் பின்னால். அப்புறம், இயக்கத்துலயே ஒரு நல்ல தோழரா பாத்துக் கட்டிக்கட்டும். முதலில்  நீங்கள் வாங்க. தங்கச்சியச் சொல்லிப் புரட்சிய ஒத்திப் போடாதீங்க.” 

இலெனின் தலையசைப்பால் தன் ஏற்பைச் சொல்லப் பெரியவர் புன்முறுவலால் அவரைப் பாராட்டினார். பெரியவர் என்று அப்போது அறியப்பட்டிருந்த ஏஎம்கே மீது இலெனின் கொண்டிருந்த நம்பிக்கை அத்தகையது! இத்தனைக்கும் அவர் ஏஎம்கே என்றே தெரியாமல்!

அதெல்லாம் முடிந்து ஐந்தாண்டு கழித்துச் சந்திக்கிறோம். சிறையில் ஆயுள் தண்டனைக் கைதிகளாகச் சந்திக்கிறோம். எங்கள் தோழமையின் பாசம் குன்றவில்லை. ஒருவர் மீது ஒருவர் கொண்ட மதிப்பும் நம்பிக்கையும் குறையவில்லை. ஆனால் அரசியலில் கடுமையாக மாறுபட்டு நிற்கிறோம். அந்த மாறுபாட்டை விவாதித்தால் போக்கி விட முடியாதென்று தெளிவாகப் புரிந்து கொள்கிறோம். பிரிந்தவர்கள் கூடிய மகிழ்ச்சி பெரிதா? கருத்தொருமித்துக் கூடியவர்கள் கருத்து மாறுபட்டுப் பிரிந்த ஏமாற்றம் பெரிதா?

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பார்கள். அரசியலில் சேர்ந்திருந்தவர் பிரிந்தால் பேசவும் கூடுமோ என்பதுதான் அது வரை எனக்கும் இலெனினுக்கும் கிடைத்த அனுபவமாக இருந்தது. நக்சலைட்டு இயக்கம் எனப்பட்ட மா.இலெ.(எம்-எல்) கட்சியின் திட்ட அடிப்படைகள் யாவும் தவறானவை என்று நாங்கள் நிலையெடுத்து அறிவித்திருந்தோம்.

இந்தியா அரைக்குடியேற்றம்தானா? இந்தியப் பெருமுதலாளிகள் தரகு முதலாளிகள் என்பது சரியா? இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை எவ்வாறு புரிந்து கொள்வது? இவை போன்ற அடிப்படை வினாக்களுக்கு விடை தேடி இரு நீண்ட கட்டுரைகள் எழுதிச் சுற்றுக்கு விட்டிருந்தேன். தமிழ் படிக்க முடியாத சில தோழர்களுக்காக ஆங்கிலத்திலும் எழுதியிருந்தேன். பிறகு அந்தத் தோழர்களில் சிலர் எங்களோடு பேசுவதே இல்லை. வேறு சிலர் ஒப்புக்கு மட்டும் பேசுவர். அவர்களின் வருத்தமும் கோபமும் உணர்ச்சி வகையில் நியாயம்தான் என்று நாங்கள் பொறுத்துப் போவோம். உயிராய், உயிரினும் மேலாய் ஒன்றை மதித்து அதற்காகவே நெடுஞ்சிறைத் தண்டனை பெற்றிருப்பவர்களிடம் போய், “ஐயா, உங்கள் அடிப்படையே தவறு, அவலை நினைத்து உரலை இடித்துள்ளீர்கள்” என்று சொன்னால் கோபம்தானே வரும்? ஆனால் அப்படிச் சொல்லும் உரிமை எங்களுக்கு உண்டு என்று நம்பினோம். ஏனென்றால் நாங்களும் அதே காரணத்துக்காக நெடுஞ்சிறைத் தண்டனை பெற்றிருந்தோம். செய்தது தவறு என்றால் அந்தத் தவற்றில் எங்களுக்கும் பங்கு இருந்தது.

இதெல்லாம் தோழர் ஏஎம்கேக்குத் தெரிந்திருந்தது. அவர் என் கட்டுரைகளை ஏற்கெனவே படித்திருந்தார். அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே மேதை இலெனின் எழுதிய கட்டுரையைக் கொடுத்துப் படிக்க சொன்னார். நானும் படித்துவிட்டுப் பேசினேன். ஆனாலும் உடன்பாட்டுக்கு வர முடியவில்லை.

எங்கள் விவாதம் முடிவுற்ற நாள் மாலை அறையடைப்பு (லாக்கப்) முடிந்த பிறகு நான் இலெனினைக் கூப்பிட்டுக் கேட்டேன்:

“என்ன இலெனின், மனசுக்குச் சங்கடமா இருக்கா?”

“ஆமா, தியாகராசா!”

“இதெல்லாம் நாம் எதிர்பார்க்க வேண்டும். நமக்கிருக்கிற மாதிரிதான் அவருக்கும் இருக்கும்?  ஏஎம்கே என்ன சொன்னார் தெரியுமா? எவ்வளவோ பேசணும் என்று வந்தேன்; பேச முடியாத அளவுக்கு நீங்கள் விலகிப் போயிருப்பீங்க என்று நினைக்கவில்லை என்றார்.”

“சரி இப்ப என்ன பண்றது?”

“நம் வேலயை நாம் பார்க்க வேண்டியதுதான்.” 

இப்போது ஏஎம்கே என்ன செய்யப் போகிறார்? மற்ற சிலரைப் போலவே எங்கள் மீது வெறுப்புக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்ளப் போகிறாரா? அல்லது முன்போலவே இயல்பாகப் பழகுவாரா?

மறுநாள் காலை திறந்து விட்டிருந்த நேரத்தில் ஏஎம்கே தன் அறைக்கு எங்களை இயல்பாக அழைத்துப் பேசினார்:

“வேறுபாடுகள் இருந்தா இருக்கட்டும், பின்னால பாத்துக்குவோம் சிறையில் இருக்குற வரைக்கும் சேர்ந்து என்ன செய்ய முடியும்னு பாக்கலாம். அதற்கு நம் வேறுபாடு தடையா வர வேண்டியதில்லை.”

இந்த அணுகுமுறை எங்களுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. கடலூர் சிறையில் நடைபெற்ற போராட்டங்கள், குறிப்பாகப் பொன் நாடார் கொலை தொடர்பான போராட்டம் — எல்லாவற்றைப் பற்றியும் ஏஎம்கே எங்களுக்கு விரிவாகச் சொன்னார். திருச்சி சிறையில் நடந்து முடிந்த போராட்டங்கள். குறிப்பாகத், தோழர் ஏசி.கத்தூரிரெங்கனின் வழிகாட்டுதலில் நடைபெற்ற மேத் திங்கள் போராட்டம் – எல்லாவற்றைப் பற்றியும் நாங்கள் அவருக்குச் சொன்னோம்.

மேத் திங்கள் போராட்டத்துக்கு முன் நாங்கள் அப்போது கடலூர் சிறையிலிருந்த ஏஎம்கேவுக்கு இரகசியமாய்க் கடிதம். அனுப்பியிருந்தோம். அது குறித்து ஏஎம்கே சொன்னார்:

“ஆமாம், உங்கள் கடிதம் கிடைத்தது. ஆனால் சிறைக்குள் பெருந்திரள் அமைப்பு – mass organisation – கட்டுவது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அது நல்லதல்ல என்பதற்காக அல்ல. அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள், சாத்தியமில்லை என்கிறேன். உணர்வுமிக்க சிலரைக் கருமையமாக – core – வைத்துக் கொண்டு இயங்குவதுதான் சாத்தியம். போராட்ட நடவடிக்கையில் மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். அதுதான் சிறையில் சாத்தியம்.”

ஒரு நாள் ஏஎம்கே என்னைக் கூப்பிட்டு, ஆங்கில நாளேட்டில் வந்திருந்த சில செய்திகளை மற்றத் தோழர்களுக்காகத் தமிழில் படித்துக் காட்டும்படிச் சொன்னார். படித்து முடித்த பின் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். காரல் மார்க்குசு எழுதிய மூலதனம் நூலைத் தமிழாக்கும் திட்டம் பற்றி இலெனின் குறிப்பிட்டார். நான் ஏஎம்கேயைப் பார்த்துச் சொன்னேன்:

”மூலதனத்தை நான் மொழிபெயர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாய் இலெனின் சொல்லிக் கொண்டிருக்கிறார். நான்தான் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போது நீங்களும் நானும் சேர்ந்து மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாம் சிறையில் சேர்ந்து செய்கிற வேலையாக இது இருக்கட்டும்.”

‘இல்லை, தியாகு, நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும், உங்களுக்கு ஆங்கிலம் தெரியும். எனக்கும் ஆங்கிலம் தெரியும். உங்களுக்குத் தமிழ் தெரியும். எனக்கும் தமிழ் தெரியும். ஆனால் மொழிபெயர்ப்பதற்கு இது போதாது. ஆங்கிலத்தில் இருப்பதை இயல்பாகத் தமிழில் சொல்லத் தெரிந்திருக்கவும் வேண்டும். அது எனக்கு அவ்வளவாக வராது. உங்களுக்கு நன்றாகவே வருகிறது.”

“எனக்குத்தான் பயமாக இருக்கிறது.”

*உங்களுக்கென்ன பயம்? நான் சொல்கிறேன். இதை நீங்கள்தான் செய்யப் போகிறீர்கள். நீங்கள் செய்யா விட்டால் யாரும் செய்யப் போவதில்லை.”

ஏஎம்கே உளமாரத் தந்த ஊக்கம் என் தயக்கத்தைப் போக்கி விட்டது. மார்க்சோடு பழகி அவரது பெரும் படைப்பை தாய்மொழிக்குப் பெயர்க்க எனக்கிருந்த கடைசி மனத் தடையும் சரிந்து விழ, ஒரு புதிய இலக்கியப் பயணத்துக்கு ஆயத்தமானேன்.

ஒரு வகையில் இன்றும் அந்தப் பயணத்தில்தான் உள்ளேன் எனலாம்.

 (தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல் 23

சனி, 11 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 31 : ஏ. எம். கே. (9)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 30 தொடர்ச்சி)

ஏ. எம். கே. (9)

நாங்கள்… எங்கள்…

தஞ்சையார் எனப்படும் தஞ்சை அ. இராமமூர்த்தி மாணவராய் இருந்த காலத்திலிருந்தே தமிழக அரசியல் உலகில் நன்கறியப்பட்டவர். ஆனால் வழக்கறிஞரான பிறகும் கூட சட்ட உலகில் அந்த அளவுக்கு அறியப்படாதவராகவே இருந்தார்.

சட்டப் படிப்பு படிக்கும் போதும் அது முடிந்த பிறகுங்கூட தஞ்சையார் அநேகமாய் முழுநேர அரசியல்வாதியாகவே செயல்பட்டு வந்தார்.

காமராசரின் வழிகாட்டுதலில் தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டு, சென்னை தொடங்கி அடுத்தடுத்த மாவட்டத் தலைநகரங்களில் மாநாடுகள் நடத்தப்பட்ட போது சென்னை சட்டக் கல்லூரி மாணவராக இருந்த தஞ்சை இராமமூர்த்தி தலைமையில்தான் யாவும் நடைபெற்றன. குடந்தைக் கல்லூரி மாணவனாயிருந்த அடியேனும் இந்தப் பெரும்பாலான நிகழ்வுகளில் பங்கேற்றேன். குறுகிய காலம் என்றாலும் செறிவான பட்டறிவூட்டிய அந்தக் கதையைத் தனியாகத்தான் சொல்ல வேண்டும்.

இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லலாம். எனக்கு அப்போதே (1968-69) ‘நக்சலைட்டு’ முத்திரை விழுந்து விட்டது. என் பேச்சும் எழுத்தும் அப்படித்தான் என்னை அவர்களுக்குக் காட்டிற்று. கருப்பையா மூப்பனார் வழக்கமாக என்னைப் பிரசங்கி என்பார். “நாங்கள் பிரசிங்கிகளாகவே இருக்கிறோம், நீங்கள் தலைவர்களாகவே இருங்கள்” என்று சொல்வேன், சிரிப்பார். கடைசியில் “தீவிரவாதி” என்று அழைக்கத் தொடங்கினார். இதே முத்திரையைப் பயன்படுத்தி மாவட்ட மாணவர் காங்கிரசுத் தலைமைக்கு நான் வரவிடாமல் பார்த்துக் கொண்டார். அந்தக் கட்டத்தில் தஞ்சையார் என் பக்கம் நின்றார். என் நிலைபாடுகளை ஆதரித்தார்.

முழுமையாக இயக்கத்துக்கு வருமுன் தஞ்சையாரை சந்திக்கச் சென்றிருந்தேன். ‘வாங்க நக்சலைட்டு” என்றார். தஞ்சாவூர் சீனிவாசநகரில் அப்போதுதான் வீடுகட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது. இரவு விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தோம். முழுக்க அரசியல்தான். என் பேச்சிலிருந்து என் சிந்தனைப் போக்கைக் கணிப்பது அவருக்கு எளிதாய் இருந்திருக்க வேண்டும். “கொள்கைதான் பெரிது என்று நினைக்கும் போது சரியெனத் தோன்றுவதைச் செய்யுங்கள். என் வாழ்த்து எப்போதும் உண்டு” என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார்.

ஒரு முறை நான் தஞ்சையாரிடம் கேட்டேன்.

“என்னண்ணா வக்கீலாயிட்டீங்க. நீதிமன்றத்துக்கெல்லாம் போறதில்லையா?”

“ஞாயிற்றுக் கிழமையில்தான் கொஞ்சம் நேரம் கிடைக்கிறது. அன்றைக்கென்று நீதிமன்றத்தை மூடுகிறார்களே, என்னசெய்வது?

தஞ்சையார் காலம் தாழ்ந்தே வழக்கறிஞராகத் தொழில் புரியத் தொடங்கினார் என்றாலும், வெகு விரைவில் தஞ்சாவூரில் முதன்மையான வழக்கறிஞர்களில் ஒருவராகி விட்டார்.

சரி, கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவராகத் தோழர் ஏஎம்கே தஞ்சை அமர்வு நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு, அந்த வழக்கில் வாதிடும் வாய்ப்பு எதிர்பாராமல் தமக்கு வந்த போது தஞ்சையார் பெருமகிழ்வுற்றார்.

அரசியலில் நிலைப்பாடுகள் என்று இருப்பது போல் நாட்டங்கள் அல்லது மனச்சாய்வுகள் என்ற ஒன்றும் உண்டு. நிலைப்பாடுகளில் எப்படி இருந்த போதிலும் தஞ்சையாருக்கு ஓர் இடதுசாரி மனச்சாய்வு இருந்தது. அதற்கு இந்த வழக்கு ஏற்றதாய் இருந்தது.

இரண்டாவதாக,

தோழர் ஏ.எம். கோதண்டராமனைப் பொறுத்த வரை இது முழுக்கப் பொய் வழக்கு என்பது தஞ்சையாருக்குத் தெரிந்திருந்தது. வழக்கு நடத்த ஏஎம்கே ஒத்துழைக்க மாட்டார் என்பதும் அவருக்குப் புரிந்ததுதான். குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு வழக்கறிஞரால் வழக்கு நடத்தி வெற்றி காண முடியுமா? கடினம்தான்!

இருந்தாலும், இந்த வழக்கில் அது சாத்தியம் என்றே தோன்றியது. சாட்சியம் என்ற பெயரில் சாட்சிகள் உளறிக் கொட்டியதைக் கேட்டு தஞ்சையார் மட்டுமல்லாமல் ஏனைய வழக்கறிஞர்களும் கூட அப்படித்தான் நினைத்தார்கள். நீதிபதியும் கிட்டத்தட்ட அப்படி ஒரு மனநிலைக்கு வந்து விட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.

காவல்துறை வழக்கின்படியே கூட, கொலையில் ஏஎம்கேயின் பங்கு என்பது தூண்டுதலாகவும் உடந்தையாகவும் இருந்தார் என்பதுதான். ஆனால் இதற்கே கூட நம்பும்படியான சாட்சியங்கள் இல்லை. அரசுத் தரப்புச் சாட்சியத்தில் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போல் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருந்தாலும் அதை வாதுரையில் தகர்த்து விட முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தஞ்சையாருக்கு இருந்தது.

இந்த நிலையில்தான் நீதிபதியின் கேள்விகளுக்கு ஏஎம்கே சொல்லப் போகும் விடைகள் முக்கியத்துவம் பெற்றன. ஏஎம்கே வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம், ‘நான் குற்றவாளி அல்ல’ என்று சொன்னால் போதும், அல்லது ‘இது பொய் வழக்கு’ என்றோ ‘இந்தச் சாட்சிகள் சொல்வது உண்மையல்ல’ என்றோ சொன்னாலே போதும், மற்றதைத் தஞ்சையார் பார்த்துக் கொள்வார்.

தஞ்சையார் கெஞ்சாத குறையாய் விடுத்த வேண்டுகோளுக்கு ஏஎம்கே எந்தப் பதிலும் சொல்லாமல் புதிராக முறுவலித்த போது, இந்த மனிதர் பதில் சொல்ல மறுக்கப் போகிறார் என்றுதான் தஞ்சையார் நினைத்தார்:

‘சரி, ஏதாவது செய்யட்டும். மெளனம் இச்சூழலில் மறுப்பின் அடையாளம் என்று வாதிடலாம்.’

ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக ஏஎம்கே பதில் சொன்னார். அந்தப் பதிலும் யாருமே எதிர்பார்க்காதது:

”ஆம், நாங்கள்தான் செய்தோம். அது எங்கள் கடமை”

ஏஎம்கே அப்படிச் சொன்ன போது, தஞ்சையாருடன் சேர்ந்து நீதிமன்றமே அதிர்ந்து போனது. நீதிபதி கையிலிருந்த பேனாவைத் தூக்கிப் போட்டுவிட்டு இருக்கையில் சாய்ந்து விட, வழக்கறிஞர்களிடையே “போச்சு, போச்சு” என்ற முணுமுணுப்பு எல்லோரும் ஏஎம்கேயைத் திரும்பிப் பார்க்க, அவர் அவர்களை நோக்கி வழக்கமான புன்முறுவலை வீசினார்.

தஞ்சையார் நீதிமன்றக் கூடத்துக்கு வெளியே எழுந்து சென்று ஒதுக்குப்புறமாய் மரத்தடியில் நின்று ஒரு சேவல் சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டு யோசித்தார். ஏ.எம்.கே. உதிர்த்த சொற்களை மனத்துக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தார். ஆங்… அப்படித்தான் இருக்க வேண்டும்…..

முறுக்கு மீசையைத் தடவிக் கொண்டு முகம் மலர நீதிமன்றக் கூடத்துக்குத் தஞ்சையார் திரும்பி வந்த போது, சிக்கலுக்கு அவர் ஒரு தீர்வு கண்டு விட்டதாகத் தோன்றியது.

இறுதி வாதுரைகளுக்கான நாளில் முதலில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டு முடித்த பின், தஞ்சையார் எழுந்து நின்றார்.

“நாங்கள்தான் செய்தோம், இது எங்கள் கடமை” என்ற ஏ.எம்.கே.யின் பதிலுக்குத் தஞ்சையார் தரப்போகும் விளக்கத்தை அறிய நீதிமன்றமே ஆவலுடன் காத்திருந்தது.

தஞ்சையார் சொன்னார்:

“என் கட்சிக்காரர் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார் என்று சொல்வது தவறு. நீதிமன்ற நடவடிக்கைகளை அவர் புறக்கணித்ததாலேயே, அவர் மீதான குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டு விட்டது எனக் கொள்வதற்கில்லை. என் கட்சிக்காரர் ‘நாங்கள்’ என்று குறிப்பிட்டது தன்னையும் அல்ல, தான் உள்ளிட்ட அனைத்து எதிரிகளையும் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால் நாங்கள் என்பது யார்? இந்த வழக்கு வழக்கத்துக்கு மாறான ஒன்று என்பதை நினைவுபடுத்த ஆசைப்படுகிறேன். அரசுத் தரப்பு வழக்கின் படியே கூட என் கட்சிக்காரர் எந்த ஒரு சொந்த நோக்கத்துக்காகவும் குற்றம் புரிந்ததாக தெரியவில்லை. இவர் ஒரு புரட்சிக்காரர், ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையுள்ளவர் என்பதை நானும் மறுக்கவில்லை. இவர் ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவர். நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர். இயக்கத்தில் சாதாரண உறுப்பினர் அல்ல, மாநிலச் செயலாளர். இயக்க உறுப்பினர்கள் இயக்க நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக என்ன செய்தாலும் அதற்கு இயக்கமே பொறுப்பேற்றுக் கொள்கிறது. இயக்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். இது தார்மிகப் பொறுப்புதானே தவிர வேறல்ல. இப்படி ஒரு தார்மிகப் பொறுப்பை (moral responsibilityஐ) என் கட்சிக்காரர் ஏற்றுக்கொள்வது நேரடியாக இந்த வழக்கில் சாட்டப்பட்டுள்ள குற்றங்களை ஒப்புக்கொள்வதாகாது. நாங்கள்தான் செய்தோம் என்று சொன்னதோடு, இது எங்கள் கடமை என்றும் என் கட்சிக்காரர் சொல்லியிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘நாங்கள்’ ‘எங்கள்’ என்றெல்லாம் என் கட்சிக்காரர் சொல்லும் போது, அவர் சார்ந்த இயக்கத்தைக் குறிப்பதாகவே புரிந்து கொள்ள வேண்டும்.”

தஞ்சையாரின் வாதுரை ஏனைய வழக்கறிஞர்களையும் மற்றவர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. தன்னைப் பாராட்டியவர்களுக்கெல்லாம் அவர் ஒரே பதில்தான் சொன்னார்:

“உண்மையைச் சொன்னேன், வேறு ஒன்றுமில்லை.”

தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது குறித்துத் தஞ்சையார் எவ்வித ஊகமும் சொல்ல விரும்பவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவரே ஒத்துழைக்காத நிலையிலும், தம்மால் இயன்ற வரை சிறப்பாக இந்த வழக்கை நடத்த முடிந்தது என்ற மனநிறைவு அவருக்கு இருந்தது.

அமர்வு நீதிமன்றம் அளிக்கிற தீர்ப்பே இறுதியானதன்று. அது பாதகமாக அமைந்து விட்டால் எதிர்த்து மேல்முறையீடு (அப்பீல்) செய்யலாம். கீழமை நீதிமன்றத்தில் வழக்கை நன்றாக நடத்தியிருந்தால்தான் மேலமை நீதிமன்றத்தில் அதை அடிப்படையாகக் கொண்டு வாதிட்டு வெற்றி பெற முடியும். கீழே கோட்டை விட்டு விட்டு மேலே கோட்டை கட்ட நினைத்தால் முடியாது.

அமர்வு நீதிமன்றத்தில் தாம் வழக்கு நடத்திய விதம் உடனே பலன் தரா விட்டாலும் மேல்முறையீட்டில் பலன் தரும் என்ற நம்பிக்கை தஞ்சையாருக்கு இருந்தது.

இது பொய் வழக்கு என்பது தெளிவாகக் காட்டப்பட்டு விட்டது. ஏதாவது ஒரு கட்டத்தில் இது உடைந்தாதக வேண்டும்.

சில நாள் தள்ளிப் போட்டுப் பிறகு தீர்ப்புச் சொல்லப்பட்டது. ஆயுள் சிறைத் தண்டனை!

அன்று மாலை ஏஎம்கே திருச்சி மத்திய சிறை வாயிலில் இருந்த போதே எங்களுக்குத் தகவல் வந்து விட்டது. ஆயுள் தண்டனையோடு வந்திருக்கிறார் என்ற செய்தி தந்த வருத்தத்தைக், காட்டிலும், இதோ அவர் வரப்போகிறார், இத்தனை ஆண்டு இடைவெளிக்குப் பின் அவரைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சிப் பரவசம்தான் மேலோங்கி நின்றது.

எங்களைத் தனிக்கொட்டடிகளில் அடைத்த பிறகு, ஏஎம்கேயைக் கொண்டுவந்தார்கள். அவர் ஒவ்வொரு தோழரிடம் சிறிது நேரம் பேசி விட்டு வந்தார். நானும் இலெனினும் இருந்தவை கடைசிக் கொட்டடிகள். அவர் எங்கள் எதிரில் வரும் வரை நாங்கள் அவரைப் பார்க்க முடியாது!

தாயின் முகம் பார்க்கக் காத்திருக்கும் பிள்ளைகள் போல் அவருக்காகக் காத்திருந்த அந்த ஒருசில மணித்துளிகள்! ஆழ்ந்த அன்பிற்குரிய ஒருவருக்காகக் காத்திருக்கும் போது நேரமே முடமாகிப் போகுமோ!

வந்து விட்டார் ஏ.எம்.கே.! அன்றுதான் முதன்முதலாகக் கைதிச் சீருடை உடுத்தியிருந்தார். என்னிடம் சிறிது நேரம், இலெனினிடம் சிறிது நேரம் பேசி விட்டுத் திரும்பும் போது, ஒரு புத்தகத்தை என்னிடம் தந்து, குறியிட்ட சில பகுதிகளையும் எடுத்துக்காட்டி விட்டு நாளை விவாதிப்போம் என்று கூறிச் சென்றார்.

அது மாமேதை லெனின் எழுதிய ‘ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்’ [IMPERIALISM HIGHEST STAGE OF CAPITALISM] என்ற நூல்.

நாங்கள் ஏ.எம்.கே.யுடன் விவாதிக்க ஆவலுடன் காத்திருந்தது போலவே அவரும் எங்களுடன் விவாதிக்க விரும்புவதாகப் புரிந்து கொண்டோம்.

இரண்டு மூன்று நாள் கழித்து ஒரு மரத்தடியில் அமர்ந்து அந்த அரசியல் விவாதத்தை ஆரம்பித்தோம். ஏஎம்கே ஒரு பக்கம், நானும் இலெனினும் ஒரு பக்கம். மற்றத் தோழர்களில் ஒருசிலர் மட்டும் ஆர்வத்துடன் இந்த விவாதத்தைக் கேட்க வந்தனர்.

இ.பொ.க.(மா.இலெ.) [CPI(M.L.)]  திட்டமும் அதன் வரையறுப்புகளும் சரி, செயல்பாடுகள் மற்றும் போராட்ட வடிவங்களில் வேண்டுமானால் தவறு இருக்கலாம், அது பற்றி விவாதிக்கலாம் என்பது ஏஎம்கே நிலைப்பாடு!

ஒரு கட்டத்தில் ஏஎம்கே சொன்னார்:

”இப்படிப் பட்டிமன்றம் போல் தொடர்ந்து விவாதித்துக் கொண்டே போவதில் பொருளில்லை.

. சரி, இப்போதைக்கு உங்கள் நிலை அது, எங்கள் நிலை இது என்று வைத்துக் கொள்வோம். சிறையில் நம்மால் சேர்ந்து செய்யக் கூடியவற்றைச் செய்து கொண்டிருப்போம்.”

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 22

வெள்ளி, 10 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 29: ஏ. எம். கே. (8)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 28: தொடர்ச்சி)

ஏ. எம். கே. (8)

புதிர் முறுவல் 

திருச்சி மத்தியச் சிறையில் 1974 செட்டம்பர் 25ஆம் நாள் தோழர் பாலகிருட்டிணன் தூக்கிலிடப்பட்ட போதும் அதன் பிறகும், நானும் இலெனினும் அதே சிறையின் முதன்மைக்கண்டத்தில் வைக்கப்பட்டிருந்தோம். எங்களோடு அதே கண்டத்தில் பத்துக்கு மேற்பட்ட ‘நக்சலைட்டு’ தோழர்களும் மற்றவர்களும் அடை பட்டிருந்தார்கள்.

நானும் இலெனினும் பாலுவை இழந்த பெருந்துயரிலிருந்து மீண்டு, எங்கள் அடுத்த பணிகள் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தோம். வரலாற்றுப் புகழ் படைத்த மேத் திங்கள் போராட்டத்துக்குப் பின் கொடிய அடக்குமுறையால் கலைந்து போன சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கத்தை மறுபடியும் கட்டுவது உடனடி வருங்காலத்தில் சாத்தியமில்லை என்பது எங்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவ்வமைப்பை மீண்டும் பழைய வடிவில் கட்டுவது தேவைதானா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் அடக்குமுறையினால் துவண்டு விடாமல் தொடர்ந்து போராட்ட உணர்வுடன் இருந்து வந்த தோழர்களுடனும் நண்பர்களுடனும் தொடர்பறாமல் பார்த்துக் கொள்வது அவசியம் எனக் கருதினோம். முதன்மைக் கண்டத்துத் தனிக் கொட்டடி வாசம் இதற்குச் சரிப்படவில்லை.

மரணத் தண்டனைக் கைதிகளாக இருந்த போது நாங்கள் எடுத்த முடிவு சாவதற்குள் ஒரு சாதனையாக காரல் மார்க்குசின் “மூலதனம்’ நூலை நான் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்பது. அப்போது கருத்துப் போராட்டம் காரணமாக ஒத்திவைத்த இம்முடிவை இப்போது செயலாக்க விரும்பினோம். இது வரை, நான், சொல்லச் சொல்ல இலெனின் எழுதுவதுதான் வழக்கம். நான் என் அறையிலிருந்தபடி கத்திச் சொல்ல, அவர் தன் அறையிலிருந்தபடி எழுதுவார். 

[திருச்சி மத்திய சிறையில் கண்டம் என்ற பெயரில் மூன்று தொகுதிகள் இருந்தன. கண்டம் என்ற சொல் CONDEMN என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலிபெயர்ப்புதான். CONDEMENED PRISONER என்றால் மரணத் தண்டனைக் கைதி. அவரை அடைத்து வைக்கும் அறை மரணத்தண்டனைக் கொட்டடி. இந்தக் கொட்டடிகள் வரிசையாக இருக்கும் தொகுதி மரணத் தண்டனைக் கூடம் எனப்பட்டது. நான் விசாரணைக் கைதியாக இருந்த போதே சென்னை மத்தியச் சிறையில் மரணத் தண்டனைக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தேன். அங்கு கிடைத்த பட்டறிவைச் சுவருக்குள் சித்திரமாக்கியுள்ளேன். 1971 நடுவில் திருச்சிராப்பள்ளிச் சிறைக்கு மாற்றப்பட்ட போது முதலில் ‘ஓல்டு கண்டம்’ என்று அறியப்பட்ட பழைய கண்டத்தில்தான் அடைக்கப்பட்டேன். தோழர் இலெனினும் குருமூர்த்தியும் தொடக்கமுதலே அங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். கண்ணப்பன் (என்ற) கணேசனும் பிற்பாடு வந்து சேர்ந்தார். வழக்கமாக பழைய கண்டம் என்பது தூக்கிலிடப்படும் கைதிகளைக் கடைசியாக அடைக்கும் இடம், அதற்குப் பின்னால்தான் சக்கிக் கொட்டடி (தூக்கு மேடை) இருந்தது. தோழர் பாலகிருட்டிணனைத் தூக்கிலிடுவதற்கு முதல் நாள் இரவு பழைய கண்டத்தில்தான் வைத்திருந்தனர். மற்ற நேரங்களில் அது ஆபத்தானவர்களாகக் கருதப்பட்ட அரசியல் கைதிகளுக்கும், தப்பிச் செல்லக் கூடியவர்களுக்குமான (escapees) தொகுதி. பழைய கண்டத்தைக் களமாகக் கொண்டு நான் சொல்ல வேண்டிய கதைகள் பலவுண்டு. பிறகு சொல்கிறேன். பழைய கண்டத்தின் இப்போதைய பெயர் ஆறறைத் தொகுதி. முதன்மைக் கண்டத்திற்கு இருபதறைத் தொகுதி என்று பெயர். ஒவ்வொரு மையச் சிறையிலும் அடைப்புச் சிறை (Close Prison) என்று ஒரு பகுதி உண்டு. சி.பி. என்று சுருக்கமாகச் சொல்வார்கள். தூக்குத் தண்டனைக் கைதிகள் மிகையாக வந்து விட்டால் திருச்சி சிறையில் சி.பி. முதல் தொகுதியை கண்டம் ஆக்கி விடுவார்கள். அதற்கு சி.பி. கண்டம் என்று பெயர். நாங்கள் திருச்சி சிறையில் இருந்த வரை இந்த மூன்று கண்டங்களுக்கு இடையில்தான் குடிமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.]

ஏஎம்கேயை எங்களோடு முதன்மைக் கண்டத்தில் வைக்காமல் தனியாகப் பழைய கண்டத்தில் அடைத்து விட்டார்கள். விசாரணைக்காக அவரைத் தினந்தோறும் தஞ்சாவூருக்குக் கொண்டுபோய்க் கொண்டுவந்தார்கள். பொய் வழக்குதான் என்றாலும் வழக்கு விசாரணையின் முடிவில் தண்டனை உறுதி என்று நினைத்தோம். இந்தியத் தண்டனைச் சட்டம் 120-பி, 302 ஆகிய இரு பிரிவுகளுக்காக மரணத் தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கலாம். மரணத் தண்டனை விதிக்கப்படுமானால் அதையே காரணமாய்க் கொண்டு அவரைத் தனியாகப் பூட்டி விடுவார்கள். ஆயுள் தண்டனை விதிக்கப்படுமானால் அவரை எங்களோடுதான் வைக்க வேண்டியிருக்கும். 

இதற்கிடையில், தஞ்சை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த வழக்கு விசாரணை பற்றிய செய்திகள் எங்களுக்கு வந்து கொண்டிருந்தன.

அப்போது தஞ்சையில் அமர்வு நீதிபதியாக இருந்தவர் தூக்குத் தண்டனை விதிப்பதில் பேர்போனவர். பாலகிருட்டிணனுக்கு மரணத் தண்டனை விதித்தவரும் இவர்தான்.

திருச்சியிலிருந்து ஏஎம்கே அதிகபட்ச வழிக்காவலுடன் காவல்துறை வண்டியில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தார். அது வழக்கு விசாரணையின் முதல் நாள். கைவிலங்கிட்டு, அதற்கு மேல் சங்கிலி மாட்டி ஏஎம்கேயை வண்டியிலிருந்து இறக்கி அழைத்து வந்த போது நீதிமன்ற வளாகமே பரபரத்தது.

ஏஎம்கே கூண்டில் ஏறி நின்றவுடன் அவரைப் பார்த்து நீதிபதி கேட்டார்:

“உம் பெயர் கோதண்டராமன்தானே?”

ஏஎம்கே பதிலேதும் சொல்லாமல் சற்று நிதானித்து விட்டு முழக்கமிடத் தொடங்கினார்:

“தலைவர் மாவோ வாழ்க!” “புரட்சி ஓங்குக!”

பிறகு, நீதிபதியைத் தவிர மற்ற எல்லார் மீதும் பார்வையைப் பரப்பி ஒரு சிற்றுரை நிகழ்த்தினார். பூர்சுவா நீதிமன்றத்தின் பொய்மை, ஏமாற்று பற்றியெல்லாம் சுருக்கமாய்ப் பேசினார், வழக்கறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் வியப்பு! நீதிபதிக்கோ திகைப்பு!

ஏஎம்கே பேசி ஓய்ந்த பின் நீதிபதி கேட்டார்: ”நீர் வழக்கை நடத்தப் போகிறீரா? வழக்குரைஞர் வைத்திருக்கிறீரா? இல்லையென்றால், உமக்கு இந்த நீதிமன்றம் வழக்குரைஞர் வைத்துத் தரும்.”

இந்தக் கேள்விக்கு விடையளிக்காமல் ஏஎம்கே சொன்னார்: “நீர் ஒரு காவலர் நீதிபதி (Police udge) என்று கேள்விப்பட்டேன்.”

நீதிபதிக்குச் சுருக்கென்று இருந்திருக்க வேண்டும். மரியாதை இம்மியளவு குறைந்தாலும் பதிலடி கிடைக்கும் என்பது புரிந்திருக்க வேண்டும்.

ஏ.எம். கே.யிடம் நீதிபதியின் அணுகுமுறை உடனே மாறி விட்டது.

“திரு.கோதண்டராமன், நீங்களே ஒரு வழக்குரைஞர். நீதிமன்ற நடைமுறையெல்லாம் உங்களுக்கே தெரிந்ததுதான். வழக்குரைஞர் வைத்து வாதிடப் போகிறீர்களா என்று கேட்டேன்.”

“நான் இந்த நீதிமன்றங்களை நம்பவில்லை. வழக்கு நடத்த விரும்பவில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.”

“நான் உங்களுக்கு ஒரு வழக்குரைஞர் வைத்து அவர் உதவியோடுதான் விசாரணையை நடத்தியாக வேண்டும். நீங்கள் விசாரணையில் குறுக்கிட்டுத் தடை செய்யக் கூடாது.”

“நான் குறுக்கிட மாட்டேன். எனக்கும் இங்கு நடைபெறும் விசாரணைக்கும் தொடர்பில்லை என்று இருந்து விடுவேன்.”

இதே தஞ்சை அமர்வு நீதிமன்றத்தில் எங்கள் மீது இதே வழக்கு நடைபெற்ற போது, எங்கள் சார்பில் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவோ வாதிடவோ வழக்கறிஞர்கள் அமர்த்தப்படாது போனதால் அந்த விசாரணையை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் மறு விசாரணைக்கு ஆணையிட்டது பற்றி முன்பே சித்திரங்களில் சொல்லியிருக்கிறேன். இந்தத் தீர்ப்பைக் கருத்திற் கொண்டுதான் இப்போது ஏஎம்கே சார்பில் நீதிமன்றத்துக்கு உதவிட நீதிமன்ற உதவியர்/ amicus curiae என்ற முறையில் ஒரு வழக்கறிஞரை நியமிப்பதில் நீதிபதி குறியாக இருந்தார்.

யாரை நியமிப்பது? யாராவது ஒரு வழக்கறிஞர் முன்வந்தால் அவரையே நியமித்து விடலாம். பிரச்சினையில்லை, ஆனால் யாரும் முன்வரக் காணோம்.

வழக்கறிஞர் தஞ்சை அ. இராமமூர்த்தியும் ஏஎம்கேயும் சேர்ந்து படித்தவர்களல்லர். முன்னவர் சென்னையில் மாணவர் இயக்கத்தில் முனைப்பாய் இருந்த போது, பின்னவர் தொழிற்சங்க அரங்கில் செயல்பட்டு வந்தார். அப்போது அறிமுகமும் சற்றே பழக்கமும் ஏற்பட்டிருக்கலாம்.

எது எப்படியோ, இப்போது நீதிமன்றத்தில் அவர் நோக்க… இவர் நோக்க… இருவரையும் நீதிபதி நோக்க, ஒரு சிக்கல் தீர்ந்தது.

தஞ்சையாரைப் பார்த்து நீதிபதி கேட்டார் : “ஏன், நீங்களே நீதிமன்றத்துக்கு உதவலாமே?”

தஞ்சையார் ஏஎம்கேயைப் பார்த்தார். ஏஎம்கேயின் புன்முறுவலுக்குப் பொருள் விளங்கா விட்டாலும், தஞ்சையார் சரி சொல்லி விட்டார்.

எட்டு நாள் விசாரணை, ஏறத்தாழ எண்பது சாட்சிகள். ஒவ்வொரு நாளும் கூண்டில் நிறுத்தப்பட்டவுடன் ஏஎம்கே எழுப்பும் முழக்கங்களையும் பிறகு அவர் ஆற்றும் சிற்றுரையையும் கேட்கப் பெருங்கூட்டம் வந்தது. நீதிபதி கன்னத்தில் கைவைத்துக் கண்மூடி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பார். ஏஎம்கே பேசி முடித்து அமர்ந்த பிறகுதான் சாட்சி விசாரணை ஆரம்பமாகும்.

சாட்சிகள் சொன்ன சாட்சியத்தில் முரண்பாடுகளுக்கும் செயற்கைத்தனத்துக்கும் பஞ்சமில்லை. பள்ளிச் சிறுவர்கள் பாடம் ஒப்பிப்பது போல் எல்லாரும் ஒப்பித்துத் தீர்த்தார்கள்.

சாட்சிகளின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த அச்சம். காவல் துறையின் மிரட்டலுக்கும் போதனைக்கும் சான்றாயிற்று.

தஞ்சையாரின் குறுக்குவிசாரணையில் சாட்சிகள் நொறுங்க சாட்சியங்கள் கந்தலாய்க் கிழிந்தன. குறிப்பாக, ஏஎம்கேயை அடையாளங்காட்டுவதில் சாட்சிகள் தடுமாறிப் போனார்கள்.

முறுக்கு மீசையைத் தொட்டுத் தடவிக் கொண்டு தஞ்சையார் எழுந்தாலே சாட்சிகளுக்கு நடுக்கம்தான். பல நேரம் அவரின் சரமாரியான கேள்விக் கணைகளிலிருந்து சாட்சிகளைக் காப்பாற்ற நீதிபதியின் குறுக்கீடு தேவைப்பட்டது.

சாட்சியங்களையோ அவற்றின் மீதமைந்த வழக்கையோ நீதிபதி நம்பவில்லை என்பதை அவரது முகக்குறி கொண்டு தஞ்சையார் கணித்தார். மற்ற வழக்கறிஞர்களும் அவ்வாறே கருதினார்கள். விடுதலைத் தீர்ப்பை அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குமுன் இன்னும் சில படிகள் ஏற வேண்டுமே!

சாட்சிகள் விசாரணை முழுவதும் முடிந்த பிறகு சாட்சியம் குறித்து எதிரியிடம் நீதிபதி சில கேள்விகள் கேட்பார். அப்போது எதிரி தன் நிலையை எடுத்துக் கூற அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘நான் குற்றவாளி அல்ல’ என்று சொல்வதற்கு அதுதான் கடைசி வாய்ப்பு.

வழக்கு விசாரணையை இது வரை புறக்கணித்து வந்த ஏஎம்கே இந்தக் கட்டத்தில் என்ன செய்யப் போகிறார்? இந்த சாட்சிகள் சொல்வது பொய், எனக்கும் இந்தக் குற்றத்துக்கும் தொடர்பு இல்லை என்று அவர் சொன்னால் போதும், விடுதலை கிடைத்து விடும் என்பது தஞ்சையாரின் நம்பிக்கை. ஆனால் ஏஎம்கே இப்படிச் சொல்வாரா?

தஞ்சையார் அருகில் வந்து நின்றதும் ஏஎம்கே சொன்னார்:

“என்னைத் தவறாகக் கருத வேண்டாம். நீங்கள் எவ்வளவு பாடுபட்டு இந்த வழக்கை நடத்துகிறீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. நீதிமன்றப் புறக்கணிப்பு என்பது எங்கள் நிலைப்பாடு. இதை நான் உங்களுக்காக விட்டுத் தர முடியாது அல்லவா?”

“ஆமாம், முடியாதுதான். நான் அது பற்றித் தவறாகக் கருதுவதற்கு ஒன்றுமில்லை. உங்கள் நிலைப்பாடு மற்றவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, எனக்கு நன்றாகப் புரிகிறது.”

“மிக்க நன்றி.”

“நீங்கள் விசாரணையில் பங்கு பெறா விட்டாலும் இங்குதான் உட்கார்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாமலிருக்காது. அதிலும் நீங்கள் ஒரு வழக்கறிஞர்.”

ஏஎம்கே வழக்கம் போல் புன்முறுவல் பூத்ததோடு சரி. அந்தப் புதிர் முறுவலுக்குப் பொருள் விளங்கா விட்டாலும் தஞ்சையார் தொடர்ந்து பேசினார்:

“இந்த வழக்கு முழுக்க முழுக்க ஒரு பொய் வழக்கு என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. அத்தனை வழக்கறிஞர்களுக்கும் தெரிந்து விட்டது. வேடிக்கை பார்க்கிறவர்களுக்கே கூட தெரிந்து விட்டது. நீதிபதிக்கும் புரிந்து விட்டது. அவர் கிட்டதட்ட ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என்றுதான் நினைக்கிறேன். இந்தக் கட்டத்தில் …”

கொஞ்சம் நிறுத்தி விட்டு ஏ.எம். கே.யின் முகத்தை பார்த்தார் தஞ்சையார்…. அதே புதிர் முறுவல்!

“நீங்கள் உங்கள் புறக்கணிப்பைக் கைவிட வேண்டாம். எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று மட்டும் சொல்லி விடுங்கள் மற்றபடி கேள்விக் கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம் ஆர்க்யுமெண்ட்டில் நான் பார்த்துக் கொள்கிறேன்.”

நீதிபதி கேட்ட முதல் கேள்விக்கு ஏஎம்கே பதிலளித்த போதுதான் அவரது புதிர் முறுவலின் பொருள் விளங்கிற்று.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 21

பின் குறிப்பு:

தாழி அன்பர் சாமிநாதன் வினவுகிறார்:

தண்டனைக் கைதி புரிகிறது. தண்டனைக் காவலர் என்பவர் யார்?

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருப்பவர் தண்டனைக் கைதி. நீண்ட தண்டனை பெற்ற கைதிகள் சிலரைச் சில ஆண்டுகள் சிறையில் இருந்த பின் சிறைக் காவலர்களாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்களுக்குத் தனிச் சீருடை உண்டு. காவலர்கள் போலவே அவர்கள் சிறையில் செயல்படுவார்கள். கையில் தடியும் வைத்திருப்பார்கள். அவர்களைத்தான் தண்டனைக் காவலர் (convict warder) என்பர்.

சனி, 28 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): நாற்று பறித்த இராமன்

 அகரமுதல





(தோழர் தியாகு எழுதுகிறார் 25 : ஏ. எம். கே. (6) – தொடர்ச்சி)

 நாற்று பறித்த இராமன்

பொன் நாடார் கொலை தொடர்பாக நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகும் தோழர் ஏ.எம். கோதண்டராமன் சில மாதக் காலம் கடலூர் மத்திய சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார். இடையிடையே வேறு சில வழக்குகளுக்காக அவர் சென்னைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மத்தியச் சிறையில் வைக்கப் பட்டார். கடலூர் நீதிமன்றத்தில் அவர் மீது கொலை முயற்சி வழக்கு இருந்தது.

யாவற்றிலும் பெரிய வழக்கு — சதி மற்றும் கொலை வழக்கு — தஞ்சை நீதிமன்றத்தில் இருந்தது. நானும் இலெனினும் எந்த வழக்கில் தண்டனை பெற்றிருந்தோமோ அதே வழக்கு! அந்த வழக்கில் முதல் எதிரி நான், கடைசி எதிரி ஏஎம்கே. மொத்தம் ஏழு எதிரிகளில் முதலில் பிடிபட்ட எங்கள் நால்வர் மீதும் வழக்கு விசாரணை முடிந்து தண்டனையும் கொடுத்தாயிற்று. மற்றவர்கள் அது வரை பிடிபடாததால் அவர்கள் மீதான வழக்கைப் பிரித்து(Split) நடத்தியாக வேண்டும்.

இப்போது ஏஎம்கே பிடிபட்டு விட்டதால், அவரை மட்டும் குற்றக் கூண்டில் நிறுத்தி மீண்டும் ஒரு முறை வழக்கு விசாரணையை நடத்தியாக வேண்டும்.

அப்போது திருச்சி சிறையில் இருந்த நாங்கள் தஞ்சை நீதி மன்றத்தில் ஏ.எம். கே. மீதான வழக்கு விசாரணை தொடங்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தோம். வழக்கின் மீது அக்கறை கொண்டதால் அல்ல. அது பற்றி நாங்கள் பெரிதாக யோசிக்கவே இல்லை . தஞ்சையில் வழக்கு என்றால் ஏஎம்கேயை திருச்சி சிறையில்தான் வைத்தாக வேண்டும். அவரைப் பார்த்து நான்காண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. அவரைப் பார்த்து அவரோடு பேசவும் நாங்கள் ஆவல் கொண்டு காத்திருந்தோம்.

என்னையும் இலெனினையும் பொறுத்த வரை பாச உணர்ச்சிக்கு மேற்பட்ட ஒரு காரணமும் இருந்தது. நாங்கள் எந்த இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறைப்பட்டோமோ அந்த இயக்கத்துடன் சிறையில் கருத்து மாறுபாடு கொண்டு விலகி நின்றோம். வருங்காலத்துக்கான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தோம்: வெளியே எங்களை வழிநடத்திய தோழர் ஏஎம்கேயுடன் இது குறித்து விவாதிக்க விரும்பினோம். அதற்காக அவரது வருகையை எதிர்பார்த்திருந்தோம்.

தோழர் இலெனினைப் பொறுத்த வரை, ஏஎம்கேயால் ஈர்க்கப்பட்டு புரட்சிகர இயக்கத்துக்கு வந்தவர். ஆனால் நம்புவதற்கே கடினமான செய்திதான், அப்போதெல்லாம் அவருக்கு ஏஎம்கேயை ஏஎம்கே. என்று தெரியாது. பெரியவராகவும் தோழர் சங்கரனாகவும்தான் தெரியும். முன்பின் அறிமுகமில்லாத — இன்னார் என்றே தெரியாத — ஒருவரின் வழிகாட்டுதலை நம்பி ஏற்று, மனைவி மக்களைத் துறந்து உயிரைக் கொடுக்கவும் சித்தமாய்ப் புரட்சிகர இயக்கத்தில் இணைவது என்றால்… அந்தப் பெருமையில் பெரும் பங்கு ஏஎம்கேயின் ஒப்படைப்புணர்வையும் அயராத உழைப்பையும் சாரும்.

தோழர் ஏஎம்கேதான் என்னைப் பந்துவக்கோட்டை வரச்சொல்லி இலெனின், குருமூர்த்தி,  இராசப்பா முதலான தோழர்களிடம் அறிமுகம் செய்து வைத்தவர். அப்போதெல்லாம் தோழர் இலெனின் அவரைப் பெரிய ஐயா என்றும் என்னைச் சின்ன ஐயா என்றும் அழைப்பார்.

இலெனினும் மற்றத் தோழர்களும் ஏஎம் கோதண்டராமன் என்ற பெயரையே ‘கியூ’ பிரிவு போலீசார் சொல்லித்தான் தெரிந்து கொண்டார்கள். அந்தப் பெயருக்குப் பின்னாலிருந்த வரலாற்றைச் சிறையில் நான் அவர்களுக்குச் சொன்னேன்.

வட ஆற்காடு மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள ஆனைமநல்லூர் ஏஎம்கேயின் சொந்த ஊர். நிலவுடைமைக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், பள்ளிப் பருவத்திலேயே பகுத்தறிவுக் கருத்துகளிலும் சமூகச் சீர்திருத்தத்திலும் ஈடுபாடு கொண்டு திராவிடர் கழகத்தில் இயங்கி வந்தார். திகவிலிருந்து திமுக பிரிந்த போது இரண்டும் வேண்டா என்று பொதுவுடைமைக் கட்சிக்கு மாறி விட்டார். வயது 16, ஆண்டு 1950.

வேலூர் ஊரிசு கல்லூரியிலும், பிறகு சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்த போது, தீவிர அரசியல் ஈடுபாட்டுடன் பொதுவுடைமை இயக்கத்துக்காக உழைத்தார். படிப்பு முடிந்து சிறிது காலமே வழக்கறிஞராகப் பணி புரிந்தார். வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் புரட்சிக்காகவே ஒப்படைக்கத் துடித்துக் கொண்டிருந்த அந்த இளைஞருக்குக் கறுப்பு மேலாடையும் அங்கியும் மாட்டி வழக்குரைஞர் தொழில் செய்வது சரிப்பட்டு வரவில்லை. ஒருநாள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு முழு நேர இயக்கப் பணிக்கு வந்து விட்டார்!

மார்க்குசியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியராகத் தொழிற்சங்கப் பணியாற்றத் தோழர் ஏஎம்கே ஆவடி-அம்பத்தூர் பகுதிக்கு அனுப்பப்பட்டார். வில்லிவாக்கத்திலிருந்து பட்டாபிராம் வரை ஏராளமாய்ப் புதிய தொழிற்சாலைகள் முளைத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்தப் பகுதியில் தொழிலாளர்களை அமைப்புவழியில் திரட்டித் தொழிற்சங்கம் கட்டும் பொறுப்பை ஏஎம்கே திறம்பட நிறைவேற்றினார்.

1967 தேர்தலுக்குப் பின் மா.பொ.க. (சிபிஎம்) கட்சிக்குள் மூண்ட கருத்துப் போராட்டத்தில் தலைமையுடன் கடுமையாக மோதிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ஏஎம்கே. அவரோடு சேர்த்துக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் தொழிற்சங்கத் தலைவர் குசேலரும் ஒருவர்.

நக்குசலைட்டு(Naxalite) இயக்கம் எனப் பெயர் பெற்ற இ.பொ.க.(மா.இலெ.)/CPI(M.L.) கட்சியைத் தமிழகத்தில் தோழர் எல். அப்புவுடன் சேர்ந்து நிறுவியவர் ஏஎம்கே .உடனடி ஆயுதப் போராட்டம், சிற்றூர்ப் புறங்களில் வருக்கப் பகைவரை அழித்தொழிப்பது,  மக்கள்திரள் போராட்டங்களைக் கைவிட்டு கரந்தடிப் போர் முறையை (Guerrilla warfare) மேற்கொள்வது என்றெல்லாம் கட்சி நிலையெடுத்த போது, தயக்கமோ தாமதமோ இல்லாமல் இந்த முடிவுகளை ஏற்று, நகர வாழ்வையும் தொழிற்சங்க அரசியலையும் துறந்து தஞ்சை மாவட்டச் சிற்றூர்ப்புறத்துக்கு வந்து விட்டார் ஏஎம்கே!

முதல் சந்திப்பிலேயே என்னைப் பார்த்து, “மற்றதையெல்லாம் உடைப்பது இருக்கட்டும், உங்கள் குடும்பத்தை உடைத்து விட்டு வெளியே வாருங்கள்” என்று சொன்னவர் ஏஎம்கே.

அந்த முதல் சந்திப்பை மறக்கவியலாது. நக்குசல்பாரி இயக்கமாக அறியப்பட்ட மா-இலெ கட்சியை எனக்கு அறிமுகம் செய்தவர், என்னை இயக்கத்துக்கு வென்றெடுத்தவர் பேராசிரியர் இராதாகிருட்டிணன் (இப்போது தோழர் மருதமுத்து). அவரும் நானும் தோழர் பாசுகரனும் ஆசிரியர் தோழர் சிவானந்தமும் சில மாணவர்களும் குடந்தை நகரில் ஒரு குழுவாக இயங்கிக் கொண்டிருந்தோம். கல்கத்தாவிலிருந்து வந்து கொண்டிருந்த (இ)லிபரேசன் இதழையும் கோவையிலிருந்து வந்து கொண்டிருந்த ‘புதிய தலைமுறை’ இதழையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தோம். நாங்களே ‘புதிய உலகம்’ என்ற திங்களேடு தொடங்கத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தோம். நான் அந்த ஏட்டுக்கு ஆசிரியர் என்று முடிவாகியிருந்தது. ஆனால் எங்களுக்குக் கட்சியோடு தொடர்பில்லை.

திருச்சிராப்பள்ளியில் ஆசிரியர் தோழர் ’அசுரனோடு’ இராதாவுக்குத் தொடர்பிருந்தது. கட்சியோடு தொடர்பு வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.  

1969 செட்டம்பர்த் திங்கள் ஒரு வெள்ளிக் கிழமை இரவு அசுரனோடு பெரியவரும் (ஏஎம்கே) குடந்தையில் பேராசிரியர் இராதாவின் இல்லத்துக்கு வந்து சேர்ந்தனர். அக்கா இந்திரா எங்களுக்கு உணவு பரிமாறியவுடனே ஏஎம்கே ’உட்காருவோமா?’ என்று கேட்டு, சுற்றி எங்களை உட்கார வைத்துக் கொண்டு அறிக்கையுரை அளிக்கத் தொடங்கி விட்டார். உடனே ஆய்தப் போரட்டம், ஊர்ப்புறத்துக்குச் சென்று அழித்தொழிப்புக்கு விவசாயத் தொழிலாளர்களை ஆயத்தப்படுத்துவது என்று சொல்லி விட்டு, அழித்தொழிப்பை நியாயப்படுத்த சாரு மசூம்தார் கூறியவற்றை எடுத்துக்கட்டினார். 1905 முதல் உருசியப் புரட்சியின் தோல்வி குறித்து இலெனின் எழுதிய “மாசுகோ எழுச்சி குறித்து”/ “On the Moscow Uprising” என்ற கட்டுரையைப் படித்துக்காட்டி விளக்கினார்.   

விடியற்காலை புறப்படும் முன் ”சரி, நீங்க என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார். “தியாகு எப்போதோ முடிவு செய்து விட்டார், கட்சித் தொடர்புக்காகத்தான் காத்திருந்தோம், இப்போதைக்கு அவரை ஆசிரியராகப் போட்டு பத்திரிகை நடத்தத் திட்டமிட்டிருக்கோம்” என்று இராதா சொன்ன போது ஏஎம்கே வேகமாகத் தலையசைத்து மறுத்தார்: ”தியாகு ஒரு பாட்டாளிய மாணவர் (proletarian student) எனத் தோன்றுகிறது. அவரை உடனே சிற்றூருக்கு அனுப்புங்கள். பத்திரிகை வேலையெல்லம் மற்றவர்கள் பாருங்கள். புரட்சிதான் அவசரப் பணி.” என்னைப் பார்த்து தியாகு, முதலில் உங்கள் குடும்பத்தை த் துண்டித்துக் கொள்ளுங்கள் (“Thiagu, you first break your family”) என்று சொல்லிப் பெரும்பண்ணையூர் தோழர் ஆர். மாணிக்கம் முகவரியை எழுதிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார். இரண்டே நாளில் படிப்புச் சான்றிதழ்கள் அனைத்தையும் எரித்து விட்டு நான் பெரும்பண்ணையூர் சேரி போய்ச் சேர்ந்தேன்.]

அவரோடு ஏறத்தாழ ஓராண்டுக் காலம் தஞ்சை மாவட்டத்துச் சேரிகளில் வேலை செய்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. வேலை என்றால் இயக்க வேலை மட்டுமல்ல!

மக்களுடன் ஒன்றுகலப்பதன் பகுதியாக நான் வயல் வேலைக்குச் செல்லத் தொடங்கிய போது என்னை அவர் பாராட்டினார். பாராட்டிய தோடு நில்லாமல் அவரும் வயல் வேலைகளைப் பழகிக் கொண்டு செய்யத் தொடங்கி விட்டார்.

பட்டுக்கோட்டைப் பக்கம் நம்பிவயல் அருகே ஒரு சிற்றூரில் நாங்கள் இருவரும் நாற்றுப் பறிக்கும் வேலைக்குப் போயிருந்தோம். அந்த நிலம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தோழர் ஒருவருக்குச் சொந்தமானது. நாற்றுப் பறிக்க வந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் சேரிக்காரர்களே என்றாலும், குடியானவத் தெருவிலிருந்தும் சிலர் வந்திருந்தனர்.

வேலைக்கு நடுவில் அனைவருக்கும் வரப்பில் வைத்துத் தொன்னையில் கூழ் ஊற்றுவார்கள். வரிசையாக நின்று தொன்னையில் கூழ் வாங்கிக் குடிக்க வேண்டும். குடியானவத் தெருக்காரர்கள் அது வரை சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாலும் கூழ் வாங்கிக் குடிக்க வராமல் ஒதுங்கி நின்று கொள்வார்கள். நிலவுடைமையாளராகவே இருந்தாலும் சேரிக்காரர் சேரிக்காரர்தான், கூலிக்காரராகவே இருந்தாலும் சாதிக்காரர் சாதிக்காரர்தான் என்பதில் அவர்கள் தெளிவாய் இருப்பார்கள்.

ஏஎம்கேயும் நானும் வரிசையில் நின்று தொன்னையில் கூழ் வாங்கிக் குடித்த போது குடியானவத் தெருக்காரர்களுக்குத் திகைப்பு! அது வரை எங்களைத் தங்கள் ஆள் என்று எண்ணியிருக்க வேண்டும்!

கூழ் குடித்து முடித்து சேற்று நீரில் கைகழுவி புறங்கையால் வாய் துடைத்து வெற்றிலைபாக்கு மென்று சுவைத்தபடி ஏஎம்கே மீண்டும் நாற்றுப் பறிக்கக் கால் மடித்து உட்கார்ந்த போது அருகிலிருந்தவர் சன்னமான குரலில் கேட்டார்:

“ஏனையா நீங்களும் போய் அவன்களுடன் கூழ்  வாங்கிக் குடிக்கிறீர்கள்? ஏதோ வேலைக்கு வந்துவிட்டோம் என்பதால் சாதியை விட்டுவிட முடியுமா?”

ஏஎம்கே சிரித்துக் கொண்டே சொன்னார்: ”நாங்களும் சேரிதான். சொந்தக்காரர்கள். வெளியூரில் இருந்து வந்துள்ளோம்.”

கேட்டவர் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொண்டார். அன்றிரவு ஏஎம்கேயிடம் நான் கேட்டேன்: “நீங்கள் அப்படிச் சொன்னீர்களே, அவன் நம்மைத் தெரிந்து கொண்டு காட்டிக் கொடுத்துவிடப்  போகிறான்”

அப்போது நாங்கள் தலைமறைவாக இருந்தோம். ஏஎம்கே சொன்னார்:

“நாம் புரட்சி செய்ய வேண்டும் என்றால் நம்முடைய வருக்க நிலையிலே இருந்து இறங்கி வருகிற மாதிரி சாதி நிலையிலே இருந்தும் இறங்கி வர வேண்டும். நமக்குச் சாதி இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. சாதி பேரில் மிக அதிகமாக ஒடுக்கப்படுகிறவர்களுடன் ஒன்றாயிட வேண்டும். அதை மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். அதுதான் நமக்கு உண்மையான பாதுகாப்பு.”

தஞ்சையில் நடைபெறவிருந்த வழக்கு விசாரணைக்காகக் கடலூரிலிருந்து ஏஎம்கே திருச்சி சிறைக்கு மாற்றப்படும் செய்தி கிடைத்து நாங்கள் ஆவலோடு காத்திருந்தோம். திருச்சி சிறைக்குக் கொண்டுவரப்பட்ட போது அவரும் கூட எங்களையும் மற்ற தோழர்களையும் சந்திக்கும் ஆவலோடுதான் வந்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அவரை எங்களோடு வைக்காமல், தனியாக ஓரிடத்தில் அடைத்து வைத்தார்கள். ஏமாற்றம்! ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள எங்களுக்குத் தேவைப்பட்டது மனவுறுதி!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு – தாழி மடல் 20