உண்ணா நோன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்ணா நோன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

குவான்டனாமோ படைச் சிறையில் 92 கைதிகள் உண்ணா நோன்பு

குவான்டனாமோ இராணுவச் சிறையில் 92 கைதிகள் உண்ணா நோன்பு

கியூபாவில் அமெரிக்காவுக்குச் சொந்தமாக உள்ள குவான்டனாமோ ராணுவ சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளில் 92 பேர் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இந்த சிறையில் சுமார் 166 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தாங்கள் காரணமின்றி, குற்றச்சாட்டுகள் இல்லாமல், சட்டபூர்வ விசாரணை நடத்தாமல் கடந்த 11 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக கைதிகள் தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளில் 17 பேருக்கு மூக்கு வழியாக குழாயை செலுத்தி கட்டாயப்படுத்தி உணவு அளிக்கப்படுவதாக சிறை அதிகாரி தெரிவித்தார். 2 கைதிகள் நிலைமை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த கைதிக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் சிறை அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகள் பிப்ரவரி 6 முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கையை அதுபற்றி தகவல் வெளியிடும்போது திட்டமிட்டு குறைத்து ராணுவம் தெரிவிப்பதாக கைதிகள் தரப்பு வழக்குரைஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பிப்ரவரியிலிருந்து இப்போதைய நிலவரப்படி 130 பேர் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவிக்கிறார் டேவிட் ரீம்ஸ் என்கிற வழக்குரைஞர்.
ஆரம்பத்தில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமே நடத்தவில்லை என்று மறுத்தது சிறை நிர்வாகம். ஆனால் நிர்வாகத்தின் கூற்றுக்கு மாறாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளும் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
2 கைதிகள் தற்கொலை முயற்சி மேற்கொண்டனர் என்பதை சிறை செய்தித் தொடர்பாளர் கர்னல் சாமுவேல் ஹவுஸ் ஒப்புக்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து சுமார் 60 கைதிகள் பொது சிறைப் பகுதியிலிருந்து மாற்றப்பட்டு தனிமை சிறைப் பகுதியில் அடைக்கப்பட்டுள்ளனர். பொது சிறைப்பகுதியில் கைதிகள் சேர்ந்து சாப்பிடலாம். ஆனால் தனிமைச் சிறையில் ஒரு நாளைக்கு சுமார் 2 மணி நேரமே கைதிகள் கூடி இருக்க அனுமதிக்கப்படும்.
உண்ணாவிரதத்தை கைவிடுவதுடன் சிறை விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி தந்தால் பழையபடி பொது சிறைப் பகுதிக்கு மாற்றப்படுவார்கள் என்றார் ஹவுஸ். அறையில் தாங்கள் வைத்திருந்த மத புனித நூலை, கடத்தல் பொருள் என கூறி அதிகாரிகள் சோதனை நடத்தியதும் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்க காரணமாக அமைந்தது.
அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படை ஆப்கானிஸ்தானில் தலிபான்களை விரட்ட நடத்திய போரில் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை கைது செய்து இந்த சிறையில் அடைத்துள்ளது அமெரிக்கா

வியாழன், 4 ஏப்ரல், 2013

சிறப்பு முகாமில் 9- ஆவது நாளாக உண்ணா நோன்பு

பூந்தமல்லி ச் சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்  9- ஆவது நாளாக உண்ணா நோன்பு
  
பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் அகதி 9-வது நாளாக உண்ணாவிரதம்
சென்னை, ஏப். 4-

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வரும் தமிழர்கள் இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு லட்சக்கணக்கான தமிழர்கள் தற்போது வசித்து வருகிறார்கள்.

இப்படி அகதிகளாக வருபவர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் மற்றும் வெடி பொருட்களை கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள செங்கல்பட்டு சிறப்பு முகாமில், 48 பேரும், பூந்தமல்லி சிறப்பு முகாமில் 4 பேரும் கடந்த பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

பூந்தமல்லி முகாமில் உள்ள அகதி சந்திரகுமார் தன்னையும், தன்னுடன் இருக்கும் மற்ற கைதிகளான கங்காதரன், ஜெயமோகன், பகீரதன் ஆகியோரையும் திறந்த வெளி முகாமுக்கு மாற்றக்கோரி கடந்த 27-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து அவரது மனைவி ஜெயநந்தினி, மகன்கள் பரிதி அழகன் (வயது 6), பிருந்தாவன் (3) ஆகியோருடன் சந்திரகுமாரை பார்ப்பதற்காக சென்றார். அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சிறை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர் கைது செய்யப்பட்டார்.


இதனால் மனமுடைந்த சந்திரகுமார் அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து கடந்த 1-ந்தேதி அன்று முகாமுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்.

27-ந்தேதியில் இருந்து இன்றுவரை 9 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரகுமாரை போனில் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையில் போர் நடந்தபோது காயங்களுடன் குடும்பத்துடன் நான் தமிழகத்துக்கு தப்பி வந்தேன். இந்த சமயத்தில்தான் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

3.5 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் நான் வாடி வருகிறேன். என் மீது தொடரப்பட்ட வழக்கு முடிந்த பின்னரும் தனிமைச் சிறையிலேயே தொடர்ந்து இருந்து வருகிறேன். அயல் நாட்டவர் சட்டப்படி வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டால் குடும்பத்தினருடனேயே அவர்கள் தங்கியிருந்து வழக்கை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த வாய்ப்பு எனக்கும், என்னைப்போல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்ப ர்களுக்கும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ளது. எனவே என்னைப் போன்ற அனைவரையும் திறந்த வெளி முகாமுக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் சிறையில் நாங்கள் கொடுமைகளை அனுபவித்து வருகிறோம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி ஈழ விடுதலைக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.

திங்கள், 18 மார்ச், 2013

திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வருகிற 19- ஆம் நாள் உண்ணா நோன்பு

திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வருகிற 19- ஆம் நாள் உண்ணா நோன்பு

ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் நடந்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இயக்குநர்கள் அமீர், எஸ்.பி.ஜனநாதன், பிரபுசாலமன், வெங்கட்பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். இலங்கை அதிபர் ராஜபட்சவை பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் திணிக்கப்பட்டிருக்கும் சிங்கள குடியேற்றத்தை உடனே வெளியேற்ற வேண்டும். இலங்கையுடனான உறவை இந்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயற்குழு கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் இயக்குநர் சங்க பொதுச் செயலாளர் அமீர் கூறியதாவது:
இயக்குநர்கள் சங்க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தி மார்ச் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராடத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இந்த அறவழிப் போராட்டத்துக்கு தமிழ் திரைத்துறை மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்த பல சங்கங்களின் ஒத்துழைப்பையும் கேட்டுள்ளோம். படப்பிடிப்பு மற்றும் தங்களது பணிகளை அன்றைக்கு ஒரு நாள் மட்டும் தவிர்த்து விட்டு, போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்.

சனி, 16 மார்ச், 2013

தமிழகத்தில், 20 அன்று ஒரு கோடி மாணவர்கள் உண்ணா நோன்பு: இரா..நல்லக்கண்ணு பேட்டி

ஐ.நா.தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கோரி தமிழகத்தில், 20 அன்று ஒரு கோடி மாணவர்கள் உண்ணா நோன்பு:  இரா..நல்லக்கண்ணு பேட்டி
ஐ.நா.தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கோரி தமிழகத்தில், 20-ந்தேதி ஒரு கோடி மாணவர்கள் உண்ணாவிரதம்: ஆர்.நல்லக்கண்ணு பேட்டி
மன்னார்குடி,மார்ச்.16-

மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் இலங்கை பிரச்சினையை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களை இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய நிர்வாக்குழு உறுப்பினர் ஆர். நல்லக்கண்ணு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் நடைபெற்றது ஒரு இனத்தினை முற்றிலும் அழிக்கும் திட்டமிட்ட போராட்டம். சர்வதேச போர் நெறிமுறைகளை சிறிதும் பின்பற்றாமல், பாதுகாப்பான இடம் என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சம் அடைந்தவர்களையும் ஈவு இறக்கமின்றி விமானத்தின் மூலம் கொத்துக்குண்டுகளை வீசி இலங்கை அரசு கொன்று குவித்தது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு தேடும் ஏற்படுத்தும் வகையில் தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும். தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் 1 கோடி போர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 5 நவம்பர், 2012

ஆயுதப்படை சிறப்பு அதிகார ச் சட்டம் நீக்கக்கோரி மணிப்பூரில் ஐரோம் சர்மிளா உண்ணா நோன்பு : இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு

ஆயுதப்படை சிறப்பு அதிகார ச் சட்டம்  நீக்கக்கோரி மணிப்பூரில் ஐரோம் சர்மிளா உண்ணா நோன்பு : இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு
 
 
ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் ரத்து செய்யக்கோரி மணிப்பூரில் ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதம்: இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு
இம்பால், நவ.5

மணிப்பூரில் ‘இரும்புப் பெண்’ என்று அழைக்கப்படும் ஐரோம் சானு ஷர்மிளா உண்ணாவிரதம் தொடங்கி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகிறது.

மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற இளம்பெண் 2000-ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

தனது 28வது வயதில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளிநீர்கூட பருகாமல் கடந்த 12 ஆண்டுகளாக பட்டினி கிடந்து, காந்திய வழியில் போராடி உலகின் கவனத்தை இவர் ஈர்த்தார்.

அசாம் ரைபிள்ஸ் படையினரால் 2.11.2000-ம் ஆண்டு, 10 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்ப்பட்டதை கண்டித்து ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

மணிப்பூர் மாநில அரசால் தற்கொலைக்கு முயன்றதாக குற்றம்சாடடி அவரை கைது செய்த போலீசார் இம்பாலில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு ஆஸ்பத்திரியில் ஷர்மிளாவை அனுமதித்து, பலவந்தமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அவர் 12 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருகிறார்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மக்கள் உரிமை இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இருப்பினும், உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்திய பலரது கோரிக்கையை ஏற்க ஷர்மிளா மறுத்துவிட்டார்.

மனித உரிமை போராளிகளுக்கான குவாஞ்சு விருது, மயிலம்மா விருது, 51 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் கூடிய ரவீந்திரநாத் தாகூர் விருது உள்ளிட்ட பல விதுகள் ஷர்மிளாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், தனது கோரிக்கையை ஏற்று ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு நீக்கும்வரை எந்த விருதையும் ஏற்றுக்கொள்வதில்லை என்ற முடிவில் ஷர்மிளா உறுதியாக உள்ளார்.

அவர் உண்ணவிரதத்தை தொடங்கி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை இயக்கங்கள், ஷர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.