(சனாதனம் பொய்யும் மெய்யும் 41 – தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 42-44
- ? 42. “நான் செய்தித்தாள்களில் பார்க்கிறேன். இந்தச் சமுதாயத்தில் மாபெரும் பிரிவினர் ஆலயத்தில் நுழைய தடை உள்ளது. இது இந்து மதத்திலோ, சனாதன தருமத்திலோ இல்லை” என்கிறாரே ஆளுநர் இரவி.
- பிராமணர்கள் தங்கள் தெருவில் பிற சாதியினர் குறிப்பாக ஆதித் தமிழர்கள் நுழையத் தடை விதித்திருந்தனரே! இவ்வாறு தடை செய்தவர்கள் இந்து மதத்தின் பெயராலேதான் செய்துள்ளனர்.
பல நகரங்களிலும் ஊர்களிலும் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்துள்ளன என்பதை வரலாறு சொல்கிறது. ஆரியத்தின் பாய்ச்சல் – வருணாசிரமத்தின் இரும்புக் கை – சனாதனத்தின் கொடுங்கை நீதித்துறை வரை பாய்ந்துள்ளதற்குப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம். ஒன்று பார்ப்போம்.
1874இல் மூக்க நாடார் என்பவர் மதுரையில் கோயில் ஒன்றில் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அவர் பிராமணர் அல்லர் என்பதை அறிந்த கோயிற் பணியாளர்கள் அவரைப் பிடித்துக் கொன்றுவிட்டனர். இதனால், நாடார்கள் பணியாட்கள் மீது வழக்கு தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை, ஆகவே, அவரைக் கொன்றது தவறில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.
ஆளுநர், நந்தனார் குருபூசை விழாவில்தான் இவ்வாறு பேசியுள்ளார். நந்தனார் வகுப்பாரைச் சிதம்பரத்தில் கோயில் இராச வீதிகளில்கூட நுழையத் தடை விதித்திருந்தனர். பின்னர் கடவுளே தில்லை வாழ் பிராமணர் கனவில் வந்து நந்தனாரை உள்ள நுழைய விடுமாறு சொல்லியும் தீக்குளித்துத்தான் செல்ல வேண்டுமென்று பிராமணர் தெரிவித்து விட்டனர். பின்னர் கடவுளே இவ்வாறு சொன்னதாகவும் தீக்குளித்து பிராமண வடிவம் பெற்று முப்புரிநூலணிந்து தன்னைக் காண வருமாறும் தில்லை நாதரே சொன்னதாகக் கதை கட்டி விட்டனர். அவ்வாறு தீக்குளிக்கச் செய்து சாகடித்து விட்டனர். பின்னர் அவர் தீக்குளித்துச் சிவந்த உருவம் பெற்று பிராமணராக மாறிக் கருவறைக்கு வழிபடச் சென்றதாகவும் கருவறையில் கடவுளுடன் ஒளி வடிவில் ஐக்கியமாகி விட்டதாகவும் கூறினர். வள்ளலார் இராமலிங்க அடிகளாரையும் தீயூட்டிக் கொன்றுவிட்டு இறைவனுடன் கலந்து விட்டதாகக் கதை கட்டினர். கடவுளை வணங்கவும் பிராமணர்க்கே தகுதி எனவும், எனவேதான் நந்தனாரைக் கடவுள் பிராமணவடிவில் வரச்சொன்னதாகவும் சொல்லிப் பிராமணப் பிறப்பை உயர்த்தினர்.
எனவே, இத்தகைய கொடுங்கேடுகள் இந்துசமயத்தில் இருப்பதை ஒத்துக் கொண்டு இவற்றிற்கு எதிராகப் போராடி அனைவருக்கும் சம உரிமை தரும் சமயமாக அதனை மாற்ற அவர் தொண்டாற்றுவாராக!
- உயர்வு தாழ்வே சனாதனத்தின் அடிப்படை என்பதை இங்குள்ள பல கருத்துகள் மூலம் விளக்கியுள்ளோம். எனினும் அண்மை நிகழ்வு ஒன்றைச் சொல்வது காலங்காலமாக சனாதனம் நீடித்துள்ளதையும் எனவே அதை விரட்டி யடிப்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
நாடாளுமன்றப் புதிய கட்டடத்தில் செட்டம்பர் 19-22 நாட்களில் சிறப்பு அமர்வு நடைபெற்றது. (18.09.அன்று பழைய கட்டடத்தில் நிறைவு அமர்வாக நடைபெற்றது.) இறுதி நாளன்று தெற்குத் தில்லி உறுப்பினர் இரமேசு பிதுரி உரையாற்றினார். அப்பொழுது சமாசுவாடிக்கட்சியின் உறுப்பினர் குன்வர் தேனிசு அலி குறுக்கிட்டுப் பேச முயன்றார். அவரும் நாடாளுமன்ற உறுப்பினர்தான். எனினும் இசுலாமியராயிற்றே! எனவே, அவர் எப்படிக் குறுக்கே பேசுவது எனச் சினம் கொண்டார். எனவே, “ஏய், நுனித் தோலை நீக்கியவனே, மாமா பயலே,” என்றெல்லாம் மிகக் கடுமையான சொற்களால் வசைபாடினார். அவைத்தலைவர் நிறுத்துமாறு கூறியும் மீண்டும் மீண்டும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வரவேற்புடன் வசை மழை பொழிந்துள்ளார். இதுதான் சனாதனம். இவர்களைத் திருத்த ஆளுநர் முயலட்டும். மாறாகச் சனாதனத்தை உயர்வானதாகத் தவறான பரப்புரை மேற் கொள்ள வேண்டா.
- ? 44. “சனாதனம் உலகிற்குத் தேவையான ஒன்று; சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது” என்கிறாரே ஆளுநர் இரவி.
- சனாதனம் பிராமணர்களை உயர்த்தி அவர்களின் நலன்களுக்காக ஓரவஞ்சனைச் செயற்பாட்டுடன் உள்ளமையால் அவரகளுக்கு வேண்டுமானால் தேவையாக இருக்கலாம். இழிவாகக் கருதப்படுகின்ற பிறருக்குத் தேவையில்லை.
தோற்றம் என ஒன்று இருந்தால் அழிவு என ஒன்று இருக்கத்தான் செய்யும். இப்பொழுதே பல இடங்களில் அழிந்து வரும் சனாதனம் விரைவில் முற்றிலுமாக அழியும் என்பதே உண்மை.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 71-73
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக