(சனாதனம் பொய்யும் மெய்யும் 38-40 – தொடர்ச்சி)

கேழ்வரகில் நெய்வடிகிறது என்றால் நம்பக்கூடியவர்களும் இருப்பார்கள் என்று பொய்களை முரசறைவோர் இருக்கத்தான் செய்கின்றனர்என் செய்வதுபின்வரும் மனு கூறும் விதிகளைப் பாருங்கள். பிறகு முடிவெடுக்கலாம். நீதியில் மட்டுமல்ல நீதி வழங்கும் பொறுப்பிலும் பிராமணருக்கு ஒரு நீதி பிறருக்கு வேறொரு நீதி என்பதை உணரலாம்.

பிராமணக் குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது. (மனு 8. 20)

பெண்கள் புணர்ச்சி விசயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விசயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை” ( மனு  8. 112)

 நீதித் தலங்களில் பிரமாணம் செய்ய (உறுதி யெடுக்க) வேண்டிய பிராமணனைச் சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்லச் செய்ய வேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்குக் கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும். (மனு 8. 113, 115)

சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கை அறுத்தெறிய வேண்டும். (மனு 8 . 270)

சூத்திரன் பிராமணர்களின் பெயர், சாதி இவற்றைச் சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்” ( மனு 8. 271)

பிராமணனைப் பார்த்து, “நீ இதைச் செய்ய வேண்டும்”, என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். (மனு 8. 272)

சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும். (மனு  8. 281)

பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு  பிராமண ரல்லாதாரைக் கொன்றவனுக்குப் பாவமில்லை. (மனு  8.349)

சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்.” (மனு  8.30)

சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால்  துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து அவனுடைய பொருளைக் கொள்ளையிட வேண்டும். (மனு 8. 374)

பிராமணன் மற்ற வருணத்தார் பெண்களைப் புணர்ந்தால் அது தருமம். (மனு 8.13)

பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும். (மனு 8. 380)

அரசன் சூத்திரனைப் பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்குப் பணி விடை செய்யும்படிக் கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும். (மனு 8. 410)

பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான். (மனு 8.413)

பிராமணன் சந்தேகமின்றிச் சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான். (மனு 8. 417)

சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எசமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது. – மனு அத்தியாயம் 9 சுலோகம் 416.

பிராமணனால் சூத்திரப் பெண்ணுக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங்கில்லை. (மனு 8.155)

பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளைப் பிராமணன் தம் விருப்பப்படிக் கொள்ளையிடலாம். (மனு  9. 248.

பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூசிக்கத்தக்கவர்கள் ஆவர்கள். (மனு 9. 319)

பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவ னாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பஞ் செய்தால் அவனைச் சூனியம் செய்து ஒழிக்க வேண்டும். (மனு 9.320)

சூத்திரனுக்குப் பிராமணப் பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாதவிடத்தில் சத்திரியனுக்கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றைப் பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. (மனு 11. 12)

அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் செபித்தால் போதுமானது. (மனு 11 .132)

சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவன். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனே யாவன். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார். மனு 10 . 75)

பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும், சூத்திரனுடைய சீவனத்துக்குக் கொடுக்கப்படும். (மனு 10. 125)

மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதரும சாத்திரத்தால் என்ன தருமம் விதிக்கப்பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர். ( மனு  2. 7)

மேல்வருணத்தார் மூவரின் (அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன்) மனைவியையும் ஒருவன் (சூத்திரன்) தனது வலிமையாற் கூடினால் உயிர்போகும் வரை அவனைத் தண்டிக்கவும். ( மனு 8. 358 )

கற்பினளான பிராமணப் பெண்ணைக் கூடும் வைசியனுக்கு ஒரு வருடக் காவலும் சொத்துப் பறிமுதலும் தண்டனைகள்.  இவ்விதம் குற்றமிழைத்தவன் சத்திரியனாயிருப்பின் ஆயிரம் பணம் தண்டம் விதித்து கழுதை மூத்திரத்தை விட்டு அவன் தலையை மொட்டை இடுக!  ( மனு 8.  374)

இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர்; ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர். (மனு 9. 3)

(தொடரும்)