(சனாதனம் – பொய்யும் மெய்யும் 37 – தாெடர்ச்சி)

    • இவ்வாறு சனாதனத்தில்/இந்து மதத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்று பலர் பிதற்றி வருகிறார்கள். மனுவில் தீண்டாமை என்னும் சொல் இடம் பெறாதிருக்கலாம். ஆனால் அது கூறும் கருத்துகள் எல்லாம் தீண்டாமைதானே!

    சூத்திரன் தொட்டால் உணவு அசுத்தம். பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றினாலும், நாய் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது.(மனு 3. 241)

     சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி (மனு 8. 22)

    தொடாதே என்றால் தீண்டாதே என்றுதானே பொருள். இவையெல்லாம் தீண்டாமை இல்லாமல் வேறு என்னவாம்?

    கிமு 300 மற்றும் கிபி 400க்கு இடைப்பட்டவை சாதகக் கதைகள். அவற்றில் தொகுதி 4.391 இல், உயர்சாதிப்பெண்கள் இருவர் தீண்டத்தகாதக் கீழ்ச் சாதிப்பெண்கள் இருவரைப் பார்த்ததும் ஓடிப்போய் அவர்களைப் பார்த்த கண்களைக் கழுவிக் கொண்டார்களாம். பார்வையால் கூடத் தீண்டாக் கொடுமை இந்துமதத்தில் இருந்ததற்கு இதுவே சான்று.

    சிலர் இப்போது தீண்டாமை இல்லை என்பார்கள். தீண்டத்தகாதவர்களுடன் உறவு வைப்பதாகக் கூறித்தானே பல காதலர்கள் கொலை செய்யப்படுகின்றனர். 

    பிராமணப் பெண்கள் பலர் வீட்டில் வீட்டுவேலை பார்க்கும் பணிப்பெண் கொல்லைப்புறம் சென்று பாத்திரங்களைத் துலக்கி விட்டுச் செல்ல வேண்டும். பின்னர் வீட்டு அம்மா அவற்றைக் கழுவி உள்ளே கொண்டு செல்வார். அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்த பின் இது குறைந்தாலும் பலர், பணிப்பெண்கள் கழுவிய பாத்திரங்களைத் தீட்டு என்று சொல்லி மீண்டும் கழுவித்தான் பயன்படுத்துகின்றனர்.

    (தொடரும்)