(சனாதனம் – பொய்யும் மெய்யும் 35-36 தொடர்ச்சி)

பின்வரும் சனாதனக் கருத்துகளைப் பாருங்கள். இவற்றைப் படித்த அறிவுள்ள எவரும்  மேற்குறித்தவாறு பொய்யுரை கூற மாட்டார்கள்.

பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்” – (மனு 9. 317)

“பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூசிக்கத் தக்கவர்கள் ஆவார்கள்.” (மனு  9.  319).

 “பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்கு துன்பஞ் செய்தால் அவனைச் சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்.” (மனு 9. 320)

“”ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்.” (மனு 11.131)

 “அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் செபித்தால் போதுமானது.” (மனு 11. 132)

“சத்திரியன் இந் நூலில் (மனுதர்ம சாத்திரத்தில்) சொல்லப்பட்டபடி அரசபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமணப் பணி விடை செய்வதே தவமாகும்.” (மனு 11. 285)

“சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவன். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவன். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்.” (மனு 10. 75)

“சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும்.” (மனு 10. 96)

“இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாரருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதருமத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் “பிராமணன்” என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை ‘மனுதருமம்’ என்று கூறுவதா? அல்லது ‘மனு அதருமம்’ என்று கூறுவதா? சற்று யோசித்து முடிவு செய்யுங்கள்.”

இவ்வாறு புதுவை சே.அசித்து கூறுவதாகத் துருக்கள் வலைப்பூவிலும் பெயர் குறிப்பிடாமல் கோரா முதலிய தளத்திலும் வருண வேறுபாட்டு இழிவைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். அவ்வாறிருக்க எவ்வாறு துணிந்து பிராமணனை மட்டும் உயர்த்திக் கூறவில்லை என்று பொய்யுரைக்கிறார்கள் என்று புரியவில்லை.

(தொடரும்)